இலங்கை நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு நேற்று (நவம்பர் 14) நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, அன்றைய தினம் மாலை சுமார் 4 மணியளவில் வாக்கு எண்ணும் பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன.
புதிய ஜனாதிபதியாகப் பதவி ஏற்றிருக்கும் அநுர குமார திஸாநாயக்கவின் கட்சியான தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்றத் தேர்தலிலும் முன்னிலையில் உள்ளது.
வாக்கு எண்ணிக்கை நிலவரம்
தேசிய மக்கள் சக்தி (NPP) – 6,842,223 (106 ஆசனங்கள்)
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 1,966,875 (28 ஆசனங்கள்)
இலங்கைத் தமிழரசுக் கட்சி (ITAK) – 252,548 (3 ஆசனம்)
சர்வஜன அதிகாரம் (SB) – 177,954 – (0 ஆசனம்)
ஐக்கிய ஜனநாயகக் குரல் (UDV) – 83,488 (0 ஆசனம்)
வேறு கட்சிகள் – 917,989 (5 ஆசனம்)
தொகுதி ரீதியாக முதலில் அறிவிக்கப்படும் தேர்தல் முடிவுகள், பின்னர் மாவட்ட ரீதியாக அறிவிக்கப்படும். அதைத் தொடர்ந்து, சுயேச்சைக் குழுக்கள் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கைகள் அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இன்று (நவம்பர் 15), மொத்த முடிவுகளும் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வரலாற்றில் முதல் முறையாக தமிழர் பகுதிகளில் தேசியக் கட்சி முன்னிலை
இலங்கையின் தமிழர் பகுதிகளில் இதுவரை காலம் தமிழ் அரசியல் கட்சிகள் முன்னிலை வகித்து வந்த நிலையில், வரலாற்றில் முதல் தடவையாக பெரும்பாலான தமிழர் பகுதிகளில் தேசிய கட்சியாக விளங்கும் புதிய ஜனாதிபதி அநுர குமாரவின் தேசிய மக்கள் சக்தி முன்னிலை வகிக்கிறது.
குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இதுவரை நடந்த அனைத்து தேர்தல்களிலும் தமிழ்க் கட்சிகளே வெற்றி பெறுவது வழக்கமானது.
எனினும், மத்தியை ஆட்சி செய்யும் கட்சியொன்று இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் பெரும்பாலான தமிழர் பகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது.
இந்த விடயம் தொடர்பாக செய்தியாளர் ரஞ்சன் அருண் பிரசாத்திடம் பிபிசி தமிழுக்காகப் பேசிய மூத்த பத்திரிகையாளர் ஆர்.சிவராஜா, “தமிழ் அரசியல்வாதிகள் மீதான விரக்தி மற்றும் அதிருப்தியை தமிழர்கள் இம்முறை தேர்தலின் மூலம் வெளிப்படுத்தியுள்ளனர். அத்துடன், தமிழர்கள் தற்போது மாற்றத்தை விரும்புவதாகவும்” கூறினார்.
மாற்றத்தை ஏற்படுத்த விரும்பிய தென்னிலங்கை மக்களோடு, வட, கிழக்கு தமிழ் மக்களும் அந்த மாற்றத்தை விரும்பியிருக்கிறார்கள் என்பதுதான் இந்தத் தேர்தல் முடிவுகளில் வெளிவந்த மிகவும் தெளிவான விடயம் என்கிறார் சிவராஜா.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில்கூட ஐக்கிய மக்கள் சக்திக்கு கணிசமான ஆதரவு வடக்கு, கிழக்கு தமிழர் பகுதிகளில் இருந்தாலும், இந்த நாடாளுமன்றத் தேர்தலில் அவர்கள் நேரடியாகவே தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவு வழங்கியுள்ளனர்.
இதுகுறித்துப் பேசிய, “இது, அவர்கள் மாற்றத்தை விரும்பியதைக் காட்டுகிறது. அடுத்தது, தமிழர் பிரதேசங்களில் உள்ள அரசியல் விரக்தி நிலைமையைக் காட்டுகிறது. அவர்கள் தமது பிரதிநிதிகளை ஏதோவொரு காரணத்திற்காக, அவர்கள் மீதுள்ள ஆத்திரத்தை, அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்கள்” என்றார்.
குறிப்பாக வடக்கில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க ஒரு வாரத்திற்கு முன்னர் சென்று ஆற்றிய உரை, அங்குள்ள மக்களின் மனங்களில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாகத் தான் கருதுவதாகக் கூறுகிறார் மூத்த பத்திரிகையாளர் சிவராஜா.
சஜித், ரணில் கட்சிகள் பாரிய பின்னடைவு
நாட்டின் பெரும்பாலான இடங்களில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி முன்னிலை வகிக்கிறது.
குறிப்பாக தமிழர் பகுதிகளில் இதுவரை காலம் தமிழ் கட்சிகள் வெற்றி பெற்று வந்த நிலையில், இம்முறை தேர்தலில் யாழ்ப்பாணம் உள்ளிட்ட தமிழர் பகுதிகளில் தேசிய கட்சி ஒன்று முன்னிலை வகிக்கிறது.
அத்துடன், தேசிய ரீதியில் செயற்படும் ஏனைய கட்சிகள் பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ளன.
குறிப்பாக கடந்த நாடாளுமன்றத்தில் பிரதான எதிர்கட்சியாக விளங்கிய சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியும் பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ளது.
நாட்டை பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீட்டதாகக் கூறப்படும் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணியும் பாரிய வீழ்ச்சி கண்டுள்ளது.
இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் எப்படி நடக்கும்?
இலங்கை நாடாளுமன்றத்தின் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 225. இவர்களில் 196 உறுப்பினர்கள் வாக்காளர்கள் மூலமாகவும் 29 உறுப்பினர்கள் தேசிய பட்டியல் என்ற வகையிலும் தேர்வு செய்யப்படுவார்கள். நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையைப் பெற குறைந்தது 113 இடங்கள் தேவை.
தேசியப் பட்டியல் என்பது அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்குக் கிடைக்கும் வாக்குகளின் அடிப்படையில் அமையும். தேர்தல் ஆணையக் குழுவானது இந்த 29 இடங்களை ஒவ்வொரு கட்சியும் பெற்ற வாக்கு சதவிகிதத்தின் அடிப்படையில் பகிர்ந்தளிக்கும்.
இலங்கையில் நிர்வாக ரீதியாக 25 மாவட்டங்கள் இருந்தாலும், அவை 22 தேர்தல் மாவட்டங்களாகவே பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு தேர்தல் மாவட்டத்திலும், மக்கள்தொகையைப் பொறுத்து வேறுபட்ட எண்ணிக்கையில் நாடாளுமன்ற இடங்கள் இருக்கின்றன.
குறைந்தபட்சமாக திருகோணமலை தேர்தல் மாவட்டத்தில் 4 இடங்களும் அதிகபட்சமாக கம்பகா தேர்தல் மாவட்டத்தில் 19 இடங்களும் உள்ளன.
இப்படி தேர்வு செய்யப்படும் 225 நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவிக் காலம் ஐந்து ஆண்டுகளாக இருக்கும்.