0
இங்கிலாந்தில் இலவச கொவிட் பூஸ்டர் தடுப்பூசிக்குத் தகுதியானோருக்கான புதிய வரையறைகளால் பெரிய அளவிலான குழப்பம் நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக பல மருந்தகங்கள் கோபத்திற்கு உள்ளாகும் நோயாளிகளால் மருந்தக ஊழியர்கள் அசௌகரியங்களை எதிர்கொள்ள வேண்டியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இலவச பூஸ்டர் தடுப்பூசி வழங்குவதற்கான தகுதிகள் தற்போது இறுக்கமாக்கப்பட்டுள்ளன. அதாவது 75 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள் மற்றும் பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட இளைய நோயாளிகளுக்கு மட்டுமே இலவச பூஸ்டர் வழங்கப்படுகிறது.
இந்த மாற்றங்கள் காரணமாக, முன்பதிவு செய்தும், தடுப்பூசி போட வந்தவர்களில் மூன்றில் ஒரு பகுதிக்கும் (ஒரு சில இடங்களில் பாதி வரைக்கும்) தகுதி இல்லை என்ற காரணத்தால் அவர்கள் திருப்பி அனுப்பப்படுவதாக, 10,000க்கும் மேற்பட்ட மருந்தகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகிற Community Pharmacy England (CPE) தெரிவித்துள்ளது.
முன்பதிவு செய்யும் தளத்தில் தகுதி பற்றிய தகவல்களைப் பலர் தவறவிட்டதாலும், தங்களுக்குத் தகுதி இருப்பதாக அவர்கள் கருதியதாலும் இந்தச் சிக்கல் எழுந்ததாக CPE-ன் NHS சேவைகள் இயக்குனர் அலாஸ்டேர் பக்ஸ்டன் தெரிவித்தார்.
நோயாளிகளுக்கு இதை விளக்குவது சிரமமாக இருப்பதாகவும், இது மன உளைச்சலையும், கோபத்தையும் ஏற்படுத்துவதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலைமை ஏற்றுக்கொள்ள முடியாதது என்று CPE விவரித்துள்ளதுடன், ஊழியர்கள் மீது கோபமான, விரக்தியடைந்த நோயாளிகள் வார்த்தைத் துஷ்பிரயோகத்தில் ஈடுபடும் சம்பவங்கள் பதிவாகியுள்ளன எனவும் குறிப்பிட்டுள்ளது.
இணையதளத்தில் உள்ள தகுதி வார்த்தைகள் மாற்றப்பட்டுள்ளதாகவும், மக்கள் முன்பதிவு செய்வதற்கு முன் தகுதியை இருமுறை சரிபார்க்குமாறு NHS இங்கிலாந்தால் வலியுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு, 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் மற்றும் நாள்பட்ட நோய்கள் உள்ளவர்களுக்கு இலவச தடுப்பூசி வழங்கப்பட்டது.
ஆனால், தற்போது, நீரிழிவு நோய், இதய நோய், சுவாச நோய்கள், ஆஸ்துமா மற்றும் கடுமையான மனநோய் போன்ற சில நாள்பட்ட நோய்கள் உள்ள பலரும் இலவச தடுப்பூசி பெறத் தகுதி இழக்கிறார்கள். மேலும், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் முன்னணி சுகாதாரப் பணியாளர்களுக்கும் இந்த இலையுதிர்காலத்தில் இலவச பூஸ்டர் வழங்கப்படாது.
இதேவேளை, இலவச கொவிட் பூஸ்டர் தடுப்பூசி பெறும் தகுதியை இழந்தவர்களில் ஒருவரான, Doncaster ஐ சேர்ந்த 71 வயதான போல் வில்லியம்சன் (Paul Williamson) இது அரசின் செலவைக் குறைக்கும் நடவடிக்கை போல் உணர்வதாகக் கூறினார். தனது பாதுகாப்பிற்காக, அவர் இப்போது தனிப்பட்ட முறையில் பணம் கொடுத்து தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளக் கருதுவதாகவும் கூறினார்.
மருந்தகங்களில் கொவிட் தடுப்பூசிகள் தனிப்பட்ட முறையில் பெறுவதற்கு நபர் ஒருவருக்கு சுமார் £100 செலவிடப்படுகிறது.