• Tue. Feb 25th, 2025

24×7 Live News

Apdin News

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் 15 பேர் தாயகம் திரும்பினர்! | 15 Tamil Nadu fishermen who imprisoned in Sri Lankan jails returned to their native

Byadmin

Feb 21, 2025


ராமேசுவரம்: இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் 15 பேர் தாயகம் திரும்பினர்.

ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற ரூபில்டன், டேனியல், ஆகியோருக்குச் சொந்தமான இரண்டு விசைப்படகுகளை இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டிய குற்றச்சாட்டின்பேரில் கடந்த ஜன. 26ல் கைப்பற்றினர். இரண்டு படகுகளிலிருந்த ரூபில்டன் (ஒரு படகின் உரிமையாளர்) , சார்லஸ் மிரண்டா (இலங்கை அகதி), கிறிஸ்டோபர், ஜான், ரீகன், பாலாஜி, இன்னாசி, கிரின்சன், நம்பு மணி, செந்தில் குமார், டேனியல், ஆகாஷ், வின்ஸ்டன், அண்ணாதுரை, ஸ்டாலின், முகமது ஷெடின், சீனிவாசன், ஸ்டெல்லஸ், செந்தூர் பாண்டி, முத்துச்சாமி ஆகிய 19 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.

19 மீனவர்கள் மீதும் எல்லை தாண்டி மீன்பிடித்தல், தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து நீதிமன்றக் காவலில் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், வழக்கு பிப்ரவரி 5-ல் கிளிநொச்சி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

19 மீனவர்களில் 16 மீனவர்களுக்கு தலா இலங்கை ரூ.50 ஆயிரம் அபராதம், ஒரு படகின் உரிமையாளரான ரூபில்டனும் மீனவராக சென்று கைது செய்யப்பட்டதால் அவருக்கும், 2 விசைப்படகு ஒட்டுநர்களுக்கு தலா ஒரு ஆண்டு சிறை தண்டனை அல்லது மூவருக்கும் அபராதம் விதித்து கிளிநொச்சி நீதிபதி உத்தரவிட்டார்.

நீதிமன்றத்தில் 15 மீனவர்கள் மட்டும் அபராதத் தொகையை கட்டி விடுதலையடைந்ததால், கொழும்பு விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு வியாழக்கிழமை இரவு சென்னை வந்தடைந்தனர். தொடர்ந்து மீன்வளத்துறை அலுவலர்கள் மூலம் 15 மீனவர்களும் தனி வாகனம் மூலம் ராமேசுவரத்துக்கு வெள்ளிக்கிழமை காலை அழைத்து வரப்பட்டனர். இதில் சார்லஸ் மிரண்டா என்பவர் இலங்கை அகதி என்பதால் அவர் இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு அனுப்பப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.



By admin