0
இலண்டனில் உள்ள பாலர் பாடசாலை ஒன்றில் நேற்று நள்ளிரவில் (31) திடீரென தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இலண்டன் நகரின் லூயிஷாம் (Lewisham) – கேட்ஃபோர்ட் (Catford) பகுதியில் இயங்கும் ருஷே கிரீன் பாலர் பாடசாலை (Rushey Green Nursery) வளாகத்திலேயே இந்தத் தீ சம்பவம் பதிவாகியுள்ளது.
மூன்று மாடிக் கட்டிடத்தில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்த மீட்பு மற்றும் தீயணைப்பு பணியாளர்கள் 60 பேர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தீ விபத்து காரணமாக சுற்றுப்புறங்களில் அதிகளவிலான புகை மூட்டம் சூழ்ந்ததால், அருகிலுள்ள குடியிருப்பாளர்கள் தங்களது ஜன்னல்கள் மற்றும் கதவுகளை மூடி வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டனர்.
இந்த தீவிபத்தில் யாருக்கும் காயம் அல்லது உயிர்சேதம் ஏற்படவில்லை என்றும் ஆனால், கட்டிடத்துக்கும் சொத்துகளுக்கும் ஏற்பட்ட சேதம் குறித்து அதிகாரிகள் மதிப்பாய்வு செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.