பட மூலாதாரம், DMK
2020ல் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தியாவின் புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு முழுமையாக ஏற்க வேண்டுமென மத்திய அரசு வலியுறுத்துகிறது. தமிழ்நாட்டின் இரு மொழிக் கொள்கையைக் காரணம் காட்டி, அதில் குறிப்பிடப்பட்டுள்ள மும்மொழிக் கொள்கையை ஏற்க மறுத்து வருகிறது தமிழ்நாடு அரசு. இந்த இரு மொழிக் கொள்கை தமிழ்நாட்டில் அமலுக்கு வந்தது எப்படி?
தாய்மொழி, ஆங்கிலம் தவிர வேறு ஏதாவது ஒரு இந்திய மொழியை பள்ளிக்கூடங்களில் கற்பிக்க வேண்டுமென 2020ல் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தியாவின் புதிய கல்விக் கொள்கை (4.13) குறிப்பிடுகிறது. ஆனால், தமிழ்நாட்டில் இரு மொழிக் கொள்கை அமலில் இருக்கும் நிலையில், இதனை ஏற்க தமிழ்நாடு அரசு மறுத்து வருகிறது.
தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளை மட்டுமே அரசுப் பள்ளிக்கூடங்களில் கற்பிக்கும் இரு மொழிக் கொள்கை 1968ஆம் ஆண்டிலிருந்து தமிழ்நாட்டில் அமலில் இருந்து வருகிறது. இந்தக் கொள்கை எப்படி அமலுக்கு வந்தது?
1964- 65 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டம், இந்தி பேசாத மாநிலங்கள் விரும்பும்வரை இந்தியுடன் ஆங்கிலமும் இணை அலுவல் மொழியாகத் தொடரும் என்ற அப்போதைய பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் வாக்குறுதியுடன் முடிவுக்கு வந்தது. ஆனால், தமிழ்நாட்டில் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டம், மாநிலத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் வாய்ப்புகளைக் கடுமையாக பாதித்திருந்தது.
இதனால், 1967ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்து, சி.என். அண்ணாதுரை தலைமையிலான தி.மு.க. ஆட்சியைப் பிடித்தது. இந்த நிலையில், 1968ஆம் ஆண்டின் துவக்கத்தில், 1963ஆம் ஆண்டின் ஆட்சி மொழிச் சட்டத்தில் ஒரு திருத்தத்தை மத்திய அரசு கொண்டுவந்தது.
அலுவல் மொழிகள் (திருத்தச்) சட்டம் 1967 (The Official Languages (Amendment) Act, 1967) என இந்தச் சட்டம் குறிப்பிடப்பட்டது. இந்தி மட்டுமல்லாமல், ஆங்கிலமும் ஆட்சி மொழியாகத் தொடர இந்தச் சட்டம் வழிவகுத்தது. இது இந்தி பேசாத மாநிலங்களுக்கு மகிழ்ச்சியளித்தது. ஆனால், அதோடு சேர்த்து ஆட்சி மொழி தீர்மானம் ஒன்றும் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டது.
பட மூலாதாரம், TWITTER
தீர்மானம் கூறுவது என்ன?
இந்தத் தீர்மானம் இந்தியை நாடு முழுவதும் வளர்க்க வேண்டும் என்று கூறியது. குறிப்பாக மும்மொழிக் கொள்கையை வளர்த்தெடுக்க இந்த தீர்மானம் வலியுறுத்தியது.
“நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் வசிக்கும் மக்களிடையே ஒருமைப்பாட்டையும் தகவல் தொடர்பையும் மேம்படுத்த மாநிலங்களுடன் கலந்தாலோசித்து, மும்மொழிக் கொள்கையை உருவாக்கி, அதனை எல்லா மாநிலங்களிலும் செயல்படுத்தும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்” என்றது இந்தத் தீர்மானம்.
“இந்தி பேசும் பகுதிகளில் இந்தி, ஆங்கிலம் தவிர, தென்னிந்திய மொழிகளில் ஒன்றையும் இந்தி பேசாத மாநிலங்களில் பிராந்திய மொழி, ஆங்கிலம் தவிர, இந்தியையும் கற்றுக்கொடுக்க வேண்டும்” என்றது இந்தத் தீர்மானம்.
மேலும், மத்திய அரசுப் பணிகளுக்கு பணியாளர்களைத் தேர்வு செய்யும்போது அவர்கள் இந்தியோ, ஆங்கிலமோ அறிந்திருக்க வேண்டும் எனவும் இந்தத் தீர்மானம் கூறியது.
“இந்த (திருத்தச்) சட்டம் கொடுப்பதை இந்தத் தீர்மானம் பறித்துக்கொள்கிறது” என இந்தத் தீர்மானம் குறித்துக் குறிப்பிட்டார் தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த அண்ணா. எனினும் 1968ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் தேதி ஆட்சி மொழி திருத்த மசோதா குடியரசுத் தலைவரின் ஒப்புதலோடு சட்டமானது. தீர்மானமும் அரங்கேறியிருந்தது.
“இந்த விசித்திரத்தால் ஒரு குறிப்பிடத்தக்க பகுதியின் மக்கள் திருப்தி அடைவார்கள். இது தி.மு.கழகத்தையும் மாணவர்களையும் திருப்திப்படுத்தாது என்றார் அண்ணா. இந்திய மொழிகளுக்குள்ளேயே மிக முக்கியமான இடத்தை அளிக்கத்தக்க வகையில் இந்தி ஆதரவாளர்கள் செயல்பட்டு வெற்றிபெற்றுவிட்டார்கள் என்பதைத் தீர்மானம் தெளிவாக்கியது.
அரசுத் தேர்வுகளில் இந்தி பேசுபவர் தம் தாய்மொழியில் தேர்வு எழுதலாம். இந்தி பேசாதவரோ தன் தாய்மொழியில் மட்டுமல்லாமல் அந்நிய மொழியான ஆங்கிலத்தில் மட்டும் எழுதலாம்.
‘கொதிப்படைந்த மாணவர்கள், தி.மு.க. அரசு உடனே இதனை எதிர்த்துச் செயல்படவேண்டும் எனக் கூறி வன்முறையில் இறங்கினார்கள்” என அந்தத் தருணத்தின் சூழ்நிலையை அண்ணாவின் வாழ்க்கை வரலாற்று நூலான ‘அண்ணா – தி லைஃப் அண்ட் டைம்ஸ் ஆஃப் சி.என்.அண்ணாதுரை’-யில் குறிப்பிடுகிறார் ராஜரத்தினம் கண்ணன்.
பட மூலாதாரம், GNANAM
விடிய விடிய நடந்த பேச்சுவார்த்தை
மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்துகொண்டே வந்தது. இதையடுத்து, தமிழ்நாட்டில் கல்வி நிலையங்கள் அனைத்தையும் மூடியது மாநில அரசு.
மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி பலரும் வலியுறுத்தியபோது, “இப்போது மாணவர்களால் சேதப்படுத்தப்படும் பேருந்துகளையோ, கொளுத்தப்படும் ரயில் பெட்டிகளையோ நாம் மீண்டும் விலை கொடுத்து வாங்கிவிட முடியும். ஆனால், இழந்துவிட்ட மாணவர்களின் உயிரை நம்மால் மீட்டுத்தர முடியுமா? மேலும், இந்தி எதிர்ப்பு உணர்ச்சி மதிக்கப்பட வேண்டிய ஒன்று,” என அண்ணா குறிப்பிட்டதாகச் சுட்டிக்காட்டுகிறார் ராஜரத்தினம் கண்ணன்.
இதற்குப் பிறகு மாணவர்களின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார் அண்ணா. இந்தப் பேச்சுவார்த்தை சட்ட அமைச்சரான எஸ். மாதவனின் இல்லத்தில் நடந்தது. இந்தப் பேச்சுவார்த்தையில் முதலமைச்சர் அண்ணா, கல்வித்துறை அமைச்சர் நெடுஞ்செழியன், பொதுப் பணித்துறை அமைச்சர் மு. கருணாநிதி, உணவுத் துறை அமைச்சர் கே.ஏ. மதியழகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இரவு பத்து மணியிலிருந்து காலை மூன்று மணிவரை இந்தப் பேச்சுவார்த்தை நடந்ததாக தனது ‘ஸ்ட்ரக்கிள் ஃபார் ஃப்ரீடம் ஆஃப் லாங்குவேஜஸ் இன் இந்தியா’ நூலில் குறிப்பிடுகிறார் பேராசிரியர் ஏ. ராமசாமி.
“இந்த விவகாரத்தைத் தான் கையாளுவதாக மாணவர்களிடம் வாக்குறுதி அளித்தார் அண்ணா. பிறகு மாணவர் தலைவர்கள் கூடி போராட்டத்தை விலக்கிக்கொள்ள தீர்மானம் நிறைவேற்றினர். ஆனால், மற்றொரு மாணவர் தரப்பினர் போராட்டத்தைத் தொடர முடிவு செய்தனர். அவர்கள் தமிழ் இந்தியாவின் அலுவல் மொழிகளில் ஒன்றாக வேண்டுமெனவும் இந்தி பிரசார சபையின் கிளைகளை தமிழ்நாட்டில் மூட வேண்டுமெனவும் தீர்மானம் நிறைவேற்றினர். பிறகு அவர்களும் அண்ணாவின் வேண்டுகோளை ஏற்று போராட்டத்தை விலக்கிக் கொண்டனர்” எனக் குறிப்பிடுகிறார் ஏ. ராமசாமி.
பட மூலாதாரம், Getty Images
தமிழ்நாடு அரசின் தீர்மானம்
ஜனவரி 18ஆம் தேதி கூடிய தி.மு.கவின் செயற்குழு இந்த விவகாரம் குறித்து தீர்மானிக்க அண்ணாவுக்கு முழு அதிகாரத்தை அளித்தது. இதையடுத்து, இந்த விவகாரம் குறித்து விவாதிக்க ஜனவரி 23ஆம் தேதி தமிழ்நாடு சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட முடிவுசெய்தார் அண்ணா.
இந்த சிறப்புக் கூட்டத்தில்தான், மும்மொழிக் கொள்கையை நீக்கும் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இந்தத் தீர்மானத்தை கல்வி மற்றும் தொழில்துறை அமைச்சர் நெடுஞ்செழியன் கொண்டுவந்தார். அந்த தீர்மானத்தில் முக்கியமான அம்சங்களாக பின்வரும் விஷயங்கள் இருந்தன:
“தமிழையும் மற்ற தேசிய மொழிகளையும் அலுவல் மொழியாக அங்கீகரித்து, அதற்கேற்றபடி அரசியலமைப்புச் சட்டத்தைத் திருத்த வேண்டும். அதுவரை ஆங்கிலமே அலுவல் மொழியாகத் தொடர வேண்டும். அலுவல் மொழி திருத்தச் சட்டத்துடன் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம், இந்தி பேசாத பிராந்தியங்களைச் சேர்ந்த மக்களுக்கு அநீதியையும் சங்கடத்தையும் புதிய பளுவையும் உண்டாக்குவதால், அந்தத் தீர்மானம் அமலாக்கப்படக்கூடாது.
இந்தத் தீர்மானம் மூலம் உருவாக்கப்பட்டிருக்கும் சிரமத்தை நீக்கும் வகையில், அரசியல் தலைவர்களின் மேல் மட்ட மாநாட்டை இந்தியப் பேரரசு கூட்டி, மொழி பிரச்சனையை மறு ஆய்வு செய்ய வேண்டும்.
மும்மொழிக் கொள்கையை செயல்படுத்த வேண்டும் என்ற தீர்மானம், இந்தி பேசாத மக்களின் மீது இந்தியைத் திணிப்பதை நோக்கமாகக் கொண்டிருக்கிறது. இதன் உச்சகட்ட நோக்கம் இந்தியை ஒரே அலுவல் மொழியாக்குவதுதான். இந்தியைத் திணிக்கும் மத்திய அரசின் திட்டத்தை இந்த மன்றம் ஏற்காது. ஆகவே இந்த அவை பின்வருமாறு தீர்மானிக்கிறது:” என கூறினார்.
தீர்மானத்தின் முக்கிய அம்சங்கள்
– மும்மொழிக் கொள்கை நீக்கப்படும். தமிழும் ஆங்கிலமும் மட்டுமே கற்பிக்கப்படும். தமிழ்நாட்டில் உள்ள எல்லா பாடப் புத்தகங்களில் இருந்தும் இந்திப் பாடங்கள் நீக்கப்படும்.
– தேசிய மாணவர் படையில் இந்தியிலான கட்டளை வாக்கியங்கள் பயன்படுத்தப்பட மாட்டாது. மத்திய அரசு இதனை ஏற்கவில்லையென்றால் தேசிய மாணவர் படை கலைக்கப்படும்.
– ஐந்தாண்டுகளுக்குள் எல்லா கல்லூரிகளிலும் தமிழ் மூலமே பயிற்றுவிப்பதற்கான நடவடிக்கைகளும் அரசின் எல்லாத் துறைகளிலும் தமிழைப் பயன்படுத்துவதற்கான முயற்சிகளும் துரிதப்படுத்தப்படும்.
– அரசியலமைப்புச் சட்டத்தில் இந்திக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் சிறப்பு அந்தஸ்தை நீக்குவதோடு, எல்லா தேசிய மொழிகளுக்கும் ஒரே மாதிரியான அந்தஸ்தை வழங்க வேண்டும்.
– எட்டாவது அட்டவணையில் இடம்பெற்றுள்ள எல்லா மொழிகளை வளர்த்தெடுக்கவும் ஒரே மாதிரியான நிதியுதவியை வழங்க வேண்டும்”.
காங்கிரஸ் குற்றச்சாட்டு
இந்தத் தீர்மானத்தின் மூலம் பிரிவினையை மறைமுகமாக புகுத்துவதாக காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்கள் குற்றம்சாட்டினார்கள். இந்தத் தீர்மானம் குறித்தும் எதிர்க்கட்சியினரின் குற்றச்சாட்டுகள் குறித்தும் முதலமைச்சர் சி.என். அண்ணாதுரை விரிவாகப் பேசினார்.
“காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த மெம்பர்கள் ‘ஒருமைப்பாடு முக்கியமா, மொழிப் பிரச்சனை முக்கியமா?’ என்று கேட்டார்கள். அதைத்தான் நானும் திருப்பித் திருப்பிக் கேட்கிறேன். தேச ஒருமைப்பாடுதான் முக்கியமென்றால், இவ்வளவு மனக்கிலேசத்தை உண்டாக்குகிற மொழிப் பிரச்சனையை ஏன் கிளப்பினீர்கள்?
கொஞ்சம் விட்டுக் கொடுக்கலாம். ஆனால், விட்டுக்கொடுப்பது நாமேதானா, தியாகம் செய்ய வேண்டும் என்பது நமக்கு மட்டும்தானா? எல்லாக் காலத்துக்கும் நாம் விட்டுக் கொடுத்து வந்திருக்கிறோமே, மற்றவர்கள் எதையாவது விட்டுக்கொடுத்திருக்கிறார்களா? தேச ஒருமைப்பாட்டுக்காக அந்த மக்கள் செய்கிற தியாகம் என்ன? ஏற்கிற கஷ்டம் என்ன? இழந்துவிட்ட நன்மை என்ன? தேச ஒருமைப்பாட்டுக்காக நாம் பொறுமையுடன் விட்டுக்கொடுக்க, விட்டுக்கொடுக்க அவர்கள் செய்துகொண்டு போகிற காரியங்கள் என்ன? நம் மீது இந்தியைத் திணிக்கும் துணிவைத்தான் பெற்றார்கள்” என்று குறிப்பிட்டார் அண்ணா.
இந்த விவகாரம் குறித்து பொது மக்களின் கருத்தைப் பெற வேண்டும் என்றார் எதிர்க்கட்சித் தலைவரான காங்கிரசின் பி.ஜி. கருத்திருமன். ஆனால், இந்தக் கோரிக்கையை முதலமைச்சர் ஏற்கவில்லை.
“இந்த மன்றமே பொதுமக்களின் பிரதிநிதிகளைக் கொண்ட, பொதுமக்களாலே தேர்ந்தெடுத்து அனுப்பப்பட்டவர்களைக் கொண்ட மன்றமாக இருப்பதால் இங்கு நிறைவேற்றப்பட்ட பிறகு மறுபடியும் இந்தப் பிரச்னையிலே பொதுமக்களுடைய அபிப்பிராயத்தை பெறத் தேவையில்லை எனக் கருதுகிறேன்” என்றார் அண்ணா. பிறகு இந்தத் தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டு, நிறைவேற்றப்பட்டது.
“இந்தி பேசப்படும் பகுதிகளில் வேலைக்கும் வர்த்தகத்துக்கும் முனைபவர்கள் இந்தியை நிச்சயம் படிக்கிறார்கள். அது அப்படித்தான் இருக்க வேண்டும். மாநில மொழிகளில் அரசுப் பணிக்கான தேர்வுகளை எழுதுவதால் முன்பு அஞ்சியதைப் போல தரமோ, செயல்பாடோ ஒன்றும் குறைந்துபோய்விடவில்லை. அண்ணா மொழிப் பிரச்னைக்கு இயற்கையான ஒரு தீர்வைக் காண விரும்பினார். இப்போது பார்க்கையில் அவர் அதில் வெற்றியே பெற்றார் என்று கூற வேண்டும்” எனக் குறிப்பிடுகிறார் கண்ணன்.
ஜனவரி 25ஆம் தேதி மொழிப் போர் தியாகிகள் தினத்தன்று சென்னை நேப்பியர் பூங்காவில் (தற்போது மே தினப் பூங்கா) பொதுக்கூட்டம் ஒன்று நடத்தப்பட்டது. இதில் பேசிய முதலமைச்சர் சி.என். அண்ணாதுரை, “(மொழிப் பிரச்னையில்) நான் என்னாலானதைச் செய்துவிட்டேன். தில்லி தன்னாலானதைச் செய்யட்டும்” என்று குறிப்பிட்டார்.
போராட்டங்களால் மூடப்பட்டிருந்த எல்லா கல்வி நிலையங்களும் பிப்ரவரி 5ஆம் தேதி திறக்கப்பட்டன.
இதற்குப் பிறகு, தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வரும் எல்லா அரசுகளுமே தமிழ் – ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளை மட்டுமே அரசுப் பள்ளிகளில் கற்பிக்கும் இரு மொழிக் கொள்கையை பின்பற்றி வருகின்றன.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு