இலங்கையின் பல்வேறு பகுதிகளில் காற்றாலை மின் உற்பத்தி கோபுரங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ள போதிலும், மன்னார் தீவுப் பகுதியில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள மற்றும் ஸ்தாபிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள காற்றாலை மின் உற்பத்தி கோபுரங்கள் குறித்து தொடர்ந்து சர்ச்சை நிலவி வருகின்றது.
இலங்கை மின்சார சபைக்கு சொந்தமான 30 காற்றாலை மின் உற்பத்தி கோபுரங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதுடன், மேலும் சில காற்றாலை கோபுரங்கள் தற்போது ஸ்தாபிக்கப்பட்டு வருகின்றன.
அத்துடன், இந்தியாவின் அதானி நிறுவனம் மன்னார் பகுதியில் காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தை செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்த சூழ்நிலையில், அந்த திட்டத்திலிருந்து தாம் வெளியேறுவதாக அண்மையில் அறிவித்திருந்தது.
இந்த நிலையில், இலங்கை மின்சார சபை மாத்திரமன்றி, இலங்கையின் மற்றும் சில தனியார் நிறுவனங்களும் இந்த காற்றாலை திட்டத்தை முன்னெடுப்பதற்கான முயற்சிகளை முன்னெடுத்து வருவதாக பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.
மன்னார் காற்றாலை மின் உற்பத்தி திட்டம் முன்னெடுக்கப்படுவதற்கு அந்தப் பிரதேச மக்கள் தொடர்ச்சியாக எதிர்ப்புக்களை வெளியிட்டு வருகின்றனர்.
மன்னார் காற்றாலை திட்டத்தின் தற்போதைய நிலைமை குறித்து பிபிசி தமிழ், அந்தப் பிரதேசத்திற்கு சென்று கள ஆய்வு மேற்கொண்டது.
மன்னார் தீவுப் பகுதியின் முக்கியத்துவம்
இலங்கையின் புவியியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசமாக மன்னார் தீவு பகுதி அமையப் பெற்றுள்ளது.
இலங்கையின் நிலப் பரப்பிலிருந்து மன்னார் பிரிந்து காணப்படுகின்ற நிலையில், மன்னாரையும், இலங்கை நிலப் பரப்பையும் ஒன்றிணைக்கும் வகையில் பாலமொன்று அமைக்கப்பட்டு, இலங்கை பிரதான நிலப் பரப்புடன் மன்னார் தீவுப் பகுதி இணைக்கப்பட்டுள்ளது.
மன்னார் 30 கிலோமீட்டர் நிளத்தையும், 4.5 கிலோமீட்டர் அகலத்தையும் கொண்ட, சுமார் 130 சதுர கிலோமீட்டர் அளவைக் கொண்டமைந்த ஒரு பிரதேசமாகும். மன்னார் மாவட்டத்தின் அதிகபட்ச உயரமாக 21 அடி காணப்படுகின்றது.
மன்னார் மாவட்டத்தின் 30 வீதமான பகுதிகள் கடல் மட்டத்திலிருந்து குறைவான மட்டத்திலேயே காணப்படுவதாக சூழலியலாளர்கள் குறிப்பிடுகின்றனர். அதைவிடுத்து, மன்னாரின் சில பகுதிகள் மாத்திரமே கடல் மட்டத்திலிருந்து உயரமாக காணப்படுகின்ற நிலையில், அந்த பகுதிகளில் அதிகூடிய உயரமானது 7 மீட்டர் எனக் கூறப்படுகின்றது.
அதேபோன்று, மன்னார் நிலப் பரப்பில் அதிகளவிலான கனிம வளங்கள் காணப்படுகின்றமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இல்மனைட் கனிம வளம் மன்னார் நிலப் பரப்பில் அதிகளவில் காணப்படுகின்றன. இல்மனைட்டை தவிர்த்து. மேலும் பல்வேறு வகையான கனிம வளங்கள் காணப்படுவதாக ஆய்வுகளின் ஊடாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
மன்னார் நிலப் பரப்பில் சுமார் 6000 முதல் 8000 ஆண்டுகளுக்கு முன்னரான காலத்திலிருந்து இந்த கனிம வளங்கள் உருவாகியுள்ளதாக மன்னார் கனிம வளங்கள் தொடர்பில் ஆய்வுகளை நடத்திய ஆவுஸ்திரேலிய நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், இலங்கைக்கு வருடாந்தம் லட்சக்கணக்கான வெளிநாட்டு சுற்றுலாப் பறவைகள் வருகைத் தருகின்ற சூழ்நிலையில், அந்த பறவைகளின் பிரதான நுழைவாயிலாக மன்னார் பகுதி காணப்படுகின்றது.
இவ்வாறு இலங்கைக்கு வருகைத் தருகின்ற வெளிநாட்டு சுற்றுலாப் பறவைகள், இலங்கையில் முட்டை இட்டு குஞ்சு பொறிக்கும் செயற்பாடுகளை முன்னெடுத்து, மீண்டும் குஞ்சுகளை இலங்கையிலிருந்து தமது நாட்டிற்கு அழைத்து செல்வதாக சூழலியலாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
கடலால் சூழப்பட்ட இயற்கை வளங்கள் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தலங்களை மன்னார் மாவட்டம் கொண்டுள்ளது.
மன்னார் காற்றாலை மின்சார திட்டம்
மன்னாரில் வலுசக்தி அமைச்சின் கீழ் 30 காற்றாலை மின் உற்பத்தி கோபுரங்கள் 2020ம் ஆண்டு ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஆசிய அபிவிருத்தி வங்கியின் 200 மில்லியன் அமெரிக்க டாலர் கடன் நிதித் திட்டத்தின் கீழ் இந்த திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்த திட்டத்தின் ஊடாக ஆண்டொன்றிற்கு 400 மெகா வோட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
குறித்த திட்டத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில் மேலும் சில காற்றாலை மின் உற்பத்தி கோபுரங்களை ஸ்தாபிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பிரதேச மக்கள் குறிப்பிடுகின்றனர்.
வலுசக்தி அமைச்சுக்கு மேலதிகமாக அதானி நிறுவனமும் மன்னார் பகுதியில் காற்றாலை மின் உற்பத்தியை மேற்கொள்ள முயற்சித்த போதிலும், தற்போது அந்த முயற்சி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், காற்றாலை மின்சார உற்பத்தி கோபுரங்களை நிறுவுவதற்கான நடவடிக்கைகளை மேலும் சில நிறுவனங்கள் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக பிரதேச மக்கள் குறிப்பிடுகின்றனர்.
மன்னார் காற்றாலை திட்டத்தினால் ஏற்படும் பாதிப்புக்கள் – மக்கள் குற்றஞ்சுமத்துவது என்ன?
மன்னார் காற்றாலை மின்சார உற்பத்தி கோபுரங்களினால் தமது வாழ்வாதாரம் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக மன்னார் பகுதி மக்கள் குறிப்பிடுகின்றனர்.
இந்தப் பகுதியின் இயற்கை வளங்கள் அழித்துக்கப்படுவதாகக் கூறுகிறார் தாழ்வுபாடு மீனவ கிராமிய அமைப்பின் செயலாளர் ரெனி வாஸ்
மேலும் அவர், ”ஒரு காற்றாலை அமைப்பதற்கு 3000 பக்கெட் மண்ணை அகழ்கின்றனர். இவ்வாறு தோண்டி எடுக்கின்ற மண்ணை வெளி இடங்களுக்கு கொண்டு போகின்றார்கள். இரண்டாவது குடியிருப்பு பாதிக்கப்படுகின்றது. தாழ்வுபாடு கிராமத்தில் 30 காற்றாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. புதிதாக மூன்று காற்றாடிகள் அமைப்பதாக சொல்லியிருக்கின்றார்கள்”.
“இந்த மூன்று காற்றாடிகளும் குடியிருப்பிற்கு அண்மித்த பகுதிகளில் இருக்கின்றது. அதனால் எங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படுகின்றது. காற்றாடி இங்கிருந்து அமைக்கப்பட்டுள்ளதுடன், இங்கிருந்து வயர் கொண்டு போவதாக சொல்லியிருக்கின்றார்கள். இந்த வயர் புதைப்பதற்கு நிலத்தில் 25 அடி தோண்டி அந்த வயரை புதைத்து கொங்கீரிட், மண் போன்றவற்றை போட்டு தான் செய்கின்றார்கள்” என்றார்.
“கடல் தொழிலையே தங்களுடைய வாழ்வாதரமாகக் கொண்டிருப்பதாகக் கூறும் ரெனி வாஸ் இந்த திட்டத்தால் பாதிப்புகள் இருப்பதாகவும் தெரிவிக்கிறார். அது குறித்து பேசியவர், “எங்களுடைய கடல் மட்டத்தை விடவும், நில மட்டம் தாழ்வாக உள்ளது. கரையோரத்தில் கொங்கீரிட் போடுவதனால் மழை நீர் வெளியில் போகாது. இந்த காற்றாலை அமைக்கப்பட்டதன் பின்னர் எங்களுடைய மக்கள் பாதிக்கப்படுகின்ற பெரிய பிரச்னை.”
“ஆனால், இந்த காற்றாலை அமைக்கப்பட்டதன் பிறகு, முன்னர் இருந்த மீன்களின் தொகையும், இந்த காற்றாலை அமைக்கப்பட்டதன் பின்னர் இருக்கின்ற மீன்களின் தொகையும் மிகக் குறைவு. காடுகள் அழிக்கப்படுகின்றன. ஆயிரக்கணக்கான பனைகளை அழித்துக்கொண்டிருக்கின்றார்கள். இயற்கை வளங்களை அழித்துக்கொண்டிருக்கின்றார்கள்” என்றார்.
மூன்று பிரதான பாதிப்புகள்
மன்னார் காற்றாலை மின் உற்பத்தி கோபுரங்களினால் ஏற்படும் பாதிப்புக்கள் குறித்து தாழ்வுபாடு தேவாலயத்தின் அருட்தந்தை ரெஜினோல்ட் பிபிசி தமிழுக்கு தெளிவூட்டினார்.
”மூன்று பாதிப்புக்களை நான் சொல்லலாம் என்று நினைக்கின்றேன். முதலாவது இந்த காற்றாலைகள் பொருத்தப்பட்ட பிறகு, அவர்கள் சந்தைக்கு விடுகின்ற மீன்களின் தொகை குறைந்திருக்கின்றது என்று அவர்கள் சொல்கின்றார்கள். இது காலப் போக்கில் மிக குறைந்து தாங்கள் பிரதமானமாக கொண்டிருக்கின்ற கடல் தொழிலை கைவிட வேண்டி வரும் என்ற ஒரு அபாயம் இருக்கின்ற என்ற மாதிரி அவர்கள் பயப்படுகின்றார்கள்.
இரண்டாவது பிரச்னை. இந்த காற்றாலை கட்டப்பட்ட கட்டுமான பணிகள் காரணமாக வழக்கமாக மழை காலத்தில் தேங்குகின்ற தண்ணீர் சொற்ப காலத்தில் வடிந்தோடிவிடும். ஆனால் காற்றாலைகள் அமைக்கப்பட்டதன் பிறகு இந்த ஊருக்குள் தண்ணீர் தேங்கி நிற்கின்ற காலம் நீண்டு போய், மழை காலத்திற்கு பிறகு இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு தண்ணீர் இந்த கிராமத்தின் மூன்றில் இரண்டு பகுதிகளில் தேங்கியிருக்கின்றது. இதனால் சுகாதார சீர்கேடுகள் ஏற்படுவதற்கான அபாயம் காணப்படுகின்றது.
மூன்றாவது, இந்த நாட்டினுடைய அபிவிருத்தி என்பதை அவர்கள் ஏற்றுக்கொண்டாலும், காற்றாலைகளில் எடுக்கப்படுகின்ற பெருமளவிலான மண் அகழப்பட்டு வருகின்றது. இந்த மண் காற்றாலைக்கு பக்கத்தில் சேர்த்து வைத்திருக்கும் நிலையை மக்களோ நானோ காணவில்லை. இந்த மண் வெளியில் எடுத்து செல்லப்படுகின்றது. ஆகவே, காற்றாலை தான் இந்த திட்டத்திற்கு அடிப்படையா? கனிம மண் என்பது மன்னார் தீவுக்குள் இருப்பது என்பது உலகறிந்த விடயம்.
கனிம மண்ணை அகழ்வதற்காக காற்றாலை திட்டம் பயன்படுத்தப்படுகின்றதா என்ற அச்சம் எழுகின்றது. இது வரை அகழப்பட்ட மண்ணை காணவில்லை. இந்த மண் அகழ்வு தனிப்பட்டவர்களுடைய தேவைக்காக பயன்படுத்தப்படுகின்றதா? இது கனிம மண் அகழ்வுக்கான திட்டமாக இருந்தால், வேறு வேறு திட்டங்களை கொண்டு வந்து இதற்கும் அதிகமான மண்ணை அகழ்ந்து சென்றால், இந்த கிராமத்திற்குள் கடல் நீர் புகும் அபாயம் எழுந்துள்ளது” என அருட்தந்தை ரெஜினோல்ட் குறிப்பிடுகின்றார்.
அதானி நிறுவனம் கனிம வளங்களைப் பெற்றுக் கொள்கிறதா?
காற்றாலை திட்டத்திலிருந்து வெளியேறிய அதானி நிறுவனம் கனிம வளங்களை பெற்றுக்கொள்வதற்காக வேறு நிறுவனங்களின் உதவியுடன் இதனை தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றதா என்ற சந்தேகம் தமக்கு நிலவி வருவதாக மன்னார் மாவட்டத்தின் இளைஞர் கழகங்களின் சம்மேளனத்தின் தலைவர் சதுர்ஷன் தெரிவிக்கின்றார்.
இது தொடர்பில் பிபிசி தமிழிடம் பேசியவர், ”இந்த பெரிய இலங்கையில் வேறு எங்கும் இல்லாமல் வட மாகாணத்திற்குள் யாழ்ப்பாணத்திற்குள்ளும், மன்னாரிலும் காற்றாடிகளை போடுவது ஒரு சந்தேகம் எழுகின்றது. இந்த காற்றாடி திட்டத்தை காட்டி, கனிம மண்ணை அகழ்கின்றார்களா என்ற சந்தேகம் எழுகின்றது. இந்த காற்றாடி திட்டத்திற்கான டென்டரை அதானி நிறுவத்திற்கு வழங்கியிருந்தார்கள். அதானி நிறுவனம் வெளியேறியுள்ளது.”
“எங்களுக்கு சந்தேகம் எழுகின்றது. இவர்கள் தான் வந்து வேறு நிறுவனங்களின் ஊடாக இதனை செய்கின்றார்களா என்ற சந்தேகம் எழுகின்றது. எதிர்ப்பு இருப்பதனால் எதிர்ப்பை சமாளிப்பதற்காக வேறு நிறுவனங்களின் ஊடாக அதானி நிறுவனம் தான் இதனை செய்கின்றதா என்ற சந்தேகம் எழுகின்றது.’ என்றார்.
கனிம மண் அகழ்விற்கு அரசாங்கம் அனுமதி வழங்காது என உறுதி வழங்கியுள்ள போதிலும், திரை மறைவில் கனிம மண் அகழ்வு இடம்பெற்று வருவதாக மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை மார்கஸ் பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.
”கனிம மண் அகழ்வை எந்த விதத்திலும் அனுமதிக்க மாட்டோம் என்று உத்தரவாதமொன்றை அரசாங்கம் தந்திருக்கின்றது. ஆனால், திரை மறைவில் அரச அனுமதியோடு சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. தனியார்களிடம் காணிகள் வாங்கி, அந்த காணிக்குள் தாங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற சட்ட பாதுகாப்பை வைத்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.” என மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை மார்கஸ் குறிப்பிட்டார்.
மன்னார் மூழ்கும் அபாயத்தில் உள்ளதா?
மன்னார் மாவட்டத்தில் கனிம வளங்கள் அகழப்பட்டு வருவதாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறை தலைவர் கலாநிதி நாகமுத்து பிரதீபராஜா பிபிசி தமிழுக்கு தெரிவிக்கின்றார்.
”மன்னார் மாவட்டத்திற்கு ஏற்பட்டுள்ள மிகப் பெரிய அச்சுறுத்தலாக இந்த இல்மனைட் அகழ்வு காணப்படுகின்றது. மன்னார் மாவட்டத்தின் அதிஷ்டம் அல்லது துரதிஷ்டம் என்பது மன்னார் மாவட்டத்தில் மிகக் குறைந்த செலவோடு மிகச் செறிவான இல்மனைட்டை பெறக்கூடிய நிலைமைகள் காணப்படுகின்றது. இலங்கையின் மற்றைய பகுதிகளிலும், உதாரணமாக மாணிக்க கங்கை, கும்புக்கன் ஓயா, புல்மோட்டை பகுதிகளிலும் இந்த இல்மனைட் காணப்பட்டாலும் கூட, அந்த பிரதேசங்களில் இந்த இல்மனைட்டை எடுப்பதற்கான செலவுடன் ஒப்பிடும் போது மன்னார் மாவட்டத்தினுடைய இல்மனைட் அகழ்வு என்பது மிகவும் செலவு குறைந்தது.”
“அத்தோடு, அவற்றில் சில கனிமங்கள் காணப்படுகின்றன. எபடைட், டேடைல், சில்கோன், இல்மனைட் போன்ற கனிமங்கள் காணப்படுகின்றன. ஒரு தொன் மணல் அகழப்பட்டால், அந்த மணலில் குறிப்பிட்ட அளவு மணல் மட்டுமே மீண்டும் பயன்படுத்த முடியாத மணலாக காணப்படும். பெரியளவானவை கனிம மணலாக காணப்படுகின்றன. மன்னார் மாவட்டம் கடல் பரப்பிலிருந்து குறைந்த மட்டத்திலேயே காணப்படுகின்றது.”
“இந்த கனிம மணல் அகழ்வின் ஊடாக மேலும் பரப்பளவு குறைக்கப்பட்டு, குறிப்பிட்ட காலத்தில் மன்னார் கடலுக்குள் மூழ்கின்ற நிலைமை காணப்படுகின்றது. இல்மனைட் அகழ்வு ஆரம்பிக்கப்பட்டு மூன்று நான்கு வருடங்களிலேயே மன்னார் மாவட்டம் கடல் நீருக்குள் மூழ்கின்ற அபாயம் காணப்படுகின்றது.” என யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறை தலைவர் கலாநிதி நாகமுத்து பிரதீபராஜா பிபிசி தமிழுக்கு குறிப்பிடுகின்றார்.
மன்னார் மாவட்டத்தில் அகழப்படுகின்ற சிறியளவிலான மணல் அகழ்வு கூட, மன்னார் மாவட்டத்தின் நிலைமையை பெரிதும் பாதிக்கும் என யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறை தலைவர் கலாநிதி நாகமுத்து பிரதீபராஜா கூறுகின்றார்.
அதானி நிறுவனம், இலங்கை அரசின் பதில் என்ன?
மன்னார் காற்றாலை திட்டத்திலிருந்து அதானி நிறுவனம் பின்வாங்கியதாக அறிவித்துள்ள போதிலும், மன்னாரில் அதானி நிறுவனம் மறைமுகமாக கனிம மணல் அகழ்வில் ஈடுபட்டு வருவதாக எழுப்பப்படும் குற்றச்சாட்டு குறித்து, பிபிசி தமிழ், அதானி நிறுவனத்திடம் வினவியது.
இதற்கு அதானி நிறுவனம் மின்னஞ்சல் ஊடாக பதில் வழங்கியிருந்தது.
மன்னார் பகுதியில் அதானி நிறுவனம் காற்றாலை திட்டம் மற்றும் சுரங்கத் திட்டங்களில் ஈடுபட்டு வருவதாக உள்ளுர் ஊடகங்கள் வெளியிட்டு வரும் செய்திகள் குறித்து தாம் கவலையடைவதாக அதானி நிறுவனம் அனுப்பியுள்ள மின்னஞ்சலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்திலிருந்து தமது நிறுவனம் முழுமையாக விலகுவது தொடர்பில் இந்த ஆண்டு பெப்ரவரி மாதம் இலங்கை முதலீட்டு சபைக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டதாகவும் அந்த நிறுவனம் குறிப்பிடுகின்றது.
தமது நிறுவனம் தொடர்பில் வெளியாகியுள்ள இவ்வாறான செய்திகள் தவறானவை என அந்த நிறுவனம் கூறுகின்றது. அத்துடன், தமது நிறுவனம் சார்பில் ஒருபோதும் சுரங்கத் திட்டம் அல்லது முன்மொழிவு எதுவும் முன்வைக்கப்படவில்லை என அந்த நிறுவனம் பிபிசி தமிழுக்கு அனுப்பியுள்ள மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை அரசாங்கம் என்ன சொல்கின்றது?
மன்னார் மாவட்டத்தின் மேற்கொள்ளப்படுகின்ற காற்றாலை மின் உற்பத்தி திட்டம் மற்றும் கனிம மணல் அகழ்வு போன்ற குற்றச்சாட்டுக்கள் குறித்து, பிபிசி தமிழ் அரசாங்கத்தின் பதிலை பெற்றுக்கொள்ள பல்வேறு வகையிலும் முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் அதற்கு பொறுப்பான அமைச்சர்கள் பதிலளிக்கவில்லை.
– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு