பட மூலாதாரம், PMD SRI LANKA
- எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத்
- பதவி, பிபிசி தமிழுக்காக, இலங்கை
-
இலங்கையில் உள்நாட்டு போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு 16 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இம்முறை நடத்தப்பட்ட ராணுவ வெற்றி நிகழ்வு அரசாங்கத்திற்கு அரசியல் ரீதியில் பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உள்நாட்டு போரை வெற்றிக் கொள்வதற்காக 27,000-த்திற்கும் அதிகமான ராணுவத்தினர் உயிர்நீத்துள்ளதாக அரசாங்கம் கூறுகின்றது.
இவ்வாறு நாட்டிற்காக உயிர்நீத்த ராணுவத்தை கௌரவிக்கும் வகையில் இந்த நிகழ்வு ஒவ்வொரு ஆண்டும் இலங்கை அரசாங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றது.
ராணுவ வெற்றி கொண்டாட்ட நிகழ்வு ஒவ்வொரு ஆண்டும், ஜனாதிபதித் தலைமையில் நடைபெறுகின்ற நிலையில், இம்முறை பாதுகாப்பு பிரதி அமைச்சர் தலைமையில் நடைபெறும் என ராணுவ சேவை அதிகார சபையின் தலைவர் ஓய்வு பெற்ற பிரிகேடியர் செனரத் கோஹோண கடந்த 16ம் தேதி ஊடக சந்திப்பொன்றில் தெரிவித்திருந்தார்.
”2009ம் ஆண்டு போர் முடிவுக்கு கொண்டு வரப்படும் சந்தர்ப்பத்தில் அதற்கான கட்டளையிட்ட, இந்த நாட்டில் தற்போது உயர்நிலையிலுள்ள மூன்று மார்ஷல்களும், அதேபோன்று, ஜனாதிபதியை பிரதிநிதித்துவப்படுத்தி, பாதுகாப்பு பிரதி அமைச்சரும் இந்த நிகழ்வில் கலந்துக்கொள்ளவுள்ளனர்.”
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இந்த நிகழ்வில் கலந்துக்கொள்ளவில்லை என அறிவிக்கப்பட்ட பின்னணியில், அது தொடர்பில் நாட்டில் மக்கள் மத்தியில் சர்ச்சையாக நிலைமை தோன்றியிருந்தது.
இந்த நிகழ்வானது, ஜனாதிபதி தலைமையில் நடைபெற வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விட ஆரம்பித்திருந்தனர்.
”நான் அவரின் தனிப்பட்ட ரீதியில் கோரிக்கையொன்றை முன்வைக்கின்றேன். அவரது வேலைப்பளுவான வாழ்க்கையில் ஐந்து நிமிடங்களை இந்த நிகழ்விற்காக ஒதுக்கிடுமாறு நான் கோரிக்கை விடுக்கின்றேன். அனைத்து ராணுவத்திற்காகவும் வழங்கப்படும் கௌரவமாக நாம் இதனை பார்க்கின்றோம்.” என இலங்கை கடற்படையின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் ரியல் அட்மிரல் (ஓய்வு பெற்ற) டி.கே.பி.தஸநாயக்க தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், ராணுவ வெற்றி கொண்டாட்ட நிகழ்வானது, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையில் நடைபெறும் என கடந்த 18ம் தேதி ராணுவ சேவை அதிகார சபையின் தலைவர் ஓய்வு பெற்ற பிரிகேடியர் செனரத் கோஹோண மீண்டும் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.
”ராணுவ வீரர்களை கௌரவிக்கும் வகையில் நடைபெறும் நிகழ்வில் பிரதம விருந்தினராக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க கலந்துக்கொள்ளவுள்ளார். அதேபோன்று பாதுகாப்பு பிரதி அமைச்சர், மூன்று மார்ஷல்களும் இந்த நிகழ்வில் கலந்துக்கொள்கின்றனர்” என ராணுவ சேவை அதிகார சபையின் தலைவர் ஓய்வு பெற்ற பிரிகேடியர் செனரத் கோஹோண குறிப்பிட்டிருந்தார்.
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பேசியது என்ன?
பட மூலாதாரம், PMD SRI LANKA
இதன்படி, கடந்த 19ம் தேதி நடைபெற்ற ராணுவ வெற்றி கொண்டாட்ட நிகழ்வில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க கலந்துக்கொண்டு பேசினார்.
”இந்த போரை முடிவுக்கு கொண்டு வருவதற்காக எமது படையினர் பெரும்பாலானோர் தமது உயிரை தியாகம் செய்துள்ளனர். இந்த பெயர் பலகை நிரம்புவதற்கு அவர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதேபோன்று பெரும்பாலானோர் நிரந்த மாற்றுத்திறனாளிகளாக மாறியுள்ளனர். இந்த நாடு அவர்களுக்கு எப்போதும் கடன்காரர்கள் தான்.” என்று கூறினார் அநுர குமார திஸாநாயக்க.
மேலும், “இந்த பெயர் பலகையில் தனது மகனின் பெயர் இருக்கின்றதா?, தனது கணவரின் பெயர் இருக்கின்றதா? தனது தந்தையின் பெயர் இருக்கின்றதா? என்பதை விரல் விட்டு தேடுவதை நான் அவதானித்தேன். தெற்கில் மாத்திரமா, இல்லை வடக்கிலும் அவ்வாறே தேடுகின்றனர். தனது பிள்ளைகள், தனது கணவரை இழந்தோர் புகைப்படங்களை வீதிகளில் வைத்துக்கொண்டு தனது கணவர், பிள்ளைகள் தொடர்பில் கேள்வி எழுப்புகின்றனர். அனைத்து பெற்றோருக்கும் தனது பிள்ளை ஒரு இரத்தினக்கல். அதிகாரத்திற்காக வடக்கிலும், தெற்கிலும் தமது பிள்ளைகள் பலிகொடுக்கப்பட்டுள்ளனர்.
அதிகாரத்திற்காக ஒன்றுமே அறியாதோரின் பிள்ளைகள் பலிகொடுக்கப்பட்டனர். தெற்கிலும் சரி, வடக்கிலும் சரி. அவ்வாறே இடம்பெற்றது. அனைத்து படையினரதும் கைகளிலுள்ள துப்பாக்கி எந்தவொரு சந்தர்ப்பத்திலும் செயற்படக்கூடாது என்பதே அவர்களின் எதிர்பார்ப்பாக காணப்படுகின்றது” என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க குறிப்பிட்டார்.
ஜனாதிபதியின் பிரவேசம் தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் வெளியிட்ட கருத்து
பட மூலாதாரம், Getty Images
ஜனாதிபதி ராணுவ வெற்றி நிகழ்வில் கலந்துக்கொண்டமை குறித்து வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் தனியார் ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்டிருந்தார்.
”ஜனாதிபதி முதலில் இருந்தே இந்த நிகழ்வில் கலந்துக்கொள்ள தீர்மானித்திருந்தார். ஏற்பாடுகள் மாத்திரம் பிரதி பாதுகாப்பு அமைச்சர் தலைமையில் நடைபெற்று வருவதற்கு ஆலோசனை வழங்கப்பட்டிருந்தது. அதற்காகவே பிரதி பாதுகாப்பு அமைச்சர் தலைமையில் நிகழ்வு நடைபெறுகின்றது என முதலில் செய்தியாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டது. கருத்து வெளியிடும் போது ஏற்பட்ட பிரச்னையே இதற்கான காரணம். ஜனாதிபதி இந்த நிகழ்வில் கலந்துக்கொள்ள முதலிலேயே தீர்மானித்திருந்தார்.” என வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் குறிப்பிட்டிருந்தார்.
ஜனாதிபதியின் நடவடிக்கைகளுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு
பட மூலாதாரம், UDAYA GAMMANPILLA FACEBOOK
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, ராணுவ வெற்றி நிகழ்வில் கலந்துக்கொள்ள முதலில் மறுப்பு தெரிவித்து, பின்னர் நிகழ்வில் கலந்துக்கொண்டமை குறித்து எதிர்க்கட்சிகள் செய்தியாளர் சந்திப்புகளை ஏற்பாடு செய்து தமது எதிர்ப்புகளை வெளியிட்டிருந்தனர்.
பிவித்துறு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில, ”விடுதலைப் புலி ஆதரவாளர்கள் கோபமடைவார்கள் என்ற அச்சத்தினால், ஜனாதிபதி ராணுவ வெற்றி தேசிய நிகழ்வை புறக்கணிக்க தீர்மானித்திருந்தாலும், தேசபற்றாளர்களினால் வெளியிடப்பட்ட எதிர்ப்புகள் காரணமாக ஏற்பட்ட கடும் அழுத்தத்தினால் விருப்பமில்லையேனும், ராணுவ வெற்றி நிகழ்வில் கலந்துக்கொள்ள வேண்டி ஏற்பட்டது” என்கிறார்.
மேலும், “எனினும், ராணுவ வீரர்கள் என்ற சொல்லை பயன்படுத்தாதிருப்பதற்கு ஜனாதிபதி செயற்பட்டிருந்தார். ராணுவ வீரர்களை படையினர் என்றே விழித்திருந்தார். அனைத்து ராணுவ வீரர்களும் படையினர் என்ற போதிலும், அனைத்து படையினரும் ராணுவத்தினாராக முடியாது. படையினர் ராணுவ வீரராகுவதற்கு, அவர் போர் களத்தில் போரில் ஈடுபட்டிருக்க வேண்டும்.
கௌரவத்திற்குரிய ஜனாதிபதி அவர்களே, ராணுவத்தினருக்கு முன்பாக நீங்கள் உண்மையாக பேசியிருக்க வேண்டும். மாறாக இனவாதம், அடிப்படைவாதம், பிரிவினைவாதத்துடன் செயற்படுகளின் புலம்பெயர் தமிழர்களின் முன்னிலையிலேயே இந்த பேச்சை பேசியிருக்க வேண்டும் என்று நாங்கள் ஜனாதிபதிக்கு நினைவுப்படுத்திக் கொள்கின்றோம்” என உதய கம்மன்பில தெரிவிக்கின்றார்.
பட மூலாதாரம், KAVINDA JAYAWARDANA
ராணுவ வெற்றி நிகழ்விற்கான ஜனாதிபதியின் பிரவேசம் குறித்து ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன கருத்து வெளியிட்டிருந்தார்.
தனியார் ஊடகமொன்றுக்கு வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் வெளியிட்ட கருத்தை மேற்கோள்காட்டி, காவிந்த ஜயவர்தன கருத்து வெளியிட்டிருந்தார்.
”விஜித்த ஹேரத் வெளியிட்ட கருத்தில் எங்களுக்கு பிரச்னையொன்று உள்ளது. இந்த நிகழ்விற்காக அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது. தேசிய ராணுவ வெற்றி விழா கொண்டாட்டம், 2025 மே மாதம் 19ம் தேதி மாலை 16 மணிக்கு என குறிப்பிட்டு, அதில் கௌரவ பிரதி பாதுகாப்பு அமைச்சர் என அவரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அழைப்பிதழில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் பெயர் இல்லை. மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவின் தலைமையில் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படியென்றால், இந்த அழைப்பிதழை வெளியிட்டது யார் என்ற கேள்வி எழுகின்றது” என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன கேள்வி எழுப்புகின்றார்.
‘தமிழர்களை சமாதானப்படுத்த ஜனாதிபதி செயற்படுகிறார்’
பட மூலாதாரம், WIMAL WEERAWANDSA FACEBOOK
புலம்பெயர் தமிழர்களை சமாதானப்படுத்துவதற்காக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க செயற்பட்டு வருவதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச தெரிவிக்கின்றார்.
”அவர் இந்த நிகழ்விற்கு வர இருக்கவில்லை. எனினும், அவர் வரவில்லை என்பது முன்பே தெரியவந்தமையினால் சமூகத்திலிருந்து வெளியிடப்பட்ட அழுத்தங்கள் காரணமாக விருப்பமின்றி அவர் வருகைத் தந்தார். அவர் அந்த இடத்தில் நிகழ்த்திய உரையில் என்ன சொல்கின்றார். அதில் உரையில் தடை செய்யப்பட்ட பல சொற்கள் உள்ளன. ராணுவம் என்ற சொல் தடை செய்யப்பட்டுள்ளது. உயிர் நீத்த படையினர், உயிர் நீத்த படை உறுப்பினர்கள் என்றே கூறுகின்றார். மிகவும் மோசமான செயற்பாடு. வராதிருந்திருந்தால் அதை விட சிறந்ததாக இருந்திருக்கும்” என விமர்சித்துள்ளார் விமல் வீரவங்ச.
மேலும், “புலம்பெயர் தமிழர்கள் கோபமடைவார்கள் என்ற அச்சமே அதற்கான காரணம். அந்த அச்சத்தை மனதில் வைத்துக்கொண்டே இந்த உரையை நிகழ்த்தியிருந்தார். அடுத்த தடை செய்யப்பட்ட சொல். பிரிவினைவாதம், பயங்கரவாதம் என்ற சொல் எங்கும் இல்லை. எமது ராணுவத்தினர் 30 வருடங்கள் யாருடன் போராடினார்கள். கிளர்ச்சியாளர்களுடனான போராடினார்கள். போருக்காக போராடவில்லை. சமாதானத்திற்காக போராடினார்கள். அப்படியென்றால் பயங்கரவாதிகளும் சமாதானத்திற்காகவே போராடியுள்ளனர்.
தலதா மாளிகைக்கு தாக்குதல் நடத்தியது சமாதானத்திற்காக. ஸ்ரீமகா போதியில் இருந்த பக்தர்களை கொலை செய்தது சமாதானத்திற்காக. சமாதானத்திற்காக நன்றாக செய்துள்ளனர். வடக்கிலும், தெற்கிலும், அதிகாரத்திற்காக கிளர்ச்சி ஏற்பட்டுள்ளது என கூறுகின்றார். வடக்கில் கேட்கவில்லை. தெற்கில் எங்கே கிளர்ச்சி ஏற்பட்டுள்ளது. தெற்கில் கிளர்ச்சி ஏற்படுத்துவதற்காக தேவை யாருக்கும் கிடையாது.” என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச தெரிவிக்கின்றார்.
– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு