1
இலண்டனில் உள்ள கிடோ (Kido) என்ற பாலர்பள்ளி மீது நடத்தப்பட்ட சைபர் தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்திய பெருநகர பொலிஸார், 17 வயது இளைஞர்கள் இருவரைக் கைது செய்துள்ளனர்.
தவறான கணினிப் பயன்பாடு மற்றும் மிரட்டிப் பணம் பறித்தல் ஆகிய குற்றச்சாட்டுகளில் இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த இருவரும் ஹார்ட்ஃபோர்ட்ஷையரில் உள்ள பிஷப்ஸ் ஸ்டோர்ட்ஃபோர்ட் பகுதியில் உள்ள குடியிருப்பு முகவரியைக் கொண்டுள்ளனர்.
சைபர் தாக்குதல் நடத்திய ஹேக்கர்கள், கிடோ பாலர்பள்ளியில் இருந்து சுமார் 8,000 குழந்தைகளின் புகைப்படங்கள், பெயர்கள் மற்றும் முகவரிகளைத் திருடியதாகக் கூறப்படுகிறது. திருடப்பட்ட தரவுகளில் பெற்றோர்கள் மற்றும் பராமரிப்பாளர்களுக்கான தொடர்பு விவரங்களும் அடங்கும்.
‘ரேடியன்ட்’ (Radiant) என்று தங்களைக் கூறிக்கொண்ட ஹேக்கர்கள், சுமார் £600,000 ஐ பிட்காயினாகக் கேட்டு, பள்ளியை மிரட்டியுள்ளனர்.
அத்துடன், ஹேக்கர்கள் சில குழந்தைகளின் படங்கள் மற்றும் சுயவிவரங்களை தங்கள் Dark இணையதளத்தில் வெளியிடத் தொடங்கினர். மேலும், கிடோ பணத்தைக் கொடுக்க அழுத்தம் கொடுப்பதற்காக, பெற்றோருக்கு நேரடியாக ஹேக் பற்றி அழைப்பு விடுத்தனர்.
இருப்பினும், சில நாட்களின் பின் திருடப்பட்ட அனைத்து தரவுகளையும் படங்களையும் தங்கள் Dark இணையதளத்தில் இருந்து அவர்களாகவே நீக்கியுள்ளனர்.
இந்தத் தாக்குதல் குறித்த அறிக்கைகள், பெற்றோர்கள் மற்றும் பராமரிப்பாளர்களுக்கு கணிசமான கவலையை ஏற்படுத்தும் என்பதைத் தாங்கள் புரிந்துகொள்வதாக பெருநகர பொலிஸின் பொருளாதார மற்றும் சைபர்கிரைம் தலைவர் வில் லைன் (Will Lyne) கூறினார்.
தாங்கள் ஒரு சைபர் சம்பவத்தை அடையாளம் கண்டு பதிலளித்ததாகவும், அத்துடன், என்ன நடந்தது என்பதை விசாரிக்க வெளிப்புற நிபுணர்களுடன் பணியாற்றியதாகவும் கிடோ பாலர்பள்ளியின் செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தினார்.
மேலும், தாங்கள் உடனடியாக குழந்தைகளின் குடும்பங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தெரிவித்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இதேவேளை, கைது செய்யப்பட்டவர் 22 வயதுடையவர் என்று பெருநகர பொலிஸார் ஆரம்பத்தில் கூறினர். ஆனால், அவ்விருவரும் 17 வயதுடையவர்கள் என்று பின்னர் தெளிவுபடுத்தினர்.