சிவகங்கை: தமிழகத்தில் இருந்து இருமல் மருந்து சென்றிருந்தால், தமிழக அரசும், துறை அதிகாரிகளும் பதில் சொல்லி தான் ஆக வேண்டும் என சிவகங்கை எம்பி கார்த்திசிதம்பரம் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் எம்பி தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் மாற்றுத் திறனாளிக்கு இணைப்பு சக்கரம் பெட்ரோல் ஸ்கூட்டர்களை வழங்கும் விழா இன்று நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் கா.பொற்கொடி தலைமை வகித்தார். இந்நிகழ்வில், எம்எல்ஏக்கள் மாங்குடி, தமிழரசி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு விருந்தினகராக கலந்துகொண்ட கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், கார்த்தி சிதம்பரம் எம்.பி ஆகியோர் 11 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.11.19 லட்சம் மதிப்பிலான ஸ்கூட்டர்களை வழங்கினர். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் கார்த்தி சிதம்பரம் கூறியதாவது: “சென்னையில் வழக்கறிஞர், விசிக-வினர் தொடர்பான பிரச்சினை நீதிமன்றத்துக்கு சென்றுள்ளது. நீதிமன்றம் விசாரித்து தீர்ப்பளிக்கும். இப்பிரச்சினையில் யாராவது பின்புலத்தில் இருப்பதாக கருதினால் நீதிமன்றத்தில் தெரிவிக்கலாம். இதில் அரசியல் கருத்துக்கு வேலையில்லை.
22 குழந்தைகள் உயிரிழப்புக்கு காரணமான இருமல் மருந்து தமிழகத்தில் இருந்து சென்றிருந்தால் தமிழக அரசும், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளும் பதில் சொல்லி தான் ஆக வேண்டும். தமிழக அரசும் விசாரணை செய்து அறிக்கையை வெளியிட வேண்டும். கடந்த 1984ல் ப்ளூ ஸ்டார் ஆபரேஷன் நடந்தது. அதைத்தொடர்ந்து பிளாக் தண்டர் ஆபரேஷன் நடந்தது.
சரித்திரம் தெரிந்தவர்களுக்கு இரண்டு ஆபரேஷன்களுக்கும் உள்ள வித்தியாசம் புரிந்திருக்கும். விருந்தோம்பலுக்கு பெயர் பெற்ற காரைக்குடிக்கு நயினார் நாகேந்திரன் வந்துள்ளார். விருந்து உண்டு, பத்திரமாக செல்லட்டும். நெல்லை காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசியவர்கள் மீது அரசு இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும். நெல்லைப் பகுதியில் அதிகளவில் கூலிப்படையினர் உள்ளதாக கூறப்படுகிறது. அவர்களை போலீஸார் கட்டுப்படுத்த வேண்டும்” என்று கார்த்தி சிதம்பரம் கூறினார்.