குளிர்கால வைரஸ்கள் ஆதிக்கம் செலுத்தும் இந்த நேரத்தில், இருமலின் சத்தம் வீடுகள், அலுவலகங்கள் மற்றும் பொதுப் போக்குவரத்து என எங்கும் நிறைந்திருக்கும்.
பெரும்பாலும் மக்கள் நிவாரணம் பெற இருமல் மருந்துகளை நாடுகிறார்கள். ஆனால் இவை உண்மையில் வேலை செய்யுமா, அல்லது தேன் மற்றும் எலுமிச்சை போன்ற வீட்டில் தயாரிக்கப்பட்ட கைவைத்தியங்கள் அதே அளவு பயனுள்ளவையா?
மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தின் சுவாச மருத்துவப் பேராசிரியர் ஜாக்கி ஸ்மித், ரேடியோ 4-இன் ‘ஸ்லைஸ்டு பிரெட்‘ நிகழ்ச்சியில் இதைப்பற்றி விரிவாகப் பேசினார்.
பட மூலாதாரம், Getty Images
எந்த மருந்து?
பெரும்பாலான இருமல் சளியிலிருந்து (ஜலதோஷத்திலிருந்து) வருகிறது. மேலும் சளி வைரஸ்கள் பொதுவாகத் தானாகவே உங்கள் உடலை விட்டு வெளியேற வேண்டும். இருமல் மருந்துகள் அடிப்படை வைரஸுக்குச் சிகிச்சை அளிக்க முடியாது, ஆனால் அவை உங்கள் தொண்டைக்கு இதமளித்து, இருமலை வரவழைக்கும் அரிப்பு உணர்வுகளைக் குறைக்கலாம்.
இது வறட்டு இருமலாக இருந்தால், பால்சம்கள் அல்லது கிளிசரால் போன்ற மிகவும் இனிப்பான பாகு (சிரப்) அடிப்படையிலான மருந்துகளைத் தேர்ந்தெடுப்பது, உங்கள் தொண்டையை இதமளித்து வறண்டு போகாமல் பாதுகாக்க உதவும் என்று பேராசிரியர் ஸ்மித் கூறுகிறார்.
ஆனால், மலிவான தயாரிப்புகளும் பெரிய பிராண்டுகளைப் போலவே பயனுள்ளதாக இருக்கும் என்பதால், இவற்றிற்காக அதிக பணம் செலவழிப்பது பயனற்றது என்றும் அவர் கூறுகிறார்.
இருப்பினும், லேபிளில் நீங்கள் கவனிக்க வேண்டிய ஒரே விஷயம் சர்க்கரையின் அளவு தான்; இனிப்பான சிரப்புகளில் இது அதிகமாக இருப்பது வழக்கம். இது கவலையளித்தால், சர்க்கரை இல்லாத இருமல் மருந்துகள் ஒரு சிறந்த தேர்வாக இருக்கலாம்.
இருமலின் அனிச்சை தன்மையை கட்டுப்படுத்துவதாகக் கூறப்படும் டெக்ஸ்ட்ரோமெதோர்பான் (dextromethorphan) போன்ற சில “உள்ளீடுகள்” (active ingredients) இருமல் மருந்துகளில் அடிக்கடி விளம்பரப்படுத்தப்படுகின்றன. இருப்பினும், இதன் தாக்கம் மிகக் குறைவு என்று பேராசிரியர் ஸ்மித் கூறுகிறார்.
மருந்தின் அளவைப் பின்பற்றுவது எப்போதும் முக்கியம் என்று அவர் மேலும் கூறுகிறார், குறிப்பாக டெக்ஸ்ட்ரோமெதோர்பான் அடிமையாக்கும் வாய்ப்புள்ளதால் இது மிகவும் முக்கியம். “லேபிளில் பரிந்துரைக்கப்பட்ட அளவை நீங்கள் நிச்சயமாக மீறக்கூடாது,” என்று அவர் அறிவுறுத்துகிறார்.
மறுபுறம், மார்புச் சளிக்கான சில இருமல் மருந்துகளில் காணப்படும் ஒரு மூலப்பொருளான லெவோமெந்தோல் (Levomenthol), தொண்டையின் பின்னால் ஒரு “குளிரூட்டும் உணர்வை” வழங்குகிறது, இது எரிச்சல் உணர்வை மறைத்து அரிப்பைக் கட்டுப்படுத்துகிறது.
தண்ணீரின் முக்கியத்துவம்
பட மூலாதாரம், Getty Images
மார்புச் சளியாக இருந்தால், பலர் அதிகப்படியான சளியுடனும், இறுக்கமான நெஞ்சுடனும் போராடுவதாக உணரலாம்.
இது சுவாசப் பாதைகளில் வீக்கத்தை ஏற்படுத்தும் மூச்சுக்குழாய் அழற்சி போன்ற இரண்டாம் நிலை தொற்றுகள் அல்லது மூக்கு மற்றும் சைனஸ்களில் அதிகப்படியான சளி சேர்வதால் வரலாம்.
இதற்கு கடைகளில் கிடைக்கும் சிரப் மருந்துகளை நாடுவது இயல்பானது, ஆனால் அவற்றின் தாக்கம் குறித்து ஐயத்துடன் இருக்குமாறு பேராசிரியர் ஸ்மித் அறிவுறுத்துகிறார்.
உதாரணமாக, குவைஃபெனெசின் என்ற மூலப்பொருள் சளியை தளர்த்தும் என்று கூறப்பட்டாலும், இதற்குத் திட்டவட்டமான ஆதாரம் இல்லை.
மேலும், டிஃபென்ஹைட்ரமைன் போன்ற மயக்கமூட்டும் ஆன்டிஹிஸ்டமின்கள் (ஒவ்வாமைகளை போக்கும் மருந்துகள்) இரவில் நீங்கள் தூங்க உதவலாம் என்றாலும், அவை இருமலுக்குச் சிகிச்சை அளிக்காது.
அதேபோல், தைம் மற்றும் ஸ்குவில் போன்ற தாவரச் சாறுகள் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதற்கு ஆதாரம் சொற்பமாகவே உள்ளது.
அதற்குப் பதிலாக, மக்கள் “அது சரியாகும் வரை காத்திருக்க” வேண்டும், உடலில் நீர் இருக்கும் வகையில் தண்ணீர் குடிக்க வேண்டும் மற்றும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு “இருமலைத் தடுக்கும்” மாத்திரைகளை (lozenges) எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதே சிறந்த அணுகுமுறை என்று பேராசிரியர் ஸ்மித் கூறுகிறார்.
தேன் மற்றும் எலுமிச்சை பயன்படுத்தலாமா?
பட மூலாதாரம், Getty Images
தேவையான அளவு தேன் மற்றும் எலுமிச்சையுடன் கூடிய ஒரு சூடான, வீட்டில் தயாரிக்கப்பட்ட கலவையானது, வறட்டு இருமலுக்கு கடைகளில் கிடைக்கும் பல மருந்துகளுக்குச் சமமான இதமளிக்கும் விளைவைத் தரும்.
சுதந்திரமான ஆய்வான கோக்ரேன் ரிவியூ, ஒரு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்குச் சளி மற்றும் இருமல் இருக்கும்போது, தேன் மற்றும் எலுமிச்சையைப் பயன்படுத்துவது “ஓரளவு பயன் அளிக்கலாம்” என்று பரிந்துரைத்ததாக பேராசிரியர் ஸ்மித் மேலும் கூறுகிறார்.
இருமல் வெளியேறட்டும்
இருமுவது அவசியம் என்பதையும் நினைவில் கொள்வது முக்கியம். நமது உடலில் இருந்து சளியை வெளியேற்றுவது அப்படித்தான் நடக்கிறது.
இது சளி கலந்த இருமல் என்றால், அதிகப்படியான சளியை வெளியே துப்புவது சுவாசப் பாதைகளை எளிதாக்கும்.
“வெளியேற்றவேண்டியவற்றை நான் இருமி வெளியேற்றுவேன்,” என்று பேராசிரியர் ஸ்மித் கூறுகிறார். “நான் அதை அடக்க முயற்சிக்க மாட்டேன், வெளியே வரட்டும்.” நீங்கள் இருமும்போது, கண்டிப்பாக ஒரு டிஸ்யுவை பயன்படுத்துவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
ஆனால் நீங்கள் அதை விழுங்கினாலும், எந்தத் தீங்கும் இல்லை.
நீங்கள் இருமி வெளியேற்றும் சளி அடர் பழுப்பு நிறமாக இருந்தால் மட்டுமே நீங்கள் கவலைப்பட வேண்டும், ஏனெனில் அதில் “சிறிதளவு ரத்தம் இருக்கலாம்”.
பெரும்பாலான மார்புச் சளிகள் பொதுவாகச் சில வாரங்களுக்குப் பிறகு ஆன்டிபயாடிக் மருந்துகள் இல்லாமலே சரியாகிவிடும், ஆனால் அது மூன்று வாரங்களுக்கு மேல் நீடித்தால், மருத்துவரை அணுகுமாறு பேராசிரியர் ஸ்மித் வலியுறுத்துகிறார்.