பட மூலாதாரம், facebook
தலைமறைவாகி வாழ்ந்து வந்த போலீஸ் மாஅதிபர் தேசபந்து தென்னக்கோன் நீதிமன்றத்தில் சரணடைந்த நிலையில், அவரை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 03ம் தேதி வரை விளக்கமறியலில் வைக்க மாத்தறை நீதவான் நீதிமன்றம் இன்று (20) உத்தரவு பிறப்பித்துள்ளது.
உடனடியாக கைது செய்யுமாறு நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு, சுமார் 20 நாட்கள் தலைமறைவாகியிருந்த இலங்கை போலீஸ் மாஅதிபர் தேசபந்து தென்னக்கோன், மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் நேற்று (மார்ச் 19) சரணடைந்தார்.
தனது வழக்கறிஞர்களுடன் நேற்று காலை 8 மணியளவில் அவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
இவ்வாறு சரணடைந்த தேசபந்து தென்னக்கோனிற்கு பிணை வழங்குமாறு, அவரது வழக்கறிஞர்கள் நீதவானிடம் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், பிணை வழங்குவது தொடர்பான தீர்மானம் இன்றைய தினம் (மார்ச் 20) எட்டப்படும் என நீதவான் நேற்றைய தினம் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில், கடும் பாதுகாப்புக்கு மத்தியில் தேசபந்து தென்னக்கோன் இன்று மாத்தறை நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டிருந்தார்.
நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து, பிணை வழங்கும் கோரிக்கையை நீதவான் நிராகரித்ததுடன், அவரை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 03ம் தேதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
போலீஸ் மாஅதிபர் தேசபந்து தென்னக்கோன் மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, நாடாளுமன்றத்தில் நேற்று தெரிவித்தார்.
இதேவேளை, போலீஸ் மாஅதிபர் தேசபந்து தென்னக்கோனின் வீட்டில் நேற்று முன்தினம் (மார்ச் 18) குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் விசேட சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.
இந்த சோதனை நடவடிக்கைகளின் போது, பெரும் எண்ணிக்கையிலான மதுபான போத்தல்கள், பெறுமதிமிக்க கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் கைத்துப்பாக்கியொன்றும் மீட்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஆனந்த விஜேபால குறிப்பிட்டிருந்தார்.
” தென்னகோனின் துப்பாக்கி என கருதப்படும் பிஸ்டல் ரக துப்பாக்கி ஒன்றை போலீஸார் தமது பொறுப்பிற்கு எடுத்தார்கள். அதேபோன்று ஆப்பிள் ரக இரண்டு தொலைபேசிகளையும் போலீஸார் மீட்டுள்ளனர். அந்த தொலைபேசிகளின் ஊடாக பாரியளவிலான தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் என நாம் நம்புகின்றோம்.” என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
பட மூலாதாரம், MINISTRY OF PUBLIC SECURITY
தேசபந்து தென்னக்கோனை கைது செய்யும் உத்தரவிற்கான காரணம்?
தேசபந்து தென்னக்கோன், பதில் போலீஸ் மாஅதிபராக செயற்பட்ட 2023ம் ஆண்டு காலப் பகுதியில் நடாத்தப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவமொன்றை அடிப்படையாகக் கொண்டே, அவரை கைது செய்வதற்கான உத்தரவை மாத்தறை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்திருந்தது.
இலங்கையின் தென் மாகாணத்தில் அமைந்துள்ள மாத்தறை மாவட்டத்தின் வெலிகம பகுதியிலுள்ள சுற்றுலா ஹோட்டல் ஒன்றை இலக்கு வைத்து 2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ம் தேதி துப்பாக்கி சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
வெள்ளை நிறத்திலான வேன் ஒன்றில் வருகைத் தந்த அடையாளம் தெரியாத நபர்கள் இந்த துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது, அங்கு வருகைத் தந்த வெலிகம போலீஸார், குறித்த வெள்ளை நிறத்திலான வேனை நோக்கி பதில் துப்பாக்கி பிரயோகத்தை நடத்தியிருந்தனர்.
இந்த பரஸ்பர துப்பாக்கி பிரயோகத்தில் வேனில் வருகைத் தந்த இருவர் காயமடைந்து, கராபிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் வெலிகம போலீஸார் நடத்திய விசாரணைகளில், வேனில் வருகைத் தந்து துப்பாக்கி பிரயோகம் நடத்தியவர்கள் கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் என தெரியவந்துள்ளது.
துப்பாக்கி பிரயோக சம்பவத்தில் காயமடைந்த நபர் மற்றும் உயிரிழந்த நபர் ஆகியோர் போலீஸ் உத்தியோகத்தர்கள் என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த துப்பாக்கி பிரயோக சம்பவம் தொடர்பில் மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் வெலிகம போலீஸார் வழக்கு பதிவு செய்த நிலையில், இந்த வழக்கு விசாரணைகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்திருந்தன.
இதன்படி, இந்த வழக்கு தொடர்பான விசாரணைகள் கடந்த பெப்ரவரி மாதம் 27ம் தேதி நடத்தப்பட்ட சந்தர்ப்பத்தில், ஹோட்டல் மீது துப்பாக்கி பிரயோகம் நடத்துவதற்காக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளை ஈடுபடுத்தியமை சட்டத்திற்கு புறம்பானது என நீதிமன்ற தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரியின் உயிரிழப்பானது குற்றச் செயல் என்ற அடிப்படையில் தீர்மானத்தை எட்டிய மாத்தறை நீதவான் நீதிமன்றம், பதில் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட முன்னாள் போலீஸ் மாஅதிபர் தேசபந்து தென்னக்கோன் உள்ளிட்ட 8 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவை பிறப்பித்துள்ளது.
பட மூலாதாரம், facebook
தலைமறைவான போலீஸ் மாஅதிபர்
உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்த பின்னணியில், போலீஸ் மாஅதிபர் தேசபந்து தென்னக்கோன் தலைமறைவாகியிருந்தார்.
குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகள் பல குழுக்களாக பிரிக்கப்பட்டு, நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
எனினும், தேசபந்து தென்னக்கோனை குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்த நிலையில், தேசபந்து தென்னக்கோனின் குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடம், குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை நடாத்தி, வாக்குமூலம் பதிவு செய்திருந்தனர்.
இவ்வாறான பின்னணியில், தேசபந்து தென்னக்கோனின் வீட்டை குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் நேற்று முன்தினம் சுற்றி வளைத்து, சோதனைகளை நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.
தேசபந்து தென்னக்கோன் 1998ம் ஆண்டு போலீஸ் சேவையில் இணைந்துக்கொண்ட நிலையில், அவர் இலங்கையின் 36வது போலீஸ் மாஅதிபராக கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கடுமையாக எதிர்ப்பு வெளியிட்ட சட்ட மாஅதிபர் திணைக்களம்
கண்ட இடத்தில் கைது செய்யும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், தலைமறைவாகி வாழ்ந்த வந்த போலீஸ் மாஅதிபர் தேசபந்து தென்னக்கோன், மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் நேற்றைய தினம் சரணடைந்த நிலையில், தேசபந்து தென்னக்கோனின் செயற்பாடுகளுக்கு சட்ட மாஅதிபர் திணைக்களம் கடும் எதிர்ப்பை வெளியிட்டது.
சட்ட மாஅதிபர் திணைக்களம் சார்பில் மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையான மேலதிக சொலிஸ்டர் ஜெனரல் திலீப் பீரிஸ் இவ்வாறு தமது எதிர்ப்பை வெளியிட்டார்.
இந்த வழக்கு விசாரணைகள் நேற்றைய தினம் எடுத்துக்கொண்ட தருணத்தில், தேசபந்து தென்னக்கோன் சார்பில் வழக்கறிஞர் ஷானக்க ரணசிங்க முன்னிலையாகியிருந்தார்.
”தேசபந்து போலீஸ் மாஅதிபராக நியமிக்கப்பட்டதை அடுத்து நிழலுலக குழுக்கள் மற்றும் போதைப்பொருட்களுக்கு எதிரான போரை ”யுக்திய’ என்ற பெயரில் ஆரம்பித்தார். அவர் சிறை வைக்கப்படும் பட்சத்தில், அவரது உயிருக்கு அச்சுறுத்தல் காணப்படுகின்றது. அதனால், எந்தவொரு நிபந்தனையின் கீழும் பிணையில் அவரை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிமன்றத்திடம் நாம் கோரிக்கை விடுக்கின்றோம்” என தேசபந்து தென்னக்கோனின் வழக்கறிஞர் கோரியிருந்தார்.
இதையடுத்து, சட்ட மாஅதிபர் திணைக்களம் சார்பில் நீதிமன்றத்தில் முன்னிலையான மேலதிக சொலிஸ்டர் ஜெனரல் திலீப் பீரிஸ், பிணை வழங்கும் கோரிக்கைக்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டார்.
”நீதிமன்றம் கடந்த 27ம் தேதி தீர்ப்பை வழங்கிய பின்னர், பிரபாகரனை தேடுவதை போன்று பெரும் படையொன்று அவரை தேடியது. சிறை வைக்க வேண்டாம். மரண அச்சுறுத்தல் காணப்படுவதாக கூறுகின்றனர். தனது கடமைக்கான துப்பாக்கியை வீட்டின் படுக்கைக்கு கீழ் வைத்து விட்டே, அவர் 20 நாட்கள் தலைமறைவாகி வாழ்ந்து வந்தார். அவரின் பெயரில் எந்தவொரு பதிவு செய்யப்பட்ட சொத்துக்களும் இல்லை. குறைந்தது சைக்கிள் ஒன்று கூட இல்லை. எனினும், அதிகாரப்பூர்வமற்ற விதத்தில் 8 வீடுகள் அவர் வசம் காணப்படுகின்றது என்பது உறுதியாகியுள்ளது. நாங்கள் இன்னுமொன்றையும் கண்டுபிடித்துள்ளோம். அவர் இன்றும் இந்த நாட்டின் போலீஸ் மாஅதிபர். அவரோ அல்லது வீட்டிலுள்ள எவரும் 2021ம் ஆண்டுக்கு பின்னர் தேர்தல் வாக்காளர் இடாப்பில் கூட தமது பெயரை பதிவு செய்யவில்லை. He is a Ghost. உண்மையில் அவர் ஒரு பேய்.” என மேலதிக சொலிஸ்டர் ஜெனரல் திலீப் பீரிஸ் தெரிவித்திருந்தார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.