• Wed. Mar 11th, 2026

24×7 Live News

Apdin News

இருளை மொழிபெயர்த்தவனின் பாடல் | வசந்ததீபன்

Byadmin

Mar 11, 2026


இருதயம் நடு நடுங்க
கண்ணீர் மல்க
மொழிபெயர்க்கிறேன்
இருண்ட காலத்தின் நிகழ்வுகளை…
குருதி நாறும் வார்த்தைகளில்
தெறிக்கிறது வெஞ்சினத்தின்
கடுங் கோபம்
சாம்பல் நினைவுகளில் புதையுண்டிருக்கும்
வாழ்வினை மீட்டெடுக்க
காலத்தினை மீட்டுகிறேன்
அழுகுரல்களின் தீராத பாடல்கள்
காற்றின் மீதேறி
திசைகளெங்கும் அலையும் அவலத்தை ஓவியங்களாய் தீட்டுகிறேன்…
சக மனிதனை நேசிக்காமல் ..
சக உயிரைப் புசித்த ..
உணவு மேசைகளைச் சுற்றிக் குழுமியுள்ள
மனிதர்களின் இருதயங்களைப்பற்றி
கண்ணீர் பெருக்கெடுக்கும் வெளிகளில்
உரத்துப் பேசிட முனைகிறேன்
அழிந்த நாகரிகத்தின் சுவடுகளில்..
மூர்க்க ஓநாய்களுடைய கலாச்சாரத்தின்
இராணுவத் தடயங்களில்..
பீறிட்டெழும் விம்மல்கள் , விகசிப்புகளை
தீப்பந்தமாக்கியே நிமிர்கிறது
எனது உடல்
ஆறாத காயங்களின் வேதனையோடு.

வசந்ததீபன்

ஈழக் கவிஞர் தீபச்செல்வனின் கவிதைகளை தமிழிலிருந்து இந்தியில் மொழிபெயர்ப்புச் செய்யும்போது ஏற்பட்ட பாதிப்பினால் எழுதப்பட்ட கவிதை.

By admin