இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் வரும் நவம்பர் மாதம் 14ஆம் தேதி நடக்கவிருக்கிறது. இந்தத் தேர்தல் தொடர்பாக நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள் என்னென்ன?
இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் சமீபத்தில் முடிவடைந்த நிலையில், புதிய ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க தேர்வுசெய்யப்பட்டார். அப்போது இருந்த நாடாளுமன்றத்தில் அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்திக்கு மூன்று இடங்கள் மாத்திரமே இருந்ததால், புதிய சட்டங்களை இயற்றுவதில் சிக்கல் இருந்தது.
இந்நிலையில், தான் ஜனாதிபதியாக பதவியேற்ற அடுத்த நாளே, அதாவது செப்டம்பர் 25ஆம் தேதியன்று நாடாளுமன்றத்தைக் கலைப்பதாக ஜனாதிபதி அறிவித்தார். நாடாளுமன்றத் தேர்தல் நவம்பர் 14ஆம் தேதி நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இந்தத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் அக்டோபர் 4ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 11ஆம் தேதி வரை நடைபெற்றது.
இலங்கை நாடாளுமன்றம்
இலங்கை நாடாளுமன்றத்தின் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 225. இவர்களில் 196 உறுப்பினர்கள் வாக்காளர்கள் மூலமாகவும் 29 உறுப்பினர்கள் தேசிய பட்டியல் என்ற வகையிலும் தேர்வு செய்யப்படுவார்கள். நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையைப் பெற குறைந்தது 113 இடங்கள் தேவை.
இந்தத் தேசியப் பட்டியல் என்பது அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்குக் கிடைக்கும் வாக்குகளின் அடிப்படையில் அமையும். தேர்தல் ஆணையக் குழுவானது இந்த 29 இடங்களை ஒவ்வொரு கட்சியும் பெற்ற வாக்கு சதவீதத்தின் அடிப்படையில் பகிர்ந்தளிக்கும்.
இலங்கையில் நிர்வாக ரீதியாக 25 மாவட்டங்கள் இருந்தாலும், அவை 22 தேர்தல் மாவட்டங்களாகவே பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு தேர்தல் மாவட்டத்திலும், மக்கள் தொகையைப் பொறுத்து வேறுபட்ட எண்ணிக்கையில் நாடாளுமன்ற இடங்கள் இருக்கின்றன. குறைந்தபட்சமாக திருகோணமலை தேர்தல் மாவட்டத்தில் 4 இடங்களும் அதிகபட்சமாக கம்பகா தேர்தல் மாவட்டத்தில் 19 இடங்களும் உள்ளன.
இப்படி தேர்வு செய்யப்படும் 225 நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகளாக இருக்கும்.
நாடாளுமன்றத்தில் குறைந்தது 113 இடங்களை பெறும் கட்சி அல்லது கூட்டணி ஆட்சியமைக்கும். இலங்கையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை அமலான பிறகு, ஜனாதிபதி அங்கம் வகிக்கும் கட்சியே பெரும்பாலான சந்தர்ப்பங்களில் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பெற்றுள்ளது. சில சந்தர்ப்பங்களில் வேறொரு கட்சி அதிக இடங்களைப் பெற்ற வரலாறும் இருக்கின்றது.
நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்கும் முறை
இலங்கையில் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்கும் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன.
நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குசீட்டில், கட்சிகளின் பெயர்களும் அவற்றின் சின்னங்களும் இடம்பெற்றிருக்கும். சுயேச்சையாகப் போட்டியிடுபவர்கள், ஒரு தேர்தல் மாவட்டத்தில் எத்தனை இடங்கள் இருக்கின்றனவோ, அத்தனை பேராக இணைந்து சுயேச்சைக் குழுவாகப் போட்டியிடலாம். ஒவ்வொரு சுயேச்சைக் குழுவுக்கும் சின்னங்கள் வழங்கப்பட்டிருக்கும்.
இதற்குக் கீழே, ஒரு தேர்தல் மாவட்டத்தில் எத்தனை ஆசனங்கள் இருக்கின்றனவோ அத்தனை எண்கள் அச்சிடப்பட்டிருக்கும். உதாரணமாக, வன்னி மாவட்டத்தில் 9 இடங்கள் எனில், 1 முதல் 9 வரையிலான எண்கள் அச்சிடப்பட்டிருக்கும். ஒவ்வொரு எண்ணும் ஒவ்வொரு வேட்பாளரைக் குறிக்கும். ஒவ்வொரு வாக்காளரும் மூன்று பேருக்கு விருப்ப வாக்களிக்க முடியும்.
முதலில் வாக்காளர் தனக்கு வழங்கப்பட்ட வாக்குச் சீட்டில், விரும்பும் கட்சியின் சின்னத்திற்கு முன்பாக தேர்வுசெய்வதற்கான குறியிட வேண்டும். அதன் பின்னர் வாக்குச் சீட்டின் கீழ் பகுதியிலுள்ள இலக்கங்களில், தான் விரும்பும் வேட்பாளருக்கான இலக்கத்தின் மீது விருப்பக் குறி இட வேண்டும்.
ஒரு வாக்காளர் ஒன்று அல்லது இரண்டு அல்லது மூன்று வேட்பாளர்களை தேர்வுசெய்யலாம்.
கட்சி எதையும் தேர்வுசெய்யாமல், வெறுமனே வேட்பாளர்களுக்கான எண்களை மட்டும் தேர்வுசெய்தால் அந்த வாக்கு செல்லாத வாக்காகக் கருதப்படும்.
ஆனால், கட்சியை மட்டும் தேர்வு செய்து, வேட்பாளர்கள் யாரையும் தேர்வுசெய்யாமல் இருந்தால், அந்த வாக்கு கட்சிக்கான வாக்காக கருதப்படும்.
ஒரு கட்சியைத் தேர்வுசெய்வதற்குப் பதிலாக 2 – 3 கட்சிகளைத் தேர்வுசெய்தாலோ, வேட்பாளர்களைத் தேர்வு செய்யும்போது மூன்று பேருக்கு அதிகமாகவோ தேர்வு செய்தாலோ அந்த வாக்கு செல்லாத வாக்காக கருதப்படும்.
தேர்தல் நடக்கும் நாளன்று, வாக்காளர்கள் காலை ஏழு மணி முதல் மாலை 4 மணிவரை வாக்குகளைச் செலுத்தலாம்.
வாக்கு எண்ணிக்கை
வாக்குப்பதிவு முடிவடைந்த பிறகு, வாக்குச் சாவடிகளில் இருந்து வாக்குப் பெட்டிகள் மாவட்ட ரீதியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கெண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு, வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்படும்.
முதலில் அரசு ஊழியர்களுக்கான தபால் வாக்குகள் எண்ணப்படும். அதற்குப் பிறகு, பிற வாக்கு சீட்டுக்களை எண்ணும் பணிகள் துவங்கும். அடுத்த நாள் மாலைக்குள் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுவிடும்.
சமீப காலங்களில் நடந்த நாடாளுமன்றத் தேர்தல்களிலேயே, இந்த நாடாளுமன்றத் தேர்தல் கூடுதல் கவனத்தைப் பெற்றிருக்கிறது.
இலங்கையின் பிரதான கட்சிகளைத் தவிர்த்து, மற்றொரு கட்சியைச் சேர்ந்த அநுர குமார திஸாநாயக்க ஜனாதிபதியாகியிருக்கும் நிலையில், இந்தத் தேர்தல் நடக்கிறது. நாடாளுமன்றத்திலும் பெரும்பான்மையை உறுதிப்படுத்தும் நோக்குடன் அநுர குமார திஸாநாயக்கவின் தேசிய மக்கள் சக்தி களத்தில் நிற்கிறது.
எனினும், தேசிய மக்கள் சக்திக்கு நாடாளுமன்ற பெரும்பான்மையை வழங்கக்கூடாது என்ற நோக்கில், பிரதான எதிர்கட்சிகள் தங்கள் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகின்றன.
இலங்கையின் நாடாளுமன்றம்
காலனியாதிக்கக் காலத்துக்கு முன்பாக இலங்கை ஒரு முடியாட்சி நாடாக இருந்தது. அதன் பின்னர் போர்த்துக்கீசியர், ஹாலந்து நாட்டவர், ஆங்கிலேயர் ஆகியோரது ஆதிக்கத்தின் கீழ், நிர்வாக மற்றும் அரசாங்க மறுசீரமைப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
கடற்கரையோரங்களில் இருந்த ஹாலந்து குடியேற்றங்களும் அதனைத் தொடர்ந்து கண்டி ராச்சியமும் 1815ஆம் ஆண்டில் பிரிட்டனின் ஆட்சியின் கீழ்வந்தது.
ஹோல்புறூக் – கெமரன் ஆணைக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் நிறைவேற்றுப் பேரவையும் சட்டவாக்கப் பேரவையும் உருவாக்கப்பட்டன. காலனித்துவ இலங்கையின் முதலாவது சட்டவாக்க சபைகள் 1833ஆம் ஆண்டு ஆளுநர் சர் ராபர்ட் ஹோட்டன் என்பவரால் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
நிறைவேற்றுப் பேரவையும் சட்டவாக்கப் பேரவையும் கொழும்பு காலி முகத்திடலில் கடலை நோக்கி அமைந்துள்ள பழைய நாடாளுமன்றக் கட்டிடத்துக்கு மாற்றப்படும் வரை தற்போது வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு இயங்கும் கோடன் பூங்காவிற்கு எதிரே உள்ள கட்டடத்தில்தான் கூட்டப்பட்டன.
தற்போது பழைய நாடாளுமன்றக் கட்டடம் என அழைக்கப்படும் கட்டடம் 1930ஆம் ஆண்டு ஜனவரி 29ஆம் தேதி அப்போதைய மகா தேசாதிபதி சர் ஹேபட் ஸ்டான்லி என்பவரால் திறந்து வைக்கப்பட்டது.
1982ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டேயிலுள்ள புதிய நாடாளுமன்றக் கட்டிடத் தொகுதிக்கு மாற்றப்படும்வரை சட்டமன்றம் இக்கட்டிடத்தில்தான் நடைபெற்றது.
இதற்கிடையில், 1944ஆம் ஆண்டு சோல்பரி ஆணைக் குழுவினரால் வெஸ்ட்மின்ஸ்டர் மாதிரி அறிமுகப் படுத்தப்பட்டது.
நாடாளுமன்றம், மகாராணியையும் (மகா தேசாதிபதியினால் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டார்) செனட் சபை, பிரதிநிதிகள் சபை ஆகிய இரண்டு சபைகளையும் கொண்டிருந்தது.
பிரதிநிதிகள் சபையில் 101 உறுப்பினர்கள் இருந்தனர். செனட் சபையில் 30 உறுப்பினர்கள் இருந்தனர். இவர்களில் 15 பேர் பிரதிநிதிகள் சபையினரால் தேர்வுசெய்யப்பட, 15 பேர் மகா தேசாதிபதியால் நியமிக்கப்பட்டனர். 1971ஆம் ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி செனட் சபை இல்லாமலாக்கப்பட்டது.
இலங்கை நாடாளுமன்றத்தின் பெயர் அரசியலமைப்பு திருத்தங்களின் மூலம் பலமுறை பின்வருமாறு மாற்றியமைக்கப்பட்டது:
1. 1833- 1931 சட்டவாக்கப் பேரவை (49 உறுப்பினர்கள்)
2. 1931-1947 ராஜ்ய சபை (61 உறுப்பினர்கள்)
3. 1947-1972 பிரதிநிதிகள் சபை (முதலில் 101 உறுப்பினர்களும் 1960க்குப் பிறகு 157 உறுப்பினர்களும் இருந்தனர்)
4. 1972-1978 தேசிய அரசுப் பேரவை (168 உறுப்பினர்கள்)
5. 1978 – இப்போதுவரை நாடாளுமன்றம் (225 உறுப்பினர்கள்).
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.