இலங்கைக்கான இங்கிலாந்து உயர்ஸ்தானிகர் ஆண்ட்ரூ பேட்ரிக் மற்றும் கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு துணை அமைச்சர் சதுரங்க அபேசிங்க ஆகியோர், கொழும்பில் இயங்கி வரும் ஆடை களஞ்சியங்கள் மற்றும் தரக் கண்காணிப்பு மையங்களை நேரில் பார்வையிட்டனர். இவ்விஜயத்தின் போது, இங்கிலாந்து சந்தைக்கான ஏற்றுமதிப் பொருட்களின் தயாரிப்பு நடைமுறைகள் மற்றும் தரநிலைகள் குறித்த விரிவான ஆய்வையும் அவர்கள் மேற்கொண்டனர்.
2026 ஜனவரி முதலாம் திகதி முதல் அமலுக்கு வந்த வளரும் நாடுகளுக்கான வர்த்தகத் திட்டத்தின் கீழ், இந்த பார்வை விஜயம் ஏற்பாடு செய்யப்பட்டது. இதன் ஒரு பகுதியாக, கொழும்பில் செயல்பட்டு வரும் தர உறுதி நிலையமொன்றையும் பிரதிநிதிகள் பார்வையிட்டு, இங்கிலாந்து நிறுவனங்களுக்கு அனுப்பப்படும் ஆடைகளின் தரத்தைச் சரிபார்த்து சான்றளிக்கும் செயல்முறைகள் குறித்து அறிந்துகொண்டனர்.
புதிய வரியில்லா சலுகைகள் மூலம், இலங்கை உற்பத்தியாளர்கள் உலகளாவிய சந்தையிலிருந்து மூலப்பொருட்களை எளிதாகப் பெறுவதற்கும், இங்கிலாந்து சந்தைக்கு வரியில்லா அணுகலை தொடர்ந்து பேணுவதற்கும் வாய்ப்பு உருவாகியுள்ளதாக கொழும்பிலுள்ள இங்கிலாந்து உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கைகள், இலங்கையின் முன்னணி ஆடை ஏற்றுமதி நிலையை மேலும் உறுதிப்படுத்தும் எனவும் அது நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
மேலும், வளரும் நாடுகளின் வர்த்தகத் திட்டம் இலங்கை–இங்கிலாந்து நாடுகளுக்கிடையேயான வர்த்தக உறவை வலுப்படுத்தி, நீண்டகால பொருளாதார வளர்ச்சி மற்றும் புதிய வேலைவாய்ப்புகள் உருவாவதற்கான முக்கிய ஊக்கமாக அமையும் என்றும் உயர் ஸ்தானிகராலயம் குறிப்பிட்டுள்ளது.
The post இலங்கையின் ஆடைத் துறையை வலுப்படுத்தும் இங்கிலாந்து உயர்ஸ்தானிகரின் கொழும்பு விஜயம் appeared first on Vanakkam London.