பட மூலாதாரம், Getty Images
-
- எழுதியவர், பிபிசி சிங்கள சேவை
- பதவி,
-
பிரசுரிக்கப்பட்டது
-
வாசிக்கும் நேரம்: 1 நிமிடங்கள்
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அரவிந்த டி சில்வா மற்றும் அவரது மனைவியை உடனடியாகக் கைது செய்து, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு – கோட்டை நீதவான் பசன் அமரசேன இன்று (செப்டம்பர் 16) உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அரவிந்த டி சில்வாவின் மனைவியுடைய இரட்டை சகோதரி, ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் விமானக் கொள்வனவு மோசடியுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் உயிரிழந்த கபில சந்திரசேனவின் மனைவியான பிரியங்கா நியோமா ஆகியோருக்கு எதிரான வழக்கு ஒன்றின் பிணையாளர்களாகக் காணப்பட்ட அரவிந்த டி சில்வா மற்றும் அவரது மனைவி குறித்த பிணையாளர் வழக்கில் இருந்து விடுபடுவதற்காகத் தாக்கல் செய்திருந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில், அவர்கள் நீதிமன்றத்தில் முன்னிலையாகாததை அடுத்தே இந்தப் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் சந்தர்ப்பத்தில் இவர்கள் நீதிமன்றத்திற்கு முன்னிலையாகாதமை தொடர்பான விவரங்களை அறிவிக்காதமையினாலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கபில சந்திரசேனவின் மரணம்
ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவின் சடலம், அரவிந்த டி சில்வாவின் வீட்டிலிருந்து கண்டெடுக்கப்பட்டதுடன், இது தொடர்பில் அரவிந்த டி சில்வா மே மாதம் 12ஆம் தேதி கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் சாட்சி வழங்கியிருந்தார்.
அதைத் தொடர்ந்து, அரவிந்த டி சில்வாவின் மனைவி பிரியங்கா அனுஷ்கா விஜேநாயக்கவும் நீதிமன்றத்தில் முன்னிலையாகி சாட்சி வழங்கியிருந்தார்.