பட மூலாதாரம், @UAE_PP/X
-
- எழுதியவர், சிராஜ்
- பதவி, பிபிசி தமிழ்
-
வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
சமூக ஊடகங்களில் தாக்குதல் தொடர்பான பதற்றத்தைத் தூண்டும் மற்றும் தவறான தகவல்களை பரப்பியதாக 19 இந்தியர்கள் உட்பட 35 பேர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தக் கைதுகள் குறித்த அறிவிப்பு மார்ச் 14, 15-ஆம் தேதிகளில் வெளியிடப்பட்டது.
ஆனால், இரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் போர் தொடங்கிய முதல் நாளிலேயே (பிப்ரவரி 28) சமூக ஊடகப் பதிவுகள் தொடர்பான ஒரு கடுமையான எச்சரிக்கையை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வெளியிட்டிருந்தது.
அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடியாக அப்போதிலிருந்து வளைகுடா நாடுகளை இரான் தாக்கி வருகிறது.
பிற வளைகுடா நாடுகளுடன் ஒப்பிடுகையில், இத்தகைய கடுமையான நடவடிக்கைகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் எடுக்கப்படுவதற்கு காரணம், அந்நாடு கச்சா எண்ணெய் துறையை மட்டுமே நம்பி இயங்கவில்லை.
அந்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், எண்ணெய் அல்லாத துறைகளின் பங்களிப்பு 70%க்கும் அதிகமாக உள்ளது. சுற்றுலாத்துறையும், ரியல் எஸ்டேட் துறையும் இதில் பெரும் பங்கு வகிக்கின்றன.
குறிப்பாக துபை, வணிக வாய்ப்புகள் மற்றும் சுற்றுலா சார்ந்து ‘ஒரு பாதுகாப்பான நகரம்’ என்ற பிம்பத்தை பல ஆண்டுகளாக கொண்டுள்ளது.
தற்போதைய போர்ச் சூழலிலும் அதே பிம்பம் நீடிக்கிறதா?
பட மூலாதாரம், Getty Images
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் இந்தியச் சமூகம்
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வசிக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை 43 லட்சம் (2024 தரவுகளின்படி). அந்நாட்டின் மக்கள்தொகையில் இந்தியப் புலம்பெயர்ந்தோர் சமூகத்தின் பங்கு என்பது ஏறத்தாழ 35 சதவீதம்.
இதில் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்களே அதிகம், அதைத் தொடர்ந்து தமிழ்நாடு போன்ற மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் உள்ளனர்.
1970கள் மற்றும் 1980களில், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தொழிலாளர்களுக்கான தேவை அதிகமாக இருந்தபோது, இந்தியர்கள் பலர் அங்கு தொழிலாளர்களாக பணிபுரிந்தனர்.
90களில் தொழில்துறை வளர்ச்சி அடையத் தொடங்கியபோது, தொழில்முறை வல்லுநர்களின் தேவையும் அதிகரித்தது. அது இந்தியச் சமூகத்தின் மாற்றத்திற்கு வழிவகுத்தது.
1990களில், தொழில் வல்லுநர்களின் தேவை அங்கு எழுந்தபோது, சமூகத்தின் தன்மை மாறியது. இன்று, அங்குள்ள புலம்பெயர் இந்திய சமூகத்தில் சுமார் 35 சதவீதம் பேர் தொழில்முறை வல்லுநர்களாக, தொழிலதிபர்களாக உள்ளனர்.
பட மூலாதாரம், AFP via Getty Images
அதேசமயம், துபையின் சுற்றுலாத் துறை தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வருகிறது. 2023-இல் சுமார் 1.7 கோடியாக இருந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை, 2024-ஆம் ஆண்டில் சுமார் 1.8 கோடியாக உயர்ந்தது.
கைது செய்யப்பட்டுள்ள இந்தியர்களில் புலம்பெயர்ந்தோர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் எத்தனைப் பேர், சுற்றுலாப் பயணிகள் எத்தனைப் பேர் என்பது குறித்த தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.
”தாக்குதல்கள் மற்றும் அவற்றின் பின்விளைவுகள் தொடர்பான காணொளிக் காட்சிகளை பீதியைத் தூண்டும் கருத்துகள் மற்றும் விளக்கங்களுடன் வெளியிடுவது, ஏஐ தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட புனையப்பட்ட காணொளிகளை வெளியிடுதல் மற்றும் விரோதச் செயல்களில் ஈடுபடும் ஓர் அரசை ஊக்குவிப்பதும், அதன் தலைமையையும் ராணுவ நடவடிக்கைகளையும் மகிமைப்படுத்துவது” ஆகிய குற்றச்சாட்டுகள் கைது செய்யப்பட்டவர்களின் மீது சுமத்தப்பட்டுள்ளது.

அதிகாரிகள் சோதனை
‘ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள இந்திய சமூகத்தினர், நாட்டின் பாதுகாப்பு நிலைமை குறித்த வதந்திகள் மற்றும் போலிச் செய்திகளை நம்ப வேண்டாம். அதிகாரப்பூர்வ சமூக ஊடகக் கணக்குகளைப் பின்தொடர வேண்டும்’ என பிப்ரவரி 28 அன்று இந்திய தூதரகமும் ஓர் அறிவிப்பை வெளியிட்டிருந்தது.
அதேபோல, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிகாரிகளால் வெளியிடப்பட்ட அறிவுறுத்தல்களின்படி, சமூக ஊடகங்களில் நிலைமை குறித்த தகவல்களைப் பதிவிடுவதிலும் கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், சமீபத்தில் இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளது குறித்து தூதரகம் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.
“வழக்கமாக துபைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு நாங்கள் தெளிவான வழிகாட்டுதல்களை வழங்குவோம். உதாரணத்திற்கு அரசு கட்டடங்களை படம்பிடிக்கக் கூடாது என்பது இங்குள்ள விதி” என்று கூறுகிறார் துபையில் உள்ள ஒரு சுற்றுலா நிறுவனத்தின் தலைமை அதிகாரி முகமது இஸ்மாயில்.
பட மூலாதாரம், Getty Images
தமிழ்நாட்டைச் சேர்ந்த முகமது இஸ்மாயில், தற்போது துபையில் வசித்து வருகிறார்.
“இப்போதைய போர்ச் சூழலில், துபையில் தங்கியிருக்கும் சுற்றுலா பயணிகளை வெளியே அழைத்துச் செல்லும்போது, அவர்களது கைப்பேசிகளை அதிகாரிகள் வாங்கி சோதித்துப் பார்ப்பது அவ்வப்போது நடக்கிறது” என்றும் அவர் கூறுகிறார்.
துபையின் சுற்றுலா குறித்த பிம்பத்தைக் கருத்தில் கொண்டே இத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்று கூறும் அவர், “இங்கு தங்கியிருக்கும் மக்கள் சகஜமாக வெளியே வரவேண்டும் என்பதற்காக சில சுற்றுலா தலங்களுக்கு அரசு இலவச அனுமதி சீட்டுகளையும் வழங்கியுள்ளது. அதேசமயம், இயல்பு வாழ்க்கை இங்கே பாதிக்கப்படவில்லை” என்கிறார்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் சட்டங்கள் மிகக் கடுமையானவை, உதாரணத்திற்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸில் அரசாங்கத்தை விமர்சிப்பது சட்டவிரோதமாகும்.
பிரிட்டனைச் சேர்ந்த மனித உரிமைக் குழுவான அம்னெஸ்டி இன்டர்நேஷனல், “ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பல்வேறு சட்டங்கள் மூலம் கருத்துச் சுதந்திரத்திற்கான உரிமையைத் தொடர்ந்து குற்றமாக்கி வருகிறது. மேலும் அரசை விமர்சிப்பவர்களையும் அல்லது விமர்சிப்பதாகக் கருதப்படுபவர்களையும் தண்டித்து வருகிறது” என்று தெரிவித்துள்ளது.
பட மூலாதாரம், Getty Images
துபையின் ‘பாதுகாப்பான நகரம்’ பிம்பத்திற்கு பாதிப்பா?
“ஆம், ஆனால் தற்காலிகமாகத்தான். துபையின் மிகப்பெரிய பலம் என்பது அது பாதுகாப்பானது மற்றும் ஸ்திரத்தன்மை கொண்டது என்ற பிம்பம்தான். முதலீட்டாளர்களோ அல்லது சுற்றுலாப் பயணிகளோ அதில் பாதிப்பை உணர்ந்தால், அவர்கள் உடனடியாகத் தங்கள் பயணத்தையோ அல்லது முதலீடுகளையோ நிறுத்திவிடுகிறார்கள்.” என்கிறார் ஒரு கட்டுமான நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பாலஸ்கந்தன்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸை தலைமையிடமாக கொண்ட இவரது நிறுவனம் கட்டட வடிவமைப்பு, கட்டமைப்பு, உள்கட்டமைப்பு சார்ந்த திட்டங்களில் கவனம் செலுத்துகிறது.
“வெளிநாட்டு முதலீட்டாளர்களிடையே ஒரு தயக்கம் தென்படுகிறது. தற்போது நிலவும் நிச்சயமற்ற தன்மையின் காரணமாக, ரியல் எஸ்டேட் துறையில் ஒரு வீழ்ச்சி உள்ளதை மறுக்க முடியாது” என்கிறார்.
“ஆனால் பல முதலீட்டாளர்கள் துபையை நீண்ட கால முதலீடு என்ற நோக்கில்தான் பார்க்கிறார்கள், எனவே சிலர் தங்களது முதலீடுகளை விற்று பணத்தை வெளியே எடுப்பது தற்காலிகமானதுதான்” என்றும் அவர் கூறுகிறார்.

ரியல் எஸ்டேட் முகவர் ரஹ்மான் (பெயர் மாற்றப்பட்டுள்ளது), “செல்வந்தர்கள் மட்டுமல்லாது நடுத்தர வர்க்க இந்தியர்கள் கூட துபையில் வீடு வாங்க விரும்புகிறார்கள்” என்கிறார்.
மதுரையைச் சேர்ந்த ரஹ்மான் கடந்த ஒரு வருடமாக துபையில் ரியல் எஸ்டேட் துறையில் பணிபுரிந்து வருகிறார்.
“காரணம், இங்கு ஒரு சொத்திலிருந்து கிடைக்கும் வருமானம் அதிகம். வீட்டு வாடகை மூலம் நல்ல வருமானம் கிடைக்கிறது, சொத்தின் மதிப்பும் தொடர்ந்து அதிகரிக்கிறது, இதனால் மக்கள் இங்கு வீடு வாங்க ஆர்வம் காட்டுகிறார்கள்” என்கிறார் அவர்.
தற்போதைய சூழலில் வீடுகளின் விலை 10 முதல் 15 சதவீதம் குறைந்துள்ளதாகக் கூறும் அவர், “ஆனால், இதை சொத்து வாங்குவதற்கான ஒரு வாய்ப்பாகதான் பார்க்க முடியும். அதேபோல பதற்றத்தில் வீடுகளை விற்பது போன்ற நிகழ்வுகள் எல்லாம் இங்கு நடக்கவில்லை” என்கிறார்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வீட்டு விலைகள் தொடர்ந்து உயர்வதற்கும் அவற்றில் கிடைக்கும் வாடகை அதிகரிப்பதற்கும் ரியல் எஸ்டேட்டுக்கான வெளிநாட்டுத் தேவை, உலக நாடுகளுடன் அதிகரித்த இருதரப்பு மற்றும் பலதரப்பு உறவுகள், மற்றும் பாதுகாப்பான புகலிட அந்தஸ்து ஆகியவை காரணம் என 2024இல் சர்வதேச நாணய நிதியம் தெரிவித்தது.
பட மூலாதாரம், Getty Images
ஆனால், போரின் முதல் நாளிலேயே ‘பாதுகாப்பான நகரம்’ என்ற துபை மீதான தனது நம்பிக்கை உடைந்துவிட்டதாகக் கூறுகிறார் யாசர் (பெயர் மாற்றப்பட்டுள்ளது).
“போர் குறித்த செய்திகளைப் பார்த்துவிட்டு உடனடியாக வேலையை விட்டுவிட்டு சொந்த ஊரான திருநெல்வேலிக்கு வந்துவிட என் குடும்பத்தார் வலியுறுத்தினார்கள்” என்கிறார் அவர்.
“நான் ஒரு கட்டடப் பொறியாளர். ஒருபுறம் இங்கு அனைத்தும் இயல்பாக நடப்பது போல தோன்றினாலும், நான் வேலை செய்யும் இடத்தில் என் தலைக்கு மேலே வெடிப்புகள் நிகழும்போது அதை எப்படி இயல்பாக எடுத்துக்கொள்ள முடியும்” என்றும் அவர் கேள்வியெழுப்புகிறார்.
“என் நிறுவனத்தில் பாதுகாப்பு தொடர்பாக உறுதியளித்து, சமாதானப்படுத்தினர். ஆனால், எனக்கு இன்னும் பயம் நீங்கவில்லை. துபையில் மீண்டும் நான் சகஜமாக இருக்க சில நாட்களாவது தேவைப்படும். விரைவில் இந்தப் போர் முடிவடையும் என நம்புகிறேன்” என்றும் அவர் கூறுகிறார்.

‘விதிகளை மதிக்க வேண்டும்’
சுற்றுலா மற்றும் ரியல் எஸ்டேட் துறையில் பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காகவே கடுமையான சமூக ஊடக விதிகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் விதிக்கப்படுகின்றன என்ற விமர்சனங்கள் எழுந்தாலும், அது மக்களின் பாதுகாப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது என்கிறார் துபையில் வசிக்கும் பன்னாட்டு ஊடகவியலாளர் சுபாஷ்.
“இங்கு இருக்கும் குடியிருப்பாளர்கள், சுற்றுலாப் பயணிகள், எமிரேட்ஸின் விதிமுறைகள் முழுமையாக அறிந்தவர்கள்தான். இருப்பினும் சமூக வலைதளங்களில் புரிதல் இல்லாமால் கருத்து இடுவது பல்வேறு சிக்கலுக்கு வழி வகுக்கக் கூடாது என்று அரசு நிர்வாகம் நினைக்கிறது. புதிதாக இங்கு வருபவர்களும் அந்த விதிகளை மதிக்க வேண்டும்” என்கிறார்.
“சமூக ஊடகங்களில் பரவும் தேவையற்ற காட்சிகள் படங்கள் மூலம் மக்களிடையே பதற்றமும், பாதுகாப்பு விஷயத்தில் தவறும் நிகழ்ந்திடக் கூடாது என அரசு நிர்வாகம் நினைக்கிறது. இங்கு வாழும் மக்கள் பாதுகாப்பாக உணர வேண்டும் என்பதும் ஒரு காரணம்” என்று அவர் கூறுகிறார்.
பட மூலாதாரம், Getty Images
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிகாரிகளின் கூற்றுப்படி, இரானின் தாக்குதல்கள் தொடங்கியதிலிருந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸின் வான் பாதுகாப்பு, 334 பாலிஸ்டிக் ஏவுகணைகள், 15 குரூஸ் ஏவுகணைகள் மற்றும் 1,714 டிரோன்களைக் கையாண்டுள்ளது.
இவற்றில் 90%-க்கும் அதிகமானவை இடைமறித்து அழிக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
“போர் தொடங்கியதிலிருந்து இப்போது வரை துபையில் பெரிய அளவில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை. இது பாலைவனத்திலிருந்து உருவான நகரம் என்பதால், மீண்டும் தனது அசுர வளர்ச்சி பாதைக்கு திரும்பிவிடும் என மக்கள் நம்புகிறார்கள்” என்கிறார் பாலஸ்கந்தன்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு