• Thu. Nov 27th, 2025

24×7 Live News

Apdin News

இலங்கையில் சீரற்ற காலநிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 47 ஆக உயர்வு!

Byadmin

Nov 27, 2025


இலங்கையில் கடந்த இரண்டு நாட்களாக நிலவும் சீரற்ற காலநிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இந்த அனர்த்த சூழ்நிலையில் 21 பேர் காணாமல் போயுள்ளனர் எனவும் 1,729 குடும்பங்களைச் சேர்ந்த 5,893 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

மண்சரிவு

பதுளை மாவட்டத்தில் இடம்பெற்ற மண்சரிவு காரணமாக இதுவரை 23 பேர் உயிரிழந்துள்ளதாகவும், ஐந்து பேர் இன்னும் காணாமல் போயுள்ளதாகவும் பதுளை மாவட்ட செயலாளர் பிரபாத் அபேவர்தன உறுதிப்படுத்தியுள்ளார்.

கண்டி, கங்கொடவில் ஏற்பட்ட மண்சரிவில் கிட்டத்தட்ட 20 பேர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மண்சரிவு அச்சுறுத்தல் காரணமாக பாதுகாப்புக்காக ஒரே வீட்டில் பலர் கூடியிருந்ததாகவும், பின்னர் அந்த வீடு மண்சரிவால் பாதிக்கப்பட்டதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) சம்பத் கொட்டுவேகொட தெரிவித்தார்.

காணாமல் போனவர்களில் மூன்று பேரின் உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன.

மேலும், நுவரெலியா மாவட்டத்தில் மண்சரிவுகள் காரணமாக 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா மாவட்டத்தில் உள்ள 10 பிரதேச செயலகப் பிரிவுகளும் வானிலையால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்டச் செயலாளர் துஷாரி தென்னகோன் தெரிவித்தார்.

பாடசாலைகள், முன் பள்ளிகளுக்கு விடுமுறை

சீரற்ற காலநிலை காரணமாக, கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து முஸ்லிம் பாடசாலைகளும் மூடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

அத்துடன், கிழக்கு மாகாண முன்பள்ளி பாடசாலைகளுக்கு நேற்றைய தினம் தொடக்கம் 30ஆம் திகதி வரை விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண முன்பள்ளி பணியக முகாமையாளர் ஜெயவதனன் தெரிவித்தார்.

குறிப்பாக, அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் தொடர்ந்த கனமழை மற்றும் வெள்ள நிலை காரணமாக பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இதன் மூலம், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பாதுகாப்பாக இருக்குமாறு, சீரற்ற காலநிலை தொடர்பான அறிவிப்புகளை கவனமாக பின்பற்றுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இலங்கை முழுவதும் உள்ள பாலர் பாடசாலைகள் உட்பட அனைத்து முன்பள்ளிப் பருவ அபிவிருத்தி நிலையங்களுக்கும் நாளை (28) முதல் விடுமுறை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

நிலவும் பாதகமான வானிலை மற்றும் பேரிடர் சூழ்நிலைகள் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, வானிலை இயல்பு நிலைக்குத் திரும்பும் வரை பாலர் பாடசாலைகள் உட்பட அனைத்து முன்பள்ளிப் பருவ அபிவிருத்தி நிலையங்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

அரச ஊழியர்களுக்கு விடுமுறை

இதேவேளை, இலங்கையில் ஏற்பட்டுள்ள மோசமான வானிலை காரணமாக அரச ஊழியர்களுக்கு நாளை வெள்ளிக்கிழமை (28) அரசால் விசேட விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு தென் மேற்கு மற்றும் தென்கிழக்கில் உருவாகிய காற்றுச் சுழற்சிகள் கிழக்கு மற்றும் மேற்கு நோக்கி நகர்ந்து இணைந்தது, இதனால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்குட்பட்ட பல பகுதிகளில் கனமழை ஏற்பட்டுள்ளது.

எதிர்வரும் 29ஆம் திகதி வரை, வடக்கு, கிழக்கு, மேற்கு, தெற்கு, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல பகுதிகளில் மிகக் கனமழை எதிர்பார்க்கப்படுகிறது.

By admin