-
- எழுதியவர், விஷ்னுகாந்த் திவாரி
- பதவி, பிபிசி செய்தியாளர், போபால்
-
இருமல் மருந்தை குடித்த பிறகே குழந்தைகளின் உடல்நிலை மோசமடைந்ததாகவும் அதனால் அவர்களை காப்பாற்ற முடியவில்லை என்றும் இக்குழந்தைகளின் பெற்றோர் தெரிவித்தனர்.
தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட கோல்ட்ரிஃப் (Coldrif) எனும் இருமல் மருந்தை மத்திய பிரதேச மருந்து கட்டுப்பாட்டு துறை சனிக்கிழமை தடை செய்தது. சனிக்கிழமை இரவு, அரசு மருத்துவர் பிரவீன் சோனி, இந்த இருமல் மருந்தை தயாரித்த ஸ்ரீசன் மருந்து நிறுவனத்தின் இயக்குநர்கள் மற்றும் இதற்கு பொறுப்பானவர்கள் மீது காவல் துறை எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளது.
பாரசியா (Parasia) பகுதி மருத்துவ அதிகாரி அங்கில் சஹ்லம் அளித்த புகார் தொடர்பாக அக்டோபர் 5-ஆம் தேதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மாவட்ட நிர்வாகத்தின்படி, இறந்த 11 குழந்தைகளில் 10 குழந்தைகள் பாரசியா பகுதியை சேர்ந்தவர்களாவர், இங்குதான் மருத்துவர் பிரவீன் சோனி அரசு குழந்தைகள் நல மருத்துவராக பணியாற்றி வந்தார்.
இந்த இறப்புகளை தொடர்ந்து, மத்திய பிரதேச அரசு இதுகுறித்து அக்டோபர் ஒன்றாம் தேதி தமிழ்நாடு அரசுக்கு கடிதம் எழுதியது, அதில் இந்த மருந்தை தயாரித்த நிறுவனத்திற்கு எதிராக விசாரணை நடத்துமாறு கேட்டுக்கொண்டது.
இதையடுத்து, தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு துறை மேற்கொண்ட நடவடிக்கையில் ஸ்ரீசன் மருந்து நிறுவனம் தயாரித்த கோல்ட்ரிஃப் இருமல் மருந்தில் “கலப்படம்” செய்யப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு துறை அக்டோபர் 2-ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையின்படி, கோல்ட்ரிஃப் மருந்தின் SR-13 எனும் தொகுதியில் (batch) ‘கலப்படம்’ இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையின்படி, இந்த மருந்தில் 48.6% டைஎத்திலீன் கிளைக்கால் (diethylene glyco) உள்ளது, இது உடல்நலனுக்கு ஆபத்தை ஏற்படுத்தவல்ல நச்சு ரசாயனமாகும்.
மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ் தன் எக்ஸ் பக்கத்தில், “சிந்த்வாரா பகுதியில் கோல்ட்ரிஃப் மருந்தால் குழந்தைகள் இறந்திருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது. மத்திய பிரதேசம் முழுவதும் இந்த மருந்தின் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் மற்ற மருந்துகளும் தடை செய்யப்பட்டுள்ளன” என பதிவிட்டுள்ளார்.
சிந்த்வாரா மாவட்ட மருத்துவமனையின் குழந்தைகள் நல மருத்துவர் பவன் நந்தர்கர்.
அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “பெரும்பாலான குழந்தைகள் சிறுநீரக பாதிப்பால் இறந்துள்ளனர். சிறுநீரக பயாப்ஸி (சிறுநீரகத்திலிருந்து சிறு திசுவை எடுத்து பரிசோதிப்பது) செய்து பரிசோதித்தபோது, ஒருவித நச்சு ரசாயனத்தால், சிறுநீரகம் பாதிப்படைந்து, செயலிழந்ததால் குழந்தைகள் இறந்துள்ளனர். இந்த குழந்தைகளுக்கு இருமல் மருந்து வழங்கப்பட்டுள்ளதும் அவர்களின் முந்தைய மருத்துவப் பதிவுகளிலிருந்து தெரியவந்தது.” என்றார்.
சிந்த்வாரா மாவட்டத்தை சேர்ந்த யாசின் கானின் நான்கு வயது மகன் உசைத் இப்போது இந்த உலகத்தில் இல்லை.
தொலைபேசி வாயிலாக அவர் பிபிசியிடம் பேசுகையில், “என்னால் எதையும் யோசிக்க முடியவில்லை. ஆக. 25 அன்று என் மகனுக்கு முதலில் லேசான இருமல், சளி மற்றும் காய்ச்சல் ஏற்பட்டது. செப். 13 அன்று என் மகன் சிறுநீரக செயலிழப்பால் உயிரிழந்தான். எனக்கு எல்லாமுமாக இருந்த என் மகன் போய்விட்டான்.” என்றார்.
மத்திய பிரதேசத்தின் சிந்த்வாரா மாவட்டத்தில் சிறுநீரக செயலிழப்பால் செப்டம்பர் 7 முதல் அக்டோபர் 2 வரை 11 குழந்தைகள் உயிரிழந்தன. குறைந்தது 5 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், அவர்களுள் சிலரின் உடல்நிலை மோசமாக உள்ளது.
ராஜஸ்தானிலும் குழந்தைகள் இறப்பு
மத்திய பிரதேசத்திற்கு அருகில் உள்ள ராஜஸ்தானின் பாரத்பூர் மற்றும் ஜுஞ்சுனூ மாவட்டங்களிலும் அரசு மருத்துவமனையில் இருமல் மருந்து குடித்ததால் இரு குழந்தைகள் உயிரிழந்தனர் என தகவல் வெளியானது. சனிக்கிழமை சுரு மாவட்டத்திலும் மற்றொரு குழந்தை ஒன்று இறந்துள்ளது. இருமல் மருந்து குடித்ததாலேயே தங்கள் குழந்தைகள் இறந்ததாக பெற்றோர்கள் கூறுகின்றனர்.
சுரு மாவட்டத்தை சேர்ந்த ஆறு வயது சிறுவன், ஜெய்ப்பூரில் உள்ள ஜேகே லான் மருத்துவமனையில் உயிரிழந்தார். அச்சிறுவனுக்கு நான்கு தினங்களுக்கு முன்பாக இருமல் மருந்து கொடுத்ததாகவும், அதையடுத்து உடல்நிலை மோசமானதால் ஜெய்ப்பூர் மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டதாகவும் குடும்பத்தினர் கூறுகின்றனர்.
அதேபோன்று, பாரத்பூரை சேர்ந்த இரண்டு வயது குழந்தையும் ஜெய்ப்பூர் மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்ட நிலையில், மூன்று தினங்கள் கழித்து உயிரிழந்தது. ஜுஞ்சுனூ மாவட்டத்தை சேர்ந்த ஐந்து வயது குழந்தை, சிகாரில் உள்ள மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.
மத்திய பிரதேச மருந்து கட்டுப்பாட்டு அதிகாரி தினேஷ் குமார் மௌரியா பிபிசி இந்தியிடம் கூறுகையில், “மத்திய மருந்து பரிசோதனை முகமையுடன் நாங்கள் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம். 12 மாதிரிகளை நாங்கள் சேகரித்துள்ளோம், அதேபோன்று, மத்திய மருந்து பரிசோதனை முகமையும் ஆறு மாதிரிகளை பரிசோதித்துள்ளது. எங்களின் மூன்று மாதிரிகளிலும் மத்திய மருந்து பரிசோதனை ஆய்வகத்தின் ஆறு மாதிரிகளிலும் இதுவரை டைஎத்திலீன் கிளைக்கால் மற்றும் எத்திலீன் கிளைக்கால் ஆகியவை கண்டறியப்படவில்லை. மீதமுள்ள மாதிரிகளை பரிசோதித்து வருகிறோம்.” என்றார்.
குழந்தைகள் இறப்பை தொடர்ந்து கேள்விகள் எழுந்த நிலையில், மத்திய பிரதேச சுகாதார துறை அமைச்சர் ராஜேந்திர சுக்லா வெள்ளிக்கிழமை மதியம் கூறுகையில், “இதுவரை 12 மாதிரிகள் மாநில மருந்து பரிசோதனை ஆய்வகத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன. இதில், மூன்று பரிசோதனை முடிவுகள் கிடைத்துள்ளன, அதன்படி எவ்வித ரசாயனமும் கண்டறியப்படவில்லை.” என்றார்.
இருமல் மருந்தால் குழந்தைகள் இறந்தது குறித்து பேசிய ராஜஸ்தான் சுகாதார அமைச்சர் கஜேந்திர சிங் கின்வ்சர், ” நாங்கள் மருந்தை பரிசோதித்தோம், உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் எதுவும் அதில் கண்டறியப்படவில்லை. இந்த மருந்தால் எந்த இறப்பும் நிகழவில்லை. இதுகுறித்து விசாரிக்க குழு அமைத்துள்ளோம்” என்றார்.
இதனிடையே, மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் குழந்தைகளின் இறப்புகளை தொடர்ந்து மத்திய சுகாதார சேவைகள் பொது இயக்குநரகம் (DGHS) “ஆலோசனைப்படியே” இருமல் மருந்துகள் குழந்தைகளுக்கு கொடுக்கப்பட வேண்டும் என, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது எப்படி?
சிந்த்வாரா மாவட்ட நிர்வாகத்தின்படி, இதுதொடர்பான முதல் பாதிப்பு ஆகஸ்ட் 24 அன்று பதிவாகியுள்ளது, செப்டம்பர் 7 அன்று முதல் மரணம் நிகழ்ந்துள்ளது.
யாசின் கூறுகையில், தன்னுடைய நான்கு வயது மகன் உசைத் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாக தெரிவித்தார்.
அவர் கூறுகையில் “ஆகஸ்ட் 25ஆம் தேதி என் மகனின் உடல்நிலை மோசமானதால், அவனை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். ஆக.31 வரை அவனுடைய உடல்நிலையில் சிறிது முன்னேற்றம் இருந்தது, ஆனால் பின்னர் அவனுக்கு சிறுநீர் வெளியேறுவது நின்றுவிட்டது. இது இரு நாட்கள் தொடர்ந்தது, இதையடுத்து அவனை சிந்த்வாரா மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். சிந்த்வாராவிலிருந்து நாக்பூருக்கு சென்றோம், அங்கு 10 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்த நிலையில் என் மகன் இறந்துவிட்டான்.” என்றார்.
ஆட்டோ ஓட்டுநரான யாசினுக்கு இரு மகன்கள். மூத்த மகன் உசைத்தின் சிகிச்சைக்காக 4 லட்ச ரூபாய் செலவு செய்துள்ளார். இச்சமயத்தில், அவர் தன் வாழ்வாதாரமாக இருந்த ஆட்டோவை விற்க நேர்ந்துள்ளது.
யாசின் கூறுகையில், “பணத்தினால் என்ன நடக்கும்? என் குழந்தை பிழைத்திருந்தால் எல்லாம் நன்றாக நடந்திருக்கும். மீண்டும் என் ஆட்டோவை வாங்கியிருப்பேன். இப்போது என் வலியை இன்னொரு தந்தை அனுபவிக்கக் கூடாது என நினைக்கிறேன்.” என்றார்.
‘தமிழ்நாடு ஒரே நாளில் கண்டுபிடிக்கையில் இங்கு ஏன் தாமதம்?’
மத்திய பிரதேசத்தில் இறந்த 11 குழந்தைகளும் சிந்த்வாராவின் பராசியா பகுதியை சேர்ந்தவர்கள். இப்பகுதியில் 2.8 லட்சம் பேர் வாழ்கிறார்கள் என்றும், அவர்களுள் சுமார் 25,000 பேர் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் என்றும் பாரசியா துணை ஆட்சியர் ஷுபம் குமார் யாதவ் (Sub Divisional Magistrate) தெரிவித்தார்.
அவர் கூறுகையில், “பலவித சாத்தியமான காரணங்கள் குறித்து விசாரித்துள்ளோம். அப்பகுதியிலிருந்து தண்ணீர் மாதிரிகளை எடுத்துள்ளோம், கொசுக்கள் மற்றும் எலிகளிலிருந்து நோய் பரவியதா என்பதையும் பரிசோதித்தோம். அவற்றில் எந்த பிரச்னையும் இல்லை என்று முடிவுகள் வந்துள்ளன” என்றார்.
அவர் மேலும் கூறுகையில், “சுகாதார துறை அதிகாரிகள் மற்றும் சிறப்பு மருத்துவர்களின் ஆலோசனையுடன் இறந்த குழந்தைகளின் முந்தைய மருத்துவப் பதிவுகள் ஆராயப்பட்டன, இதில்தான் அந்த குழந்தைகளுக்கு இருமல் மருந்து பரிந்துரைக்கப்பட்டிருந்தது வெளிச்சத்திற்கு வந்தது” என்றார்.
அவர் கூறுகையில், பல்வேறு பகுதிகளிலிருந்து மருந்து மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன என்றும், அனைத்து பரிசோதனை முடிவுகளும் வந்துள்ளதாகவும் கூறினார். அதன் அடிப்படையில், குழந்தைகளுக்கு சிறுநீரகம் செயலிழந்தது எப்படி என்பது குறித்து மாவட்ட நிர்வாகம் காரணத்தைக் கண்டறியும் என்றார் அவர்.
பரிசோதனை முடியவில்லை என்று மத்திய பிரதேச அரசு 10 தினங்களாக கூறிவந்த நிலையில், கோல்ட்ரிஃப் மருந்தில், விதிமுறைகளை மீறி நச்சு ரசாயனமான டைஎத்திலீன் கிளைக்கால் இருப்பதாக தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு துறை ஒரு நாளைக்குள்ளேயே உறுதிப்படுத்தியுள்ளது.
சிந்த்வாராவை சேர்ந்த மற்றொரு குழந்தையின் உறவினர் கூறுகையில், “விஷத்தன்மை வாய்ந்த, ஆபத்தான மருந்து எப்படி சந்தையில் விற்கப்படுகிறது? இதை மத்திய பிரதேச அரசால் ஏன் கண்டுபிடிக்க முடியவில்லை? ஒரு நாளைக்குள் தமிழ்நாடு அரசு இதைக் கண்டுபிடித்துள்ளது. குழந்தைகளை கொல்லும் மருந்துகளை விற்பனை செய்வது யார் என்பது மத்திய பிரதேச அரசு விசாரிக்கவில்லையா?” என்றார்.
முந்தைய எச்சரிக்கைகள் புறக்கணிப்பா?
கடந்த 2023-ஆம் ஆண்டு இந்தியாவின் சுகாதார சேவைகள் பொது இயக்குநர், நான்கு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பிரபலமான இருமல் மருந்தை தயாரிப்பதற்கு தடை செய்தது.
இந்த மருந்தின் தயாரிப்பில் உள்ள குளோர்ஃபெனிரமைன் மாலேட் (chlorpheniramine maleate) மற்றும் ஃபெனைல்ஃபெரின் (phenylephrine) ஆகியவற்றுக்கு 2015-ஆம் ஆண்டு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இவை இருமல் மற்றும் சளி மருந்துகளில் முக்கியமான மூலப்பொருட்களாக பரவலாக பயன்படுத்தப்படுகின்றன.
இதையடுத்து, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்தால் 2022-ஆம் ஆண்டில் காம்பியா மற்றும் உஸ்பெகிஸ்தானில் குழந்தைகள் இறந்ததைத் தொடர்ந்து சர்வதேச அளவில் கவலைகள் எழுந்ததால் அதற்கு தடை விதிக்கப்பட்டது.
எனினும், இந்த மருந்துகளை தயாரிப்பவர்கள் தாங்கள் தவறிழைக்கவில்லை என மறுத்துள்ளனர், பரிந்துரைக்கப்பட்ட அளவில் வழங்கும் போது தங்களின் மருந்துகள் பாதுகாப்பானவை என்று கூறுகின்றனர்.
சிந்த்வாராவை சேர்ந்த சுகாதார துறை அதிகாரி, பெயர் தெரிவிக்க விரும்பாமல் பிபிசியிடம் கூறுகையில், “இறந்த குழந்தைகளுள் 6-7 பேர் 4 வயதுக்குட்பட்டவர்கள்.” என்றார்.
இது முதல் முறையல்ல…
மத்திய பிரதேசத்தில் மருந்துகளின் தரம் குறித்து முன்பு கடுமையான கேள்விகள் எழுந்துள்ளன.
2024-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், 9க்கும் மேற்பட்ட அத்தியாவசிய மருந்துகள் மற்றும் ஊசிகள் தரப் பரிசோதனையில் தோல்வியடைந்ததால், மாநிலம் முழுவதும் அவற்றுக்கு தடை விதிக்கப்பட்டது.
மத்திய பிரதேச பொது சுகாதார சேவைகள் கழகம், இந்த மருந்துகளை தரமற்றவை என வகைப்படுத்தியுள்ளது, நோயாளிகளின் பாதுகாப்பு மற்றும் மாநிலத்தின் சுகாதார கட்டமைப்பு குறித்து பல்வேறு தீவிரமான கேள்விகளை எழுப்புகிறது.
பொது சுகாதார நிபுணர் அமுல்யா நிதி இதுகுறித்து கூறுகையில், “மருந்துகள் பக்க விளைவுகளை ஏற்படுத்தும், ஆனால் மரணத்தை ஏற்படுத்தாது. எனவே, சிந்த்வாராவில் குழந்தைகள் இறந்ததைத் தொடர்ந்து, அந்த மருந்தின் தரம் குறித்து அல்ல, அதில் என்ன கலக்கப்பட்டது என்பது குறித்து கேள்விகள் எழுப்பப்பட வேண்டும். விசாரித்து வருவதாக அரசு கூறுகிறது. விசாரணை இன்னும் எவ்வளவு காலம் எடுக்கும்?” என்றார்.
மாநிலத்தின் சுகாதார கட்டமைப்பு குறித்து பேசிய அவர், “குழந்தைகளின் நலனில் அரசு தீவிரமாக இருப்பதாக தெரியவில்லை. இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், தாமதம் செய்யப்படுகின்றது. நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. பச்சிளம் குழந்தைகள் இறப்பு, பிரசவத்தின் போது பெண்கள் இறப்பது ஆகியவை மோசமான விகிதத்தில் உள்ளன. இந்தூரில் குழந்தைகளை எலி கடித்ததும் பதிவாகியுள்ளது. இப்போது சிந்த்வாராவில் இருமல் மருந்தால் குழந்தைகள் இறந்துள்ளனர். நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை மருத்துவர்கள் கடைபிடிக்க வேண்டும். மருந்து கொள்முதல் கொள்கை மற்றும் மருந்து தரம் குறித்து சுயாதீனமாக ஆய்வு செய்ய வேண்டும்” என்றார்.
நாட்டிலேயே பச்சிளம் குழந்தைகள் இறப்பு மத்திய பிரதேசத்தில் அதிகமாக உள்ளது, அங்கு பிறக்கும் 1,000 குழந்தைகளில் 40 குழந்தைகள் இறக்கின்றன.
2025-ஆம் ஆண்டு ஜூலை மாதம் சுகாதார அமைச்சர் ராஜேந்திர ஷுக்லா சட்டமன்றத்தில் இந்த தகவலை எழுத்துபூர்வ பதிலாக வழங்கினார். சமீபத்திய மாதிரி பதிவு அமைப்பு தரவுகளின்படி (Sample Registration System (2022), தேசிய சராசரியைவிட மாநிலத்தில் பச்சிளம் குழந்தைகள் இறப்பு அதிகம் என்று அவர் தெரிவித்தார்.
நீதி கேட்கும் குடும்பங்கள்
இருமல் மருந்தை குடித்து அதனால் ஏற்பட்ட சிறுநீரக செயலிழப்பால் ஐந்து வயதான அட்னன் கான் செப்டம்பர் 7 அன்று உயிரிழந்ததாக குடும்பத்தினர் கூறுகின்றனர்.
அட்னனின் தந்தை ஆமின் செல்போனில் பேசுவதற்கு தயாராக இல்லை.
ஆமினின் மூத்த சகோதரர் சஜித் கான் பிபிசியிடம் கூறுகையில், “குழந்தைக்கு எவ்வித தீவிரமான உடல்நல பிரச்னையும் இல்லை. லேசான காய்ச்சல் ஏற்பட்டது, பின்னர் நிலைமை மோசமானது. எங்களால் அவனை காப்பாற்ற முடியவில்லை” என்றார்.
அட்னனின் தந்தை அங்கு சேவை மையம் ஒன்றை நடத்திவருகிறார், அதன்மூலம் மாதம் சுமார் ரூ. 10,000 வருமானம் ஈட்டிவருகிறார்.
சஜித் கூறுகையில், 15 நாட்களாக ரூ. 7 லட்சத்திற்கும் அதிகமாக செலவு செய்தும் அட்னனை காப்பாற்ற முடியவில்லை என்றார்.
நான்கு வயதான விகாஸ் யாதவன்ஷியின் வீட்டிலும் அமைதி நிலவுகிறது.
குழந்தையின் தந்தை பிரபுதயாள் யாதவ் கூறுகையில், “இருமல், சளி, காய்ச்சலால் 10 நாட்களில் சிறுநீரகம் செயலிழக்குமா? எதையும் எங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. என்ன நடந்தது என எங்களுக்கு தெரியவில்லை” என்றார்.
விகாஸின் பெற்றோர் விவசாயிகள். தங்கள் மகனின் இறப்புக்கு நீதி வேண்டும் என அவர்கள் கோருகின்றனர்.
வீட்டின் மூலையில் அமர்ந்திருக்கும் பிரபுதயாள் கூறுகையில், “எங்கள் குழந்தை இறப்புக்கு நீதி வேண்டும். குழந்தை ஆரோக்கியமாக இருந்தது. இருமல் மற்றும் காய்ச்சலால் எப்படி சிறுநீரகம் செயலிழக்கும்? இதற்கு யார், எப்போது பதிலளிப்பார்கள் என்பதை அரசு சொல்ல வேண்டும்” என்றார்.
இதனிடையே, சஜித் பிபிசியிடம் கூறுகையில், “மருந்தை தயாரித்தவர்கள் அல்லது விற்றவர்கள் என யார் தவறிழைத்தார்களோ அவர்களுக்கு கடும் தண்டனை வழங்கப்படும். என் மகன் போய்விட்டான், குறைந்தபட்சம் வேறு யாரும் இந்த மோசமான மருந்துகளுக்கு தங்கள் குழந்தைகளை இழக்கக் கூடாது,” என்றார்.
பட மூலாதாரம், Getty Images
நிபுணர்கள் கூறுவது என்ன?
சாமானியர் ஒருவர் எப்படி இந்த மருந்துகள் நல்லதா அல்லது போலியானவையா என்பதை கண்டறிய முடியும் என்பதை குழந்தைகள் நல மருத்துவர் ஆவேஷ் சயினி கூறினார்.
அவர் கூறுகையில், “அந்த மருந்து எப்படி இருக்கிறது என்பதை பார்க்க வேண்டும். அது நுரையாகவோ அல்லது நிறம் மாறியோ அல்லது அதில் வேறு ஏதேனும் துகள்கள் இருக்கின்றதா என்பதை பார்க்க வேண்டும். மருந்தின் அடியில் ஏதேனும் துகள்கள் இருந்தாலோ அல்லது மருந்தின் பேட்ச் எண் குறிப்பிடாமல் அல்லது அழிக்கப்பட்டிருந்தாலோ அந்த மருந்தும் நல்லதல்ல. அந்த மருந்தின் உரிம எண்ணும் அதில் இருப்பதும் அவசியம். அது எழுதப்படவில்லையென்றாலும் அந்த மருந்தை எடுத்துக் கொள்ளக்கூடாது.” என்றார்.
மருத்துவர் சயினி கூறுகையில், “இவையெல்லாம் ஏற்கெனவே உள்ள வழிகாட்டு நெறிமுறைகள் தான். இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இதுகுறித்து ஆய்வு கிடையாது, எனவே இவற்றை இரண்டு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்குதான் கொடுக்க வேண்டும்.” என்றார்.
மருந்தை எவ்வளவு கொடுக்க வேண்டும் என்பது குறித்து பேசிய அவர், “மருத்துவர் பரிந்துரைக்கும் அளவே கொடுக்க வேண்டும். குழந்தையின் எடைக்கு ஏற்பவே மருந்து கொடுக்கப்பட வேண்டும்” என்றார்.
போலி மருந்துகளால் வேறு என்னென்ன பிரச்னைகள் வரும் என கேட்டதற்கு, “மூச்சு விடுவதில் சிரமம், வயிற்று வலி ஏற்படும். சிறுநீரகத்தை அது பாதிக்கும். பின்னர் மூளையை பாதிக்கும். இதனால் பின்னர் வலிப்பு ஏற்பட்டு, இதயத்துடிப்பு நின்றுவிடும்.” என்றார்.
இதனிடையே, முன்பு போபாலில் பணியாற்றிய மருத்துவர் ஹர்ஷிதா ஷர்மா கூறுகையில், “டைஎத்திலீன் கிளைக்கால் மற்றும் எத்திலீன் கிளைக்கால் ஆகியவை இருமல் மருந்துகளில் குளிர்விப்பானாக (coolants) பயன்படுத்தப்பட்டன. இதனால் மருந்து இனிப்பு சுவையுடையதாகவும் குளிர்ச்சியானதாகவும் இருக்கும். இது சார்பிடாலை (sorbitol) ஒத்ததாக இருக்கும். எனினும், சார்பிடால் செலவு அதிகம் என்பதால், சில மருந்து நிறுவனங்கள் டைஎத்திலீன் கிளைகாலை மலிவான மாற்றாக பயன்படுத்துகின்றன. நாட்டு மதுபானங்களில் காணப்படும் மெத்தில் ஆல்கஹாலுடன் இவையும் ஒரே வகையின்கீழ் வருகின்றன. இரண்டும் உடல் நலனுக்கு தீங்கானவை” என்றார்.
மேலும் அவர் கூறுகையில், “இந்த ரசாயனங்களிலிருந்து தயாரிக்கப்படும் மருந்துகள் குழந்தைகளுக்கு நெஃப்ரோடாக்ஸிக், அதாவது சிறுநீரகத்தை நேரடியாக பாதிக்கும் அளவுக்கு நச்சுத்தன்மை வாய்ந்தவை. இந்த ரசாயனங்கள் சிறுநீரகத்தால் கட்டுப்படுத்தப்படும் அமிலத்தின் அளவை அதிகரிக்கின்றன. சிறுநீரகம் பாதிக்கப்படும் போது இந்த நச்சு பிற பாகங்களுக்கும் பரவி மரணம் நிகழ்கிறது” என்றார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு