படக்குறிப்பு, இரான் நடத்திய தாக்குதல்களுக்குப் பிறகு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டின் ஒரு தொழில்பேட்டைப் பகுதியிலிருந்து புகை எழுகிறது (படம்: மார்ச் 1, 2026).கட்டுரை தகவல்
அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் இரான் இடையிலான போர் நான்காவது வாரத்தில் நுழையும் வேளையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வேகமாக இரான் நாட்டின் இலக்காக மாறி வருகிறது.
இரான் நாட்டின் ஆரம்பகால உத்தி இஸ்ரேலை மட்டும் தாக்குவதாக இருந்தது.
ஆனால் இப்போது அந்த உத்தியிலிருந்து விலகி, வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் உறுப்பு நாடுகள் மீது ஆயிரக்கணக்கான டிரோன்கள் மற்றும் ஏவுகணைகளை ஏவியுள்ளது இரான்.
போரின் தொடக்கத்திலேயே, இப்பிராந்தியத்தில் உள்ள அமெரிக்கத் தளங்களை இலக்கு வைப்போம் என்று இரான் கூறியிருந்தது.
அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் ஐக்கிய அரபு எமிரேட்ஸுடன் நல்லுறவு இருப்பதால், இரான் தனது தாக்குதல்களை அந்நாட்டின் மீது குவித்து, ஒரு தெளிவான செய்தியை பிற இரு நாடுகளுக்கும் அனுப்பியுள்ளது.
பிப்ரவரி 28 அன்று அமெரிக்காவும் இஸ்ரேலும் இரான் நாட்டிற்கு எதிராக கூட்டு ராணுவ நடவடிக்கையைத் தொடங்கியபோது, இரான் தாமதமின்றி இஸ்ரேலை மட்டுமல்லாமல், அமெரிக்காவின் நட்பு நாடுகளான வளைகுடா நாடுகளையும் தாக்கியது.
பஹ்ரைன், குவைத், செளதி, கத்தார், ஓமன் மற்றும் குறிப்பாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இலக்கு வைக்கப்பட்டன.
வளைகுடா நாட்டு அதிகாரிகளின் கூற்றுப்படி, ராணுவத் தளங்களுடன் சேர்த்து விமான நிலையங்கள், ஹோட்டல்கள், குடியிருப்புப் பகுதிகள் மற்றும் குறிப்பாக எரிசக்தி நிலையங்கள் போன்ற பொதுமக்களின் இடங்கள் மீதும் இரான் தாக்குதல் நடத்தியுள்ளது.
மோதலை விரிவுபடுத்துவதன் மூலம் போரின் செலவை அனைத்துத் தரப்பினருக்கும் அதிகரிக்கவும், போர் நிறுத்தத்தை ஏற்குமாறு அமெரிக்காவை வற்புறுத்த வளைகுடா நாடுகளுக்கு அழுத்தம் கொடுக்கவும் இரான் விரும்புகிறது.
இதற்குப் பதிலடியாக, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தனது வழக்கமான அண்டை நாட்டு நட்புறவு மற்றும் பேச்சுவார்த்தை என்ற கொள்கையிலிருந்து விலகி, ஹோர்மூஸ் நீரிணையைப் பாதுகாக்கும் அமெரிக்கத் தலைமையிலான முயற்சியில் இணையப்போவதாகக் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது.
பட மூலாதாரம், Getty Images
வளைகுடாவில் இரான் தாக்குதல்களின் அளவு என்ன?
பிராந்திய ஊடகங்களின்படி, போரின் தொடக்க கால முதல் இரண்டு வாரங்களில் இரான், இஸ்ரேலை விட வளைகுடா நாடுகளையே அதிக அளவில் இலக்கு வைத்தது தெரியவந்துள்ளது.
அல் ஜசீரா வெளியிட்ட தகவலின்படி, முதல் 11 நாட்களின் தரவுகளின் அடிப்படையில் “இஸ்ரேல் இரானின் முதல் இலக்கு அல்ல” என்பது உறுதியாகியுள்ளது. இஸ்ரேல் மீது 433 தாக்குதல்கள் நடத்தப்பட்ட அதே வேளையில், அரபு நாடுகள் மீது 3,100 தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
முதல் மூன்று வாரத் தரவுகள், ஐக்கிய அரபு எமிரேட்ஸ்தான் அதிக இலக்குக்கு உள்ளாகியுள்ளது என்பதைக் காட்டுகின்றன.
துபை பொதுக் கொள்கை ஆராய்ச்சி மையத்தின் தலைவர் முகமது பஹாரூன், ”இரான் நாட்டைப் பொறுத்தவரை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஓர் எளிதான வேட்டை இலக்கு மற்றும் ஒரு தொடர்ச்சியான நிகழ்வுகளின் முதல் தொடக்கம்” என்கிறார்.
முகமது பஹாரூனின் கூற்றுப்படி, இந்த தொடர்ச்சியில் ஒரு கல்லை நகர்த்தினால் கூட மற்ற கற்கள் தானாகவே விழுந்துவிடும் என்று இரான் தலைமை நம்புகிறது.
பட மூலாதாரம், AFP via Getty Images
படக்குறிப்பு, துபை சர்வதேச விமான நிலையத்திற்கு அருகே நடத்தப்பட்ட டிரோன் தாக்குதலுக்குப் பிறகு அங்கே தீ ஏற்பட்டது (படம்: மார்ச் 16, 2026).
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் எந்த இடங்கள் இலக்கு வைக்கப்பட்டன?
போர் தொடங்கியதிலிருந்து ஹப்ஷன் எரிவாயு நிலையம், பாப் எண்ணெய் வயல், அல்-தாஃப்ரா விமானத் தளம், புஜைரா துறைமுகம், எண்ணெய் சேமிப்பு மையங்கள் மற்றும் துபை சர்வதேச விமான நிலையம் போன்ற முக்கிய இடங்களை இரான் தாக்கியுள்ளது.
இராக்கின் குர்திஸ்தான் பகுதியில் உள்ள ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதரகத்தின் மீதும் டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது.
இரான் ராணுவத்தின் கதம் அல்-அன்பியா தலைமையகத்தின் செய்தித் தொடர்பாளர் கர்னல் இப்ராஹிம் ஸோல்ஃபகாரி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் குடிமக்களை “துறைமுகங்கள் மற்றும் அமெரிக்கத் தளங்களிலிருந்து தள்ளி இருக்குமாறு” கூறினார்.
அமெரிக்க ஏவுகணைத் தளங்களைத் தாக்குவது தங்களின் “தற்காப்பு உரிமை” என இரான் கூறுகிறது.
ஆனால், தனது நிலப்பரப்பு இரான் மீதான தாக்குதல்களுக்குப் பயன்படுத்தப்பட்ட குற்றச்சாட்டை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மறுக்கிறது.
பட மூலாதாரம், Getty Images
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பொருளாதாரத்தில் ஏற்பட்ட தாக்கம் என்ன?
பிராந்தியத்தின் பொருளாதார, டிஜிட்டல் மற்றும் ஊடக மையமாகத் திகழ்ந்து வரும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இந்தப் போரினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
முக்கியப் பங்குச் சந்தை குறியீடான ADX ஜெனரல் கடந்த மாதத்தில் 11.42% வீழ்ச்சியடைந்தது.
வான்வெளி மூடப்பட்டதாலும், விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாலும் சுற்றுலா மற்றும் விமானப் போக்குவரத்துத் துறைகள் பெரும் இழப்பைச் சந்தித்தன.
போரின் முதல் வாரத்திலேயே ஆறு வளைகுடா நாடுகளின் விமான நிலையங்களுக்குச் சுமார் 400 மில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டது. இதில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டின் பங்கு மட்டும் சுமார் 95 மில்லியன் டாலராகும்.
எரிசக்தித் துறையிலும் பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ராய்ட்டர்ஸ் செய்தியின்படி, ஹோர்மூஸ் நீரிணை மூடப்பட்டதால் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டின் தினசரி எண்ணெய் உற்பத்தி பாதிக்கும் மேல் குறைந்துள்ளது.
பட மூலாதாரம், Getty Images
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் எடுத்த நடவடிக்கைகள் என்ன?
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசு மற்றும் ஊடகங்கள், நாட்டின் ‘பாதுகாப்பான இடம்’ என்ற பிம்பத்தைத் தக்கவைக்க முயற்சி செய்தன.
அதிபர் முகமது பின் ஜாயித், ‘அனைத்தும் கட்டுப்பாட்டில் உள்ளது’ என்றும், எந்தவொரு அச்சுறுத்தலையும் எதிர்கொள்ள நாடு தயாராக இருப்பதாகவும் மக்களுக்கு உறுதியளித்தார்.
அதே நேரத்தில், தாக்குதல்கள் தொடர்பான படங்கள் மற்றும் வீடியோக்களைப் பகிர்வதற்கு எதிராக அட்டர்னி ஜெனரல் ஹமத் சைப் அல்-ஷம்சி கடும் எச்சரிக்கை விடுத்தார்.
தாக்குதல்கள் குறித்த படங்களை எடுத்ததாகவும், பகிர்ந்ததாகவும் பல வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்குக் குறைந்தது ஓராண்டு சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.
பட மூலாதாரம், Getty Images
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் – இரான் உறவில் ஏற்பட்ட தாக்கம் என்ன?
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் இரான் இடையிலான உறவில் 2021 முதல் முன்னேற்றத்திற்கான அறிகுறிகள் தெரிந்தன. 2023-ல் சீனாவின் மத்தியஸ்தத்துடன் இரான் மற்றும் செளதி அரேபியா இடையே ஏற்பட்ட ஒப்பந்தம் இந்த உறவை மேலும் வலுப்படுத்தியது.
ஆனால் தற்போதைய போர் இந்த உறவுகளில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், இரு தரப்பிற்கும் இடையே பரஸ்பரம் குற்றச்சாட்டுகள் அதிகரித்துள்ளன.
இந்த மாதத் தொடக்கத்தில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இரானில் தனது தூதரகத்தை மூடிவிட்டு, தனது தூதர் மற்றும் பணியாளர்களைத் திரும்ப அழைத்துக் கொண்டது.
செளதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகள் மெல்ல மெல்ல இரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையில் ஈடுபடத் தயாராகி வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இது நடந்தால், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் இரான் இடையிலான உறவுகள் இயல்பு நிலைக்குத் திரும்புவதற்கான எஞ்சியிருக்கும் வாய்ப்புகளும் முற்றிலும் இல்லாமல் போகும்.