பட மூலாதாரம், G.KRISHANTHAN
இலங்கையின் பதுளை – எல்ல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளதுடன், 18 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து நேற்றைய தினம் (04) இரவு 09 மணியளவில் இடம்பெற்றதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.
இந்த விபத்தில் பஸ்ஸின் சாரதி உள்ளடங்களாக முப்பதிற்கும் அதிகமானோர் பயணித்துள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவர்களில் 6 ஆண்களும், 9 பெண்களும் அடங்குவதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிடுகின்றது.
அத்துடன், காயமடைந்தவர்களின் 6 ஆண்களும், 5 பெண்களும், 3 ஆண் குழந்தைகளும், 2 பெண் குழந்தைகளும் அடங்குவதாகவும் போலீஸார் தெரிவிக்கின்றனர்.
விபத்தில் காயமடைந்தவர்களை காப்பாற்றும் முயற்சிகளில் ஈடுபட்ட இருவரும் இதன்போது காயமடைந்துள்ளனர்.
விபத்து எவ்வாறு நேர்ந்தது?
எல்ல – வெல்லவாய பிரதான சாலையின் 23வது மற்றும் 24வது மைல் கல் பிரதேசத்திலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது.
“வெல்லவாய திசையை நோக்கி பயணித்த பஸ் ஒன்று, எதிர் திசையில் வருகைத் தந்த ஜீப் ரக வாகனமொன்றில் மோதுண்டதை அடுத்து, சுமார் 1000 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது” என்று போலீஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வளைவு இருந்த பகுதியிலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளதுடன், பஸ் பாதுகாப்பு வேலிகளை உடைத்துக்கொண்டு 1000 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
தங்காலை நகர சபையின் ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் சுற்றுப் பயணமொன்றை மேற்கொண்டு, வீடு திரும்பிய சந்தர்ப்பத்திலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளதாக போலீஸார் குறிப்பிடுகின்றனர்.
இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் பதுளை, தியதலாவை மற்றும் பண்டாரவளை ஆகிய மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், உயிரிழந்தவர்களின் சடலங்களும் அதே மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன.
விபத்து தொடர்பில் ஜீப் ரக வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், எல்ல போலீஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பட மூலாதாரம், G.KRISHANTHAN
இரவோடு இரவாக தொடர்ந்த மீட்பு பணி
விபத்து இடம்பெற்ற தருணம் முதல் பிரதேச மக்கள் மீட்பு பணிகளை ஆரம்பித்திருந்தனர்.
அதனைத் தொடர்ந்து, அந்த இடத்திற்கு வருகைத் தந்த போலீஸார் மீட்பு பணிகளில் ஈடுபட்டதுடன், ராணுவத்தினரும் மீட்பு பணிகளுக்காக வரழைக்கப்பட்டிருந்தனர்.
பிரதேச மக்கள் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்பதற்கு தேவையான அனைத்து பொருட்களையும் எடுத்து வந்ததாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன், விபத்தில் காயமடைந்தவர்களை உடனடியாக மருத்துவமனைகளில் சேர்ப்பதற்கும் பொதுமக்கள் பாரிய ஒத்துழைப்புக்களை வழங்கியுள்ளனர்.
இரவோடு இரவாக விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
இந்த விபத்து இடம்பெற்ற பகுதியில் இயங்கி வரும் மலை ஏறும் குழுவினரும் மீட்பு பணிகளுக்காக வருகைத் தந்திருந்தார்கள் என பிபிசி சிங்கள சேவையின் பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் கோரப்பட்ட மீட்பு உதவிகள்
பட மூலாதாரம், G.KRISHANTHAN
பஸ் விபத்து இடம்பெற்ற தருணத்தில் பேஸ்புக் ஊடாக பல்வேறு தரப்பினர் மீட்பு பணிகளுக்கான உதவிகளை கோரியுள்ளனர்.
”எல்ல – வெல்லவாய பிரதான வீதியின் பஸ் ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது. காயமடைந்தவர்களை மீட்பதற்காக பாரிய பிரயத்தனம் முன்னெடுக்கப்படுகின்றது. அருகிலுள்ளவர்கள் உதவி செய்யுங்கள்.” என சமூக வலைத்தளத்தில் பதிவுகள் பகிரப்பட்டன.
இவ்வாறு வெளியிடப்பட்ட சமூக வலைத்தள பதிவுகளை அடுத்து, அதற்கான உதவியை பிரதேச மக்கள் வழங்கியுள்ளனர்.
இதன்படி, கயிறுகள், மின்விளக்குகள், தண்ணீர் போத்தல்கள் உள்ளிட்ட தேவையான பொருட்களை எடுத்துக்கொண்டு விபத்து நேர்ந்த இடத்திற்கு பிரதேச மக்கள் வருகைத் தந்துள்ளனர்.
மீட்பு பணியாளர்கள் அனுபவம்
பட மூலாதாரம், G.KRISHANTHAN
மலை தொடர்களில் ஏறும் குழுவினரின் ஒத்துழைப்பு இதன்போது கிடைக்கப் பெற்றதாக பிபிசி சிங்கள சேவையின் பிராந்திய செய்தியாளர், பிபிசி சிங்கள சேவைக்கு தெரிவித்துள்ளார்.
பஸ் விபத்துக்குள்ளான பள்ளத்தில் காணப்படும் பாரிய கற் பாறைகளின் ஊடாக கயிறுகளை பயன்படுத்தி பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் செயற்பாட்டை அவதானிக்க முடிந்ததாக அவர் குறிப்பிடுகின்றார்.
இந்த மீட்பு பணிகளில் ஈடுபட்டோர் பிபிசி சிங்கள சேவைக்கு தமது அனுபவங்களை பகிர்ந்துக் கொண்டனர்.
”அது தொடர்பில் கூற வேண்டும் என்றால், எமக்கு தகவலொன்று கிடைத்தது. நாங்கள் முதலாவது செயற்பாட்டாளர்களாக மக்கள் மத்தியில் காணப்படுகின்றோம். நாங்கள் பிளை ராவணா குழு என பிரதிநிதித்துப்படுத்துகின்றோம்”
”இந்த தகவலை அறிந்து பலர் வருகைத் தந்திருந்தார்கள். நாங்கள் கீழே சென்று பார்த்த போது காயமடைந்தவர்களை போன்று உயிரிழந்தவர்களையும் காணக்கூடியதாக இருந்தது.”
”பள்ளத்தில் சிக்குண்ட நிலையில், நான்கு பெண்கள் இருந்தார்கள். அதில் ஒருவர் உயிரிழந்திருந்தார். ஏனைய மூவரும் காயமடைந்திருந்தனர். அவர்கள் மூவரையும் பிரதேச மக்கள் மற்றும் ராணுவத்தின் உதவியுடன் நான் கீழே கொண்டு வந்தேன்”
”இந்த பள்ளத்தில் 80 – 100 அடி வரையான கற்களிலான பள்ளமொன்று உள்ளது. பஸ் அதிலிருந்தும் கீழே வீழ்ந்திருந்தது.”
”முதலில் மீட்பு பணிகளை ஆரம்பிக்கும் தருணத்தில் எந்தவொரு உபகரணங்களும் இருக்கவில்லை. அதன்பின்னர் கயிறு போன்றவற்றை எடுத்துக்கொண்டு குழுவொன்று வருகைத் தந்தது”
”விரைவாக உபகரணங்களை தயார் செய்து, கீழே இறங்கினோம். மிகவும் கவலையாக இருந்தது. இந்த சம்பவம் தொடர்பில் எமக்கு மிகவும் கவலையாக இருக்கின்றது. மன வருத்தமாக இருக்கின்றது. எங்களால் முடியுமான அனைத்து உதவிகளையும் நாங்கள் செய்தோம்”
”நாங்கள் எமது வாழ்க்கையை கூட நினைத்து பார்க்காமல், பாதிக்கப்பட்டவர்களை மீட்பதற்கு உதவி செய்தோம். நான் நினைக்கின்றேன். இதில் நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம் என்று நினைக்கின்றேன்.” மீட்பு பணிகளின் ஈடுபட்ட குழுவிலுள்ள உறுப்பினர் ஒருவர் தனது அனுபத்தை இவ்வாறு பிபிசி சிங்கள சேவையுடன் பகிர்ந்துக்கொண்டிருந்தார்.
பிரேக் பிடிக்காததால் விபத்து?
விபத்துக்குள்ளான பஸ்ஸில் பிரேக் இருக்கவில்லை என பஸ்ஸின் சாரதி கூறியதாக பஸ் விபத்தில் காயமடைந்து, சிகிச்சை பெற்று வரும் ஒருவர் பிபிசி சிங்கள சேவையிடம் தெரிவித்துள்ளார்.
”எல்ல பகுதிக்கு அருகில் வைத்து பஸ்ஸில் பிரேக் இல்லை என சாரதி சொன்னார். நான் அவர்களுடன் பஸ்ஸின் முன்புறத்தில் அமர்ந்து அவர்களுடன் கதைத்துக்கொண்டு வந்தேன். சாரதி சொன்னார். பஸ்ஸின் நடந்துநர் சிரித்தார். பஸ்ஸில் ஏனையோரும் இருந்தார்கள். பொய் சொல்ல வேண்டாம் என சொல்லி சிரித்தார்கள்.
இரண்டாவது வளைவில் வைத்து மீண்டும் சொன்னார் பிரேக் இல்லை என் சொன்னார். திடீரென பஸ்ஸை திருப்பி செலுத்தினார். அதன்பின்னரே பஸ்ஸில் பிரேக் உண்மையிலேயே இல்லை என்பதை நாங்கள் அறிந்துக்கொண்டோம்.
முன்புறமாக வாகனமொன்று வந்தது. அதில் மோதுண்டே பஸ் பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது. நான் இறந்து விட்டேன் என்றே நினைத்தேன். சில மணிநேரம் நினைவு வரவில்லை. சிறியவர் ஒருவர் கூச்சலிடும் சத்தத்திலேயே நான் எழுந்தேன். சிறுவனை அங்கிருந்து எடுக்க முயற்சித்தேன். என்னால் எழ முடியவில்லை. கூச்சலிட்டேன். அப்போது விசேட அதிரடி படையினர் வருகைத் தந்தார்கள்.’ என அந்த பயணி பிபிசி சிங்கள சேவையிடம் கூறியுள்ளார்.
ராணுவ மீட்பு குழு
பஸ் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணிகளுக்காக சுமார் 100 பேரை கொண்ட ராணுவ குழுவொன்று கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டதாக ராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் வருண கமகே, பிபிசி சிங்கள சேவைக்கு தெரிவித்தார்.
”விபத்தில் காயமடைந்தவர்களை மீட்கும் பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து, எமது குழுவொன்று பஸ் விபத்துக்குள்ளான இடத்திற்கு சென்று கண்காணிப்பு நடவடிக்கையொன்றை மேற்கொண்டுள்ளது”
”விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் பொருட்களை மீட்டு, அவற்றை போலீஸாரிடம் ஒப்படைக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அந்த குழு சென்றுள்ளது” என ராணுவ ஊடகப் பேச்சாளர் தெரிவிக்கின்றார்.
இதேவேளை, விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளை வழங்குவதற்காக தியத்தலாவை விமானப்படை முகாமிலுள்ள எம்.ஐ 17 ரக ஹெலிகொப்டர் ஒன்றும், வீரவில விமானப் படை முகாமிலுள்ள பெல் 412 ஹெலிகொப்டர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை விமானப்படை தெரிவிக்கின்றது.
அவசர தேவை ஏற்படும் பட்சத்தில் நோயாளர்களை கொழும்பிற்கு அழைத்து வருவதற்கு அல்லது ஏனைய மீட்பு பணிகளுக்காக இந்த ஹெலிகொப்டர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக விமானப்படை குறிப்பிடுகின்றது.
மருத்துவமனையில் உள்ளவர்களின் நிலைமை
இந்த விபத்தில் 16 பேர் காயமடைந்துள்ளதுடன், காப்பாற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்ட இருவரும் காயமடைந்துள்ளதாக போலீஸார் குறிப்பிடுகின்றனர்.
இவ்வாறு காயமடைந்தவர்களில் 10 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என மருத்துவமனையின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், காயமடைந்தவர்களில் சிலரது கைகள் மற்றும் கால்கள் உடைந்துள்ளதாக பதுளை மருத்துவமனை அதிகாரிகள் கூறுகின்றனர்.
மேலும், விபத்துக்குள்ளான பஸ்ஸிற்குள் மேலும் சிலர் சிக்கியிருக்கலாம் என்ற சந்தேகம் நிலவி வருகின்ற பின்னணியில் தொடர்ந்தும் தேடுதல்கள் இடம்பெற்று வருகின்றன.
சம்பவம் தொடர்பில் எல்ல போலீஸார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு