
-
- எழுதியவர், கஸ்ரா நஜி
- பதவி, சிறப்பு செய்தியாளர், பிபிசி பாரசீக சேவை
-
இரானின் அதிஉயர் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி சமீப நாட்களாக தனது ரகசிய மறைவிடத்தில் தங்கி வருகிறார். தான் குறிவைக்கப்பட்ட நபர் என்பதை அவர் அறிவார்.
இரானில் போராடி வருபவர்களுக்கு உதவ அமெரிக்கா அடுத்து என்ன செய்யும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிடம் கேள்வி எழுப்பப்பட்ட போது, காசெம் சுலைமானி மற்றும் அபு பக்ர் அல்-பாக்தாதி என்று மட்டும் குறிப்பிட்டார்.
மத்திய கிழக்கில் இரானின் மிக முக்கியமான ராணுவ உத்தி நிபுணரான சுலைமானி 2020-ஆம் ஆண்டு ஜனவரி 3-ஆம் தேதி, பாக்தாத் சர்வதேச விமான நிலையத்திற்கு வெளியே நடத்தப்பட்ட டிரோன் தாக்குதலில் கொல்லப்பட்டார்.
ஐஎஸ் குழுவின் தலைவரான அல்-பாக்தாதி, 2019-ஆம் ஆண்டு அக்டோபர் 27-ஆம் தேதி வடக்கு சிரியாவில் அவர் மறைவிடத்தை அமெரிக்கப் படைகள் சூழ்ந்த போது தற்கொலை குண்டை செயல்படுத்தியதில் அவரும் அவரின் இரு குழந்தைகளும் கொல்லப்பட்டனர்.
இந்த இரண்டு நடவடிக்கைகளும் டிரம்பின் உத்தரவின் பேரிலே நடத்தப்பட்டன.
ஹெல்பொலா தலைவர் ஹசன் நஸ்ரல்லாவுக்கு நிகழ்ந்ததையும் காமனெயி கருத்தில் கொள்ளலாம்.
2024-ஆம் ஆண்டு செப்டம்பர் 27-ஆம் தேதி பெய்ரூட்டில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றுக்கு கீழே 60 அடி ஆழத்தில் இருந்தபோது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் அவர் கொல்லப்பட்டார். அப்போது தனது மூத்த அதிகாரிகளை அவர் சந்தித்துக் கொண்டிருந்தார்.
பட மூலாதாரம், Anadolu Agency/Getty Images
சமீபத்தில் வெனிசுவேலா தலைநகர் கராகஸில் அந்நாட்டின் அதிபர் அமெரிக்காவால் கடத்தப்பட்டதும் காமனெயி எண்ணங்களில் இருக்கலாம்.
ஆனால் இரானின் அதிஉயர் தலைவர் அதிகாரத்திலிருந்து நீக்கப்பட்டால் அது அங்கு நடைபெற்று வரும் போராட்டங்களின் எதிர்காலத்தின் மீதும் இரானின் எதிர்காலத்தின் மீதுமே என்ன தாக்கம் செலுத்தும் என்பது தெளிவாக இல்லை.
அதிபர் டிரம்ப் தனது வாய்ப்புகளை கருதி வருகிறார். இந்தச் சூழலில் இரானின் அதிஉயர் தலைவருக்கும் அவரின் அரசுக்கும் உள்ள வாய்ப்புகள் என்ன?
இரானியர்களால் வெறுக்கப்படும் நபரா காமனெயி?
86 வயதான காமனெயி இரானிலுமே பலரால் வெறுக்கப்பட்ட நபராக இருக்கிறார்.
பல ஆண்டுகளாக நாடு முழுவதும் போராட்டக்காரர்கள் அவரின் வீழ்ச்சிக்காக போராடி வருகின்றனர். இவரின் அரசு தான் உலகில் மிகவும் அடக்குமுறை நிறைந்ததாக உள்ளது.
கடந்த 36 ஆண்டுகளாக இஸ்லாமின் பெயரில் நடைபெற்று வரும் ஆட்சி ரஷ்யா மற்றும் சீனாவை சார்ந்திருக்கும் நிலையில், அமெரிக்க மற்றும் மேற்குக்கு எதிரான கொள்கைகளை அவர் பின்பற்றியுள்ளார்.
அவர் பின்பற்றிய அணுசக்தி கொள்கையால், ரஷ்யாவுக்கு அடுத்தபடியாக கடுமையான சர்வதேச பொருளாதார நெருக்கடிகளை இரான் சந்தித்து வருகிறது. இது நாட்டை மிகவும் ஏழ்மையான மற்றும் தடுமாறும் நிலைக்கு தள்ளியிருக்கிறது.
மத்திய கிழக்கில் அதிகாரத்தைக் காட்டும் அவரின் முயற்சிகள் பிராந்தியத்தை மோதலுக்குள் கொண்டு சென்றது. இஸ்ரேலைத் தாக்க அவர் விடுத்த அழைப்புகள் அந்நாட்டுடன் போருக்கு வித்திட்டது.
பட மூலாதாரம், AFP via Getty Images
சமீபத்திய போராட்டங்களின்போது பாதுகாப்பு படைகள் போராட்டக்காரர்களை ஒடுக்க காமனெயி ஒப்புதல் வழங்கினார்.
இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளதால் போராட்டத்தின் தீவிரம் பற்றிய தெளிவான பார்வை இல்லை. ஆனால் பாதுகாப்பு படைகளால் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர். இது நகரங்களில் மட்டுமல்லாமல் கிராமங்களிலும் நிகழ்ந்திருப்பது போராட்டத்தின் வீச்சை காட்டுகிறது.
சர்ஜிகல் ஸ்ட்ரைக் மூலமாகவோ அல்லது படைகளின் தாக்குதலின் மூலமாகவோ அவர் அதிகாரத்திலிருந்து அகற்றப்பட்டால் இரானில் ஆட்சி மாற்றம் ஏற்படும். இது நாடு செல்லும் பாதை மற்றும் அமல்படுத்தப்படும் கொள்கையில் மாற்றத்திற்கு வழிவகுக்கலாம்.
ஆனால் இவருக்கு மாற்றாக யார் வருவார் என்பதில் தெளிவில்லை. குழப்பமும் மோதல்களும் தொடரலாம். ஆனால் புரட்சிகர படை அந்த வெற்றிடத்தை நிரப்பி ராணுவ ஆட்சியை உருவாக்கும் சாத்தியம் அதிகம் உள்ளது.
பட மூலாதாரம், Getty Images
காமனெயி அகற்றப்படுவதை இரான் அரசில் அங்கம் வகிக்கும் சிலருமே வரவேற்கலாம் என்கிறார் யேல் பல்கலைக்கழக விரிவுரையாளரும் இரானியர்களுக்கு என்ன வேண்டும் என்கிற புத்தகத்தின் ஆசிரியருமான அராஷ் அஜிஸி.
“இரான் ஆளும் வர்க்கத்தின் பெரும்பகுதி சில மாற்றங்களை மேற்கொள்ள தயாராகிறது. காமனெயியை அகற்றவும் இஸ்லாமியக் குடியரசின் அடிப்படை கொள்கைகள் மற்றும் அமைப்புகளை மாற்றவும் தயாராக இருக்கின்றனர். எனவே அந்த இலக்கை விரைவாக அடைய அமெரிக்க தாக்குதல்களை அவர்கள் வரவேற்கக்கூடும்,” என்றும் தெரிவித்தார்.
“ஆள்பவர்கள், ஆட்சி செய்யப்படுபவர்கள்”
இரான் நாடாளுமன்ற சபாநாயராக இருப்பவர் 65 வயதான முகமது பாகர் கலிபாஃப். புரட்சிகரப் படையின் உறுப்பினரான இவர் சர்வாதிகார தன்மை கொண்டவர். இரான் அரசுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்து வருகிறார்.
ஆனால் காமனெயி அவரை எப்போதும் முழுமையாக நம்பியது இல்லை. அரசாங்கத்தின் இருப்பவர்களில் சிலர் அவர் சரியான சந்தர்ப்பத்திற்காக காத்திருக்கும் உளவாளி என்றும் கருதுகின்றனர்.
அரசாங்கத்தில் உள்ள மிதமான தன்மை கொண்ட நபர்கள் கூட தலைமை பொறுப்பிற்கு வரலாம்.
முன்னாள் அதிபர் ஹசன் ரௌஹானி நினைவுக்கு வருகிறார். அதிஉயர் தலைவரின் மறைவுக்குப் பிறகு மிதமான இஸ்லாமியவாதிகள் மற்றும் சீர்திருத்தவாதிகளுக்கு ஏற்றவராக தன்னை நிலைநிறுத்தி வருகிறார்.
புனித ஆன்ட்ரூஸ் பல்கலைக்கழகத்தில் இரானிய படிப்புகளுக்கான நிறுவனத்தின் நிறுவன இயக்குநரான அலி அன்சாரி, சீர்திருத்தவாதிகள் பொருத்தமற்றவர்களாக இருக்கிறார்கள் என நம்புகிறார்.
“அடிப்படையில், சீர்திருத்தவாதிகள் என யாரும் இல்லை… அவர்கள் போலியான, நகலெடுக்கப்பட்டவர்களைப் போன்றவர்கள். அவர்கள் முற்றிலும் ஓரங்கப்பட்டுவிட்டனர்,” என்றும் தெரிவித்தார்.
“இங்கு ஆள்பவர்கள், ஆட்சி செய்யப்படுபவர்கள் மட்டுமே உள்ளனர்.”
பட மூலாதாரம், AFP via Getty Images
ஆனால் இரானின் தெருக்களில் போராடிய பலரும் முன்னாள் இரான் ஷாவின் மகனான இளவரசர் ரெசா பஹ்லவியின் பெயரைக் கூறி வந்தனர். 65 வயதான ரெசா பஹ்லவி தனது வாழ்நாளில் பெரும்பகுதியை நாடு கடத்தப்பட்ட நிலையில் அமெரிக்காவில் வசித்து வருகிறார்.
சமீப ஆண்டுகளில் இரானுக்கு உள்ளே ரெசா பஹ்லவியின் புகழ் அதிகரித்துள்ளது. பலரும் 1970களில் இருந்த ஷாவின் ஆட்சியை நினைவுகூர்ந்து பார்க்கின்றனர். அந்தக் காலத்தில் அந்த நாடு வசதி வாய்ந்த நாடுகளில் ஒன்றாக இருந்தது.
ஆனால் ரெசா பஹ்லவி அனைத்து தரப்பையும் ஒருங்கிணைக்கக்கூடிய நபரல்ல. அவர் பிரிவினைவாதியாக இருக்கிறார் எனப் பலரும் வாதிடுகின்றனர்.
நாட்டிற்கு வெளியே இரானியர்களை ஒரே குடையின் கீழ் ஒருங்கிணைக்க தவறியதால், நாடு தனக்குப் பின் இருக்கிறது எனக் கூறி அவர் தனித்துச் செல்ல முடிவெடுத்தார்.
நாட்டிற்கு உள்ளே இரானியர்கள் ஆசைப்படும் ஒரே தலைவராக இவர் இருந்தாலும் அவர் ஆட்சிப் பொறுப்பை ஏற்பது சாத்தியமற்றது என்பதை அறிவது கடினமான ஒன்றல்ல. இரானில் அதிகாரத்தைப் பிடிக்க அவருக்கு எந்த கட்டமைப்பும் இல்லை.
சமீபத்திய போராட்டங்களின் போது இரானுக்கு உள்ளே அவருடைய புகழ் ஆச்சரியமளிக்கும் விதத்தில் அதிகரித்ததற்கு, வெறுக்கப்பட்ட ஆட்சிக்கு எதிரான ஒரே போட்டியாளராக போராட்டக்காரர்கள் இவரைப் பார்த்ததே காரணம் எனப் பலரும் வாதிடுகின்றனர்.
இந்த அரசுடன் எந்தத் தொடர்பும் இல்லாத மேற்குடன் சிறந்த உறவுகளை விரும்புகிற ஒருவரையே போராட்டக்காரர்கள் தேர்வு செய்யக்கூடும்.
“தற்போது போராட்டக்காரர்கள் ஏற்றுக்கொள்ளக்கூடியவை என்பது மிகவும் குறைவாகவே உள்ளன. ஏனென்றால் இந்தப் போராட்டங்கள் மிகப்பெரிய ஒன்றைப் பற்றியது,” என்கிறார் சாத்தம் ஹவுசில்(Chatham House) உள்ள மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்ரிக்க திட்டத்தின் இயக்குநரான முனைவர் சனம் வகில்.
“இந்தப் போராட்டங்கள், கடந்த 50 ஆண்டுகளாக இரானில் இருக்கும் தனிநபர்கள் மற்றும் அமைப்புகளிடமிருந்து இரானின் நிர்வாகத்தை முற்றிலுமாக மாற்றியமைப்பது பற்றியதே,” என்றும் அவர் தெரிவித்தார்.
பட மூலாதாரம், WANA/Reuters
தற்போது பதுங்கு குழியில் வசித்து வரும் காமனெயி கடந்த மூன்று வாரங்களாக நடைபெற்று வரும் நிகழ்வுகள் பற்றியும் எவ்வாறு தான் இந்த நிலைக்கு வந்தோம் என்பது பற்றியும் ஆய்வு செய்து கொண்டிருப்பார்.
இரான் அரச நிர்வாகம் தற்போது வரை தனக்கு விசுவாசமாக இருப்பதை நினைத்து அவர் திருப்தியடையக்கூடும். இரான் அரசைப் பாதுகாக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட புரட்சிகர படையில் குறிப்பிடத்தகுந்த மாற்றுக் கருத்தோ அல்லது விசுவாசமின்மையோ இருப்பதற்கான அறிகுறிகள் இல்லை.
புரட்சிகர படைகள் மற்றும் இதர பாதுகாப்பு படைகளின் நிலைகள் மீதான சாத்தியமான அமெரிக்க தாக்குதல்கள் அவர்களை உடைத்து பலவீனப்படுத்தி அரசை கவிழ்க்க அதிக அளவில் போராட்டக்காரர்கள் வருவதற்கான வாய்ப்பை உருவாக்கும் என்கிற பிம்பத்தை டிரம்பின் வரிகள் வெளிப்படுத்தின.
“உதவி வந்து கொண்டிருக்கிறது,” எனக் கூறிய டிரம்ப் போராட்டக்காரர்கள் தொடர்ந்து பேசவும் அரசு கட்டடங்களை ஆக்கிரமிக்கவும் தூண்டிவிட்டார்.
பட மூலாதாரம், AFP via Getty Images
பாதுகாப்பு படைகள் தங்களைச் சுடலாம் எல்லது கொலை செய்யலாம் என்கிற அச்சத்தில் தெருக்களில் இருந்து பின் வாங்கிய போராட்டக்காரர்கள் டிரம்பின் வார்த்தைகளால் ஊக்குவிக்கப்பட்டு மீண்டும் போராட வருவது சாத்தியமே.
தற்போது இந்த ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர வேண்டுமென்றால் வெளிநாட்டு தலையீடு வேண்டும் என போராட்டக்காரர்களில் பலரும் நம்புகின்றனர்.
உண்மையில் உதவி வந்து கொண்டிருந்தாலும் சமீபத்திய போராட்டங்களில் இருந்து பாடம் கற்ற போராட்டக்காரர்கள் விரைவில் மீண்டும் போராடுவது சாத்தியமற்றது.
இரும்புக்கரம் கொண்டு செயல்படலாம்
கடந்த 16 ஆண்டுகளில் இரானியர்கள் பலமுறை காமனெயிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடைசியாக 2022-ஆம் ஆண்டு ஹிஜாப் சரியாக அணியவில்லை எனக் கூறி காவலில் வைக்கப்பட்ட மாஹ்ஸா அமினி என்கிற பெண் உயிரிழந்ததை தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்றன.
“பெண்கள், வாழ்க்கை, சுதந்திரம்,” என்கிற பதாகையின் கீழ் நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன. பல வாரங்கள் தொடர்ந்து நடைபெற்ற இந்தப் போராட்டங்கள் பாதுகாப்பு படைகள் வெளிப்படுத்திய கொடூரத்தன்மை மற்றும் படை பலத்தால் முடித்து வைக்கப்பட்டன.
அப்போது பெண்கள் மீது இஸ்லாமியவாதிகள் கொடுத்த அழுத்தம் தான் மக்களைப் போராட தெருக்களுக்கு அழைத்து வந்தது.
பட மூலாதாரம், NurPhoto via Getty Images
தற்போதைய போராட்டங்கள் பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரம் பற்றியது. இரானின் நாணயமான ரியாலின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வரும் நிலையில் வர்த்தகர்களால் செயல்பட முடியவில்லை. சர்வதேச பொருளாதார தடைகள் மற்றும் தவறான நிர்வாகத்தால் வறுமை அதிகரித்துள்ளது.
அதேவேளையில் இரான் தண்ணீர், மின்சாரம் மற்றும் எரிவாயுக்கான பற்றாக்குறையை சந்தித்து வருகிறது. உலகில் இரண்டாவது பெரிய இயற்கை எரிவாயு இருப்பு இரானிடம் தான் உள்ளது. அவர்களின் அலட்சியம் எப்போதும் நிலைத்திருக்கக் கூடிய பாரதூரமான சூழலியல் சீரழிவிற்கு வித்திட்டுள்ளது.
கடந்த மாதம் போராடத் தொடங்கிய வணிகர்களுக்கு நியாயமான குறை இருந்தது என்பதை காமனெயி ஒப்புக்கொண்டார். நாணயத்தின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருவதால் அவர்களால் வணிகம் செய்ய முடியவில்லை என அவர்கள் ஒப்புக்கொண்டனர்.
இந்தப் பிரச்னையை தீர்க்க அதிகாரிகள் முயற்சித்து வருவதாகக் கூறிய காமனெயி, இவை எதிரிகளால் உருவாக்கப்பட்டவை என்றும் தெரிவித்தார்.

அலி அன்சாரியின் கூற்றுப்படி, அடிப்படை கட்டமைப்புகளில் முதலீடு செய்யத் தவறியது நாட்டிற்கு பேரழிவை ஏற்படுத்தக் கூடியதாக அமைந்தது.
“இரான் அரசு கொண்டுள்ள பிரச்னைகள் கட்டமைப்பு ரீதியாக மிகவும் ஆழமானவை மற்றும் பல ஆண்டுகளாக இருக்கக்கூடியவை. இப்போது நமக்கிருக்கும் பிரச்னைகளை நாம் சமாளிக்க முடியவில்லை என்றால் உதாரணமாக பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகளை வழங்க முடியவில்லை என்றால் கடந்த 20 ஆண்டுகளாக நாம் உள்கட்டமைப்புகளில் முதலீடு செய்யவில்லை என்று இரானின் பொருளாதார நிபுணர்களுமே கூறி வருகின்றனர்.” என்றும் தெரிவித்தார்.
இந்தப் பிரச்னைகள், குறிப்பாக சீரழிவைச் சந்திக்கும் பொருளாதாரத்திற்கு காமனெயி வசம் எந்தத் தீர்வும் இல்லை. ஆனால் சமீப வாரங்களில் நடைபெற்ற போராட்டங்களுக்குப் பிறகும் நம்பிக்கையை இழப்பதற்கு நேரம் இல்லை. இரும்புக்கரம் கொண்டு செயல்பட வேண்டும் என அவர் நினைக்கலாம்.
எல்லாவற்றிற்கும் மேலாக, தூய இஸ்லாமை பரப்புவதற்கும் கடவுளை திருப்திபடுத்துவதற்கும் நாட்டை ஆள தான் ஆசிர்வதிக்கப்பட்டிருப்பதாக அவர் நினைக்கலாம்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு