பட மூலாதாரம், Penguin Random House India
ஐரோப்பாவில் சமயசீர்திருத்த எதிர்ப்பு இயக்கம் தோன்றிய காலத்திலிருந்து இயேசு சபையினர் இந்தியாவிற்கு வரத் தொடங்கியிருந்தனர். பன்னாட்டு வர்த்தகத்திற்கேற்ற மையமாக கோவா கருதப்பட்டதால், 1510ஆம் ஆண்டு போர்ச்சுக்கீசிய ஆளுநர் அல்போன்சோ டி அல்புகர்க், பிஜப்பூர் சுல்தானிடமிருந்து கோவாவைக் கைப்பற்றி போர்ச்சுகீசியர் ஆதிக்கத்தை நிலைநாட்டியிருந்தார்.
அந்நேரத்தில் அங்கு இந்து கோயில்கள் இடிக்கப்பட்டன. இந்து சமயச் சடங்குகள் தடை செய்யப்பட்டன, ஆதரவற்றோர் கடத்தப்பட்டு மதம் மாற்றப்பட்டனர். நொபிலிக்கு முன் வந்த புனித பிரான்சிஸ் சேவியர் (1542), போர்ச்சுக்கீசிய அரசு ராணுவ அதிகாரிகளின் அடாவடித்தனங்கள், கொள்ளை, ஊழல் பற்றி வேதனையோடு மறை மாநில அதிபருக்கு புகார் செய்ததோடு, ‘போர்ச்சுக்கீசியர்கள் பேராசையினாலும் ஒழுக்கக்கேட்டாலும் இங்குள்ள மக்களுக்கு நாம் செய்த பணிகள் எல்லாம் அழிவதைக் காணும்போது மனம் வேதனையாய் இருப்பதாகவும், எனவே இங்கிருந்து எனது நேரத்தை வீணடிக்காது ஜப்பான் செல்லப்போவதாகவும்’ போர்ச்சுகல் மன்னர் மூன்றாம் ஜானுக்கும் கடிதம் எழுதினார்.
இருப்பினும் பிரான்சிஸ் சேவியர் வருகையால் மீன்பிடிக் கடற்கரைப் பகுதிகளில் மதம் மாறியவர்களின் எண்ணிக்கை, பரதவர், கேரள முக்குவர்கள், காரவர்கள் உட்பட 50,000 ஆக உயர்ந்திருந்தது.
இராபர்ட் டி நொபிலியின் சமயப்பணி ஆர்வம்
இராபர்ட் டி நொபிலி ரோமில் ஒரு உயர் குடியில் பிறந்தவர் (1577). இரு போப்பாண்டவர்களுக்கு (மூன்றாம் ஜூலியஸ், இரண்டாம் மார்செலஸ்) உறவினர். ரோமின் ஒரு பகுதிக்கு கோமகனாக வேண்டியவர். ஆதலால் அவர் இயேசு சபையில் சேர்ந்து சமயப் பணியாற்றுவதை அவர் பெற்றோர் விரும்பவில்லை. ஆனால் நொபிலி தனது பதினேழாவது வயதிலேயே இயேசு சபையில் சேர்வதில் தீர்மானமாக இருந்தார்.
பெற்றோரின் அனுமதி கிடைக்காது என்பதால் ஒருநாள் வீட்டை விட்டு வெளியேறி நேபிள்ஸ் சென்றார். அங்கு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதால் தனது உறவினர் ஒருவர் மூலம் தனது குடும்பச் சொத்தில் தனக்கு எதுவும் வேண்டாம் என்று எழுதிக்கொடுத்துவிட்டு பெற்றோரின் அனுமதி பெற்று நேபிள்ஸில் சமயப்பணிக்கு முறையாக பயிற்சிபெறறார்.
கிழக்கிந்திய நாடுகளில் பணியாற்றுவதற்கான தனது விருப்பத்தை தெரிவித்து அதன்படி அங்கிருந்து 1604ஆம் ஆண்டு கோவா புறப்பட்டார்.
பட மூலாதாரம், Getty Images
பயணத்தின் போது பட்ட இன்னல்கள்
நொபிலி, லிஸ்பனிலிருந்து கோவா செல்லும் 14 மாத கப்பல் பயணத்தின்போது, தான் பட்ட இன்னல்களை இயேசு சபையின் தலைவர் கிளாடியோ அகுவியாவுக்கு எழுதிய கடிதத்தில் விவரிக்கிறார்.
‘முதலில் சென்ற கப்பல் மொசாம்பிக் அருகில் மணல் படுக்கையில் சிக்கியதால் சரக்குகளுடனான அக்கப்பலை அங்கேயே விட்டுவிட்டு ஒரு படகில் சென்றோம். அதுவும் பழுதானதால், மெலிந்தே கடற்கரை ஓரம் இருந்த போர்ச்சுகீசியர் கோட்டைக்குச் சென்று அங்கிருந்தவர்கள் உதவியுடன் கோவா சென்றடைந்தோம்’.
பல நேரங்களில் கெட்டுப்போன பிஸ்கெட், சுத்தமற்ற குடிநீர் அருந்தியதால் கோவா சென்றபின் கடுமையான காய்ச்சலால் நொபிலி அவதிப்பட்டார். கோவாவில் செயின்ட் பால் கல்லூரியில் நொபிலி தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்கிருந்து அடுத்த ஐந்து ஆண்டுகள் கிறித்தவ வேதமறைகளை தொடர்ந்து கற்றார்.
கோவாவிலிருந்து கொச்சி பயணம்
பட மூலாதாரம், Getty Images
கருத்து வேறுபாடுகளால் தனிநபர் விவாதங்கள் கூட பல சமயங்களில் பெரும் சர்ச்சையைக் கிளப்பி மோதல்களை உருவாக்கும் இடமாக கோவா அப்போதிருந்ததால் நொபிலி தெற்கு நோக்கி செல்ல நினைத்தார். கோவாவிலிருந்து கொச்சி சென்ற அவர் மீண்டும் நோய் வாய்ப்பட்டார். அங்கிருந்த ஒரு கல்லூரியில் தங்கியிருந்த போது பிரான்சிஸ்க்கன், டொமினிக்கன் ஆகஸ்டினியனின் துறவிகள் மடங்களுக்குச் சென்று கலந்துரையாடும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது.
மூன்று மாதங்கள் கழித்து, பிரான்சிஸ் சேவியர் பரதவர்களுக்கு ஞானஸ்நானம் செய்து வைத்தவர். கன்னியாகுமரியிலிருந்து ராமேஸ்வரம் வரையிலான மீன்பிடி கடற்கரைப் பகுதிகளுக்கு அவர் சென்றார்.
நொபிலியின் மதுரை வருகை
நொபிலி மதுரை சென்றபோது அப்பகுதியில் பெரும் எண்ணிக்கையிலான கிறித்தவ சமூகத்திற்கு தலைவராக இருந்த கான்சலோ பெர்னாந்து ஒரு பள்ளிக் கூடம், ஒரு மருத்துவமனை நடத்தி வந்தார். 16ஆம் நூற்றாண்டின் இறுதியிலேயே கத்தோலிக்க வழிபாட்டு ஆலயங்கள் தெற்குக் கடற்கரையோர வர்த்தக வழித்தடங்களில் அமைந்திருந்தன.
பரதவர்களுக்கும் மதுரை வழியாக சென்ற போர்ச்சுக்கீசிய வணிகர்களுக்கும் வேதமறைகளைப் போதித்து வந்தார். அவர் அங்கு வந்து பதினோரு ஆண்டுகள் கழிந்திருந்தன. மதுரை மக்கள் கண்ணோட்டத்தில் கிறித்தவம் ஒரு கடவுளற்ற, சாதியில்லா பரங்கிகளின் மதமாகக் கருதப்பட்டது.
பரதவர்களுக்கும் போர்ச்சுகீசியர்களுக்கும் சமஸ்கிருதம் பற்றியோ, பௌத்தம், சமணம் பற்றியோ எதுவும் தெரியாது. பெர்னாந்து பரதவர்களுடன் எப்போதும் காணப்பட்டதால் மற்றவர் எவரும் அவரை அணுகவோ அல்லது அவரிடம் கலந்துரையாடவோ இல்லை. மதுரையில் அவரால் புதிதாக ஒருவரைக்கூட கிறித்தவராக்க முடியவில்லை.
மணற்பாங்கான கடலோரங்களில் பரதவர் வாழ்விடங்களைப் பார்த்த நொபிலி கண்களுக்கு மீனாட்சியம்மன் கோயில், கலை வேலைப்பாடுகளுடனான கட்டிடங்கள் கொண்ட மதுரை கம்பீரமாக காட்சியளித்தது. தனது ஒன்று விட்ட சகோதரி கேதரினா நொபிலிக்கு எழுதிய கடிதத்தில் மக்கள் நெருக்கம் கொண்ட அழகிய நகரம் மதுரை; கிறித்தவம் பரவுவதற்கு முன் ரோம் எப்படி காட்சியளித்ததோ அவ்வாறு மதுரை இருப்பதாக குறிப்பிடுகிறார். வல்லமை பொருந்திய நாயக்க மன்னர்களின் ஆதிக்கத்தில் மதுரை இருந்ததாகவும் அப்போது நாயக்க மன்னர் இரண்டாம் கிருஷ்ணப்ப நாயக்கர் கிறித்தவத்திற்கும், கிறித்தவ நிறுவனங்களுக்கும் ஆதரவாக இருந்ததாகவும் அக்கடிதத்தில் நொபிலி தெரிவிக்கிறார்.
தொடக்க கால வாழ்க்கை
மதுரை சென்ற நொபிலி அங்கு செல்வந்தர் ஒருவர் கொடுத்த குடிலில் தங்கினார். தனிமையில் யாரையும் சந்திக்காது அரிசிச் சோறு, பால், சில மூலிகைச்சாறு என எளிய உணவை வாழை இலையில் பரிமாறச் செய்து உட்கொண்டு தவமிருந்தார். இந்த சைவ உணவு அவருக்கு ஏற்றதாக இருந்தது. ஏனெனில் அதுவரை அடிக்கடி நோய்வாய்ப்பட்ட நொபிலி மதுரை வந்தபின் தேக ஆரோக்கியத்துடன் காணப்பட்டார்.
அவரது பிராமண சமையல்காரர், பிராமணர் அல்லாத உயர் சாதி வகுப்பைச் சார்ந்த இயேசு சபைக்குச் சொந்தமான பள்ளிக்கூட ஆசிரியர் ஆகிய இருவர் மூலமே நொபிலி வெளியுலகத் தொடர்புகளை வைத்திருந்தார்.
பட மூலாதாரம், Getty Images
தமிழ் மொழி மற்றும் இலக்கியங்களை கற்ற நொபிலி
அப்போது நிலவிய சூழல் ரோமானியர்கள் மத்தியில் யூதர்கள் பணியாற்றிய போது சமயப் பணியாளர்களுக்கு இருந்த சவால்கள் போன்றிருப்பதாக எண்ணிய நொபிலி, நாயக்க மன்னர்களையும், உள்ளூர் பிராமணர்களையும் முதலில் மதம் மாறச் செய்வதே தனது முக்கிய பணியாகக் கருதினார்.
பெர்னாந்துவின் “பண்டாரசாமி” அணுகுமுறைக்கு மாற்றாக, பிராமண சந்நியாசி மாடல் பொருத்தமானதாக இருக்கும் என்று நம்பினார். பரதவர்களைத் தவிர்த்துவிட்டு பிராமணர்களையும் வேளாளர்களையும் விவாதங்கள், போதனைகள் மூலம் தனது மதத்தின் மீது நம்பிக்கை வரச்செய்து, அவர்களை கிறித்தவ மதத்தைத் தழுவச் செய்ய முடியும் என்பதில் உறுதியாக இருந்தார்.
சமஸ்கிருத மொழி, இலக்கியங்களை தனக்குக் கற்றுக் கொடுக்க பள்ளி ஆசிரியர் மூலம் ஒரு பிராமணரை ஆசிரியராக பணியில் அமர்த்தினார். கூடவே தமிழும் தெலுங்கும் கற்றார். தனது நண்பருக்கு 1606ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் எழுதிய கடிதத்தில் ‘எனது இத்தாலி மொழி மோசமாயிருப்பதைப் பார்த்து ஆச்சரியப்பட வேண்டாம். போர்ச்சுகீசிய மொழியையும் தமிழ் மொழியையும் படித்ததில் இத்தாலிய மொழி மறந்து விட்டது’ என நொபிலி எழுதுகிறார்.
நொபிலி போர்ச்சுகீசிய மொழியில் உரையாடுவதைத் தவிர்த்து சுத்த தமிழில் பேசினார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
நொபிலியின் புதிய அணுகுமுறை
தூய்மை, அடக்கம், ஒழுக்கம், பக்தி போன்ற நற்குணங்களை வளர்ப்பதை தனது உன்னதமான கடமையாக நோபிலி கருதினார். தலை முடியை மழித்து பிராமண துறவி போல் ஆடை அணிந்தார். மஞ்சள்நிற அங்கி, தலைப்பாகை, வெள்ளை அல்லது சிவப்பு நிறத்தில் முக்காடு, பூணூல், தோல் காலணிக்குப் பதிலாக மரச் செருப்பு அணிந்து துறவி போல் தோன்றினார்.
