• Fri. Oct 10th, 2025

24×7 Live News

Apdin News

இருமல் மருந்து குடித்து 20 குழந்தைகள் பலி | இந்தியாவிடம் விளக்கம் கோரியுள்ள உலக சுகாதார ஸ்தாபனம்

Byadmin

Oct 10, 2025


இந்தியாவின், மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில், இருமல் மருந்தைக் குடித்த குழந்தைகள் உடல் நல பாதிப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேற்றுவரை மத்தியப் பிரதேசத்தில் மாத்திரம் 20 குழந்தைகள் இறந்திருப்பதாகவும், மேலும் 5 குழந்தைகள் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன் எதிரொலியாக, தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களில் சர்ச்சைக்குரிய கோல்ட்ரிப்’ (Coldtrip) இருமல் மருந்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த இறப்புகளுக்குக் காரணமான இருமல் சிரப், தமிழ்நாட்டின் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ‘ஸ்ரீசன் பார்மா’ நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது. இந்த மருந்தில் பரிந்துரைக்கப்பட்ட வரம்பை விட அதிக அளவில் டைதிலீன் கிளைகோல் (Diethylene Glycol – DEG) என்ற நச்சு இரசாயனம் இருந்தது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது.

டைதிலீன் கிளைகோல் என்பது மருந்தை அடர்த்தியாக்குவதற்கும் இனிப்புச் சுவைக்காகவும் பயன்படுத்தப்படும் ஒரு நச்சு இரசாயனமாகும். அதே நச்சு இரசாயனம் ‘ரெஸ்பிஃப்ரெஷ்’ (Respifresh) மற்றும் ‘ரீலைஃப்’ (Relife) ஆகிய சிரப்களிலும் கண்டறியப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக, கோல்ட்ரிப் நிறுவனத்தின் உரிமையாளர் ரங்கநாதன் மத்தியப் பிரதேச பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

உலகிலேயே மருந்து உற்பத்தியில் மூன்றாவது இடத்தில் இருக்கும் இந்தியா, உலகின் பல்வேறு நாடுகளுக்கு மருந்துகளை ஏற்றுமதி செய்து வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் இருந்து நச்சுத்தன்மையுள்ள இருமல் மருந்துகள் எதுவும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதா என உலக சுகாதார அமைப்பு (WHO) இந்திய மத்திய அரசிடம் கேள்வி எழுப்பியது.

இதற்குப் பதிலளித்த இந்திய மத்திய அரசு, இந்தியாவில் 3 இருமல் மருந்துகளில் நச்சு கலப்படம் கண்டறியப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளது. அத்துடன், சர்ச்சைக்குரிய ‘கோல்ட்ரிஃப்’ மருந்து வெளிநாடுகளுக்கு எதுவும் ஏற்றுமதி செய்யப்படவில்லை என்றும் மத்திய அரசு விளக்கம் அளித்தது.

இந்த விவகாரம் தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள உலக சுகாதார அமைப்பு, உயிரிழந்த குழந்தைகளின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளதுடன், இந்தியாவில் இவ்வகை மருந்துகள் தயாரிப்பு மற்றும் ஏற்றுமதியை ஒருங்குமுறைபடுத்துவதில் மிகுந்த இடைவெளி நீடிப்பதாகச் சுட்டிக்காட்டி உள்ளது.

By admin