0
தற்போதைய சூழ்நிலையில் கட்டமைப்பு ரீதியான மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்புக்கள் மேற்கொள்ளப்படவேண்டும் என்ற வலுவான ஊக்குவிப்புடனேயே இலங்கைக்கு சர்வதேச உதவிகள் வழங்கப்படவேண்டும். அத்தோடு சர்வதேசப் பங்காளிகளுடன் இணைந்து இலங்கையில் நிலவும் மோதல்களை முடிவுக்குக்கொண்டுவருவதற்கும், நீதியை நிலைநாட்டுவதற்கும், அரசியலமைப்பு மற்றும் கட்டமைப்பு மறுசீரமைப்புக்களுக்கு ஆதரவளிப்பதற்குமான செயன்முறையொன்றை ஆரம்பியுங்கள் என பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்ராமரிடம் பிரித்தானியத் தமிழர் பேரவை வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து பிரித்தானியத் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் வி.ரவிக்குமாரினால் பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்ராமருக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கும் கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:
இலங்கையில் ஏற்பட்ட “தித்வா” சூறாவளியினால் பல உயிர்கள் பறிபோயிருப்பதுடன் உட்கட்டமைப்பு வசதிகள், விவசாயம், வாழ்வாதாரம், சூழலியல் மற்றும் நீர் வளங்கள் என மிகப்பாரியளவு சேதங்கள் ஏற்பட்டிருக்கின்றன. ஏற்கனவே நாட்டை மீளக்கட்டியெழுப்புவதில் நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்திருந்த அரசாங்கத்துக்கு, சூறாவளி அனர்த்தத்தின் பின்னரான தற்போதைய சூழ்நிலை மேலும் சவால் மிகுந்ததாக மாறியிருக்கின்றது.
இவ்வேளையில் சர்வதேச சமூகம் இலங்கைக்கு வழங்கிய உதவிகளுக்கு நன்றி கூறும் அதேவேளை, நிலையான மீட்சியை அடைவதற்கு உள்ளக ஆட்சியியல் கட்டமைப்பு தொடர்பான இறுக்கமான மீள்மதிப்பீட்டை மேற்கொள்வது அவசியமாகும். குறிப்பாக எவ்வித இன, மத, மொழி பேதங்களுமின்றி நாட்டுமக்கள் மத்தியில் அதிகாரமும், பொறுப்பும் நியாயமான முறையில் பகிரப்படுவதன் ஊடாக மாத்திரமே நாட்டை வெற்றிகரமாக மீளக்கட்டியெழுப்பமுடியும்.
ஒரு காலத்தில் ஆசியப்பிராந்திய அபிவிருத்தியின் முன்மாதிரியாக நோக்கப்பட்ட இலங்கை, இன்று தீவிர பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருப்பதுடன் “தித்வா” சூறாவளி காரணமாக அந்நெருக்கடி மேலும் தீவிரமடைந்துள்ளது.
நாட்டை மீளக்கட்டியெழுப்புவதற்கு சுமார் 7 பில்லியன் டொலர் நிதி தேவை என மதிப்பிடப்பட்டிருக்கும் அதேவேளை, மொத்த வெளியகக் கடன்களின் பெறுமதி 57 பில்லியன் டொலராகவும், 2025 இல் வர்த்தகப்பற்றாக்குறை 7 பில்லியன் டொலராகவும் பதிவாகியிருக்கின்றது. எதிர்வரும் 2027 ஆம் ஆண்டு மார்ச் மாதத்துடன் சர்வதேச நாணய நிதியத்தின் அனுசரணை முடிவுக்குவரும் நிலையில், நாடு பாரிய பொருளாதாரப் பேரழிவுக்கு முகங்கொடுக்கக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
எனவே கட்டமைப்பு மற்றும் நிறுவன ரீதியான மறுசீரமைப்புக்களும், அரசியலமைப்பு மறுசீரமைப்பும் மேற்கொள்ளப்படவேண்டும் என்ற வலுவான ஊக்குவிப்புடன் சர்வதேச உதவிகள் வழங்கப்படவேண்டும். அர்த்தமுள்ள நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கு தமிழ் மக்களின் அபிலாஷைகள் கருத்திற்கொள்ளப்படவும், ஒடுக்குமுறை கலாசாரம் முடிவுக்குக்கொண்டுவரப்படவும் வேண்டும்.
அத்தகைய மறுசீரமைப்புக்கள் மேற்கொள்ளப்படாவிடின், இலங்கை வன்முறைகள், இனவழிப்பு மற்றும் ஸ்திரமற்ற தன்மை என்பவற்றுக்குள் மீண்டும் சிக்கக்கூடிய அச்சுறுத்தல் நிலைக்குள்ளேயே இருக்கும். எனவே சர்வதேசப் பங்காளிகளுடன் இணைந்து இலங்கையில் நிலவும் மோதல்களை முடிவுக்குக்கொண்டுவருவதற்கும், நீதியை நிலைநாட்டுவதற்கும், அரசியலமைப்பு மற்றும் கட்டமைப்பு மறுசீரமைப்புக்களுக்கு ஆதரவளிப்பதற்குமான செயன்முறையொன்றை விரைந்து ஆரம்பிக்குமாறு கோருகின்றோம் என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.