இறைச்சி சாப்பிடுவதை நிறுத்திவிட்டு, மீண்டும் சாப்பிட தொடங்கும் போது உடலில் சில மோசமான விளைவுகளை சந்தித்ததாக சிலர் தெரிவித்தனர். இறைச்சியை செரிமானம் செய்வது எப்படி என்பதை உங்கள் உடல் மறந்துவிடுமா?
வளிமண்டலத்தில் வெளியேற்றப்படும் கார்பனின் அளவை குறைப்பதற்கு உட்கொள்ளும் இறைச்சியை குறைத்துக்கொள்வது ஒரு எளிமையான வழி.
பிரிட்டனில் உள்ள அனைவரும் நாளொன்றுக்கு 50 கிராமுக்கு குறைவான இறைச்சியை உட்கொள்ளும் உணவுமுறைக்கு மாறினால், 8 மில்லியன் கார்கள் பயன்பாட்டுக்கு உட்படுத்தப்படாமல் நிறுத்தி வைக்கும்போது சேமிக்கப்படும் அதே அளவிலான கார்பன் வெளியீட்டை நம்மால் கட்டுப்படுத்த முடியும் என்று ஆய்வாளர்கள் மதிப்பீட்டுள்ளனர்.
1980 முதல் 2022 ஆம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில் மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி மற்றும் செம்மறி ஆட்டிறைச்சி ஆகியவற்றை உட்கொள்ளும் அளவு 62% சதவீதம் சரிந்துள்ளதாக அடைந்துள்ளதாக பிரிட்டன் அரசின் தரவுகளின் காட்டுகின்றன.
இதற்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும் இயற்கை சூழல் மீதான அக்கறையை விட, அதிகரிக்கும் விலைகளே காரணமாக இருக்கக்கூடும். மேலும் மேலும் அதிகமானோர் இறைச்சி வேண்டாம் என கூறிவருகின்றனர்.
ஆனால் அதை சாப்பிடுவதை நீண்டகாலம் தவிர்த்து விட்டால், இறைச்சியை செரிமானம் செய்யும் உடலின் தன்மை மாறிவிடுகிறதா?
சைவம் மற்றும் வீகனாக (vegan) இருப்பவர்கள், மீண்டும் இறைச்சி சாப்பிடுவதால் வயிற்று வலி, வயிறு உப்புசம் மற்றும் பிற அறிகுறிகள் ஏற்படக்கூடுமா? என்ற கேள்வியை சமூக ஊடகங்களில் பதிவிடுகின்றனர்.
மற்றவர்கள் தங்களது சொந்த அனுபவங்களை பகிர்ந்துகொள்ள, ஆர்வமிகுதியால் தேடல் தொடங்குகிறது.
நீண்ட இடைவேளைக்கு பின்னர் இறைச்சியை சாப்பிடுவது வயிற்று உபாதைகளை ஏற்படுத்துகிறதா என்பதை பற்றி பெரிய அளவில் ஆராய்ச்சி ஏதும் நடத்தப்படவில்லை என்கிறார் அமெரிக்காவின் கானெல் பல்கலைக்கழகத்தின் ஊட்டச்சத்து துறையில் பேராசிரியராக இருக்கும் சான்டெர் கர்ஸ்டென்.
“ஆதாரங்கள் இல்லை என்பதால், அது இல்லையென்றாகிவிடாது, மக்கள் அதை ஆய்வுசெய்யவில்லை,” என்கிறார் அவர்.
சில அரிதான சமயங்களில், இறைச்சிக்கு ஒவ்வாமை ஏற்படுவது சாத்தியமே. ஆல்பா- கால் சிண்ட்ரோம் என்று அழைக்கப்படும் நிலையில் விலங்குகள் சார்ந்த புரதங்களை உட்கொள்ளும்போது, நமது உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி அவற்றை தீங்கு விளைவிக்கும் பொருளாக பார்க்கும்.
இதனால் அனாபிலாக்ஸிஸ் (உடலில் அதிகமான அமிலங்கள் சுரக்கும் நிலை) மற்றும் இறப்பு கூட ஏற்படலாம். பல ஆண்டுகள் நன்றாக இறைச்சி சாப்பிட்டவர்களுக்கு கூட இந்த ஒவ்வாமை ஏற்படலாம். இதற்கும் குறைவான இறைச்சி உணவுமுறைக்கு மாறுவதற்கும் தொடர்பு இல்லை. உதாரணமாக உண்ணி கடித்த பிறகு கூட இம்மாதிரியான நிலை ஏற்படலாம்.
இறைச்சியை தவிர்ப்பவர்களில் பலருக்கு, தங்களை அறியாமல் அதை உட்கொண்டுவிட்டது தெரியவந்தால் உணர்வுப்பூர்வமாக வேதனையளிப்பதாக இருக்கலாம்.
சைவ உணவு உட்கொள்பவரான கெர்ஸ்டன், “இது சிலரை மிகவும் சோகமடையச் செய்யும்,” என்கிறார். “ஆனால் இதனால் உடலில் அறிகுறிகள் ஏற்படுமா என்பது எனக்கு தெரியாது, ஆனால் அது அவர்களை மிகுந்த கோபத்திற்கு- உள்ளாக்க வாய்ப்புள்ளது,” என்கிறார் கர்ஸ்டென்.
செரிமான செயல்முறையை கருத்தில் கொள்ளும்போது, நீண்டகால இடைவெளியில் இறைச்சியை செரிக்கும் திறன் குறைந்துவிடுவது சாத்தியமானதுதான் என நீங்கள் நினைப்பது அவ்வளவு சரியல்ல.
பழங்கள், காய்கறிகள், பருப்புவகைகளில் இருக்கும் நார் சத்தைப் போல இல்லாமல் இறைச்சியை மிக எளிதில் நமது உடல் செரிமானம் செய்துவிடும். இதை சாத்தியமாக்க நமது உடலில் உள்ள நுண்ணுயிரிகள் உதவுகின்றன.
தாவர புரதங்களை செரிக்கும் அதே என்ஜைம்கள்தான் இறைச்சியில் உள்ள புரதங்களையும் செரிமானம் செய்கிறது. உட்கொள்ளப்படும் புரதத்தில் உள்ள வேதி பிணைப்புகளை அடையாளம் கண்டு அவற்றை இந்த என்ஜைம்கள் பிரிக்கும். தாவரங்களிலிருந்து வந்தாலும், விலங்குகளிடமிருந்து வந்தாலும், புரதங்கள் அமினோ ஆசிட்களால் உருவாகியுள்ளன. எனவே எங்கிருந்து வந்தாலும் என்ஜைம்களால் புரதங்களை உடைக்கமுடியும்.
பட மூலாதாரம், Alamy
இதிலிருந்து மாறுபட்டு இருப்பது விலங்குகளிடம் இருந்து கிடைக்கும் பாலில் உள்ள லாக்டோஸ் போன்ற சர்க்கரைகள். லாக்டோஸை செரிக்க லாக்டேஸ் என்ற என்ஜைம் தேவைப்படும். ஒருவருக்கு இது குறைவாக சுரக்கும் போது அவரால் பால் சார்ந்த உணவுகளை உட்கொள்ள முடியாது (lactose intolerent). இவர்கள் பால் சார்ந்த பொருட்களை எடுத்துக்கொண்டால் வயிற்றுவலி போன்ற பிரச்னைகளை சந்திக்க நேரிடும்.
ஆனால் இறைச்சி புரதங்களை பொறுத்தவரை, ஒரு ஹேம்பர்கரை செரிமானம் செய்ய தேவையான என்ஜைம்களை உற்பத்தி செய்வதை உடல் நிறுத்திவிடும் என நினைப்பது அர்த்தமற்றது- அந்த என்ஜைம்கள் எப்போதும் இருக்கின்றன. ஏனென்றால் பட்டாணி, சோயா பீன் ஆகியவற்றை செரிக்க உதவும் அதே என்ஜைம்கள்தான் இதற்கும் தேவைப்படுகிறது, என்கிறார் கர்ஸ்டென்.
மனித குடலில் உள்ள நுண்ணுயிரிதொகுதி, தனி நபரின் உணவுப் பழக்கத்திற்கு ஏற்றார் போல மாற்றமடையும். இதனால் சில நேரங்களில் நமது உடலில் உள்ள சில பாக்டீரியா மற்றமடையலாம். அதே போல நுண்ணுயிரிகளும் வேறுவிதமான என்ஜைம்களை வெளியிடலாம்.
உணவுப் பழக்கத்தில் ஏற்படும் மாற்றம், நுண்ணுயிரிதொகுதியில் உடனடியாக மாற்ற முடியும். ஆய்வு ஒன்றில் பங்கேற்றவர்கள் முழுமையாக இறைச்சியை சார்ந்த உணவு முறைக்கு மாறினர். இதன் விளைவாக அவர்களின் நுண்ணுயிரிதொகுதியில் ஒரே நாளில் மாற்றம் தெரிந்தது(இந்த உணவுப்பழக்கம் முடிந்தவுடன் நுண்ணுயிரிதொகுதியும் விரைவில் பழைய நிலைக்கு திரும்பியது). இதில் ஈடுபட்டவர்கள் உடலில் ஏதேனும் அசௌகரியம் ஏற்பட்டால் தெரிவிக்கும்படி கூறப்பட்டிருந்தது. ஆனால் ஏதும் அறிக்கையில் இடம்பெறவில்லை.
பட மூலாதாரம், Alamy
சொல்லப்போனால், நீண்ட இடைவேளைக்கு பிறகு அதிக அளவிலான நார் சத்தை உட்கொள்வதால்தான் செரிமான பிரச்னைகள் ஏற்படலாம். இது போன்ற உணவு மாற்றங்களை படிப்படியாக கொண்டுவருவது நல்லது.
“உட்கொள்ளும் நார்சத்தை பொறுத்து, சில கடுமையான பின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்,” என்கிறார் கர்ஸ்டென்.
நீண்ட இடைவேளைக்கு பின்னர் இறைச்சி சாப்பிட்டதால் வயிறு உபாதை உங்களுக்கு ஏற்பட்டால், இது இன்னமும் அதிகம் ஆய்வு செய்யப்படாததாக இருந்தாலும்,என்ஜைம்கள் குறைப்பாடு காரணமாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்கிறார் கர்ஸ்டென்.
“மனித உடல் என்பது சூழ்நிலைக்கு ஏற்றார் போல மாற்றம் அடையக்கூடியது. நீங்கள் நினைப்பதை விட அதிகமான செயல்களை அதனால் செய்யமுடியும்,”.