• Sun. Apr 5th, 2026

24×7 Live News

Apdin News

இலண்டனில் சுருதி லயா கேந்திராவின் ஓர் கர்நாடக இசை வேள்வி

Byadmin

Apr 4, 2026


இலண்டனில் உள்ள வாட்டஸ்மீட் கலை அரங்கில் சனிக்கிழமை 29.3.2026 அன்று இடம் பெற்ற சுருதி லயா கேந்திராவின் மாபெரும் இசை மாலை பல கர்நாடக இசைப் பிரியர்களின் மனதைக் கொள்ளை கொண்டது.

இதில் தென் இந்திய கர்நாடக சங்கீத புகழ் பெற்ற பாடகி விதுஷி குருதி விட்டல் அவர்களின் இசைக் கச்சேரி அன்றைய நாளுக்கு மகுடம் வைத்தால் போன்று இருந்தது. கணீர் என்ற காந்தக் குரலினால் அரங்கையே கட்டிப் போட்டார். சாத்தியமான ஜன ரஞ்சகமான உருப்படிகளை தேர்ந்தெடுத்து தனது ஆழமான இசை நுணுக்கங்களை அற்புதமாக வெளிப்படுத்தினார். இதற்கு அனுசரணையாக மிருதங்க வித்துவான் பரமசாமி கிருபாகரன் அவர்களும், வயலினி வித்துவான் A.G.A ஞானசுந்தரம் அவர்களும், கஞ்சிராவில் லண்டனில் வளர்ந்துவரும் இளம் கலைஞர் செல்வன் கஜன் குகேந்திரனும் சளைக்காது கச்சேரியை வேறு ஒர் கட்டத்திற்கு எடுத்துசென்றனர்.

இவரது கச்சேரி வீரிபோனி வர்ணத்துடன் ஆரம்பித்து நாட்டை மகா கணபதிம் க்ருதி, கற்பனா ஸ்வரத்துடன் விறு விறுப்படைத்தது. நீலாம்பரி இராகத்தில் அமைந்த ப்ரொவம்மா பங்காரு பொம்மா, பாபநாச சிவனின் பராத்பரா பக்தி பரவசத்துடன் அத்தனை நெகிழ்ச்சியாக மனதை வருடியது. அவர் நிறைவாகப் பாடிய அபங், பலரும் அறிந்த குறை ஒன்றும் இல்லை மற்றும் லால்குடி ஜெயராமன் அவர்களின் மாண்டு தில்லானா நல்லதொரு கம்பீரத்துடன் பார்வையாளர்களை நிறைவு வரை கட்டிப் போட்டது. ஒன்றரை மணி நேரம் கடந்து போனதே உணர முடியவில்லை.

இதனைத் தொடர்ந்து இலண்டனில் உள்ள இசை ஆசிரியர்களான ஸ்ரீ மதி சிவதர்ஷிகா, திலகசக்தி ஆரமுதன், ருக்சாயினி குருபரன், ரேகா பத்மநாபன், தர்மிலா ராஜேந்திரன், ஜெயந்தி சுரேஷ், ஹரிணி ரகு , வளர்மதி துரைசிங்கம், வாணி பிரதாபன், நாகமணி நாகராஜு, A.G.A ஞானசுந்தரம் போன்ற ஆசிரியர்களின் மாணவர்கள் தரமான இசையை விறு விறுப்பாகப் பாடியது பார்ப்பவர்களுக்கு நாம் இலங்கையிலேயே இருப்பது போன்ற ஓர் பிரம்மிப்பைக் கொடுத்தது.

இவை அனைத்துக்கும் ஆசிரியர் கிருபாகரன் அவர்களின் மாணவர்கள் மிகவும் நேர்த்தியாக மிருதங்க அனுசரணை வழங்கியது குருவின் அர்ப்பணிப்பை தெளிவாகக் காட்டியது.

புகழ் பெற்ற திறமையான தென் இந்திய இசை கலைஞர்களை இனம் கண்டு இத்தகைய கச்சேரிகளை இலண்டனில் ஒழுங்கு செய்வது பல இசை மாணவர்களுக்கு ஓர் பெரும் வர பிரசாதமே!

புலம் பெயர்ந்து இலண்டலின் வளர்த்து வரும் இளம் இசைக் கலைஞர்களுக்கு அவர்களது கேள்விஞான ஆற்றலையும், ஆளுமையையும் வளர்க்கவும், வெளிப்படுத்தவும் ஓர் அற்புதமான வாய்ப்பை அமைத்துக் கொடுக்கும் இத்தகைய நிகழ்வுகள் கலை தேவியின் ஆசியுடன் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுவது மன மகிழ்வைத் தருகிறது.

  • பிருந்தா – இலண்டன்

By admin