பட மூலாதாரம், Bhargav Parikh
சமீபத்தில் குஜராத்தின் மெஹ்சானா காவல்துறையினர் ‘போலி மணப்பெண்’ கும்பலைக் கைது செய்துள்ளனர்.
திருமணம் செய்ய விரும்பும் ஆண்களை இந்தக் கும்பல் குறிவைத்து, ஒரு பெண்ணுடன் திருமணம் செய்து வைத்து, பின்னர் அந்த நபரிடம் இருந்து பணத்தைப் பெற்றுக்கொண்டு மணப்பெண்ணை அங்கிருந்து தப்ப வைத்துவிடுவதாகக் குற்றச்சாட்டுகள் உள்ளன.
நவம்பர் 20, 2025 அன்று வந்த புகாரின் அடிப்படையில், போலீசார் ‘போலி மணமகள்’ என்று குற்றம் சாட்டப்பட்ட அந்தப் பெண்ணையும், இந்த மோசடியில் சம்பந்தப்பட்ட மற்றவர்களையும் கைது செய்தனர்.
இந்தக் கும்பலைச் சேர்ந்த இளம்பெண் 24 வயதில் 18 முறை திருமணம் செய்துகொண்டு, அந்த மணமகன்களை ஏமாற்றியிருப்பது விசாரணையில் தெரிய வந்ததாக காவல் துறை தெரிவித்துள்ளது.
இந்த மோசடி எப்படி வெளிச்சத்திற்கு வந்தது, போலீசார் எப்படி இவர்களைக் கைது செய்தனர் என்பன போன்ற விவரங்களை அறிய பிபிசி முயன்றது.
பட மூலாதாரம், Bhargav Parikh
ஏமாற்றப்பட்ட எம்.எஸ்.சி பட்டதாரி
ஆமதாபாத்தின் அசர்வா பகுதியில் ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்த 24 வயதான சாந்தினி ரத்தோட், பெரிதாகப் படிக்கவில்லை.
தனது தாயின் ஆலோசனையைப் பின்பற்றி ‘மோசடியில் ஈடுபடும் மணப்பெண்ணாக’ மாறிய அவர், சில மாதங்களில் லட்சக்கணக்கான ரூபாய் சம்பாதித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
பஹுச்சராஜி அருகே உள்ள அடிவாடா கிராமத்தைச் சேர்ந்த 31 வயதான எம்.எஸ்சி பட்டதாரி சச்சின் படேல், தான் ஏமாற்றப்பட்டதாகக் கூறி காவல்துறையை அணுகியதைத் தொடர்ந்து, சாந்தினி, சாந்தினியின் தாய் சவிதா ரத்தோட், சாந்தினியின் மாமா மற்றும் அத்தை எனக் கூறப்பட்ட ராஜு தக்கர், ராஷ்மிகா பஞ்சல் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
நவம்பர் 15ஆம் தேதி பஹுச்சராஜி காவல் நிலையத்தில் சச்சின் படேல் தாக்கல் செய்த புகாரில், தனது உறவினர் மூலம் ‘ஜெய் மாடி திருமணப் பணியகத்தில்’ பணிபுரியும் ராஷ்மிகா பஞ்சலை தனது உறவினர் மூலம் சந்தித்ததாகத் தெரிவித்தார்.
போலீசாருக்கு கிடைத்த புகாரின்படி, “ராஷ்மிகா பஞ்சல் சச்சினை திருமணம் செய்து வைப்பதாக உறுதியளித்து, ஐந்து லட்சம் ரூபாய் வாங்கிக் கொண்டு சாந்தினியை திருமணம் செய்து வைத்துள்ளார்.
பின்னர், இரண்டு முறை சச்சினின் வீட்டிற்குச் சென்ற சாந்தினி, அவரது வீட்டில் இருந்த தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை எடுத்துக்கொண்டு, ராஜஸ்தானில் உள்ள தனது தந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறிவிட்டுச் சென்றுள்ளார். ஆனால் அதன் பிறகு அவர் சச்சினின் வீட்டிற்குத் திரும்பவில்லை.”
பட மூலாதாரம், Bhargav Parikh
சச்சின் படேல் சாந்தினியை எப்படி சந்தித்தார்?
அடிவாடாவில் உள்ள படேல் கிராமத்தைச் சேர்ந்த சச்சின் படேல் சத்ரலில் உள்ள ஒரு தொழிற்சாலையில் பணிபுரிகிறார். பிபிசி அவரிடம் பேசியது.
சாந்தினியை தான் சந்தித்தது எப்படி என்பதை அவர் பிபிசியிடம் விவரித்தார். ஒன்றரை வருடங்களுக்கு முன்புதான் ராஷ்மிகா பஞ்சலை சந்தித்ததாகவும், தனக்கு ஒரு மணப்பெண்ணைத் தேடித் தருவதாக அவர் உறுதியளித்ததாகவும் சச்சின் கூறினார்.
“நாங்கள் ஆமதாபாத் சென்றோம். ராஷ்மிகா பஞ்சல் அங்கே காட்டிய பெண்ணை எனக்குப் பிடித்திருந்தது. அவர்தான் சாந்தினி. மறுநாள், நாங்கள் அனைவரும் அமர்ந்து பேசிவிட்டு, ஆமதாபாத்தில் உள்ள நரோடாவுக்குச் சென்றோம். சாந்தினியின் தாய் சவிதாபென், மாமா ராஜு தக்கர், ராஷ்மிகா பஞ்சல் ஆகியோர் அங்கு வந்தனர். சாந்தினியின் தந்தை அங்கு இல்லை,” என்று சச்சின் கூறினார்.
சாந்தினியின் திருமணத்திற்கு 5 லட்சம் ரூபாய் கொடுக்கத் தயாராக இருப்பதாக சச்சின் அவர்களிடம் கூறியுள்ளார். மறுநாள், சாந்தினி, அவரது தாயார் மற்றும் மாமா படேல்வாசு திருமணம் நிச்சயம் செய்வதற்காக சச்சினின் வீட்டிற்குச் சென்றனர்.
அந்த நேரத்தில், சாந்தினியின் குடும்பத்தினர் அந்தப் பெண்ணுக்கு வாங்கிய ரூ.50,000 பணத்தையும் ரூ.12,500 மதிப்புள்ள மொபைல் போனையும் எடுத்துச் சென்றனர். ஆனால், சிம் கார்டை எடுத்துச் செல்லவில்லை.
பின்னர், ஆடைகள் எடுக்க வேண்டும் என்பதற்காக முதலில் ஆன்லைனில் 39,000 ரூபாய் வசூலித்த அவர்கள், அதன் பின்னர் 11,000 ரூபாய் பெற்றுள்ளனர்.
“சாந்தினியின் தந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி, உடனடியாக திருமணம் செய்து கொள்ளும்படி அவர்கள் எங்களை வற்புறுத்தினார்கள். திருமணத்திற்காக ஆமதாபாத்தில் உள்ள நியூ வதாஜுக்கு எங்களை அழைத்தார்கள். எங்கள் திருமணத்தை அங்கே நடத்தி வைத்துவிட்டு, ரூ.3 லட்சம் ரொக்கம் மற்றும் தங்க நகைகளை எடுத்துக் கொண்டனர். அதன் பிறகு, நீதிமன்றத்தில் ஒரு நோட்டரி மூலம் முத்திரைத் தாளில் திருமண ஆவணங்களைத் தயாரித்தனர்,” என்று சச்சின் கூறினார்.
ஆனால், திருமணம் முடிந்த இரண்டு நாட்களுக்குப் பிறகு, சாந்தினியின் மாமா ராஜு தக்கர் வந்து சாந்தினியின் தந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி அழைத்துச் சென்றதாகவும், அதன் பிறகு, சாந்தினி ஒரு முறை மட்டுமே தனது வீட்டிற்கு வந்ததாகவும், பின்னர் கூடுதல் நகைகளையும் அவர் எடுத்துச் சென்றதாகவும் சச்சின் கூறினார்.
“சாந்தினி அன்று தனது தந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி வெளியேறினார், அதன் பிறகு எனது தொலைபேசி எண்ணை பிளாக் செய்தார். பின்னர், நான் அதைப் பற்றி அவருடைய மாமாவிடம் சொன்னேன். சாந்தினிக்கு என்னைப் பிடிக்கவில்லை என்றும் விவாகரத்து வேண்டும் என்றும் அவர் கூறினார். நான் விவாகரத்து பெற ஆமதாபாத் சென்றேன். அங்கு, அவர் என்னிடம் தவறாக நடந்து கொண்டு 50,000 ரூபாயை எடுத்துச் சென்றார். நான் போலீசில் புகார் செய்தால் என் மீது பொய்யாக பாலியல் வன்கொடுமை வழக்கை பதிவு செய்வதாகவும் மிரட்டினார்,” என சச்சின் விளக்கினார்.
தொடர்ந்து பேசிய அவர், “சில காலத்திற்குப் பிறகு, சாந்தினி என்னைத் தவிர இன்னும் பலரை இதே முறையில் ஏமாற்றி திருமணம் செய்து பணம் வாங்கியிருந்தது எனக்குத் தெரிய வந்தது. நான் போலீசில் புகார் அளித்தேன். எனது புகாருக்குப் பிறகு, சாந்தினியால் ஏமாற்றப்பட்ட ஆறு பேரும் போலீசை அணுகினர்,” என்று சச்சின் கூறினார்.
பட மூலாதாரம், Bhargav Parikh
ஏமாற்றப்பட்ட மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள்?
ஆமதாபாத் வஸ்த்ரால் பகுதியைச் சேர்ந்த முகேஷ் படேல், சில ஆண்டுகளுக்கு முன்பு சாந்தினியை ரூ.3 லட்சம் கொடுத்து திருமணம் செய்து கொண்டார்.
மெஹ்சானாவில் போலீசாரால் சாந்தினி கைது செய்யப்பட்ட பிறகு முகேஷ் படேல் பிபிசியிடம் பேசினார்.
“ராஜுவும் ராஷ்மிகாவும் இரண்டு திருமண நிறுவனங்களை நடத்துகிறார்கள். எங்களுக்கு வயது வித்தியாசம் இருந்தபோதிலும், என்னை சாந்தினி திருமணம் செய்து கொள்வதில் எந்தப் பிரச்னையும் இல்லை என்று அவர்கள் இருவரும் என்னிடம் கூறினார்கள்.
நான் மூன்று லட்சம் ரூபாய் கொடுத்து திருமணம் செய்து கொண்டேன். ஆனால் திருமணத்திற்குப் பிறகு, சாந்தினி என் தாத்தாவுடன் வாக்குவாதம் செய்து வீட்டை விட்டு வெளியேறிவிட்டார்” என்று முகேஷ் கூறினார்.
“அதன் பிறகு, என் தாத்தாவும் அப்பாவும் இறந்த பிறகும், சாந்தினி எங்கள் வீட்டிற்கு வரவில்லை. நான் அவருடைய மாமா ராஜு தக்கருக்கு ஃபோன் செய்தேன். விவாகரத்திற்காக ரூ.75,000 கொடுக்கச் சொன்னார். அந்தப் பணத்தை வாங்கிய பிறகு, என்னை பாலியல் வன்கொடுமை வழக்கில் சிக்க வைப்பதாக மிரட்டினார்.
அதனால் அஞ்சிய நான் புகார் அளிக்கவில்லை. ஆனால் சாந்தினியும் அவரது மாமாவும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதை அறிந்த பிறகு, புகார் அளிக்க வந்தேன்,” என்று முகேஷ் விவரித்தார்.
பட மூலாதாரம், Bhargav Parikh
சாந்தினியை போலீசார் கைது செய்தது எப்படி?
“புகாரைப் பெற்ற பிறகு நாங்கள் தொலைபேசி எண்ணைச் சரிபார்த்தோம். ராஜு தக்கர் மற்றும் ராஷ்மிகாவின் தொலைபேசி செயல்பாட்டில் இருப்பதைக் கண்டறிந்தோம். தொழில்நுட்ப கண்காணிப்பின் மூலம் சாந்தினியின் தொலைபேசி எண் நரோடாவில் இருப்பதைத் தெரிந்துகொண்டோம்.
உடனடியாக ஒரு குழுவை அமைத்து அவர்கள் அனைவரையும் கைது செய்தோம். விசாரணையில் சாந்தினி சச்சின் படேலை மட்டுமல்ல, மொத்தம் 18 பேரை மணந்திருப்பது தெரிய வந்தது. அவர்களின் புகைப்படங்கள் மற்றும் முத்திரைத் தாளில் நோட்டரி செய்யப்பட்ட திருமணச் சான்றிதழ்களைக் கண்டோம்,” என்று மெஹ்சானா எஸ்பி ஹிமான்ஷு சோலங்கி பிபிசியிடம் தெரிவித்தார்.
திருமணச் சான்றிதழ்களுடன், ஆதார் அட்டை மற்றும் பள்ளிச் சான்றிதழும் போலியானவை என்பதைக் கண்டறிந்ததாகக் கூறிய ஹிமான்ஷு சோலங்கி, இதேபோன்று, அவர்கள் ரூ.52 லட்சத்தை கொள்ளையடித்தது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்திருப்பதாகவும் தெரிவித்தார்.
மேற்கொண்டு பேசியவர், “அவர்களை ஐந்து நாள் காவலில் எடுத்துள்ளோம். குஜராத்தின் பல மாவட்டங்களில் அவர்கள் போலி திருமணங்களை நடத்தியுள்ளனர். ஆமதாபாத், காந்திநகர், மோர்பி, கிர் சோம்நாத், கேடா, சபர்கந்தா உள்ளிட்ட பல இடங்களில் அவர்கள் மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், இந்தக் கும்பலில் இன்னொரு பெண்ணும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. நாங்கள் அவரைத் தேடி வருகிறோம். இவர்கள் இன்னும் எத்தனை பேரை ஏமாற்றினார்கள், போலி ஆதார் அட்டை, பள்ளிச் சான்றிதழை எங்கிருந்து பெற்றார்கள் என்பது பற்றிய கூடுதல் விவரங்கள் மேலதிக விசாரணையில் தெரிய வரும்,” என்று அவர் குறிப்பிட்டார்.
பட மூலாதாரம், Bhargav Parikh
‘திருமணம் செய்துகொண்டு சண்டை போட்டுவிட்டு வெளியே வந்துவிடுவேன்’
“நான் ஒருவரோடு பழகிய பிறகு அவர்களைத் திருமணம் செய்துகொள்வேன். பிறகு அவர்களுடன் சண்டை போட்டு, அந்த வீட்டை விட்டு வெளியே வந்துவிடுவேன். அதன் பிறகு மீண்டும் மற்றொருவரைத் திருமணம் செய்து கொள்வேன்.
இது குற்றமா இல்லையா என்று எனக்கு தெரியாது. ஆனால் நான் இப்படித்தான் செய்து வந்தேன்,” என்று பஹுச்சராஜி போலீஸ் நிலையத்தில் இருக்கும் சாந்தினி பிபிசியிடம் கூறினார்.
மெஹ்சானா போலீசாருக்கு கிடைத்த ஆதாரங்களின்படி, சாந்தினி கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளில் 18 முறை திருமணம் செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு