• Thu. Oct 10th, 2024

24×7 Live News

Apdin News

இலங்கை தொடர்பான ஐ.நா. தீர்மானம் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம்! – அரசு நிராகரிப்பு

Byadmin

Oct 10, 2024


இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கான தீர்மான வரைவு வாக்கெடுப்பின்றி ஐ. நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 57 ஆவது கூட்டத் தொடரின் நேற்றைய அமர்வில் குறித்த தீர்மான வரைவு நிறைவேற்றப்பட்டது.

இதேவேளை, எந்தவொரு இறையாண்மையுள்ள அரசாலும் அதன் அரசமைப்புக்கு முரணான மற்றும் அதன் உள்நாட்டு சட்டச் செயல்முறைகளின் அர்ப்பணிப்பை முன்கூட்டியே தீர்மானிக்கும் வெளிப்புறப் பொறிமுறையைக் கட்டாயமாகத் திணிக்க முயல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் கூட்டத் தொடரில் நேற்று சமர்ப்பித்த அறிக்கையில் இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி இதனைத் தெரிவித்துள்ளார்

அவர் மேலும் குறிப்பிட்டதாவது:-

“குறிப்பிட்ட தீர்மானத்தின் [57/எல்.1] நகல் வடிவம் ஐக்கிய நாடுகள் தீர்மானத்தின் மூலம் வழங்கப்பட்ட ஆணையை மேலும் நீடிக்கின்றது.

மனித உரிமை ஆணைக்குழுவின் தீர்மானத்தையும் (51/1) அதற்கு முந்தைய தீர்மானத்தையும் (46/1) இலங்கை நிராகரித்துள்ளது.

இந்தத் தீர்மானத்தின் மூலமே ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்துக்குள் ஆதாரங்களைச் சேகரிக்கும் பொறிமுறை ஏற்படுத்தப்பட்டது.

நாங்கள் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையிலிருந்து எங்களை விலக்கிக்கொள்கின்றோம். அதற்கான காரணங்களை ஏற்கனவே சமர்ப்பித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளோம்.

தொடர்புபட்ட நாடு என்ற அடிப்படையில் இலங்கையின் சம்மதம் இன்றியே  51/1 தீர்மானம் சமர்ப்பிக்கப்பட்டது. வாக்கெடுப்பின்போது உலக நாடுகள் அந்தத் தீர்மானம் குறித்து பிளவுபட்டிருப்பது வெளிப்பட்டது.

இதன் காரணமாக அந்த  51/1  தீர்மானத்தின் மூலம் வழங்கப்பட்ட ஆணையை மேலும் நீடிக்கும் தீர்மானம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் பொது உடன்பாடு அற்றது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்துக்குள் ஆதாரங்களைச் சேகரிக்கும் பொறிமுறையை ஏற்படுத்துவது முன்னர் ஒருபோதும் இடம்பெறாத விடயம்.

எந்தவொரு இறையாண்மையுள்ள அரசாலும்  அதன் அரசமைப்புக்கு முரணான மற்றும் அதன் உள்நாட்டு சட்ட செயல்முறைகளின் அர்ப்பணிப்பை முன்கூட்டியே தீர்மானிக்கும் வெளிப்புறப் பொறிமுறையைக் கட்டாயமாகத் திணிக்க முயல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.” – என்றார்.

By admin