பட மூலாதாரம், Getty Images
இலங்கையில் 2026 ஜனவரி வரை மழையுடன் கூடிய வானிலை தொடரும் நிலைமை காணப்படுகின்றமையால், அந்த காலப் பகுதி வரை நிலக் கட்டமைப்பு உறுதியற்ற நிலையைத் தொடர்ச்சியாக எதிர்கொண்டு ஆபத்தை ஏற்படுத்தும் சூழல் ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்படுகின்றது.
இதை, யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தின் புவியியல் துறைத் தலைவர் பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா பிபிசி தமிழுக்கு தொலைபேசியூடாக வழங்கிய பிரத்யே பேட்டியில் குறிப்பிட்டார்.
இந்த காலப் பகுதிகளில் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.
திட்வா புயலின்போது நாட்டிற்குக் கிடைத்த அதிகளவிலான மழை காரணமாக மத்திய மலைநாட்டின் நிலக் கட்டமைப்பு உறுதியற்ற நிலைமையை எதிர்நோக்கியுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.
இந்த நிலப் பரப்பானது, வழமையான நிலைமைக்குத் திரும்பும் சூழல் தற்போதைய காலப் பகுதிக்கு இல்லை எனக் குறிப்பிட்ட அவர், எதிர்வரும் பெப்ரவரி மாதத்திற்குப் பின்னரான காலத்திலேயே அது வழமையான நிலைமைக்குத் திரும்பும் என நம்புவதாகவும் தெரிவித்தார்.
வடகிழக்கு பருவப் பெயர்ச்சி ஆரம்பம்
இலங்கை முழுவதும் வடகிழக்கு பருவப் பெயர்ச்சி நிலைமை படிப்படியாக அதிகரித்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதன்படி, வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், மாத்தளை மாவட்டத்திலும் பல சந்தர்ப்பங்களில் மழையுடன் கூடிய வானிலையை எதிர்பார்க்க முடியும் என திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 01 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் உள்ளதாகவும் திணைக்களம் குறிப்பிடுகின்றது.
மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லிமீட்டருக்கு அதிகமான ஓரளவு பலத்த மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
அத்துடன், மேல், மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் குருநாகல் மாவட்டத்திலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலைமை காணப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களால் ஏற்படக் கூடிய பாதிப்புகளைக் குறைத்துக் கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களிடம் வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
பட மூலாதாரம், Getty Images
புவிவியல் நிலைமையை மாற்றிய திட்வா புயல்
திட்வா புயலின் தாக்கத்தால் மலையகம் உள்ளிட்ட பல பகுதிகளில் புவியியல் நிலைமைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தின் புவியியல் துறைத் தலைவர் பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்தார். பிபிசி தமிழுக்கு தொலைபேசியூடாக வழங்கிய விசேட நேர்காணலின் போது அவர் இதைக் குறிப்பிட்டார். அவருடனான நேர்காணல் இனி…
கேள்வி: வடகிழக்கு பருவப் பெயர்ச்சி மழை எப்போது வரை தொடரும்?
பதில்: இந்த ஆண்டுக்கான வடகீழ் பருவம் ஒக்டோபர் மாதம் 20ஆம் தேதியில் ஆரம்பித்தது. ஜனவரி மாதம் 18ஆம் தேதி வரை அது தீவிரமான நிலைமையில் இருக்கும். இந்த வருடத்திற்கான வடகீழ் பருவம் ஜனவரி மாதம் 30ஆம் தேதி வரை நீடிப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.
கேள்வி: திட்வா போன்றதொரு புயலோ அல்லது தாழழுக்க நிலைமைகளோ அண்மைக் காலத்தில் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றனவா?
பதில்: உண்மையில் அது பற்றிச் சரியாகக் கூற முடியாது. ஏனென்றால், எதிர்வரும் காலங்களில் அதாவது இன்றிலிருந்து எதிர்வரும் 10 நாட்களுக்கு அவ்வாறான நிலைமை இல்லை. ஆனாலும், டிசம்பர் மாதம் 17ஆம் தேதிக்குப் பின்னரான காலத்தில் புதிய காற்று சூழற்சிகள் உருவாவதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன.
அந்த காற்று சுழற்சிகள் அப்போதிருக்கின்ற சூழல் மற்றும் கடல் மேற்பரப்பு நிலைமைகளைப் பொருத்தே, அடுத்த நிலைமை குறித்துச் சரியாக எதிர்வு கூற முடியும். ஆனால், அண்மித்த ஒரு 10 நாட்களுக்கு மிகப் பெரியதொரு காற்று சூழற்சி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாகவே இருக்கின்றது.

கேள்வி: இலங்கையில் ஏற்பட்ட மழையுடனான வானிலை காரணமாக புவிசார் நிலைமையில் பாரிய மாற்றமொன்று ஏற்பட்டுள்ளது. மண்சரிவுகள் ஏற்பட்டதன் ஊடாக நிலப்பரப்பில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மலையகப் பகுதிகளில் உள்ள நிலப் பரப்புகளில் உறுதியற்ற நிலைமையொன்று காணப்படுகின்றது. இந்த நிலையில், 50 மில்லிமீட்டரை போன்ற சிறிய மழைவீழ்ச்சிகள் பெய்தால்கூட பாரிய பாதிப்புகளை நாடு சந்திக்க வேண்டிய நிலைமை ஏற்படுமா?
பதில்: நிச்சயமாக… ஏனென்றால், ஏற்கெனவே ஒரு பெரியளவிலான மழை வீழ்ச்சி கிடைத்திருக்கின்றது. மத்திய மலைநாட்டினுடைய பல பிரதேசங்களில் மண் ஈரமான நிலைமையிலேயே காணப்படுகின்றது. அந்தப் பிரதேசங்களில் தொடர்ச்சியாக மழை கிடைத்துக் கொண்டிருக்கின்றபோது சிறியளவிலான மழை வீழ்ச்சிகூட, மண்ணின் கட்டமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்தும்.
இவ்வாறு மண்ணின் அமைப்பில் மாற்றம் ஏற்பட்டால் தொடர்பு இல்லாது போய், மீண்டும் சரிந்து விழக்கூடிய நிலைமை இருக்கின்றது. ஆகவே ஒரு மிகப் பெரியதொரு இடைவெளி கிடைத்து, கிட்டத்தட்ட ஒரு மாதம் அல்லது 20 நாள் இடைவெளி கிடைத்து, பூரணமான மழையற்ற நிலைமை ஏற்படும் பட்சத்தில் மாத்திரமே அந்த மண் இறுகும்.
ஆனால், அண்மித்த திட்வா புயலுக்குப் பின்னர் அத்தகைய நிலைமை இல்லை. தொடர்ச்சியாக மழை கிடைத்து வருவதால் எதிர்வரும் நாட்களிலும் மழை கிடைக்கின்றமையால் சுமார் 40 முதல் 50 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சி கிடைத்தாலே அது பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய நிலைமைதான் காணப்படுகின்றது.
பட மூலாதாரம், Getty Images
கேள்வி: எதிர்வரும் மழை வீழ்ச்சி காலப் பகுதியில் எந்தெந்த பிரதேசங்களில் எவ்வாறான பாதிப்புகளை நாம் எதிர்பார்க்கலாம்?
பதில்: அடுத்து வருகின்ற 14 நாட்களுக்கு, அதாவது 6ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை தொடர்ச்சியாக… அதற்குப் பிறகு 13 முதல் 17ஆம் தேதி வரையும், அதற்குப் பிறகு 22 முதல் 25ஆம் தேதி வரைக்கும் நுவரெலியா, கண்டி, இரத்தினபுரி, பதுளை, கேகாலை, மாத்தளை ஆகிய மாவட்டங்களுக்கு அவ்வப்போது தொடர்ச்சியாக மழை கிடைப்பதால், உண்மையில் இந்த ஆண்டு இறுதி வரை மிக ஆபத்தற்ற சூழ்நிலை இல்லை என்று கூறக்கூடிய நிலைமை இல்லை.
ஏனென்றால், தொடர்ச்சியாக மழை கிடைக்கும் என்பதுடன், ஏற்கெனவே பல பிரதேசங்களில் கனமழை கிடைத்திருப்பதாலும் அனைத்து நீர்த்தேக்கங்களும் அவற்றினுடைய முழு கொள்ளளவையும் எட்டியிருப்பதாலும், இனி கிடைக்கின்ற மழை வீழ்ச்சியிலுள்ள நீர் மேலதிக நீராக வெளியேறுகின்றமையாலும் இந்த மண் ஈரத்தன்மை தொடர்ச்சியாக நிலைத்திருக்கும்.
ஆகவே அவ்வாறு இருந்தால் அந்தப் பிரதேசங்களில் மண்சரிவு ஏற்படும் நிலைமையே காணப்படுகின்றது. குறிப்பாக அடுத்து வரும் சில நாட்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இரத்தினபுரி, கண்டி, நுவரெலியா, மாத்தளை, பதுளை பிரதேசங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தப் பிரதேசங்களுக்கு ஏற்கெனவே மிகப்பெரிய மழை வீழ்ச்சி கிடைத்திருப்பதாலும், தொடர்ந்தும் மழை வீழ்ச்சி கிடைத்து வருகின்றமையாலும் இந்த ஆபத்து தொடர்ந்து சில காலத்திற்கு நீடிக்கும் என்றே கூற முடியும். இன்னும் சிறப்பாகச் சொல்ல வேண்டுமெனில், வடகீழ் பருவக் காற்று நீடிக்கும் வரைக்கும் இந்தப் பிரதேசங்களுக்கு ஓரளவு மழை கிடைக்கும் என்பதால் இந்த நிலைமை காணப்படுகின்றது.
பட மூலாதாரம், Sampath Dissanayake/Sidesh Anuranga/BBC
கேள்வி: சாதாரணமாக இந்த நிலப்பரப்பு உறுதியான நிலப்பரப்பாக மாற்றம் பெறுவதற்கு எவ்வளவு காலம் தேவைப்படும்? அதற்கு எப்படியான ஒரு வானிலை நிலவ வேண்டும்?
பதில்: உண்மையில் திட்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கையை மீளக் கட்டியெழுப்புவதற்குப் பல மாதங்கள் எடுக்கும். ஆனால், புவியியல் ரீதியாக ஓரளவு உறுதித் தன்மை வாய்ந்ததான நிலைமை தோன்றுவதற்குக் குறைந்தது நான்கு அல்லது ஐந்து மாதங்களாவது தேவைப்படும்.
ஏனென்றால், நான் ஏற்கெனவே குறிப்பிட்டதைப் போன்று வடகீழ் பருவக் காற்று மழை ஜனவரி மாதம் வரைக்கும் நீடிக்கும் என்பதால் அதற்குப் பின்னர் பெப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே மாதங்களைப் பொருத்த வரைக்கும் மத்திய மலை நாட்டில் மிகக் குறைந்த மழை வீழ்ச்சி காலம் என்பதால் அந்தக் காலங்களில்தான் இது மீண்டும் உறுதியான ஒரு நிலைமைக்கு வரும். மண்சரிவு அபாயங்கள் மிக மிகக் குறைவான, வெள்ள அனர்த்தங்கள் மிக மிகக் குறைவான நிலைமைகள் இருக்கும்.
கேள்வி: மண்சரிவுகள் ஏற்பட்ட பகுதிகள் உறுதியான நிலைமையை அடைந்த பின்னர், அதே இடத்தில் பாரிய மழை வீழ்ச்சி பதிவாகுமாக இருந்தால் அதே இடத்தில் மண்சரிவு ஏற்படும் நிலைமைகள் அதிகளவில் இருக்குமா?
பதில்: நிச்சயமாக… ஏனென்றால், அந்தப் பிரதேசங்களினுடைய மண் அல்லது நீர் கட்டமைப்பு மற்றும் கல்லியல் அமைப்புகள் தொடர்ச்சியாகவே பலவீனமாக இருந்து கொண்டிருக்கின்றன. ஆகவே தொடர்ச்சியாக மழை கிடைத்தால் மீண்டும் மண்சரிவு ஏற்பட்ட பகுதிகளிலேயே மண்சரிவு ஏற்படுவதற்கான வாய்ப்பு இருப்பதை மறுக்க முடியாது.
இந்த பிரதேசங்களில் புவியியல் அமைப்புகளைப் பார்க்கும்போது ஆபத்தான பிரதேசங்களாகவே இருக்கும். அந்தப் பிரதேசங்களை விட்டு மக்களை முழுமையாக வெளியேற்றி மண்சரிவு அபாயமற்ற பிரதேசங்களில் குடியேற்றுவதுதான் மிகவும் சிறந்ததாகும்.
இந்த மழைக் காலத்தில் பாதிக்கப்பட்ட பிரதேசங்கள் தொடர்ச்சியாகவே பாதிக்கும் நிலைமையே காணப்படுகின்றது. ஆகவே, அங்கு போதுமான தடுப்பு ஏற்பாடுகள் இல்லாமல் மக்களை மீளவும் அங்கு குடியேற்றுவதென்பது, மீளவும் அவர்களை ஆபத்தில் ஆழ்த்தும் நிலைமையைத்தான் உருவாக்கும்.
பட மூலாதாரம், Sri Lanka Airforce
கேள்வி: தற்காலிக முகாம்களில் இருக்கும் மக்களை மீளவும் அவர்களின் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கைகள் சில பகுதிகளில் ஆரம்பிக்கப்பட்டு இருப்பதை அவதானிக்க முடிகின்றது. இதைத் தற்போதைய சூழ்நிலையில் சாதகமான நிலைமையாகப் பார்க்க முடியுமா?
பதில்: இல்லை. உண்மையில் அது ஒரு சாதகமான நிலைமை இல்லை. ஒரு புவியியலாளனாக அல்லது காலநிலை ஆய்வாளராக விஷயங்களை அனுமானித்தும் பகுப்பாய்வு செய்துமே இதுபோன்றதொரு முடிவை எடுக்க வேண்டும். ஏற்கெனவே அந்தப் பிரதேசங்களினுடைய மண் கட்டமைப்பு பலவீனமடைந்துள்ளன. பல பிரதேசங்களில் சேதமடைந்த கட்டமைப்பே காணப்படுகின்றது.
ஆறுகள் மற்றும் குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளில் இருந்து நீர் வெளியேற்றிக் கொண்டே இருக்கின்றன. தற்போதும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியாக மழை வீழ்ச்சி கிடைத்துக் கொண்டிருக்கின்றது. நேற்றைய தினம், வெறும் 24 மணிநேரத்திற்குள் அநுராதபுரத்தில் 76 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சி கிடைத்திருக்கின்றது.
இன்று மாத்தறை மாவட்டத்தில் கிட்டத்தட்ட 80 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சி கிடைக்கின்றது. ஆகவே மழை வீழ்ச்சி தொடர்ச்சியாக கிடைத்துக் கொண்டிருக்கின்ற சூழ்நிலையில் அவசரப்பட்டு மக்களை அவர்களின் சொந்த இடங்களுக்குச் செல்லுமாறு கூறுவது அவ்வளவு பொருத்தமற்றது.
ஒரு சரியான எதிர்வு கூறலை வளிமண்டலவியல் திணைக்களம் மேற்கொண்டு அதற்குப் பின்னர் மக்களை மீள் குடியமர்த்துவதே பொருத்தமானது. ஏற்கெனவே மண் மிகவும் பலவீனமான, ஈரப் பதனை கொண்டதாகக் காணப்படுகின்றது. இந்தச் சூழலில் தொடர்ச்சியாக மழையும் கிடைத்து வருகின்றது. ஆகவே அவசரப்பட்டு மக்களை மீண்டும் சொந்த இடங்களில் குடியமர்த்துவது தற்போதைய சூழ்நிலையில் உசிதமானதாக எனக்குத் தென்படவில்லை.

கேள்வி: நாட்டிலுள்ள எந்தெந்த நிலப் பகுதிகள் உறுதியற்ற நிலையில் காணப்படுகின்றன என்பதை புவியியலாளனாக உங்களால் கூற முடியுமா?
பதில்: உண்மையில், மத்திய மலைநாட்டினுடைய அனைத்துப் பிரதேசங்களும் உறுதியற்ற நிலையிலேயே காணப்படுகின்றன. ஏனென்றால், அங்குதான் மென்சாய்வுகள் காணப்படுகின்றன, குத்து சாய்வுகள் காணப்படுகின்றன. ஆகவே தெளிவாக வரையறுத்துக் கூற முடியாத அளவில் மலையகம் முழுவதுமே இந்த நிலைமை தோன்றியிருக்கின்றது.
ஏனென்றால், அண்மையில் திட்வா புயலால் கிடைத்த மழை வீழ்ச்சி மத்திய மலைநாட்டில் அனைத்துப் பகுதிகளுக்கும் கிடைத்திருக்கின்ற காரணத்தால், அனைத்துப் பிரதேசங்களும் மண்சரிவு அபாயத்தை எதிர்நோக்கும் பிரதேசமாகவே காணப்படுகின்றன.
கேள்வி: பொதுவாக, குறைந்தது எத்தனை மில்லிமீட்டர் மழை வீழ்ச்சி கிடைத்தால், அது ஆபத்தை ஏற்படுத்தும் என்று கூற முடியும்?
பதில்: குறைந்ததது 75 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சி கிடைத்தால்கூட இந்தப் பிரதேசங்களில் அதிகளவிலான அனர்த்தங்கள் ஏற்படக் கூடிய வாய்ப்புகளே காணப்படுகின்றன.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு