0
இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் புதிய துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக, இந்திய அணியின் முன்னாள் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளர் விக்ரம் ரத்தோர் நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் (Sri Lanka Cricket) அறிவித்துள்ளது.
ஆலோசகர் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த நியமனம், 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐசிசி ஆண்கள் ரி20 உலகக் கிண்ணத் தொடருக்கான அணியின் தயார்படுத்தல்களை மையமாகக் கொண்டு அமையவுள்ளது.
இந்திய அணிக்காக டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடிய முன்னாள் சர்வதேச கிரிக்கெட் வீரரான விக்ரம் ரத்தோர், 2026 ஜனவரி 18 ஆம் திகதி தனது பணிகளை ஆரம்பித்து, மார்ச் 10 ஆம் திகதி வரை இலங்கை அணியுடன் இணைந்து செயல்படவுள்ளார்.
முன்னதாக, 2019 செப்டம்பர் மாதம் முதல் 2024 ஜூலை மாதம் வரை இந்திய கிரிக்கெட் அணியின் அனைத்து வடிவங்களுக்குமான துடுப்பாட்ட பயிற்சியாளராக அவர் பணியாற்றியுள்ளார்.
விக்ரம் ரத்தோருக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் தரம் 3, கிரிக்கெட் அவுஸ்திரேலியாவின் தரம் 3 மற்றும் இங்கிலாந்து & வேல்ஸ் கிரிக்கெட் வாரியத்தின் தரம் 1 ஆகிய பயிற்சி தகுதிகள் உள்ளன.
தற்போது, இந்திய பிரீமியர் லீக் (IPL) தொடரில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் பிரதான உதவி பயிற்சியாளராக (Lead Assistant Coach) விக்ரம் ரத்தோர் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.