பட மூலாதாரம், BHAGYASHRI RAUT
-
- எழுதியவர், பாக்யஸ்ரீ ராவத்
- பதவி, பிபிசி மராத்திக்காக
-
கிராமத்தைச் சுற்றி அடர்ந்த காடு சூழ்ந்துள்ளது. அங்குள்ள ஒவ்வொருவரும் புலிகளின் மீதான பயத்திலேயே வாழ்கிறார்கள்.
புலி எப்போது, எங்கிருந்து வரும் என்று சொல்ல முடியாது.
காட்டிலுள்ள விலங்குகளிடம் இருந்து தங்களைக் பாதுகாத்துக் கொள்ள கிராமத்தைச் சுற்றி கம்பி வேலி அமைக்கப்பட்டுள்ளது.
காட்டில் விலங்குகள் சுதந்திரமாகத் திரிய, மனிதர்களோ கூண்டுக்குள் (வேலிக்குள்) அடைந்து கிடக்கும் விசித்திரமான காட்சிதான் இந்தக் கிராமத்தில் நிலவுகிறது.
இதுதான் மகாராஷ்டிராவின் சந்திரபூர் மாவட்டம் மோஹர்லி வனப்பகுதியில் உள்ள சீதாராம்பேட் கிராமத்தின் சூழல்.
இந்தக் கிராமம் தடோபா புலிகள் சரணாலயப் பகுதிக்குள் வருகிறது. கிராமத்தில் இருந்து பேருந்து நிலையத்திற்குச் செல்ல 400 மீட்டர் நீளமுள்ள மண் சாலை உள்ளது. ஒருபுறம் அடர்ந்த காடு, மறுபுறம் விவசாய நிலம். இந்தச் சாலையில் ஒரு தெருவிளக்குகூட கிடையாது.
கிராம மக்கள் இந்தச் சாலையில் அடிக்கடி புலிகளைப் பார்க்கிறார்கள். சில நேரங்களில் புலிகள் கால்நடைகளைத் தாக்குகின்றன. பல நேரங்களில் காட்டிலிருந்து கிராமத்திற்குள் புலிகள் வருவதையும் அங்குள்ள மக்கள் பார்க்கிறார்கள். இதனால், இந்தச் சாலையில் பயணிக்கும் கிராம மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.
வனத்துறையின் கூற்றுப்படி, இந்தக் கிராமத்தைச் சுற்றியுள்ள பகுதியில் 10 முதல் 12 புலிகள் வரை வழக்கமாக நடமாடுகின்றன. புலிகளால் ஏற்படும் இத்தகைய அச்சுறுத்தலுக்கு மத்தியிலும், தங்கள் கிராமத்து குழந்தைகள் பாதுகாப்பாகப் பள்ளிக்குச் சென்று வருவதை உறுதி செய்ய நான்கு பெண்கள் முன்வந்துள்ளனர்.
புலிகள் எப்போது வேண்டுமானாலும் தாக்கக்கூடும் என்ற ஆபத்தான நிலையில், இரவின் கடும் இருளில் கைகளில் மரத்தடிகளுடனும், டார்ச் விளக்குகளுடனும் இந்த நான்கு பெண்களும் தங்கள் குழந்தைகளுக்குப் பாதுகாப்பு அரணாக நிற்கிறார்கள்.
கிரண் கேடாம், வேணு ரந்தயே, ரினா நாட், சீமா மாதவி ஆகியோர்தான் புலிகளின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் மாணவர்களின் பாதுகாப்பிற்காக பாடுபடும் அந்த நான்கு துணிச்சலான பெண்கள்.
இவர்களின் துணிச்சலான பணியைக் காண நாங்கள் சீதாராம்பேட் கிராமத்தை அடைந்தோம். இந்தக் கிராமத்தில் சுமார் 200 பேர் வசிக்கின்றனர். இந்தக் கிராமத்தைச் சேர்ந்த 11 மாணவர்கள் 7 கி.மீ. தொலைவில் உள்ள முதோலிக்கு படிக்கச் செல்கிறார்கள்.
இதற்காக அவர்கள் கிராமத்தில் இருந்து 400 மீட்டர் தொலைவில் உள்ள பேருந்து நிலையத்திற்குச் சென்று பேருந்தைப் பிடிக்க வேண்டும். ஆனால், அந்த 400 மீட்டர் சாலையில் காட்டுயிர்களின் நடமாட்டம் இருப்பதால், அதில் செல்வது மிகவும் ஆபத்தானது.
பட மூலாதாரம், BHAGYASHRI RAUT
‘எல்லோராலும் புலியை பார்க்க முடியும்’
இந்தச் சாலையில் எல்லோராலும் ஒரு புலியையாவது பார்க்க முடியும் என்கிறார் பத்தாம் வகுப்பு படிக்கும் சுஷாந்த் நாட்.
மேலும், “கடந்த மாதம் நாங்கள் பள்ளிக்குச் சென்றபோது, கிராமத்திற்கு அருகே ஒரு புலியைக் கண்டோம். அது ஒரு பசுவைத் துரத்திக் கொண்டிருந்தது. புலியைப் பார்த்தவுடன் நாங்கள் கிராமத்தை நோக்கி ஓடினோம். நாங்கள் அலறியது கேட்டு கிராம மக்கள் திரண்டு வந்து என்ன நடந்தது என்று கேட்டார்கள். நாங்கள் அங்கு ஒரு புலி இருப்பதாகச் சொன்னோம்.
இப்படியாக, சில நேரங்களில் புலி சாலையில் நடந்து செல்வதையும், சில நேரங்களில் கால்நடைகளைத் தாக்குவதையும் பார்க்கலாம். ‘அது எங்களையும் தாக்கக்கூடும். பிறகு எப்படி நாங்கள் பள்ளிக்குச் செல்ல முடியும்?’ என்று நாங்கள் அனைவரும் கிராம மக்களிடம் எங்கள் அச்சத்தை வெளிப்படுத்தினோம்,” என்றார் சுஷாந்த் நாட்.
சுஷாந்தும் அவரது கிராமத்தைச் சேர்ந்த பிற குழந்தைகளும் முன்பு பேருந்து நிலையத்தில் இருந்து கிராமத்திற்கு ஓடிச் செல்வார்கள்.
ஆனால் அதுவும் ஆபத்தானது என்பதால், இந்த நான்கு பெண்களும் அந்தப் பிள்ளைகளைப் பாதுகாக்க முன்வந்துள்ளனர்.
பட மூலாதாரம், BHAGYASHRI RAUT
இருட்டில் குழந்தைகள் பாதுகாக்கப்படுவது எப்படி?
காலை 9:45 மணிக்கு முதோலி செல்லும் பேருந்து வருகிறது. அதற்கு முன்பே அனைத்து குழந்தைகளும் தயாராகி கிராமத்தின் சதுக்கத்தில் கூடுகிறார்கள்.
பிறகு இந்த நான்கு பெண்களும் குழந்தைகளை பேருந்து நிலையத்திற்கு அழைத்துச் செல்கிறார்கள். குழந்தைகள் நடுவிலும், அவர்களை நான்கு பக்கங்களிலும் சூழ்ந்தபடி இந்தப் பெண்களும் நடக்கிறார்கள்.
பேருந்து நிலையத்திலும் புலிகள் அடிக்கடி தென்படுவதுண்டு. பேருந்து வரும் வரை இந்தப் பெண்கள் அங்கேயே நின்று குழந்தைகளுக்குப் பாதுகாப்பு அளிக்கிறார்கள்.
ஒருவேளை புலி பின்னால் இருந்து வந்தால்கூட அதைக் கவனிக்கும் வகையில், அவர்கள் நான்கு திசைகளையும் பார்த்தபடி நிற்கிறார்கள்.
பள்ளி முடிந்து மாலை 6:45 மணியளவில் அரசுப் பேருந்து திரும்புகிறது. அந்த நேரத்தில் இருள் சூழ்ந்துவிடுகிறது.
எந்த நேரத்திலும் புலியோ அல்லது பிற விலங்குகளோ வரக்கூடும். எனவே, கையில் ஒரு டார்ச் விளக்கு மற்றும் தடியுடன் இந்த நால்வரும் குழந்தைகளை அழைக்க பேருந்து நிலையத்திற்குச் செல்கிறார்கள்.
பேருந்து வந்ததும், குழந்தைகளைச் சுற்றி ஒரு பாதுகாப்பு சங்கிலி போல நின்று அவர்களை கிராமத்திற்கு அழைத்து வருகிறார்கள். வரும் வழியில் டார்ச் வெளிச்சத்தின் மூலம் விலங்குகள் ஏதேனும் இருக்கிறதா என்று கண்காணித்தபடியே வருகிறார்கள். அதோடு, தங்கள் தடிகளால் சத்தம் எழுப்பிய படியும், சத்தமாகப் பேசிக் கொண்டும் நடக்கிறார்கள்.
பட மூலாதாரம், BHAGYASHRI RAUT
’15 நிமிட நடைபயணம் மிகவும் ஆபத்தானது’
அந்த நான்கு பெண்களில் ஒருவரான கிரண் கேடாம், “இரவு நேரத்தில் பேருந்து நிலையத்தில் இருந்து கிராமத்திற்கு வரும் அந்த 15 நிமிட நடைபயணம் மிகவும் ஆபத்தானது. எங்கிருந்தேனும் புலி வந்துவிடுமோ அல்லது பாம்பு கடித்துவிடுமோ என்ற பயம் எங்களுக்கு எப்போதும் இருக்கும். குழந்தைகளை அழைத்து வரப் போகும்போது நாங்கள் புலியைப் பார்த்திருக்கிறோம்.
ஆனால் அதை நாங்கள் குழந்தைகளிடம் சொல்ல மாட்டோம். ஏனெனில், அவர்கள் புலி இருப்பது தெரிந்தால் பயப்படுவார்கள். புலி எங்கள் கண்ணில் பட்டால் நாங்கள் சத்தம் போடுவோம், அல்லது அதன் கவனம் வேறு எங்காவது இருந்தால் அங்கிருந்து நகர்ந்து விடுவோம். கிராமத்தை அடையும் வரை எங்களுக்குப் பயமாகவே இருக்கும். ஊருக்குள் நுழைந்த பிறகுதான் உயிர் பிழைத்துவிட்டோம் என்ற நிம்மதியே வரும்,” என்று தங்கள் அனுபவத்தை விவரித்தார்.
ஆனால், இந்தப் பெண்கள் ஏன் குழந்தைகளைப் பாதுகாக்க தாங்களே முயற்சி எடுக்க வேண்டியிருந்தது?
கிராமத்தைச் சுற்றி எப்போதும் புலிகள் நடமாடிக் கொண்டிருக்கின்றன. பள்ளிக்குச் செல்லும்போதெல்லாம் குழந்தைகள் புலிகளைப் பார்ப்பது வழக்கமாகிவிட்டது.
பட மூலாதாரம், BHAGYASHRI RAUT
“புலிகள் நடப்பதைப் பார்த்தும், அவை கால்நடைகளைத் தாக்குவதைப் பார்த்தும் குழந்தைகள் மிகவும் பயந்துவிட்டார்கள். ‘நாங்கள் பள்ளிக்குப் போக மாட்டோம்’ என்று அவர்கள் அடம்பிடித்தனர். வனத்துறை அதிகாரிகள் கிராமத்திற்கு வந்தபோது, எங்கள் குழந்தைகளைப் பேருந்து நிலையம் வரை அழைத்துச் செல்ல ஒரு காவலரை நியமிக்கும்படி அல்லது ஏதாவது ஒரு பாதுகாப்பைத் தரும்படி கேட்டோம். ஆனால் அவர்கள் எதையும் செய்யவில்லை. அதனால் நாங்களே எங்கள் குழந்தைகளைப் பாதுகாக்க முடிவு செய்தோம்” என்று கூறுகிறார் கிரண்.
பள்ளிக்குச் செல்லும் இந்த 11 குழந்தைகளும் இந்த நான்கு பெண்களின் பிள்ளைகள்தான். ஆனாலும் அவர்கள் கிராமத்தில் உள்ள அனைத்துக் குழந்தைகளையும் பாதுகாக்கிறார்கள்.
காட்டை ஒட்டிய பகுதியில் குழந்தைகளைப் பாதுகாக்கும்போது, தங்களையும் புலி தாக்கிவிடுமோ என்ற அச்சம் இவர்களுக்கு இருக்கிறது. அதனால்தான் வனத்துறை தங்களுக்கு உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றனர்.
மேலும், “பாதையில் தெருவிளக்குகள் அமைத்துத் தர வேண்டும். நாங்கள் நான்கு பெண்கள் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக உழைக்கிறோம். வனத்துறை இதற்குப் பொறுப்பேற்று எங்களுக்குப் பாதுகாவலர்களை வழங்க வேண்டும். அதுமட்டுமின்றி, எலக்ட்ரிக் ஸ்டிக்கையும் வழங்க வேண்டும். அந்தத் தடி சத்தம் எழுப்பும், அதைக் கேட்டு புலி பயப்படும். இது எங்கள் தைரியத்தை இன்னும் அதிகரிக்கும். எங்களால் குழந்தைகளை இன்னும் பாதுகாப்பாக அழைத்து வர முடியும்,” கிரண் குறிப்பிட்டார்.

வனத்துறையின் பதில்
பிபிசி மராத்தியிடம் பேசிய மோஹர்லி வனச்சரக அலுவலர் சந்தோஷ் திபே, இந்த நான்கு பெண்களின் முயற்சியைத் தடோபா புலிகள் காப்பகம் கவனத்தில் கொண்டுள்ளதாகவும், இதே போன்ற ஒரு திட்டம் தடோபாவில் உள்ள மற்ற 105 கிராமங்களிலும் செயல்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.
“மனித – வனவிலங்கு மோதலைத் தடுப்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. தங்கள் கிராமத்தில் மோதல்கள் ஏற்படுவதைத் தவிர்க்க இந்தப் பெண்களே முன்வந்துள்ளனர். அவர்கள் பள்ளி மாணவர்களைப் பாதுகாக்கிறார்கள்”என்றும் அவர் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர்,”குழந்தைகளை இதுபோன்று அழைத்துச் செல்பவர்களுக்குத் தலா ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். ஒரு குழுவிற்கு மொத்தம் நான்காயிரம் ரூபாய் அளிக்கப்படும். இந்தப் பணியில் ஈடுபடும் பெண்களுக்கு எலக்ட்ரிக் ஸ்டிக், சீருடை மற்றும் டார்ச் விளக்கு ஆகியவை வழங்கப்படும்,” என்றார்.
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு