இரான் குழு பாகிஸ்தானிலிருந்து கிளம்பிய சிறிது நேரத்திலேயே, இரான் போர் தொடர்பான பேச்சுவார்த்தைக்காக அங்கு செல்லவிருந்த அமெரிக்க அதிகாரிகளின் திட்டமிடப்பட்ட பயணத்தை டொனால்ட் டிரம்ப் ரத்து செய்துள்ளார்.
அமெரிக்க தூதர்கள் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ஜேரட் குஷ்னர் ‘அதிக நேரத்தை வீணடிப்பார்கள்’ எனக் கூறிய டிரம்ப், இரான் பேச்சுவார்த்தை நடத்த விரும்பினால் “அவர்கள் செய்ய வேண்டியது அழைப்பது மட்டுமே” எனத் தெரிவித்தார்.
முன்னதாக இரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி மத்தியஸ்தரான பாகிஸ்தான் உடன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். அதன் பின்னர் போரை நிறுத்துவதற்கான இரானின் நிலைப்பாட்டை பகிர்ந்ததாகக் கூறும் அவர், அமெரிக்கா “ராஜீய செயல்பாடுகளில் உண்மையில் தீவிரத்துடன்” இருக்கிறதா என்பதை இன்னும் பார்க்கவில்லை என்றும் தெரிவித்தார்.
இரண்டு வாரகால போர்நிறுத்தம் ஏப்ரல் 22 உடன் முடிவடைய இருந்த நிலையில் பேச்சுவார்த்தை தொடர்வதற்காக போர்நிறுத்தத்தை டிரம்ப் நீட்டித்த பிறகும் ராஜீய முயற்சிகள் தடைபட்டுள்ளன.
ஹோர்மூஸ் நீரிணை விவகாரத்தில் இரு தரப்பும் முரண்படுகின்றன. பிப்ரவரியில் அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்குதல்களைத் தொடங்கியதை தொடர்ந்தும் இரானின் அணுசக்தி லட்சியங்கள் காரணமாகவும் இந்த முக்கியமான கப்பல் வழித்தடத்தின் போக்குவரத்தை இரான் கட்டுப்படுத்துகிறது.
அதன் பிறகு, இரானின் எண்ணெய் ஏற்றுமதியை தடுக்க இந்த நீரிணையில் தனது இருப்பை அமெரிக்கா அதிகரித்துள்ளது. உலகின் எண்ணெய் விநியோகத்தில் 5-இல் 1 பங்கு இந்த வழியாகவே செல்கிறது.
வெள்ளிக்கிழமை அன்று இந்தப் பயணம் அறிவிக்கப்பட்டபோது இரானியர்கள் “பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாக” வெள்ளை மாளிகை தெரிவித்திருந்தது. ஆனால், நேரடியான சந்திப்புக்கு எந்த திட்டமும் இல்லை என இரான் தெரிவித்திருந்தது.
அடுத்தகட்ட நேரடி பேச்சுவார்த்தைக்கான நம்பிக்கை மங்கி வரும் சூழலில், போர்நிறுத்தம் தொடரும் என சனிக்கிழமை டிரம்ப் கூறியிருந்தார்.
அமெரிக்க குழுவின் பயணம் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து போர் மீண்டும் தொடங்குமா என்கிற கேள்விக்கு செய்தி இணையதளமான ஆக்சியாஸிடம் பதிலளித்த டிரம்ப், “இல்லை, அதற்கு அது அர்த்தமாகாது. அதைப்பற்றி நாங்கள் இன்னும் யோசிக்கவில்லை.” எனத் தெரிவித்தார்.
இந்த நிலையில் சனிக்கிழமை அன்று பயணம் ரத்து செய்யப்பட்டதாக அறிவித்த டிரம்ப், “இரானிய தலைமைக்குள் தீவிரமான உட்பூசல் மற்றும் குழப்பம் நிலவி வருவதாகவும் தற்போது யார் பொறுப்பில் இருக்கிறார்கள் என்பது அவர்கள் உட்பட யாருக்கும் தெரியாது,” என்றும் கூறினார்.
“மேலும் அத்தனை அதிகாரங்களும் நம்மிடம் உள்ளன, அவர்களிடம் எதுவும் இல்லை. பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென்றால், அவர்கள் செய்ய வேண்டியது அழைப்பது மட்டுமே.” என தனது ட்ரூத் சோசியல் பதிவில் தெரிவித்திருந்தார்.
பேச்சுவார்த்தை வெற்றிகரமாக சென்றால் அதில் இணைவதற்கு அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ் தயார் நிலையில் இருப்பதாக வெள்ளிக்கிழமை அன்று வெள்ளை மாளிகை குறிப்பிட்டிருந்தது.
முதல்கட்ட பேச்சுவார்த்தையில் கலந்துகொண்ட அமெரிக்க குழுவுக்கு அவர் தலைமை தாங்கிய நிலையில் அடுத்து திட்டமிடப்பட்ட குழுவில் அவர் இடம்பெறாதது எந்த முக்கிய முடிவும் எதிர்பார்க்கப்படவில்லை என்பதை உணர்த்தியது.
பேச்சுவார்த்தைக்கு இரான் தயாராக இருக்கிறது எனக் கூறும் அந்நாட்டின் அதிபர் மசூத் பெசெஷ்கியன், “உத்தரவாதங்களை மீறுவது, முற்றுகை மற்றும் அச்சுறுத்தல்கள் நேர்மையான பேச்சுவார்த்தைக்கு முக்கிய தடைகளாக இருக்கின்றன.” என்றார்.
பட மூலாதாரம், Reuters
படக்குறிப்பு, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் உடன் இரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி
இரு தரப்புக்கும் இடையே சமீப வாரங்களில் பாகிஸ்தான் மத்தியஸ்தம் செய்தது. அதில் ஏப்ரல் 11-ஆம் தேதி எந்த ஒப்பந்தமும் இல்லாமல் முடிவுற்ற மூத்த அமெரிக்க மற்றும் இரானிய அதிகாரிகளின் பேச்சுவார்த்தையும் அடங்கும்.
அடுத்து ஓமன் மற்றும் ரஷ்யாவுக்குச் செல்ல இருக்கும் அராக்சி, தனது பாகிஸ்தான் பயணம் “பயனுள்ளதாக இருத்தது” என தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
“இரான் மீதான போரை நிரந்தரமாக முடிவுக்கு கொண்டு வருவதற்கு வேலை செய்யக்கூடிய செயல்திட்டம் தொடர்பான இரானின் நிலைப்பாட்டைப் பகிர்ந்தேன். ஆனால் உண்மையாக ராஜீய செயல்பாடுகளில் அமெரிக்கா தீவிரமாக இருப்பதை நான் இன்னும் பார்க்கவில்லை,” என்றும் அராக்சி குறிப்பிட்டார்.
இந்தச் சந்திப்பு தொடர்பாக பேசிய பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப், இருவரும் “தற்போதைய பிராந்திய சூழ்நிலை பற்றி சுமூகமாக கருத்துப் பரிமாற்றத்தை” பகிர்ந்துகொண்டதாகத் தெரிவித்தார்.
ஓமன் பயணத்துக்குப் பிறகு அராக்சி மீண்டும் இஸ்லாமாபாத் செல்ல இருப்பதாக இரானிய அரசு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இரான் அணு ஆயுதங்கள் பெறுவதற்கான அமெரிக்காவின் எதிர்ப்பு தான் இந்த மோதல் தொடங்கியதற்கான காரணமாக கருதப்படுகிறது. இரான் அணு ஆயுதம் தயாரிக்க முனைவதாக அமெரிக்காவும் இஸ்ரேலும் சந்தேகிக்கின்றன.
ஆனால் இதனை இரான் தொடர்ந்து மறுத்து வருகிறது. அணு ஆயுதங்கள் தயாரிக்கும் அளவுக்கு நிகரான செறிவூட்டப்பட்ட யுரேனியம் இருக்கின்றபோதிலும் அதன் அணுசக்தி திட்டங்கள் மின்சார உற்பத்திக்கானது என இரான் கூறி வருகிறது.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, லெபனான்
மறுபுறம் சனிக்கிழமை தெற்கு லெபனான் மீது நடத்தப்பட்ட இஸ்ரேலிய தாக்குதல்களில் 4 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என, அந்நாட்டின் அரசு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஹெஸ்பொலா இஸ்ரேல் மீது ராக்கெட்டுகளை ஏவியதாக இஸ்ரேல் ராணுவம் கூறுகிறது.
இஸ்ரேல் மற்றும் ஹெஸ்பொலா இடையே போர்நிறுத்தம் அமலில் உள்ள போதிலும் சமீப வாரங்களில் இரு தரப்பும் பரஸ்பரம் தாக்கிக்கொண்டன. ஒப்பந்தத்தை மீறியதாக ஒருவரையொருவர் குற்றம் சுமத்திக்கொண்டன.
சனிக்கிழமை அன்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அலுவலகத்திலிருந்து வந்த அறிக்கையில் லெபனானில் உள்ள ஹெஸ்பொலா இலக்குகளைத் தீவிரமாக தாக்க ராணுவத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
“அமெரிக்கா மீண்டும் தாக்கினால்…” – வளைகுடா நாடுகளை எச்சரித்த இரான் எம்.பி
அமெரிக்கா மீண்டும் இரானைத் தாக்கினால் தங்கள் நாடு பேரழிவைத் தரும் பதிலடியைக் கொடுக்கும் என, இரான் நாடாளுமன்ற உறுப்பினர் மெஹ்மூத் நபாவியன் தெரிவித்துள்ளார்.
“இந்தப் பிராந்தியத்தில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள், தீய எண்ணம் கொண்ட அமெரிக்க அரசின் புது விதமான முட்டாள்தனத்தையே குறிக்கிறது,” என தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
மேலும் அவர், “இந்த முறை இரான் தக்க பதிலடி கொடுக்கும் என்பதை பிராந்திய நாடுகளின் தலைவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும். பிராந்திய எண்ணெய் உற்பத்தியை முற்றிலுமாக நிறுத்தி அனைத்து உள்கட்டமைப்புகளையும் அழித்து இந்த நாடுகளின் மக்கள் இடம்பெயர்ந்த அகதிகளாக மாறுவதற்கு இது வித்திடும்.” எனத் தெரிவித்திருந்தார்.
தீவிர நிலைப்பாடு கொண்ட நாடாளுமன்ற உறுப்பினரான நபாவியன், இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற முதல்கட்ட பேச்சுவார்த்தையில் கலந்துகொண்ட இரான் குழுவில் இடம்பெற்றிருந்தார்.
இரான் உடனான போர்நிறுத்தத்தை காலவரையறை இன்றி டிரம்ப் நீட்டித்திருந்தார். எனினும், அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் வெள்ளிக்கிழமை அன்று கூறுகையில், “இரானிய உள்கட்டமைப்புகளைத் தாக்குவதற்கு அமெரிக்கா முழுவதும் தயாராக இருக்கிறது.” என்றார்.
போர் தொடங்கியதில் இருந்து வளைகுடா நாடுகளில் “அமெரிக்காவின் இருப்பு” என, வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி குறிப்பிடும் தளங்கள் மீதும் இரான் தாக்குதல்கள் நடத்தியது.
இந்த நிலையில், இரானிய துறைமுகங்களை அமெரிக்கா முற்றுகையிட்டுள்ளாதால் மக்கள் மின்சார நுகர்வை குறைத்துக் கொள்ளுமாறு இரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் கேட்டுக்கொண்டுள்ளார்.
எதிரிகள் நாட்டின் உள்கட்டமைப்புகளை அழிக்கிறார்கள் என்றும் மக்களிடையே அதிருப்தியைப் பரப்ப முற்றுகையிடுகிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
படக்குறிப்பு, உங்கள் பகுதியில் போதைப்பொருள் பிரச்னை உள்ளதா? கருத்துகள், அனுபவங்களை பகிர இங்கே கிளிக் செய்யவும்