0
இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட இலங்கையை மீள கட்டியெழும்பும் அரசாங்கத்தின் திட்டத்திற்கு இலங்கைக்கான பாகிஸ்தான் கிரிக்கெட் விஜயத்தின் மூலம் கிடைக்கப்பெறும் இலாபத்தை நன்கொடையாக வழங்க ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் தீர்மானித்துள்ளது.
இந்தத் திட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் அர்ப்பணிப்புடன் செயல்படவுள்ளது.
இந்தத் திட்டம் குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கிரிக்கெட் தொடர் முழுவதும் பல நடவடிக்கைகள் செயல்படுத்தப்படும்.
இலங்கையை உலகளாவிய பார்வையாளர்கள் மத்தியில் பிரபல்யப்படுத்தும் வகையில் போட்டிகள் நடைபெறும் விளையாட்டரங்கில் #VisitSriLanka hashtag திட்டத்தையும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் ஊக்குவிக்கும்.
இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடர் ரங்கிரி தம்புள்ளை சர்வதேச கிரிகெட் விளையாட்டரங்கில் இம்மாதம் 7, 9, 12ஆம் திகதிகளில் நடைபெறும்.
தித்வா சூறாவளியால் ஏற்பட்ட பேரழிவைத் தொடர்ந்து அரசாங்கத்தின் மீட்பு மற்றும் புனர்வாழ்வு திட்டங்களை ஆதரிக்கும் ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் (SLC) முயற்சிகளின் பகுதியாக ஷம்மி சில்வா தலைமையிலான ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் நிறைவேற்றுக் குழு இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது.