0
இந்தியாவின் ரஞ்சி, பிர்சா முண்டா கால்பந்தாட்ட விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை (24) ஆரம்பமான 4ஆவது தெற்காசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பின் இரண்டாம் நாளான சனிக்கிழமை (25) இருபாலாருக்குமான 4 x 100 மீற்றர் தொடர் ஓட்டங்களில் இலங்கை அணியினர் தங்கப் பதக்கங்களை சுவீகரித்தனர்.
இதனைவிட ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டி, உயரம் பாய்தல் போட்டிஆகிய நிகழ்ச்சிகளிலும் இலங்கைக்கு தங்கப் பதக்கங்கள் கிடைத்தன.
இலங்கைக்கு இரண்டாம் நாளான சனிக்கிழமையன்று 4 தங்கப் பதக்கங்கள், 4 வெள்ளிப் பதக்கங்கள், 4 வெண்கலப் பதக்கங்கள் கிடைத்தன.


ஆண்களுக்கான 4 x 100 மீற்றர் தொடர் ஓட்டப் போட்டியை வியத்தகு 39.99 செக்கன்களில் நிறைவு செய்த இலங்கை அணி தங்கப் பதக்கத்தை சுவீகரித்தது. தொடர் ஓட்ட அணியில் ப்ரமுதித் சில்வா, சந்துன் தியலவத்த, இந்துசார விதுசான், சமோத் யோதசிங்க ஆகியோர் இடம்பெற்றனர்.
பெண்களுக்கான 4 x 100 மீற்றர் தொடர் ஓட்டப் போட்டியை 44.70 செக்கன்கள் என்ற சிறந்த நேரப் பெறுதியுடன் இலங்கை தங்கப் பதக்கத்தை வென்றெடுத்தது. இவ்வணியில் தனஞ்சனா பெர்னாண்டோ, அமாஷா டி சில்வா, ருமேஷிக்கா ரத்நாயக்க, பாத்திமா ஷபியா யாமிக் ஆகியோர் இடம்பெற்றனர்.
ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கையின் நட்சத்திர ஓட்ட வீரர் காலிங்க குமாரகே தங்கப் பதக்கத்தை வென்றெடுத்தார். அப் போட்டியை நிறைவு செய்ய அவர் எடுத்துக்கொண்ட நேரம் 46.21 செக்கன்களாகும்.
ஆண்களுக்கான உயரம் பாய்தலில் தரிந்து தசுன் 2.17 மீற்றர் உயரத்தைத் தாவி தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.


ஆண்களுக்கான 110 மீற்றர் சட்டவேலி ஓட்டப் போட்டியை 13.90 செக்கன்களில் நிறைவுசெய்த ரொஷான் ரனதுங்க, 1500 மீற்றர் ஓட்டப் போட்டியை 3 நிமிடங்கள், 55.12 செக்கன்களில் நிறைவு செய்த ருசிரு சத்துரங்க, பெண்களுக்கான 1500 மீற்றர் ஓட்டப் போட்டியை 4 நிமிடங்கள், 25.82 செக்கன்களில் நிறைவு செய்த நிமாலி லியனஆராச்சி ஆகிய மூவரும் வெள்ளிப் பதக்கங்களை வென்றெடுத்தனர்.
ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் கல்ஹார இந்துப்ப (46.81 செக்.), தட்டெறிதல் போட்டியில் மிலன்த சம்ப்பத் (49.35 மீற்றர்), பெண்களுக்கான தட்டெறிதல் போட்டியில் வினோதனி லக்மாலி (43.81 மீற்றர்), பெண்களுக்கான 100 மீற்றர் சட்டவேலி ஓட்டப் போட்டியில் லக்ஷிக்கா சுகந்தி (13.98 செக்.) பெண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் சயுரி மெண்டிஸ் (54.18 செக்.) ஆகிய ஐவரும் வெண்கலப் பதக்கங்களை வென்றெடுத்தனர்.
போட்டியின் இரண்டாம் நாள் வரை இலங்கை 8 தங்கப் பதக்கங்கள், 6 வெள்ளிப் பதக்கங்கள், 8 வெண்கலப் பதக்கங்கள் உட்பட 22 பதக்கங்களை வென்று பதக்கங்கள் நிலையில் இந்தியாவுக்கு அடுத்ததாக இரண்டாம் இடத்தில் இருக்கிறது.