• Tue. Mar 25th, 2025

24×7 Live News

Apdin News

”இலங்கை திரும்ப விரும்பும் ஈழ தமிழர்களுக்கு உதவ நடவடிக்கை” – வடக்கு மாகாண ஆளுநர் தகவல் | Eelam Tamils ​​living in refugee camps to Sri Lanka

Byadmin

Mar 23, 2025


ராமேசுவரம்: இந்தியாவில் இருந்து இலங்கை திரும்ப விரும்பும் ஈழ தமிழர்களுக்கு உதவ நடவடிக்கை எடுக்கப்படும் என்று வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் 1980களில் உள்நாட்டு போர் துவங்கிய போது அந்நாட்டு ராணுவம் மற்றும் சிங்களர்களால் தமிழர்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகினர். இதனால் இலங்கையிலிருந்து அகதிகளாக உலகம் முழுவதும் தமிழ் மக்கள் புலம்பெயரத் துவங்கினர். கடந்த 1983ம் ஆண்டு முதல் தமிழகத்துக்கு 3 லட்சத்து 4 ஆயிரத்து 269 இலங்கை தமிழர்கள் வந்துள்ளனர். இதில், அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஆணையம் (UNHCR), தமிழக மற்றும் இந்திய அரசின் மூலமாக சுமார் 2 லட்சத்து 12 ஆயிரம் பேர் இலங்கைக்கு திரும்பி சென்றுள்ளனர்.

தற்போதைய நிலவரப்படி தமிழகத்தின் 29 மாவட்டங்களில் உள்ள 108 மறுவாழ்வு முகாம்களில் சுமார் 60 ஆயிரம் இலங்கை தமிழர்கள் வசித்து வருகின்றனர். மேலும் 40 ஆயிரம் பேர் முகாம்களுக்கு வெளியே காவல் நிலையங்களில் பதிவு செய்து வசித்து வருகின்றனர். ஒடிசாவின் மல்கன்கிரியில் உள்ள அகதி முகாமில் 60 இலங்கை தமிழர்கள் தங்கி உள்ளனர்.

யாழ்பாணத்தில் நடைபெற்ற சிறப்பு கலந்துரையாடல் கூட்டம்

மேலும், இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு பின்னர் 2022 மார்ச் மாதத்திலிருந்து தமிழகத்திற்கு வந்த இலங்கையிலிருந்து 300க்கும் மேற்பட்டோர் அகதிகளாக வந்து மண்டபத்தில் உள்ள முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்தியாவில் அகதிகளாக உள்ள ஈழ தமிழர்களை இலங்கைக்கு திரும்ப அழைத்து வருவது தொடர்பான சிறப்பு கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன் தலைமையில் நடைபெற்றது.

வட மாகாண ஆளுநர் வேதநாயகன்

இந்த கலந்துரையாடலின் போது ஆளுநர் வேதநாயகன் கூறியதாவது, ”இந்தியாவில் தங்கியுள்ள ஈழ அகதிகளை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வர வேண்டும் என போர் முடிந்ததிலிருந்து சொல்லப்பட்டு வருகின்றது. அவர்கள் அனைவரும் இலங்கைக்கு திரும்பவேண்டும் என்பதே நம் அனைவரின் எதிர்பார்ப்பு. தற்போது தமிழகத்தில் முகாம்களில் உள்ளவர்களில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களை வலுக்கட்டாயமாக நாட்டுக்கு அழைத்துவரமுடியாது. வர விரும்புபவர்களுக்கு தேவையான உதவிகளை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்படும். நாடு திரும்புவர்களுக்கான உதவிகளை வழங்குவதுடன், அவர்கள் நாடு திரும்புவது தொடர்பில் இலங்கை மற்றும் இந்திய அரசாங்கங்கள் இடையே புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றை உருவாக்குவதற்கான கோரிக்கையும் அரசாங்களிடம் முன்வைக்கப்படும்,” என்றார்.

இந்த கலந்துரையாடலில் இலங்கை வடக்கு மாகாணத்தில் உள்ள யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் பல்வேறு அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.



By admin