பட மூலாதாரம், Getty Images
இலங்கையில் ஏற்பட்டுள்ள சூறாவளி தாக்கத்தினால் வரலாறு காணாத பெரும் பாதிப்புகளை நாடு எதிர்நோக்கி வருகின்றது.
இதன்படி, நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்தங்களினால் 90-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன், 100க்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளனர்.
வீடுகள் உள்ளிட்ட கட்டடங்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல்கள் தொடர்ச்சியாகத் திரட்டப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில், சுமார் 1000க்கும் அதிகமான கட்டடங்கள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இடர் முகாமைத்துவ நிலையத்தின் அறிக்கையில் பாதிப்புகள் தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும், பாதிப்புகளின் அளவு நொடிக்கு நொடி அதிகரித்து வருகின்றது.
மலை சரிந்து எங்கள் கிராமத்தையே புதைத்தது’
“மதியம் 1:30 மணியளவில் என் தந்தை எனக்கு போன் செய்தார். மக்கள் தூங்கிக் கொண்டிருந்தபோது நிலச்சரிவு ஏற்பட்டது. இப்போது பல குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் எங்கள் வீட்டில் கூடியுள்ளனர்” என்று பிபிசி சிங்கள சேவையிடம் தெரிவித்துள்ளார் ரம்போடா கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் யோஹன் மலக. இவர் கொழும்பில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார்.
“ரம்போடா கிராமத்திற்கு மேலே உள்ள மலையில் நிலச்சரிவு ஏற்பட்டது. அந்த மலை சரிந்து விழுந்து எங்கள் கிராமத்தையே புதைத்துவிட்டது” என்று கூறிய அவர், “நுவரெலியா சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டதாக செய்தி வந்தது. சிறிது நேரத்திற்கு முன்பு, ஒரு பெண்ணின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது, அந்தப் பக்கத்தில் உள்ளவர்கள் குறைந்தது 10 அல்லது 15 பேர் கொல்லப்பட்டதாகச் சொல்கிறார்கள்.”

“சில வீடுகளையும் கண்டுபிடிக்க முடியவில்லை. இடிந்து விழுந்த வீட்டில் இரண்டு சிறுமிகள் சிக்கிக் கொண்டுள்ளனர். அவர்களைக் காப்பாற்றவோ அல்லது வேறு ஏதும் செய்யவோ வழி இல்லை. என்ன நடந்தது என்பதைக் கண்டுபிடிக்க வழி இல்லை” என்றார் யோஹன் மலக.
தொடர்ந்து பேசிய அவர், “இரண்டு அல்லது மூன்று மாதக் குழந்தை உள்பட மூன்று பேர் வீட்டிலிருந்து தப்பிச் சென்றனர். குழந்தை இறந்துவிட்டதாக நாங்கள் அறிந்தோம். அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வழி இல்லை என்று குடும்பத்தினர் கூறினர். அனைத்து சாலைகளும் வெள்ளத்தில் மூழ்கிவிட்டன, எங்கும் செல்ல வழி இல்லை, அனைவரும் எங்கள் வீட்டில் சிக்கிக் கொண்டனர். அவரை மீட்க வந்தவர்கள்கூட இன்னும் வந்து சேரவில்லை.”
“இரண்டு குடும்பங்கள் எங்கும் செல்ல வழியில்லாமல் ஒரு தீவில் சிக்கித் தவிக்கின்றன. இதுவரை வீட்டிலிருந்து நாங்கள் கேள்விப்பட்டதெல்லாம் அவர்களைக் காப்பாற்ற வழி இல்லை என்பதுதான்” என்றும் அவர் பிபிசி சிங்கள சேவையிடம் கூறியுள்ளார்.

10 நாட்களில் 1000 மி.மீ மழை
எதிர்வரும் 24 மணிநேரத்தில் ஆறுகள் உள்ளிட்ட நீர்நிலைகளின் நீர்மட்டம் எதிர்பாராத அளவு வெகுவாக அதிகரிக்கக்கூடும் என நீர்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது.
இதனால், ஆறுகள் உள்ளிட்ட நீர்நிலைகளை அண்மித்து வாழும் மக்களை மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும், ஆபத்து நிலைமை காணப்படும் பட்சத்தில் உடனடியாக பாதுகாப்பான இடங்களை நோக்கி நகருமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
தற்போது நிலவி வருகின்ற அசாதாரண சூழ்நிலையையொட்டி, மலையகத்தின் எந்தவொரு பகுதியிலும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மண்சரிவு சம்பவங்கள் பதிவாகலாம் என தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மலையகத்தில் எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் 150 மி.மீ.க்கும் அதிகமான மழை பதிவாகுமாக இருந்தால், மண்சரிவு ஏற்படும் அபாயம் அதிகளவில் காணப்படும் என தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் ஊடகங்களுக்கு அறிவித்துள்ளது.
அதனால், மக்களை மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது. மலையகம் மற்றும் அதை அண்மித்த பகுதிகளுக்கு சுமார் 500 மி.மீ.க்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாகவும் நிறுவனத்தின் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 10 நாட்களில் மாத்திரம் 1000 மில்லீமீட்டருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.
பட மூலாதாரம், Getty Images
பேராதனை பல்கலைக் கழகத்திற்கு வரலாறு காணாத பாதிப்பு
தெற்காசியாவின் மிக முக்கியமான பல்கலைக் கழகமாகக் கருதப்படும் பேராதனை பல்கலைக் கழகம் வரலாறு காணாத அனர்த்தங்களை எதிர்நோக்கியுள்ளது.
பல்கலைக் கழகத்தை அண்மித்து ஊடறுத்துச் செல்லும் மகாவளி கங்கையின் நீர்மட்டம் சடுதியாக அதிகரித்ததை அடுத்து, பேராதனை பல்கலைக் கழகத்திற்குள் வெள்ள நீர் பிரவேசித்துள்ளது.
பல்கலைக் கழகத்தின் மைதானம், பல்கலைக் கழகத்தின் மிக முக்கியமான பல கட்டடங்கள் நீரில் மூழ்கியுள்ளதை எம்மால் அவதானிக்க முடிந்தது.
அத்துடன், பல்கலைக் கழகத்தை அண்மித்துள்ள பல வீதிகள் நீரில் மூழ்கியுள்ளமையால் போக்குவரத்துக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பல்கலைக் கழக வளாகத்திற்குள் காணப்பட்ட பல மரங்களும் முறிந்து வீழ்ந்துள்ளன.
அத்துடன், கண்டி நகரின் முக்கியமான பௌத்த விகாரையான கெட்டம்பே விகாரையும் நீரில் மூழ்கியுள்ளது. அதேவேளை, கண்டி நகரில் பல இடங்கள் வெள்ள நீரில் முழுமையாக மூழ்கியுள்ளன.
மேலும், கண்டி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மண்சரிவு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. கண்டி மாவட்டத்தின் ஹசலக்க பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக 5 பேர் உயிரிழந்துள்ளதுடன், 12 பேர் காணாமல் போயுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.
காணாமல் போனோரை மீட்கும் பணிகளில் முப்படையினர் ஈடுபடுத்தப்பட்டு இருப்பதுடன், இடர் முகாமைத்துவ அதிகாரிகளும் உதவிகளை வழங்கி வருகின்றனர்.
நுவரெலியா, நாவலபிட்டிய, கெலிஓயா, கம்பளை உள்ளிட்ட பல நகரங்களுக்குள் வெள்ள நீர் உட்பிரவேசித்துள்ளது. இதனால், பெரும்பாலான வர்த்தக நிலையங்கள் உள்ளிட்ட பல கட்டடங்கள் நீரில் மூழ்கியுள்ளன.
பட மூலாதாரம், Sri Lanka Air Force
மீட்புப் பணிகள் தீவிரம்
பொலன்னறுவை மனம்பிட்டிய பாலத்தின் மீது சிக்குண்டிருந்த 13 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
விமானப் படைக்குச் சொந்தமான பெல் 212 ரக ஹெலிகொப்டரின் மூலம் இவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு மீட்கப்பட்டவர்கள் பாதுகாப்பு நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, அநுராதபுரம் கலாவௌ ஆறு பெருக்கெடுத்ததை அடுத்து, தென்னை மரமொன்றில் ஏறியிருந்த ஒருவரை விமானப்படையினர் காப்பாற்றியுள்ளனர்.
மின்சாரம், தொலைபேசி துண்டிப்பு
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 20 வீதமானோருக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவிக்கின்றது.
பல்வேறு பகுதிகளில் மின்சார தூண்கள் உடைந்து வீழ்ந்துள்ளமை, மின்சார தூண்களின் ஊடாக வெள்ள நீர் உட்பிரவேசித்துள்ளமை, மண்சரிவு காரணமாக மின்சார தூண்கள் உடைந்துள்ளமை உள்ளிட்ட காரணங்களால் மின்சாரம் தடைப்பட்டுள்ளது.
அத்துடன், மின்சார துண்டிப்பை அடுத்து, பெரும்பாலான பகுதிகளில் கையடக்கத் தொலைபேசி இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மின்சாரம் மற்றும் தொலைபேசி இணைப்புகளை வழமைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் கூறினாலும், சில பகுதிகளுக்குள் அவர்களால் செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதை அறிய முடிகின்றது.
மின்சார விநியோகத்தை இயலுமான அளவுக்கு விரைவில் வழமைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

போக்குவரத்து பாதிப்பு
நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்தங்களினால் போக்குவரத்து நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
ரயில் சேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், பெரும்பாலான பேருந்து போக்குவரத்துகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.
ரயில் தண்டவாளங்களில் மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளதுடன், சில பகுதிகளில் ரயில் தண்டவாளங்களுக்கு மேல் வெள்ள நீர் பெருக்கெடுத்து இருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், வீதிகளில் மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளதை அடுத்து, பேருந்து போக்குவரத்துகளும் தடைப்பட்டுள்ளன.
முச்சக்கரவண்டி உள்ளிட்ட போக்குவரத்து சேவைகளும் பாதிக்கப்பட்டு இருப்பதால், பயணிகள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
இதேவேளை, இலங்கைக்கு வரும் சில விமானங்கள் இந்தியாவை நோக்கித் திருப்பி விடுவதற்கும் நேற்றைய தினம் தீர்மானிக்கப்பட்டு இருந்தது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு