0
நேற்று செப்டம்பர் 10ஆம் திகதி, பாராளுமன்றத்தில் ஜனாதிபதி உரிமைகள் (ரத்து) மசோதா நிறைவேற்றப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோர் தாம் தங்கியிருந்த உத்தியோகபூர்வ இல்லங்களை விட்டு இன்று வியாழக்கிழமை (11) வெளியேறினர்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, விஜேராம மாவத்தையில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து இன்று மதியம் வெளியேறினார்.
அவ்வாறே முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், கொழும்பு – ஹெக்டர் கொப்பேகடுவ மாவத்தையில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து வெளியேறினார்.
முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது விதவைகள் மற்றும் ஓய்வு பெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு முன்னர் வழங்கப்பட்ட பல்வேறு சலுகைகளை இரத்து செய்து, திருத்தங்கள் இல்லாமல் ஜனாதிபதி உரிமைகள் (ரத்து செய்தல்) சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றிய ஒரு நாளுக்குப் பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சட்டமூலம் நிறைவேற்றப்பட்ட உடனேயே சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன சட்டமாக கையெழுத்திட்டு, அது உடனடியாக அமலுக்கு வந்தது.
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து வெளியேறிய போது, அங்கு குழுமியிருந்தவர்கள் ஜயவேவா, ஜயவேவா என கோஷமெழுப்பினர்.
மேலும், அரசியல்வாதிகள் மற்றும் வெளிநாட்டு பிரதிநிதிகள் குழு ஒன்று அங்கு பிரசன்னமாகியிருந்தது.
ஜனாதிபதிகள் உரிமை நீக்கச் சட்டத்தின் விதிகளின் கீழ், முன்னாள் ஜனாதிபதிகளுக்கு ஒதுக்கப்பட்ட குடியிருப்புகள் அரசாங்கத்திடம் திரும்ப ஒப்படைக்கப்பட வேண்டும்.