0
இலண்டனில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ராயல் மின்ட் கோர்ட் (Royal Mint Court) பகுதியில் சீனா தனது பிரம்மாண்டமான தூதரகத்தைக் கட்டுவதற்குத் திட்டமிட்டுள்ளது.
ஆனால், இந்தத் திட்டத்தை நிராகரிக்குமாறு தொழிற்கட்சி கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் 09 பேர், இங்கிலாந்து அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர்.
இங்கிலாந்துப் பிரதமர் சீனாவிற்கு பயணத்தை மேற்கொள்வதற்கு முன்னதாக தூதரகத்தை அங்கீகரிப்பதற்கான அறிவிப்பு வரக்கூடும் என்று தகவல்கள் வெளியாகிய நிலையிலேயே மேற்படி எதிர்ப்பு வெளிவந்துள்ளது.
குறிப்பிடத்தக்க பாதுகாப்பு அச்சங்களைக் காரணம் காட்டி, இந்த சர்ச்சைக்குரிய திட்டத்தை நிறுத்துமாறு கோரப்பட்டுள்ளது.
இந்தத் தூதரகம் அமையவிருக்கும் இடம், இலண்டனின் முக்கிய பொருளாதார மற்றும் தேசிய பாதுகாப்புத் தொடர்பான உள்கட்டமைப்புகளுக்கு மிக அருகில் உள்ளது. இந்தத் தூதரகத்தைப் பயன்படுத்தி, இலண்டன் நகரத்தின் தகவல் தொடர்புகளை சீனா இடைமறிக்கவோ அல்லது முடக்கவோ வாய்ப்புள்ளதாக எம்பி-க்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
அத்துடன், இலண்டனில் தஞ்சம் புகுந்துள்ள ஹாங்காங் பிரஜைகள் மற்றும் சீன எதிர்ப்பாளர்களைக் கண்காணிக்கவும், அவர்களை அச்சுறுத்தவும் இந்தத் தூதரகம் ஒரு தளமாகப் பயன்படுத்தப்படலாம் என்று எம்.பிக்கள் எச்சரிக்கின்றனர்.
இது தொடர்பில் 09 எம்.பிகள், சமூக செயலாளர் ஸ்டீவ் ரீடிற்கு ( Steve Reed) கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளனர்.
இதேவேளை , சீனாவின் பல்வேறு சிறிய அலுவலகங்களை ஒரே இடத்தில் ஒருங்கிணைப்பது பாதுகாப்பு ரீதியாக சாதகமானது என்று இங்கிலாந்து அரசாங்கம் குறிப்பிடுகின்றது. மேலும், இங்கிலாந்து பாதுகாப்பு அமைப்புகள் இதற்கு எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
இந்தத் திட்டம் குறித்து இங்கிலாந்து அரசாங்கம், ஜனவரி 20ஆம் திகதிக்குள் இறுதி முடிவை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், பெய்ஜிங்கில் உள்ள தனது தூதரகத்தை மறுசீரமைக்க சீனாவிடம் இங்கிலாந்தும் அனுமதி கோரியுள்ளது.
இலண்டனில் சீனாவின் குறித்த தூதரகம் கட்டி முடிக்கப்பட்டால், ஐரோப்பாவிலேயே ஒரு நாடு கொண்டுள்ள மிகப்பெரிய தூதரகமாக இது இருக்கும். இதற்காக சீனா 2018ஆம் ஆண்டில் £255 மில்லியன் செலவில் குறித்த நிலத்தை வாங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.