அநுராதபுரம் போதனா மருத்துவமனையில் பணிப்புரியும் பெண் மருத்துவர் ஒருவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம், இலங்கையில் பாரிய சர்ச்சையை தோற்றுவித்துள்ளது.
இந்த நிலையில், நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள் நடத்தி வந்த போராட்டம், முடிவுக்கு வந்துள்ளது.
படக்குறிப்பு, அநுராதபுரம் போதனா மருத்துவமனை
நடந்தது என்ன?
அநுராதபுரம் போதனா மருத்துவமனையில் வேலை செய்யும் பெண் மருத்துவர் ஒருவர் கடந்த மார்ச் 10 ஆம் தேதி இரவு, துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
பெண் மருத்துவர் தங்கியிருந்த வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர், இதை செய்ததாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.
“அநுராதபுரம் போதனா மருத்துவமனையில் விசேட மருத்துவ நிபுணராக பயிற்சி பெற்று வரும் 32 வயதான பெண் ஒருவரே இவ்வாறு துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இந்த மருத்துவமனையில் நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் அவர் தனது கடமைகளை நிறைவு செய்துள்ளதுடன், அதன்பின்னர் மருத்துவமனைக்கு முன்பாக உள்ள மருத்துவர்களின் விடுதிக்கு சென்றுள்ளார்.
இதன்போது, குறித்த பெண் மருத்துவரை பின்தொடர்ந்து வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர், விடுதிக்கு அருகில் வைத்து பெண் மருத்துவரின் கழுத்தில் கத்தியொன்றை வைத்து அச்சுறுத்தியுள்ளதாக தெரிய வருகின்றது.
அதன்பின்னர் பெண் மருத்துவரை, கடும் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார். இதனை தொடர்ந்து, சந்தேகநபர் அந்த இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
மருத்துவரின் கையடக்கத் தொலைபேசியை எடுத்துக்கொண்டே, சந்தேகநபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
அதனைத் தொடர்ந்து, சிறிது நேரத்திற்கு பின்னர், மருத்துவமனைக்கு வருகைத் தந்த பாதிக்கப்பட்ட பெண், மருத்துவமனை தொலைபேசியிலிருந்து தனது பெற்றோருக்கு இது குறித்து அறிவித்துள்ளார்.
அதன்பின்னர், இந்த சம்பவம் தொடர்பில் அநுராதபுரம் மருத்துவமனை நிர்வாகத்திற்கு அறிவிக்கப்பட்டதுடன், போலீஸாருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது”, என்று போலீஸ் ஊடக பிரிவு பிபிசி தமிழிடம் தெரிவித்தது.
மருத்துவர்கள் வேலை நிறுத்தம்
இந்த சம்பவத்தை அடுத்து, அநுராதபுரம் போதனா மருத்துவமனையில் வேலை செய்யும் மருத்துவர்கள் மார்ச் 11 ஆம் தேதி உடனடியாக வேலைநிறுத்த போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் எனவும், இவ்வாறான சம்பவங்கள் இனிவரும் காலங்களில் இடம்பெறாதிருப்பதை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் நடத்தப்பட்டது.
இன்று காலை 8 மணி வரை நாடு முழுவதும் உள்ள மருத்துவர்கள் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது.
”இந்த இடத்தில் காணப்படுகின்ற பாதுகாப்பற்ற நிலைமை குறித்து நாங்கள் முன்பே தெரிவித்திருந்தோம். எனினும், இவ்வாறான அசம்பாவிதமொன்று இடம்பெறும் வரை, இந்த மோசமான சம்பவத்தை தடுத்து நிறுத்துவதற்கு எந்தவொரு அதிகாரிக்கும் இயலுமை கிடைக்கவில்லை.
சந்தேகநபர் கைது செய்யப்பட்டதுடன், இந்த பிரச்னை முடிவுக்கு வராது. வேலை செய்யும் சுகாதார அதிகரிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்” என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் அநுராதபுரம் மாவட்ட செயலாளர் டாக்டர் ஷஷிக்க விதானகே தெரிவித்தார்.
படக்குறிப்பு, அநுராதபுரம் போதனா மருத்துவமனை
எதிர்கட்சி கடும் எதிர்ப்பு
பெண் மருத்துவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்திற்கு பிரதான எதிர்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும், எதிர்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாஸ எதிர்ப்பை வெளியிட்டார்.
நாடாளுமன்றத்தில் மார்ச் 11 ஆம் தினம் உரை நிகழ்த்திய போதே அவர் இவ்வாறு தனது எதிர்ப்பை வெளியிட்டார்.
”இந்த சம்பவத்தை அடுத்து, பெண் மருத்துவர்களின் பாதுகாப்பு குறித்து பாரிய பிரச்னையொன்று உருவெடுத்துள்ளது. பெண் மருத்துவர் எதிர்கொண்ட இந்த பாலியல் துஷ்பிரயோகத்தை அடுத்து, அரச சேவையில் ஈடுபட்டுள்ள பெண்களுக்கும் பாதிப்பு ஏற்படும் அபாயம் தோன்றியுள்ளது. உண்மையில் தேசிய பாதுகாப்பு மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு குறித்து பாரிய பிரச்னை எழுந்துள்ளது.
எனக்கும் பெண் குழந்தையொன்று உள்ளது. அதனால், கடும் நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்தை நாங்கள் வலியுறுத்துகின்றோம்.
இவ்வாறான செயல்களில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக கடும் சட்டங்களை கொண்டு வருவதற்கு நாங்களும் ஒத்துழைப்புக்களை வழங்குவோம்” என எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
சந்தேகநபர் கைது
இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (மார்ச் 12) உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
கல்நேவ பகுதியில் வைத்து இந்த சந்தே கநபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இந்த சம்பவம் தொடர்பில் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சந்தேகநபரை கைது செய்வதற்காக 5 போலீஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்தன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பெண்களை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்துகின்றமை, போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களுடன் தொடர்புடையவர் என போலீஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இதற்கு முன்னர் பௌத்த துறவியாக இருந்துள்ளமையும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இலங்கையில் கடந்த காலங்களில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் ஸ்ரீலங்கா போலீஸின் பெண்கள் மற்றும் சிறுவர்கள் துஷ்பிரயோக தவிர்ப்பு பிரிவின் பிரதி போலீஸ் மாஅதிபர் ரேணுகா ஜயசுந்தர கருத்து வெளியிட்டிருந்தார்.
இதன்படி, 2023 ஆம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்கள் தொடர்பில் 2252 முறைகளும், 2024 ஆம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்கள் தொடர்பில் 2785 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.