• Mon. Mar 16th, 2026

24×7 Live News

Apdin News

இலண்டனில் 18 நாட்களே ஆன சிசு உயிரிழப்பு: தாய் மீது கொலைக் குற்றச்சாட்டு!

Byadmin

Mar 16, 2026


இலண்டனில் 18 நாட்களே ஆன பச்சிளம் சிசு ஒன்று உயரமான இடத்திலிருந்து கீழே விழுந்து உயிரிழந்த சம்பவத்தில், அக்குழந்தையின் தாய் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இலண்டன், வெஸ்ட்மின்ஸ்டரில் (Westminster) உள்ள ஹார்ஸ்பெர்ரி வீதியைச் (Horseferry Road) சேர்ந்த 43 வயதுடைய ஜாஹிரா பிஜாவோன் (Zahira Byjaouane) என்பவர் மீது இந்தக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை காலை சுமார் 07:30 மணியளவில், ஒரு குடியிருப்புக் கட்டிடத்திலிருந்து குழந்தை கீழே விழுந்ததாக இலண்டன் மாநகர காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை தாய் மீது முறைப்படி குற்றம் சாட்டப்பட்டு, காவலில் வைக்கப்பட்டார்.

இந்தச் சம்பவம் ஒரு குடும்பச் சூழலில் நடந்திருக்கலாம் எனத் தாங்கள் கருதுவதாகவும் இருப்பினும், இது குறித்துத் தகவல் தெரிந்தவர்கள் யாராவது இருந்தால் காவல்துறையைத் தொடர்புகொள்ளுமாறும் துப்பறியும் தலைமை ஆய்வாளர் அலிசன் ஃபாக்ஸ்வெல் கோரிக்கை விடுத்துள்ளார்.

“ஒரு குழந்தையின் மரணம் என்பது எப்போதும் மிகவும் துயரமான நிகழ்வு” என்றும், இந்த மரணத்திற்கான சூழ்நிலைகள் குறித்து அவசர விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

குற்றம் சாட்டப்பட்ட ஜாஹிரா பிஜாவோன், இன்று திங்கட்கிழமை (16) வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

சம்பவம் நடந்த இடத்தில் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு நடத்திய நிலையில், பொதுமக்கள் அங்கு மலர்களையும் பொம்மைகளையும் வைத்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

By admin