• Sat. Apr 5th, 2025

24×7 Live News

Apdin News

இலங்கை வந்தார் மோடி (படங்கள் இணைப்பு)

Byadmin

Apr 5, 2025


தாய்லாந்தின் தலைநகர் பாங்கொக்கில் இடம்பெற்ற பிம்ஸ்டெக் மாநாட்டில் கலந்துகொண்டுவிட்டு அங்கிருந்து இலங்கைக்கான 3 நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் அழைப்பையேற்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று வெள்ளிக்கிழமை இரவு 8.33 மணியளவில் இலங்கையை வந்தடைந்துள்ளார்.

வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், சுகாதாரம் மற்றும் ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, மீன்பிடி, நீரியல் மற்றும் கடல் வள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ், விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் கிரிஷாந்த அபேசேன மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ ஆகியோரால், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இராஜதந்திரிகள் குழுவினருக்கு விமான நிலையத்தில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.

இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையில் “நூற்றாண்டு நட்புறவின் வளமான எதிர்காலத்திற்கான உறுதிப்பாடு” என்ற எண்ணக்கருவை உறுதிப்படுத்தும் வகையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

நாளை சனிக்கிழமை காலை 9 மணிக்கு சுதந்திர சதுக்கத்தில் இந்தியப் பிரதமருக்கான வரவேற்பு நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

அதனைத் தொடர்ந்து ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார மற்றும் இந்திய பிரதமர் மோடிக்கிடையில் இருதரப்பு பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ளன.

பேச்சுவார்த்தைகளின் நிறைவில் இருவராலும் கூட்டு ஊடக அறிவித்தலும் வெளியிடப்படவுள்ளது.

இந்தியப் பிரதமர் இலங்கைக்கு விஜயம் செய்யும் நான்காவது சந்தர்ப்பம் இதுவென்பதுடன், இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையில் பொருளாதார, கலாசார மற்றும் வரலாற்று தொடர்புகளை மேலும் பலப்படுத்திக்கொள்வது, இரு நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்புக்களை பலப்படுத்திக்கொள்வதுமே இந்த அரச விஜயத்தின் நோக்கமாகும்.

இதன்போது வலுசக்தி, டிஜிட்டல் மயமாக்கல், பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் ஆகிய துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்  மற்றும்  இந்தியாவுடனான கடன் மறுசீரமைப்பு தொடர்பான ஒப்பந்தங்கள் ஆகியவை பரிமாறிக்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்திய ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்படும் சம்பூர் சூரிய மின் உற்பத்தி நிலையத் திட்டம், வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தைக் கட்டுப்படுத்தக்கூடிய 5,000 மெட்ரிக் தொன் தம்புள்ள களஞ்சிய வளாகத்தின் நிர்மாணம், 5,000 மதத் தலங்களின் கூரைகளில் சூரிய மின்கலங்களை நிறுவும் திட்டம் என்பவற்றை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மெய்ந்நிகர் ஊடாக ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

அதேபோல், இந்தியப் பிரதமர் அநுராதபுரம் ஸ்ரீ மகா போதிக்கு வழிபாடு மேற்கொள்ள இருப்பதுடன் இந்திய அரசின் அன்பளிப்புடன் நிறுவப்பட்ட மஹவ – அனுராதபுரம் ரயில் சமிக்ஞை கட்டமைப்பு மற்றும் மறுசீரமைக்கப்பட்ட ரயில் பாதையைத் திறந்து வைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்திய வௌிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பாதுகாப்புச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி உள்ளிட்ட இந்திய அரசின் சிரேஷ்ட அதிகாரிகள் குழுவும் இதில் கலந்துகொண்டுள்ளனர்.

வடக்கு கிழக்கு மற்றும் மலையகத்தைச் சேர்ந்த தமிழ் அரசியல் பிரதிநிதிகளும் இந்தியப் பிரதமர் மோடியைச் சந்தித்துப்  பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, இந்தியப் பிரதமரின் விஜயத்தை முன்னிட்டு விசேட போக்குவரத்து திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் நாளை சனிக்கிழமை காலிமுகத்திடல், சுதந்திர சதுக்கம், பத்தரமுல்லை அபேகம ஆகிய பகுதிகளை அவ்வப்போது மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், நாளைமறுதினம் ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் காலை 10 மணி வரை அனுராதபுரம் நகரம், ரயில் நிலைய வீதி மற்றும் ஸ்ரீ மகாபோதியை அண்மித்த பகுதிகளை அவ்வப்போது மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

By admin