தான் பரங்கியும் அல்ல, போர்ச்சுக்கீசியரும் அல்ல, ரோமாபுரி மன்னன் என்பது போல பக்தர் ஒருவர் குடை பிடிக்க மதுரையில் வலம் வந்தார். தனது திருச்சபையை பெர்னாந்தோ திருச்சபையிலிருந்து பிரித்தார்.
மதம் மாறியவர்களுக்கு குடுமி, பூணூல் அனுமதிக்கப்பட்டது. ஆனால் ஒரு பிராமணர் கிறித்தவரானவுடன், அவர் முன்பு போட்டிருந்த பூணூல் நீக்கப்பட்டு, அருட்தந்தையால் ஆசீர்வதிக்கப்பட்ட பூணூல் அணிவிக்கப்பட்டு, இயேசு பெயர் பதித்த சிலுவையும் ஒரு தட்டும் வழங்கப்படும். பின் அருள்தந்தையும் மதம் மாறிய கிறித்தவர்களும் நீராடி நெற்றியில் சந்தன விபூதி பூசி ஞானஸ்நானத்திற்கு தயாராகுவர்.
நொபிலி அணுகுமுறையில் கத்தோலிக்க மதத்திற்கு மாறியவர்கள் இத்தகைய சடங்குகளுக்கு உட்படுத்தப்பட்டனர்.
பட மூலாதாரம், Getty Images
பிராமணர்களை வாதத்தால் வெல்லுதல்
நொபிலி தனது சர்ச்சைக்குரிய நடத்தைகளால் உள்ளூர் பிராமணர்களின் கடுமையான எதிர்ப்பைச் சந்தித்தார்.
மதுரையில் இருந்த பிராமணர்கள் அவரது சமஸ்கிருத ஆசிரியர் மூலமாக அவர்கள் கேட்கும் அனைத்து கேள்விகளுக்கும் அவர் பதில் அளிக்க முடியுமா? என சவால் விட்டதன் பேரில் ஒரு விவாத அரங்கத்திற்கு ஏற்பாடு செய்தார். அதன்படி சமஸ்கிருத ஆசிரியர் ஏற்பாடு செய்த விவாத அரங்கில் 800 பிராமணர்கள் பங்கேற்றனர்.
சைவர்களின் திருமுறைகள், சித்தாந்த சாஸ்திரங்கள், வைணவர்களின் நாலாயிர திவ்விய பிரபந்தம், இந்து வேதங்கள், உபநிடதங்கள் அனைத்தையும் ஆழமாக கற்றறிந்திருந்ததால் பிராமணர்கள் எழுப்பிய அனைத்துக் கேள்விகளுக்கும் விளக்கமாக நொபிலியால் பதில் தர முடிந்தது.
மதம் மாற்றத்தின் தொடக்கம்
நொபிலி நடத்திய 20 நாள் விவாதங்களில் பங்கு கொண்ட பிராமணர்கள் அனைவரும் வியந்து “வித்தியாசமான சந்நியாசி” எனப் பாராட்டி கலைந்து சென்றனர். அவரது சித்தாந்த பேரறிவைக் கண்டு மகிழ்ந்து முதலில் மதம் மாறியவர் அவரது சமஸ்கிருத ஆசிரியர் சிவதர்மா. அவரைத் தொடர்ந்து அலெக்சிஸ் நாயக், அவருடைய அம்மா, சகோதரர் பிரான்சிஸ் மூவரும் இயேசு சபையில் இணைந்தனர். அதன்பின் இன்னாசியர் நாயக் என, முதல் முயற்சியிலேயே 10 பேர் நொபிலியின் இயேசுசபையில் சேர்ந்தனர்.
மதம் மாறியவர்கள் எண்ணிக்கை அடுத்த இரு ஆண்டுகளுக்குள் (1611) 150 ஆக உயர்ந்தது.
இந்துகளாக இருந்தபோது எந்த அளவிற்கு அவர்களது கடவுளை நேசித்தார்களோ அந்த அளவிற்கு தனது கடவுள் இயேசு மீது அவர்கள் காட்டிய பக்தி நொபிலியை மெய் சிலிர்க்கச்செய்தது.
மதத்தின் மீதான ஒரு சில தனி நபர்களின் பற்றுதலையும் திருச்சபைக்கு அவர்கள் காட்டிய விசுவாசத்தையும் நொபிலி தனது கடிதங்களில் குறிப்பிடுகிறார். எடுத்துக்காட்டாக இருக்குவேள் வேளாளர் சாதியைச் சேர்ந்த காளீஸ்த்ரி மதம்மாறி ஏசுபட்டன் ஆனார். தான் மட்டுமின்றி தன்னுடைய தந்தையையும் (மதம் மாறிய பின் ஞானி), தனது இரு மகன்களையும் மதம் மாறச்செய்தார். உறவினர் எதிர்ப்பு, சமுதாய எதிர்ப்பு மட்டுமின்றி அரண்மனை போர் வீரர்களிடமிருந்தும் வந்த தொல்லைகள், அச்சுறுத்துதல்கள் அனைத்தையும் எதிர்கொண்டு அஞ்சாமல் அவர்கள் வாழ்ந்ததாக நொபிலி எழுதுகிறார்.
பட மூலாதாரம், Getty Images
பெர்னாந்துடன் கருத்து மோதல்
நொபிலி மதுரை வந்து ஒரு சில ஆண்டுகளே ஆகியிருந்தன. அறுபத்தைந்து வயதான பெர்னாந்து மூத்த இயேசு சபை உறுப்பினர். மதுரை வந்து 11ஆண்டுகள் முடிந்திருந்தன. நொபிலியின் நடவடிக்கை இயேசு சபைக் கோட்பாட்டிற்கு எதிரானது என அவர் குற்றம் சாட்டினார். தன் எதிர்ப்பையும் மற்றவர்கள் சொல்லக் கேட்டதையும் சேர்த்து மறை மாநில அதிபருக்கு கடிதம் எழுதினார்.
பெர்னாந்து எதிர்ப்புக்கு நொபிலி 39 பக்கங்களில் இலத்தீன் மொழியில், சமஸ்கிருத, தமிழ் மேற்கோள்களுடன் பதில் கொடுத்தார்.
1611ஆம் ஆண்டு மலபார் மறை மாநிலத்திற்கு போப்பாண்டவரின் தூதுவராக நியமிக்கப்பட்டிருந்த நிக்காலோ பிமண்டோ நொபிலி அணுகுமுறையைக் கடுமையாகக் கண்டித்தார். அவரும் ஏசு சபைத் தலைமைக்கு விரிவாக ஒரு கடிதம் எழுதினார். நொபிலி இந்து மத சடங்குகளைப் பின்பற்றியது, பெர்னாந்துடன் ஒத்துழைக்காமல் தனித்து செயல்பட்டது இயேசு சபையினரின் கோபத்தையும் தூண்டியது.
1613இல் இயேசு சபை நொபிலி மூன்று விஷயங்களில் தவறு செய்துள்ளதாக அறிவித்தது. அவை, பூணூல், நெற்றியில் சந்தனம், மரச்செருப்பு ஆகிய மூன்றும் ஆகும். ஆயினும் நொபிலி இயேசு சபையின் கருத்தை ஏற்காமல் அவரது அணுகுமுறையைக் கைவிட மறுத்தார்.
மறை மாநில அதிபரின் ஆதரவு
மறை மாநில அதிபராகியிருந்த ஆல்பர்ட் லாசிவோ நொபிலியின் அணுகுமுறையின் விளைவுகளை அறிய சிறிது கால அவகாசம் தேவை என்பதை உணர்ந்து பெர்னாந்துவை இட மாற்றம் செய்தார். அதனால் நொபிலி சுதந்திரமாக செயல்பட முடிந்தது. இதற்கிடையில் போப் பாண்டவர் இந்தியாவில் மதமாற்ற அணுகுமுறையில் ஒரு தெளிவான நிலைப்பாடு எடுக்க கோவாவில் ஒரு மாநாட்டை நடத்துமாறு வேண்டினார். நொபிலிக்கு தனது நிலையை நியாயப்படுத்த ஒரு சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.
நொபிலி ஒரு மாற்றத்திற்காக கொடுங்கலூர் (இன்றைய திருச்சூர் மாவட்டம்) சென்று கோவா மாநாட்டிற்காகக் காத்திருந்தார். 1619இல் மாநாடு முடிந்தது. மாநாட்டில் விவாதப் பொருள்களாக போப்பாண்டவர் அனுப்பியதற்கு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு வாடிகனுக்கு அனுப்பப்பட்டது.
தென்னகத்தில் ஏற்பட்ட அரசியல் குழப்பம்
1614இல் விஜயநகரப் பேரரசர் வெங்கடபதி ராயர் காலமானதைத் தொடர்ந்து ஏற்பட்ட வாரிசுரிமைப் போரால், தஞ்சாவூர் நாயக்க மன்னருக்கும் மதுரை நாயக்க மன்னருக்குமிடையே பகைமை ஏற்பட்டது. அதன் விளைவாக மதுரை நாயக்க மன்னர் முத்து வீரப்ப நாயக்கர் தலைநகரை திருச்சிராப்பள்ளிக்கு மாற்ற வேண்டியதிருந்தது.
அதே நேரத்தில் தென் இந்தியாவில் போர்ச்சுகீசியர்கள் மேலாண்மைக்கு டச்சுக்காரர்களால் அச்சுறுத்தல் ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட வர்த்தக இழப்பு காரணமாக போர்ச்சுகல் மன்னரால் கடல் கடந்த நாடுகளில், குறிப்பாக இந்தியாவில், தன் நாட்டு கத்தோலிக்க சமய நிறுவனங்களுக்கு நிதி உதவி செய்ய முடியாத சூழல் ஏற்பட்டது. டச்சுக்காரர்கள் பண வசதியோடு இருந்ததால் நாயக்க மன்னரையும் தங்கள் பக்கம் இழுத்து போர்ச்சுகீசியரை எளிதில் தனிமைப்படுத்த முடிந்தது.
1622ஆம் ஆண்டு ஏற்பட்ட பெரும் பஞ்சம் நிலையை மேலும் மோசமாக்கியது. பஞ்சத்தால் இறந்த மக்களின் எண்ணிக்கை இறந்தவர்களின் உடல்களை முறையாக அடக்கம் செய்ய முடியாத அளவிற்கு அதிகமாக இருந்தது. இறந்தவர்களில் பெரும்பாலானோர் உடல்கள் வைகை ஆற்றில் வீசி எறியப்பட்டு தண்ணீரால் அடித்துச்செல்லப்பட்டதாக இயேசு சபையினர் குறிப்புகள் தெரிவிக்கின்றன.
இக்கால கட்டத்தில் எத்தகைய மதமாற்றமும் நடைபெறவில்லை. மாறாக பஞ்சத்திற்குக் காரணமே நொபிலியுடைய சர்ச்சைக்குரிய மதமாற்றமே என்று புரளி கிளப்பப்பட்டது. நொபிலியும் அவரது சக சமயப் பணியாளர்களும் மதுரையை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டனர். ஆனால் நொபிலி திட்டவட்டமாக அந்த யோசனைக்கு இணங்க மறுத்தார்.
நொபிலி அணுகுமுறைக்கு கிடைத்த வெற்றி
பட மூலாதாரம், Getty Images
இறுதியாக 1624இல் எதிர்பார்த்த போப்பாண்டவரின் ஒப்புதல் கிடைத்தது. அதன் பிறகு உத்வேகத்துடன் நொபிலி கிறித்தவத்தை தமிழகம் எங்கும் பரப்ப முயற்சி எடுத்தார். போப்பாண்டவரின் அனுமதி கிடைத்த அடுத்த ஆண்டு (1625) நொபிலிக்குத் துணையாக பிராமண சந்நியாசி அணுகுமுறையில் நம்பிக்கை கொண்ட மார்ட்டின் வந்தார்.
அடுத்த சில ஆண்டுகள் நொபிலி மதுரைக்கு வெளியே திருச்சிராப்பள்ளி, சேலம், மார மங்கலம் ஆகிய இடங்களுக்கு பயணம் செய்வதுமாக இருந்தார். ஏற்கனவே அவருக்கு திருச்சிராப்பள்ளியில் ஒரு தளம் இருந்தது. அங்கிருந்து தன் சந்நியாசி உடையில் சேலம் பாளையக்காரர் செல்லப்ப நாயக்கரை சந்திக்கச் சென்றார். அங்கு யாரும் வரவேற்க வராததால் அங்கு ஒரு சத்திரத்தில் தங்கினார்.
ஒரு சிறிய குறுநில (சாந்தமங்கலம்) ஆட்சியாளராக இருந்தவரை சகோதரன் அதிகாரத்தில் இருந்து நீக்கியிருந்ததால் அவர் நொபிலியை சந்தித்து கிறித்தவத்தைத் தழுவும் தன் எண்ணத்தை தெரிவித்தார். அதன் பிறகு மற்றவர்களும் நொபிலியை சந்திக்க வரத்தொடங்கினர்.
சேலம் பாளையக்காரர் ஆதரவு
நொபிலியின் வருகையை கேள்வியுற்ற செல்லப்பா நாயக்கர் அவரை அரண்மனைக்கு வரவழைத்து தன் ஆதரவை தெரிவித்தார். மேலும் தன்னிடம் எது வேண்டுமானாலும் கேட்கலாம், வழங்கத் தயாராக இருக்கிறேன் எனக்கூறிய பாளையக்காரரிடம் தனக்கு அவரது நட்பு மட்டுமே வேண்டும் என்றார். உடனே சேலத்தில் பிராமணர்கள் வசிக்கும் இடத்தில் ஒரு வீட்டை வழங்கி அவரது ஆலோசனைகளையும் அவ்வப்போது கேட்டுப்பெற்றார்.
1627இல் கத்தோலிக்க சமய வரலாற்றில் மற்றொரு திருப்புமுனை நடந்தது. பிறப்பால் பறையர் சாதியைச் சார்ந்த, அறிவாற்றல் கொண்ட, ஞான உதயன் என நொபிலியால் அழைக்கப்பட்டவரின் திறமை கண்டு வியந்த நொபிலி அவருக்கு ஞானஸ்நானம் செய்து வைத்தார். ஹிலாரி என அவரை அனைவரும் அழைத்தனர். அவரது சீடர்கள் 2000 பேர் அவரால் கத்தோலிக்க மதத்திற்குள் வந்தனர். திருச்சியில் அவர்களுக்கென ஒரு கத்தோலிக்க ஆலயம் கட்டப்பட்டது.
ஹிலாரியின் முன்னாள் சக சைவ பண்டாரங்கள் இதனால் ஆத்திரமடைந்து தேவாலயத்தை சேதப்படுத்தினர். நொபிலியும் பொதுமக்களும் இணைந்து வன்முறை நீடிக்காது செய்தனர்.
அதன் பிறகு பண்டாரசாமி அணுகுமுறையில் திருச்சபை உருவாக்கப்பட்டது. தாழ்த்தப்பட்ட மக்களை அதிக எண்ணிக்கையில் மதத்தில் சேர வைப்பதற்கு இந்த உத்தி பயன்படும் என நொபிலி எண்ணினார்.
காலையில் பிராமணர்களுக்கும், இரவில் பண்டாரசாமி திருச்சபையில் உள்ளவர்களுக்கும் பிரசங்கங்கள் நடத்தப்பட்டன. மார்ட்டின் சத்யமங்கலத்திற்கு சென்றபோது பண்டாரசாமிகளைவிட பிராமண சந்நியாசிகள் தாழ்த்தப்பட்ட மக்களையும் சூத்திரர்களையும் மாற்ற முடிந்ததைக் கண்ணால் கண்டார். காரணம் பிராமணர் சந்நியாசியுடன் உறவு வைத்துக் கொள்வதை அவர்கள் பெருமையாகக் கருதினார்கள்.
இக்கால கட்டத்தில் நொபிலிக்கு உறுதுணையாக இருந்த ஆர்ச் பிஷப் பிரான்சிஸ்கோ ரோஸ் கொல்லத்திலிருந்து வடக்கு நோக்கி பயணித்த போது கடற்கொள்ளையர்களால் கைது செய்யப்பட்டு சித்திரவதைக்கு ஆளானார். பின்னர் விடுவிக்கப்பட்டாலும் அந்த அதிர்ச்சியிலிருந்து மீள முடியாது 1630இல் இறந்தார். அவரது இறப்பு நொபிலிக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
மன்னர் திருமலை நாயக்கருடன் சந்திப்பு
மதுரை நாயக்க மன்னர் முத்துவீரப்பா நாயக்கர் இறந்து, திருமலை நாயக்கர் அரியணையில் ஏறியிருந்தார் (1627). அவரை முதலில் இயேசு சபை சார்பாக சந்தித்தவர் தூத்துக்குடி மறை மாவட்ட அதிபர் அந்தோனியோ ரூபினோ. மன்னர் ஆட்சிக்கு உட்பட்ட எப்பகுதிக்கும் செல்லும் அனுமதியை திருமலை நாயக்கர் அவருக்கு வழங்கியதோடு, பரதவர்களிடமிருந்து வசூலிக்கப்படும் வரிவசூலை மூன்று ஆண்டுகளுக்கு நீக்கவும் செய்திருந்தார்.
1630ஆம் ஆண்டு நொபிலி மன்னரை சந்தித்தார். ஆனால் சந்திப்பைத் தொடர முடியாத அளவிற்கு போர்ச்சுகீசியர்களுக்கும் டச்சுக்காரர்களுக்கும் போர் மூண்டது.
இதில் திருமலை நாயக்கரின் நிலைப்பாடு மிக முக்கியமானதாக இருந்தது. அது போல் மார்ட்டின் ஒரு போர்ச்சுகீசியர், நொபிலியும் அந்தோனியோ விகோவும் போர்ச்சுகல் மன்னருக்குக் கட்டுப்பட்டவர்கள் என்பதால் அவர்களால் முன்பு போல் செயல்பட முடியவில்லை. தஞ்சாவூர் மன்னரும், இராமநாதபுர ராஜாவும் டச்சுக்காரர்களுக்கு ஆதரவாக இருந்ததால் போர்ச்சுகீசியர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை.
1638 இல் இலங்கையில் முக்கிய வர்த்தகத்தலமாக இருந்த பட்டிக்கோலாவை டச்சுக்காரர்கள் கைப்பற்றி கண்டி அரசருடன் போர்ச்சுக்கீசியர்களை அங்கிருந்து விரட்டுவதற்கு ஒரு ஒப்பந்தம் செய்தனர்.
1640இல் பண வசதி படைத்த சிவலிங்க வழிபாட்டு பறையர் ஒருவர் புதிதாய் கிறித்தவராய் மாறியிருந்த ஒருவரின் மகளை திருமணம் செய்து வைக்குமாறு வேண்டியபோது ஆத்திரம் அடைந்த கிறித்தவர் அவரை தாக்கினார். லிங்க வழிபாட்டு பறையருக்கு ஆதரவாக அனைத்து பண்டாரங்களும் (சைவத்துறவிகள்) சேர்ந்து கொண்டதால் பெரும் கலவரம் வெடித்தது.
நாயக்க மன்னரின் அவையில் செல்வாக்கு மிகுந்தவராக இருந்த வெங்கட்ராயர் பிள்ளையிடம் அவர்கள் முறையிட்டதைத் தொடர்ந்து மார்டின் கைது செய்யப்பட்டார். நொபிலியையும் சிறையில் அடைக்குமாறு மன்னர் உத்தரவிட்டார். சிறையில் 16 நாட்கள் போதிய உணவின்றி இருவரும் சித்திரவதைக்குள்ளாயினர்.
மறவர்களுக்கு எதிரான படையெடுப்பிற்குப் பின் திரும்பிய திருமலை நாயக்கர் வெங்கட்ராய பிள்ளையின் அடாவடித்தனத்தை கேள்விப்பட்டவுடன் அவரைக் கண்டித்தது மட்டுமின்றி உடனடியாக இருவரையும் விடுதலை செய்ய உத்தரவிட்டார். இருப்பினும் மன்னர் திருச்சிராப்பள்ளி சென்றதும் மீண்டும் இருவரும் பிள்ளையின் உத்தரவால் சிறையிலடைக்கப்பட்டனர். 1641ஆம் ஆண்டு மன்னர் திரும்பியதும் அவர்கள் விடுதலை பெற்றனர். அதிலிருந்து மார்ட்டின் பகலில் பிராமண சந்நியாசியாகவும் இரவில் பண்டார சாமியாகவும் சமயப்பணி ஆற்றுவது முடியாததாயிற்று.
நொபிலியின் மறைவு
பிஜப்பூர் சுல்தான் மதுரை மீது படையெடுத்து தஞ்சாவூர், மதுரை நகர்களை கொள்ளையடித்து சூறையாடினார். தேவாலயங்கள் இடிக்கப்பட்டன.
சூழ்நிலை மோசமாகி வருவதைக் கண்ட நொபிலி யாழ்ப்பாணம் சென்று அங்கு இரு ஆண்டுகள் தங்கியிருந்து சிறுவர்களுக்கான புத்தகங்கள் எழுதினார். பின் அங்கிருந்து மதுரை வராமல் மைலாப்பூர் சென்றார். நொபிலி மைலாப்பூரில் எட்டு ஆண்டுகள் வாழ்ந்தார். 1656இல் 20 பாகங்கள் கொண்ட ஓலைச்சுவடிகளின் தொகுப்பின் இறுதி வரிகளை எழுதி முடித்தார். அந்த ஆண்டு ஜனவரி 16ஆம் நாள் நொபிலி மைலாப்பூரில் இறந்தார். அவரது உடல் அங்கு அடக்கம் செய்யப்பட்டது.
அவருக்கான நினைவுச்சின்னம் ஏதும் தமிழகத்தில் இல்லை. ஆனால் அவர் எழுதிய நூல்கள் மூலம் மதத்திற்கு அப்பால் அனைவரது மனதிலும் நிலைத்து வாழ்கிறார். ரோமாபுரி பிராமணர், வெள்ளைக்கார பிராமணர் என பலவாறு இராபர்ட் டி நொபிலி அழைக்கப்பட்டிருந்தாலும் தத்துவப்போதகர் என்ற அடைமொழியே இவருக்குப் பொருந்தும்.
(கட்டுரையாளர் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற வரலாற்றுத் துறை பேராசிரியர் ஆவார்)
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு