பட மூலாதாரம், Buddhika Weerasinghe/Bloomberg via Getty Images
படக்குறிப்பு, கோப்புப்படம்கட்டுரை தகவல்
இலங்கையில் அண்மைக் காலமாக துப்பாக்கி பிரயோக சம்பவங்கள் அதிகரித்துள்ளன. போதைப்பொருள், நிழலுலக செயற்பாடுகள் மற்றும் தனிப்பட்ட காரணங்களை மையப்படுத்தி இந்த துப்பாக்கி பிரயோகங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.
இதன்படி, இந்த ஆண்டில் (2025) இதுவரையான காலம் வரை 105 துப்பாக்கி பிரயோக சம்பவங்கள் அரசு குற்ற ஆவணங்களில் பதிவாகியுள்ளன.
இவ்வாறு நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகங்களில் 53 பேர் உயிரிழந்ததுடன், 58 பேர் காயமடைந்துள்ளனர்.
அரசியல் மற்றும் நிழலுக நபர்களை குறிவைக்கும் துப்பாக்கிகள்
நிழலுலக செயல்பாடுகளில் ஈடுபடுவோரை இலக்கு வைத்து அண்மை காலமாக அதிகளவான துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியிருந்தன என்கிறது காவல்துறை.
இதில் பிரபல நிழலுலக தலைவர் கனேமுல்ல சஞ்ஜீவ என அழைக்கப்படும் சஞ்ஜீவ குமார சமரரத்னவின் கொலை பேசு பொருளாக மாறியது. கொழும்பு – புதுக்கடை நீதவான் நீதிமன்ற விசாரணை கூண்டில் வைத்து கடந்த பெப்ரவரி மாதம் 19-ஆம் தேதி கனேமுல்ல சஞ்ஜீவ கொலை செய்யப்பட்டார்.
வழக்கறிஞர் வேடமிட்டு வந்திருந்த துப்பாக்கித்தாரி, இந்தக் கொலையை மேற்கொண்டு, நீதிமன்ற வளாகத்தை விட்டு தப்பியோடினார். சந்தேக நபரை போலீஸார், 8 மணிநேரத்தில் கைது செய்தனர்.
இந்தச் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியாக போலீஸார் சுட்டிக்காட்டும் இஷாரா செவ்வந்தி என்ற பெண், கடந்த சில வாரங்களுக்கு முன்னர் நேபாளத்தில் கைது செய்யப்பட்டார்.
பட மூலாதாரம், ANANATHA WIJAYAPALA FB
படக்குறிப்பு, பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால
மாத்தறை வரலாற்று சிறப்பு மிக்க தேவேந்திரமுனை ஸ்ரீ விஷ்ணு தேவாலயத்திற்கு முன்பாக மார்ச் 21-ஆம் தேதி நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 2 இளைஞர்கள் உயிரிழந்தனர்.
இந்த துப்பாக்கி பிரயோக சம்பவம் நாட்டில் பாரிய சர்ச்சையை தோற்றுவித்தது. பௌத்த மக்களின் புனித ஆலயத்திற்கு முன்பாக நடத்தப்பட்ட இந்த துப்பாக்கி பிரயோக சம்பவமும் அதிகளவில் பேசப்பட்ட ஒரு சம்பவமாக பதிவாகியிருந்தது.
இதேவேளை, வெலிகம பிரதேச சபையின் தவிசாளராக கடமையாற்றிய லசந்த விக்ரமசேகர துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி கடந்த 22-ஆம் தேதி உயிரிழந்தார்.
வெலிகம பிரதேச சபை வளாகத்திற்குள் வந்த துப்பாக்கித்தாரிகள், பிரதேச சபையின் தவிசாளரின் அறைக்குள் சென்று துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டனர்.
இந்த துப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்த லசந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார். இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
லசந்த, இலங்கையின் பிரதான எதிர்கட்சியாக விளங்கும் ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தி உள்ளுராட்சி சபைத் தேர்தலில் போட்டியிட்டு தெரிவாகியிருந்தார்.
உயிரிழந்த லசந்த விக்ரமசேகர, “நிழலுலக செயற்பாடுகளில் ஈடுபட்ட ஒருவர்” என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
”கடந்த காலங்களில் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகங்களின் ஊடாக தேசிய பாதுகாப்புக்கு எந்த வித அச்சுறுத்தலும் கிடையாது. வெலிகம பிரதேச சபையின் தவிசாளர் லசந்த விக்ரமசேகர என்ற வெலிகம லசா மக்கள் பிரதிநிதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள போதிலும், அவர் நிழலுலக குற்றவாளி. மாத்தறை, குருநாகல் போன்ற மேல் நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஒத்தி வைக்கப்பட்ட சிறைத் தண்டனை வழக்கப்பட்டுள்ளது. நிழலுலக செயற்பாடுகளும் அவர் தொடர்புடையவர்.” என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால கூறினார்.
பட மூலாதாரம், pmd sri lanka
ராணுவ ஆயுதங்கள் பயன்பாடு
நாட்டில் இடம் பெறுகின்ற துப்பாக்கி பிரயோகங்கள் போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடையதாகவே காணப்படுவதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவிக்கிறார்.
போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்காக முழு நாட்டையும் ஒன்றிணைக்கும், தேசிய செயற்பாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வு கடந்த 30-ஆம் தேதி கொழும்பில் இடம்பெற்ற போது ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டிருந்தார்.
”கருப்புப் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் வர்த்தகமாக போதைப்பொருள் மாறியுள்ளது. அதனால் அவர்களிடையே சந்தையை பங்கு போடுவதில் மோதல் காணப்படுகிறது. ஒவ்வொரு குழுக்களுக்கிடையில் துப்பாக்கிச் சூடு நடைபெறுகிறது. ஒவ்வொரு பிரதேச எல்லைகளுக்கு மற்றைய தரப்பு நுழைய முடியாது. போதைப் பொருள் வர்த்தகத்துடன் தொடர்புபட்டதாகவே இந்த கொலைகள் நடைபெறுகின்றன. பொதுச் சமூகத்தின் பாதுகாப்பிற்காவே அரச பொறிமுறையொன்று உள்ளது. ஆனால் அவர்களிடமுள்ள பண பலத்தினால் அரச பொறிமுறை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இனிமேலும் இதனை மறைத்து இந்தப் பிரச்னைக்கு முகங்கொடுக்க முடியாது.” என ஜனாதிபதி கூறினார்.
ராணுவத்தினர் பயன்படுத்தும் ஆயுதங்கள் குழுக்களிடமும் இருப்பதாக ஜனாதிபதி குற்றம் சாட்டினார்.
“அரசிடம் இருக்க வேண்டிய ஆயுதங்கள் எவ்வாறு அவர்கள் கைகளுக்குச் சென்றது? சில ராணுவ முகாங்களில் இருந்து 73 ரீ56 ரக துப்பாக்கிகள் அவர்களின் கைகளுக்குச் சென்றுள்ளன. அதில் சுமார் 35 துப்பாக்கிகள் மீளப் பெறப்பட்டுள்ளன. அதற்குப் பயன்படுத்தும் ரவைகள் பிடிபட்டுள்ளன. ராணுவ கேர்னல் ஒருவர்தான் இவற்றை வழங்கியுள்ளார். அதற்காக அவரின் வங்கிக் கணக்கிற்கு பணம் கிடைத்துள்ளது. ஒரு பொலிஸ் அதிகாரி தனது ஆயுதத்தை விற்பனை செய்து விட்டு தப்பிச் சென்றுள்ளார். அந்த ஆயுதக் குழுக்களிடமுள்ள பண பலத்தினால் இவை நிகழ்ந்துள்ளன.” என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவிக்கின்றார்.
பட மூலாதாரம், pmd sri lanka
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சி பீடம் ஏறிய பின்னர், அரசியல்வாதிகளுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு மீளப் பெற்றுக் கொள்ளப்பட்டிருந்தது.
“பாதுகாப்பு இல்லாததால் அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு வழங்க போலீஸ் மாஅதிபர் மற்றும் சபாநாயகர் ஆகியோர் இணக்கம் தெரிவித்துள்ளனர்,” என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானகே தெரிவித்துள்ளார்.
எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைக்கு ஏற்ப, சில தினங்களுக்கு முன்னர் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு குறித்து சபாநாயகர் தலைமையில் நாடாளுமன்றத்தில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.
போலீஸ் மாஅதிபர் பங்கு பெற்ற இந்தக் கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போதே இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக அந்த கலந்துரையாடலில் கலந்துக்கொண்ட உறுப்பினர்கள் தெரிவித்திருந்தனர்.
எதிர்வரும் நாட்களில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும் என எதிர்பார்ப்பதாக எதிர்கட்சியினர் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.