நெல்லை: இருட்டுக்கடையை வரதட்சணையாக கணவர் வீட்டார் கேட்கின்றனர் என்று புதுமணப் பெண் போலீஸில் புகார் தெரிவித்துள்ளார். நெல்லை டவுனில் ‘இருட்டுக்கடை’ என்ற பெயரில் உலகப் பிரசித்திபெற்ற அல்வா கடையை நடத்தி வரும் ஹரிசிங், கவிதா தம்பதியின் மகள் ஸ்ரீகனிஷ்கா. இவர், வரதட்சணை கேட்டு கணவர் வீட்டார் கொலை மிரட்டல் விடுப்பதாக நெல்லை காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்திருந்தார்.
இதுகுறித்து கவிதா ஹரிசிங் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: எனது மகள் ஸ்ரீகனிஷ்காவுக்கும், கோவையைச் சேர்ந்த பல்ராம்சிங் என்பவருக்கும் பிப்.2-ம் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணமாகி ஒரு மாதம்கூட ஆகாத நிலையில், என் மகளை வரதட்சணை கேட்டு அவரது கணவர் கொடுமைப்படுத்தி இருக்கிறார். அவரது குடும்பத்தினரும் என் மகளிடம் கூடுதல் வரதட்சணை வேண்டும் என்றும், ரூ.1.5 கோடி மதிப்புள்ள கார் வேண்டுமென்றும் கேட்டு துன்புறுத்தியுள்ளனர். அவர்கள் கேட்ட காருக்கு நாங்களும் புக் செய்து வைத்திருந்தோம்.
இந்நிலையில், எனது மகளின் கணவர் பல்ராம்சிங், வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருந்துள்ளார். “இதுகுறித்து வெளியே கூறினால் உன்னை கொலை செய்து விடுவேன்” என்று பல்ராம்சிங், எனது மகளை மிரட்டியுள்ளார். கடந்த மார்ச் 15-ம் தேதி கடும் வேதனையில் இருந்த எனது மகள், கோவையிலிருந்து நெல்லைக்கு வந்துவிட்டார்.
மறுநாளே எங்கள் வீட்டுக்கு வந்த பல்ராம்சிங் மற்றும் அவரது குடும்பத்தினர், ‘உங்கள் மகளுடன் வாழ வேண்டும் என்றால் இருட்டுக்கடை அல்வா உரிமத்தை பல்ராம்சிங் பெயரில் எழுதித்தர வேண்டும்’ என மிரட்டினர். இந்தப் பிரச்சினை குறித்து தமிழக முதல்வரின் தனிப் பிரிவுக்கும் மனு அளித்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். ஸ்ரீகனிஷ்கா கூறும்போது, “உனது அம்மாவிடமிருந்து இருட்டுக்கடை அல்வா கடை உரிமத்தை என் பெயருக்கு மாற்றி எழுதித் தர வேண்டும் என்று எனது கணவர் கேட்டார்” என்றார்.
கணவர் வீட்டார் மறுப்பு: இது தொடர்பாக கோவையில் பல்ராமின் தந்தை யுவராஜ்சிங் கூறும்போது, “அதிக சொத்துள்ள நாங்கள் ஏன் வரதட்சணை கேட்கப் போகிறோம். இருட்டுக்கடையை நாங்கள் கேட்பதாக கூறுவது ஆதாரமற்றது. கார் கேட்டதாக கூறப்படுவதும் தவறான தகவல். எங்கள் சொத்துகளை அபகரிக்கும் நோக்கில் பொய்யான புகார்களைக் கூறுகின்றனர். அவர்களது புகாரை சட்டப்படி எதிர்கொள்வோம்” என்றார்.