இலங்கையில் இன்று முதல் எதிர்வரும் ஓரிரு தினங்களுக்கு மின்சார தடையை ஏற்படுத்த இலங்கை மின்சார சபை தீர்மானித்துள்ளது.
இதன்படி, இன்று (பிப்ரவரி 10) மற்றும் நாளை (பிப்ரவரி 11) ஆகிய இரு தினங்களில் ஒன்றரை மணிநேர சுழற்சி முறையில் மின்சாரத்தை தடை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் நேற்றைய தினம் (பிப்ரவரி 09) ஏற்பட்ட முழு மின் தடையை அடுத்தே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
மின்சார தடையுடனான மின் விநியோக கட்டமைப்பில் ஏற்பட்ட சமநிலையற்ற நிலைமையை முகாமைத்துவம் செய்யும் நோக்கில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நாடாளாவிய ரீதியில் நேற்றைய தினம் ஏற்பட்ட மின்சார தடையுடன் நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் மூன்று மின் உற்பத்தி பிறப்பாக்கிகள் செயலிழந்துள்ளன.
இந்த மின்பிறப்பாக்கிகளை மீண்டும் தேசிய மின்சார கட்டமைப்புடன் இணைப்பதற்கு சில தினங்கள் தேவை என அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த தீர்மானத்தை இலங்கை மின்சார சபை எட்டியுள்ளது.
இலங்கை மின்சார சபை எட்டிய தீர்மானத்திற்கு, இலங்கை பொது பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
இதன்படி, இன்று பிற்பகல் 3.30 முதல் இரவு 9.30 வரையான கால எல்லைக்குள் ஒன்றரை மணிநேர மின் தடையை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நான்கு கட்டங்களின் கீழ் இந்த மின்சார தடை ஏற்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் மின்சார தடை
இலங்கை முழுவதும் நேற்றைய தினம் திடீரென மின்சார தடை ஏற்பட்டது.
நேற்று (பிப்ரவரி 09) முற்பகல் 11.30 அளவில் ஏற்பட்ட இந்த திடீர் மின் விநியோக தடையானது, மாலை 4.30 அளவில் வழமைக்கு கொண்டு வரப்பட்டது.
பாணந்துறை உப மின் உற்பத்தி நிலைய கட்டமைப்பில் குரங்கு பாய்ந்தமையே இந்த மின்சார தடைக்கான காரணம் என மின்சக்தி அமைச்சர் குமார ஜயகொடி ஊடகங்களுக்கு நேற்றைய தினம் தெரிவித்திருந்தார்.
”பாணந்துறை பகுதியிலுள்ள மின் பிறப்பாக்கி ஒன்றில் குரங்கொன்று மோதியுள்ளதை அடுத்து, ஏற்பட்ட கோளாறே இதற்கான காரணமாகியுள்ளது. அதனாலேயே நாடு முழுவதும் மின்சாரம் தடைப்பட்டுள்ளது.” என மின்சக்தி அமைச்சர் குறிப்பிட்டார்.
குரங்கு பாய்ந்தமையே மின்சாரம் தடைப்பட காரணம் என மின்சக்தி அமைச்சர் கூறிய நிலையில், பாணந்துறை மின் உற்பத்தி நிலையத்தின் பாதுகாப்பு உத்தியோகத்தர் அதனை மறுத்துள்ளார்.
மின் பிறப்பாக்கி கட்டமைப்பில் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்ட அதிகாரி ஒருவரே இவ்வாறு இதனை நிராகரித்துள்ளார்.
”வழமையாக குரங்குகள் பாயும். குரங்குகள் பாயும் போது செயலிழந்து மீண்டும் வழமைக்கு திரும்பி விடும். ஆனால் குரங்கு பாயவில்லை. அப்படியென்றால் குரங்கின் உடல் இருக்க வேண்டும் அல்லவா? குரங்கை காணவில்லை. கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் மூன்று குரங்குகள் பாய்ந்தன. உடனே இறந்து விட்டன. அதைவிடுத்து, இந்த இடத்தில் பாயவில்லை. குரங்கு பாயும் நேரங்கள் இருக்கின்றன. எனினும், இன்று பாயவில்லை.” என பாணந்துறை மின் உற்பத்தி நிலையத்தின் பாதுகாப்பு அதிகாரி தெரிவித்துள்ளார்
கடந்த அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாடே மின்சார தடைக்கு காரணம்
தேசிய மின்சார கட்டமைப்பை சமநிலையாக நடத்திச் செல்வது தொடர்பில் தெளிவின்றி கடந்த கால அரசாங்கங்கள் செயற்பட்டமையே இதற்கான காரணம் என மின்சக்தி அமைச்சர் குமார ஜயகொடி தெரிவிக்கின்றார்.
அறிக்கையொன்றின் ஊடாக அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
”பாணந்துறை உப மின் உற்பத்தி நிலையத்தில் திடீரென ஏற்பட்ட சமநிலையற்ற நிலைமையே நாடு முழுவதும் மின்சாரம் தடைப்பட காரணம். தேசிய மின்சார கட்டமைப்பை சமநிலையாக நடத்தச்செல்வது தொடர்பில் தெளிவின்றி கடந்த கால அரசாங்கங்கள் செயற்பட்டமையே இதற்கான காரணம். தொழில்நுட்பம் தொடர்பில் தெளிவற்ற வழிகாட்டல் இந்த நிலைமை ஏற்பட காரணம் என்பது முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. எவ்வாறாயினும், இந்த விடயம் தொடர்பில் மிக ஆழமாக ஆராய்ந்து மீண்டும் இவ்வாறான நிலைமை ஏற்படாத வகையில் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவுள்ளோம். மின்சார தடையினால் பாதிக்கப்பட்ட மக்களிடம் கவலையை தெரிவித்துக்கொள்கின்றோம்”, என மின்சக்தி அமைச்சர் குறிப்பிடுகின்றார்.
இந்த மின்சார தடை தொடர்பில் இலங்கை மின்சார சபை தொடர்ந்தும் விசாரணைகளை நடத்தி வருவதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இலங்கையின் மின்சார தடை சர்ச்சை
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் ஆட்சி காலத்தில் இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக பல மாத காலம் தொடர் மின்சார தடையை ஏற்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது.
இதன்படி, 2022ம் ஆண்டு காலப் பகுதியில் நாளொன்றிற்கு சுமார் 12 மணிநேரத்திற்கு அதிக மின்சார தடை அந்த காலப் பகுதியில் ஏற்படுத்தப்பட்டமையினால், நாடு முழுவதும் வாழும் மக்கள் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கியிருந்தனர்.
இந்த நிலையில், ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றதை அடுத்து, மின்சார தடை படிப்படியாக குறைக்கப்பட்டு, மீண்டும் மின்சார விநியோகம் முழுமையாக வழமைக்கு கொண்டு வரப்பட்டது.
எவ்வாறாயினும், 2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் 09ம் தேதி கொத்மலை முதல் பியகம வரையான மின்சார விநியோக கட்டமைப்பில் மின்னல் தாக்கியதை அடுத்து, நாடு முழுவதும் மின்சார தடை ஏற்பட்டது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.