”எமது கடற்றொழிலாளர்களுக்கு மிக முக்கியமான இடமாக கச்சத்தீவு காணப்படுகின்றது. இந்த கச்சத்தீவை கேந்திரப்படுத்தி இன்று பாரிய கலந்துரையாடலொன்று எழுந்துள்ளது. இந்த கடல் எமது மக்களுக்கானது. எமது தீவுகள் எமது மக்களுக்கானது. எமது நிலப்பரப்பு எமது மக்களுக்கானது. எமது வானம் எமது மக்களுக்கானது. எந்தவொரு அழுத்தங்களுக்கும் அடிப்பணிய மாட்டோம் என சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன்.” என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவிக்கின்றார்.
யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தில் ஈடுபட்ட ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, மயிலிட்டி மீனவத்துறை முகத்தின் அபிவிருத்தி பணிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கடந்த முதலாம் தேதி கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி கச்சத்தீவு தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்தார்.
கச்சத்தீவு பற்றி தவெக மாநாட்டில் அதன் தலைவர் விஜயின் பேச்சு இலங்கையில் சலசலப்பை ஏற்படுத்தியது. சமூக வலைதளங்களில் சிங்களம் மற்றும் தமிழ் இளைஞர்கள் மத்தியில் மட்டுமின்றி இலங்கை அரசியல் மட்டத்திலும் அது விவாதிக்கப்பட, வரலாற்றில் முதன் முறையாக இலங்கை ஜனாதிபதி ஒருவர் கச்சத்தீவுக்கு விஜயம் செய்த நிகழ்வும் அரங்கேறியது.
கச்சத்தீவு குறித்து விஜய் என்ன பேசினார்? அதன் எதிரொலியாக இலங்கையில் என்ன நடந்தது?
பட மூலாதாரம், TVK
கச்சத்தீவு பற்றி விஜய் பேசியது என்ன?
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், தனது கட்சியின் இரண்டாவது மாநாட்டில் கச்சத்தீவு தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்தார்.
”எம்ம தமிழ்நாட்டு மீனவர்கள் கிட்டத்தட்ட 800 பேருக்கு மேல இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டிருக்கின்றார்கள். அதை கண்டிக்க எதையும் செய்ய சொல்லவில்லை. சின்னதா ஒன்னே ஒன்று மட்டும் செய்து கொடுங்க. இனிமேலாவது எங்களுடைய மீனவர்கள் பாதுகாப்பாக இருப்பதற்காக இந்த கச்சத்தீவைஇலங்கைகிட்ட இருந்து மீட்டு கொடுத்துருங்க. அது போதும்.” என தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்திருந்தார்.
விஜய் பேச்சுக்கு இலங்கை வெளிவிவகார அமைச்சர் பதில்
கச்சத்தீவு தொடர்பில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் வெளியிட்ட கருத்து இலங்கை மக்கள் மத்தியில் பல்வேறு கருத்தாடல்களை ஏற்படுத்தியிருந்தது.
தமிழர்கள் மாத்திரமன்றி, சிங்களவர்கள் மத்தியிலும் பிரபலமான விஜய், இவ்வாறு கருத்து வெளியிட்டமை இலங்கையில் பலத்த விவாதத்தை தோற்றுவித்திருந்தது.
இந்த நிலையில், விஜயின் கருத்து தொடர்பில் ஊடகவியலாளர்கள், வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத்திடம், கேள்வி எழுப்பியிருந்தனர். இலங்கை வசம் உள்ள கச்சத்தீவை இந்தியாவுக்கு ஒருபோதும் வழங்க முடியாது என வெளிவிகார அமைச்சர் விஜித்த ஹேரத் கடந்த மாதம் 27-ஆம் தேதி தெரிவித்திருந்தார்.
‘கச்சத்தீவு என்பது இலங்கைக்கு சொந்தமான ஒரு தீவு. அது எந்த விதத்திலும் மாறாது. தென் இந்தியாவில் தேர்தல் காலம் என்பதனால் வாக்குகளை பெறுவதற்காக ஒவ்வொரு கருத்துகளை கூறுவார்கள். இது முதலாவது சந்தர்ப்பம் இல்லை. இதுக்கு முன்னரும் தேர்தல் மேடைகளில் இவ்வாறு கூறி இருந்தார்கள். இந்த தேர்தல் மேடைகளில் கூறுவது நிறைவேறாது. தேர்தல் மேடையில் விஜய் கூறியதை நானும் பார்த்தேன். அதை பெரிதுபடுத்த தேவை இல்லை. மத்திய அரசாங்கம் அல்லது இராஜதந்திர ரீதியில் இவ்வாறு ஒன்றும் நடக்கவில்லை. அன்றும் இன்றும் என்றும் கச்சத்தீவு இலங்கை வசமே காணப்படும்.’ என இலங்கை வெளிவிகார அமைச்சர் விஜித்த ஹேரத் குறிப்பிட்டார்.
பட மூலாதாரம், PMD SRI LANKA
கச்சத்தீவு சென்ற இலங்கை ஜனாதிபதி
இதன் பின்னணியில், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவும் அது தொடர்பில் இந்த கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கருத்தை வெளியிட்டிருந்தார். கச்சத்தீவு குறித்து கருத்து வெளியிட்டது மாத்திரமன்றி, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க கச்சத்தீவுக்கு கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டிருந்தார்.
கச்சத்தீவுக்கு அரசத் தலைவர் ஒருவர் விஜயம் மேற்கொண்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி, அங்கிருந்து கடற்படைக்கு சொந்தமான படகில் கச்சத்தீவுக்கு சென்று கச்சத்தீவு தொடர்பில் ஆராய்ந்திருந்தார்.
கச்சத்தீவு விஜயத்தில் ஜனாதிபதி சொல்ல வருவது என்ன?
கச்சத்தீவு விஜயத்தின் ஊடாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க என்ன சொல்ல வருகின்றார் என்பது தொடர்பில் மூத்த பத்திரிகையாளர் ஆர்.சிவராஜாவிடம், பிபிசி தமிழ் வினவியது.
”கச்சத்தீவு தொடர்பில் இந்திய அரசியல்வாதிகள் அல்லது தமிழக அரசியல்வாதிகள் என்ன தான் சொன்னாலும், அவர்களின் கோரிக்கை எந்த வகையிலும் நிறைவேற்றப்பட மாட்டாது என்பதை தான் அவர் நேரடியாகவே சொல்ல வருகின்றார். தானே அந்த இடத்திற்கு சென்று தானே விஜயம் செய்து, அது இலங்கையின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதி என்பதை அவர் நிரூபிக்க முயல்கின்றார். அங்கு சென்றமையின் ஊடாக பாதுகாப்பு உறுதிப்படுத்தலையும், கச்சத்தீவு எங்களுக்கு தான் சொந்தம் என்பதையும், அது எங்களின் கட்டுப்பாட்டில் தான் இருக்கின்றது என்பதையும் நாங்கள் நினைத்த நேரம் செல்லலாம் என்ற கருத்தையும் கூறும் வகையிலேயே அவர் அங்கு சென்றார். ” என மூத்த பத்திரிகையாளர் ஆர்.சிவராஜா தெரிவிக்கின்றார்.
“மீனவப் பிரச்னைக்கு கச்சத்தீவை மீள பெற்று விட்டால் தீர்வு வரும் என்று தமிழகத்திலுள்ள அனைத்து அரசியல்வாதிகளும் நினைக்கின்றார்கள். ஆனால், அதை இவர் விட்டுக் கொடுக்கமாட்டார். தானே அதை கையாளுகின்றேன் என்ற செய்தியை சொல்கின்றார். அரசாங்கம் அமைதியாக இருக்கின்றது என்று நினைக்கின்றார்கள். அரசாங்கம் அமைதியாக இல்லை. அரசாங்கம் நேரடியாகவே இதை கண்காணித்து கொண்டிருக்கின்றது என்ற செய்தியை தான் இவர் சொல்கின்றார்.” எனவும் அவர் கூறுகின்றார்.
பட மூலாதாரம், SIVARAJA
படக்குறிப்பு, மூத்த பத்திரிகையாளர் ஆர்.சிவராஜா
விஜயின் பேச்சு எவ்வாறு தாக்கம் செலுத்தியுள்ளது?
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், கச்சத்தீவு தொடர்பில் வெளியிட்ட கருத்து இலங்கை அரசியலில் எவ்வாறான தாக்கத்தை செலுத்தியுள்ளது என்பது குறித்தும் மூத்த பத்திரிகையாளர் ஆர்.சிவராஜா, பிபிசி தமிழுக்கு தெளிவூட்டினார்.
”ஸ்டாலினை பொறுத்தவரையில் அவர் அடிக்கடி கச்சத்தீவு தொடர்பில் கருத்து வெளியிட்டு வருகின்றார். அதேபோன்று தான எடப்பாடி பழனிசாமியும் கருத்து வெளியிடுகின்றார். ஆனால் விஜயை பொறுத்தவரையில் அவர் கூறிய கருத்து இளைஞர்கள் மத்தியில் சிந்தனையை தூண்டியுள்ளதாக இலங்கை அரசாங்கம் கருதுகின்றது. விஜய்க்கு இந்தியாவில் எவ்வளவு ஆதரவு இருக்கின்றதோ? அதேபோன்று இலங்கையின் தமிழ், சிங்கள இளைஞர்கள் மத்தியிலும் பெருமளவான ஆதரவு இருக்கின்றது. ஆகவே, விஜயின் அந்த கருத்து வலுவாக எடுபடும் என அரசாங்கம் நம்புகின்றது. இந்த பிரச்னைக்கு விரைவாக முற்றுப் புள்ளி வைக்கலாம் என இலங்கை அரசாங்கம் எண்ணியுள்ளது.” எனவும் அவர் குறிப்பிட்டார்.
பட மூலாதாரம், PMD SRI LANKA
ஜனாதிபதியின் கச்சத்தீவு விஜயம் – அரசாங்கம் என்ன சொல்கின்றது?
கச்சத்தீவு பகுதியில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும் இலங்கை மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலேயே ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் இந்த விஜயம் அமைந்திருந்ததாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளதாக அவரது ஊடக செயலாளர் க.கிருஷாந்தன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீனவர்களின் பாதுகாப்பு, அவர்கள் எதிர்நோக்கும் பிரச்னைகள் மற்றும் அந்த பகுதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய மேம்பாட்டு திட்டங்கள் தொடர்பில் ஜனாதிபதி ஆராய்ந்துள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.
கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு ஆகிய பகுதிகளை ஒன்றிணைத்து சுற்றுலா திட்டமொன்றை மேற்கொள்வதற்கான சாத்தியப்பாடுகள் தொடர்பிலும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இதன்போது ஆராய்ந்துள்ளார்.