• Sun. Feb 23rd, 2025

24×7 Live News

Apdin News

இலங்கை கடற்படை அட்டூழியம் – 32 பேர் கைதை கண்டித்து ராமேசுவரம் மீனவர்கள் வேலை நிறுத்தம் அறிவிப்பு | Rameswaram fishermen announce strike tomorrow

Byadmin

Feb 23, 2025


ராமேசுவரம்: இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்களின் 4 விசைப்படகுகளை கைப்பற்றி, 32 மீனவர்களை கைது செய்துள்ளனர். இதனை தொடர்ந்து ராமேசுவரம் மீனவர்கள், வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.

ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 450 விசைப்படகுகளில் அனுமதி சீட்டு பெற்று சுமார் 3 ஆயிரம் மீனவர்கள் சனிக்கிழமை கடலுக்குச் சென்றனர். ஞாயிற்றுக்கிழமை(பிப். 23) அதிகாலை மன்னார் கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த சேசுராஜா, வியாகுலம், ஜெயபிரகாஷ், ஆரோக்ய மண்ட்ரோ, கோபால் ஆகியோருக்குச் சொந்தமான ஐந்து விசைப்படகுகளை இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டிய குற்றச்சாட்டின்பேரில் கைப்பற்றினர்.

படகுகளிலிருந்த சில்வெஸ்டார், ராமு, நாகராஜன், வின்சென்ட், இன்பன், பிரான்சிஸ் இளங்கோ, மணிகண்டன் , செல்லையா, கொலம்பஸ், நிதிஸ், ஆரோக்கியா ரமேஷ், ஸ்டீபன், சரத்குமார், சாந்தியாஹு, ஜெயப்பிரகாஷ், பாண்டி, ரீகன், ரமேஷ், ஜெரோன், முனீஸ்வரன், கெம்பில் ராஃப், வியாகுளம், ராஜா, அந்தோணிராஜ், ஸ்டாலின், ஃபிராங்லின், யோகேஸ்வரா, சதீஷ்குமார், ராஜ்குமார், செங்கோல், ராபின், ஸ்டெர்வின் ஆகிய 32 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.

ஐந்து விசைப்படகுகளையும் 32 மீனவர்களையும் தலைமன்னார் கடற்படை முகாமிற்கு கொண்டு சென்ற இலங்கை கடற்படையினர் அந்நாட்டு மீன்வளத்துறையினரிடம் மீனவர்களை ஒப்படைத்தனர். இதனையடுத்து, தமிழக மீனவர்கள் மன்னார் நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர். மீனவர்கள் கைதானதை தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை ராமேசுவரம் மீன்பிடி துறைமுகம் அருகே அவசர மீனவ ஆலோசனை கூட்டம் மீனவ பிரதிநிதி சகாயம் தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட ராமேசுவரம் மீனவர்களை விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், இலங்கையில் தமிழக மீனவர்களின் படகுகள் ஏலம் விடப்படுவதை தடுத்து படகுகளை மீட்க வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை (திங்கட்கிழமை) முதல் விசைப்படகு மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் அறிவித்துள்ளனர். கடந்த ஜனவரி மாதத்திலிருந்து இதுவரை இலங்கை கடற்படையினரால் 18 படகுகள் கைப்பற்றப்பட்டு, 131 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.



By admin