படக்குறிப்பு, பிரதிவாதியை சுடப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி ஒரு புத்தகத்துக்குள் மறைத்து வைத்துக் கொண்டு வரப்பட்டதாகக் கூறப்படுகிறதுகட்டுரை தகவல்
குற்றப் பின்னணி உள்ள சட்டவிரோத கும்பல் ஒன்றின் தலைவர், இலங்கையில் நீதிமன்றத்தின் உள்ளேயே, வழக்கறிஞர் வேடமிட்ட ஒரு நபரால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
காவல்துறை அளித்த தகவலின்படி, தாக்குதல் நடத்திய நபர் ஒரு கைத்துப்பாக்கியைப் பயன்படுத்தியுள்ளார்.
ஒரு புத்தகத்தின் உள்ளே துளையிட்டு அந்த கைத்துப்பாக்கியை மறைத்து வைத்து நீதிமன்றத்திற்குக் கொண்டு வந்துள்ள ஒரு பெண், அதைத் துப்பாக்கிச்சூடு நடத்திய நபருக்கு வழங்கியுள்ளார். ஆனால் அந்தப் பெண் இன்னும் தலைமறைவாக உள்ளதாக அறியப்படுகிறது.
சட்டவிரோத கும்பலின் தலைவர் சஞ்சீவ குமார சமரரத்னே, வழக்கு விசாரணைக்கு ஆஜராக நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டபோது இந்தச் சம்பவம் நடந்துள்ளது. மேலும் அவர் பல்வேறு கொலை வழக்குகளில் சந்தேகத்திற்குரிய நபராக இருந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.
தலைநகர் கொழும்பில் நடந்த இந்தத் துப்பாக்கிச்சூடு, கும்பல்களுக்கு இடையிலான போட்டியின் தொடர்ச்சியாக நடந்துள்ள கொலைச் சம்பவங்களில் ஒன்று.
நாட்டில் வன்முறைச் சம்பவங்களில் ஈடுபடும் கும்பல்களை அடக்குவோம் என அதிகாரிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டுள்ள நிலையில், இது போன்ற சம்பவம் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
கணேமுல்லே சஞ்சீவ என்று பிரபலமாக அறியப்படும் அந்த சட்டவிரோதக் கும்பலின் தலைவர், 2023 செப்டம்பரில் கைது செய்யப்பட்டதில் இருந்து காவலில் இருந்தார்.
காவல்துறை தெரிவித்த தகவலின்படி, அவர் காவல்துறை அதிகாரிகளின் பாதுகாப்புடன் புதன்கிழமையன்று நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
பின்னர், சுடப்பட்டுக் காயமடைந்ததும் அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது, அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
துப்பாக்கிச்சூடு நடத்திய நபரால் சம்பவ இடத்திலிருந்து தப்பிக்க முடிந்தாலும், பின்னர் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். அதிகாரிகள் மற்றும் உள்ளூர் ஊடகங்கள் அவரை வெவ்வேறு பெயர்களில் குறிப்பிடும் நிலையில், அவர் பல்வேறு பெயர்களைப் பயன்படுத்தி வந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
மேலும் 25 வயதான பின்புர தேவகே இஷாரா செவ்வாண்டிதான் அந்தப் பெண் குற்றவாளி என்று காவல்துறை அடையாளம் கண்டுள்ளது. அதிகாரிகள், அந்தப் பெண்ணைப் பற்றிய தகவல் வழங்குபவருக்குப் பரிசு வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
இதையடுத்து, துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட இருவருக்கும் உதவியதாக சந்தேகிக்கப்படும் ஒரு காவலர் மற்றும் ஒரு வாகன ஓட்டுனரைக் கைது செய்துள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்
புதன்கிழமையன்று நடந்த நாடாளுமன்றக் கூட்டத்தில் வன்முறைச் சம்பவங்களில் ஈடுபடும் கும்பல்களைக் கட்டுப்படுத்துவது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் விவாதித்தனர். நாடாளுமன்ற எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் இதை “முக்கியமான பாதுகாப்புப் பிரச்னை” என்று குறிப்பிட்டார்.
டிசம்பரில் இத்தகைய குற்றச் செயல்களை ஒடுக்குவதாக உறுதியளித்திருந்த சுகாதாரம் மற்றும் மக்கள் தொடர்புத் துறை அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ, “ஒருங்கிணைக்கப்பட்ட நிழல் உலகக் கும்பல்களின் செயல்களை அரசு மிகுந்த முக்கியத்துவத்துடன் எடுத்துக்கொள்ளும்” என்று புதன்கிழமையன்று தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவம், நீதிமன்றத்தின் பாதுகாப்பு குறித்த கேள்விகளையும் எழுப்பியுள்ளது. அதிகாரிகள் தற்போது பாதுகாப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
துப்பாக்கிச்சூடு சம்பவத்தைத் தொடர்ந்து, குறிப்பிட்ட நபர்களை நீதிமன்றத்திற்கு அழைத்து வரும்போது ஆயுதமேந்திய காவலர்களை நிறுத்துவது உள்ளிட்ட புதிய பாதுகாப்பு நெறிமுறைகள் செயல்படுத்தப்படுகின்றன.
ஆயுதம் ஏந்திய பாதுகாப்புப் பணியாளர்கள் பொதுவாக நீதிமன்றத்தில் அனுமதிக்கப்படுவதில்லை என்று சட்டத்துறை அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார வியாழக்கிழமை தெரிவித்தார்.
காவல்துறையின் தரவுகளை மேற்கோள்காட்டிய ஏ.எஃப்.பி செய்தி முகமை, இந்த ஆண்டில் மட்டும் கும்பல்களுக்கு இடையிலான விரோதத்தின் காரணமாக ஏற்பட்ட தொடர் துப்பாக்கிச்சூடுகளில் குறைந்தபட்சம் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளதாகக் கூறியுள்ளது.