படக்குறிப்பு, ஆகஸ்ட் மாதம், புதின் தனது விசேஷமாக மாற்றியமைக்கப்பட்ட ஐஎல்-96 விமானத்தில் அலாஸ்காவிற்குப் பறந்து சென்றார்.கட்டுரை தகவல்
இந்தச் சந்திப்பு இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றாலும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அடுத்த இரண்டு வாரங்களில் அமெரிக்க அதிபர் டிரம்பைச் சந்திக்க ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்ட்டுக்குச் செல்வதானால், அவர் முதலில் சில தடைகளைத் தாண்ட வேண்டியிருக்கும்.
ஆகஸ்டில் நடந்த சந்திப்புக்காக புதின் அலாஸ்காவிற்குப் பயணம் செய்தபோது, அவரது அதிபர் விமானமான மாற்றியமைக்கப்பட்ட இலியுஷின் ஐஎல்-96 (Ilyushin Il-96) பயணிகள் விமானத்திற்கு அமெரிக்கா சிறப்பு அனுமதி வழங்கியது.
வலுவான பாதுகாப்பு அம்சங்களுடன் நான்கு எஞ்சின்கள் கொண்ட இந்த விமானம் ‘பறக்கும் கிரெம்ளின்’ (அதிபர் மாளிகை) என்று அழைக்கப்படுகிறது.
ரஷ்ய விமானங்கள் அமெரிக்காவின் வான்பரப்பிலும், ஐரோப்பிய ஒன்றியத்தின் வான்பரப்பிலும் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, புதின் புடாபெஸ்ட்டுக்குப் பறக்க முடிவு செய்தால், அவர் ஒரு ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாட்டின் வான்பரப்பில் பறக்க வேண்டுமானால், சிறப்பு அனுமதி பெற வேண்டும்.
உறுதியளிக்கும் ஹங்கேரி
இது முற்றிலும் சாத்தியம் என்றாலும், வெளிநாடுகளுக்கு அரிதாகவே பயணம் செய்பவரும், பல ஆண்டுகளாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குப் பயணிக்காதவருமான ஒரு ரஷ்ய அதிபருக்கு, நிலத்தால் சூழப்பட்ட ஹங்கேரி எளிதான இலக்கு அல்ல.
கிரெம்ளின்(ரஷ்ய அதிபர் மாளிகை) செய்தித் தொடர்பாளர் திமித்ரி பெஸ்கோவ் கூறுகையில், “இப்போதைக்கு, நிச்சயமாக, இது தெளிவாகத் தெரியவில்லை. இருப்பினும், இத்தகைய சந்திப்பை நடத்த அதிபர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.”
யுக்ரேன் மீதான முழு அளவிலான போருக்கு புதின் உத்தரவிட்ட சில நாட்களுக்குப் பிறகு, ஐரோப்பிய ஒன்றியம் அவரது மற்றும் வெளியுறவு அமைச்சர் லாவ்ரோவ் ஆகியோரின் சொத்துக்களையும் முடக்கியது.
27 ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் வான்பரப்பிலும் ரஷ்ய விமானங்கள் பறப்பதற்கு முழுமையான தடை விதிக்கப்பட்டது. ஹங்கேரியும் அதன் அண்டை நாடுகள் பலவும் நேட்டோ உறுப்பு நாடுகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
யுக்ரேனிய குழந்தைகளைச் சட்டவிரோதமாக ரஷ்யாவிற்குக் கடத்திச் சென்றதாகவும், இடம் மாற்றியதாகவும் புதின் மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) போர் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளது.
எனவே சிக்கல்கள் உள்ளன, இருப்பினும் ஹங்கேரி அனைத்தையும் தீர்க்க முடியும் என்று நம்புகிறது. ஹங்கேரி எப்படியும் ஐசிசி-யில் இருந்து வெளியேறும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
புதின் மற்றும் ஹங்கேரியின் பிரதமர் விக்டர் ஆர்பன் ஆகியோர் ஏற்கனவேத் திட்டமிடப்பட்ட உச்சி மாநாடு குறித்து தொலைபேசியில் விவாதித்துள்ளனர். ஹங்கேரியின் வெளியுறவு அமைச்சர் பீட்டர் சிஜ்ஜார்டோ செய்தியாளர்களிடம், “அவர் ஹங்கேரிக்குள் நுழைவதையும், வெற்றிகரமான பேச்சுவார்த்தைகளை நடத்துவதையும், பின்னர் வீடு திரும்புவதையும் நாங்கள் நிச்சயமாக உறுதி செய்வோம்” என்று கூறியுள்ளார்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, ஐரோப்பிய ஒன்றியத்தில் (EU) புதினின் மிக நெருங்கிய கூட்டாளிகளில் ஹங்கேரியின் விக்டர் ஆர்பனும் ஒருவர்.
எப்படி பயணிப்பார்?
ஐரோப்பிய ஒன்றியமும் தடைகளை உருவாக்க வாய்ப்பில்லை.
“யுக்ரேனுக்கு ஒரு நியாயமான மற்றும் நீடித்த அமைதியை” முன்னெடுத்துச் செல்லும் எந்தவொரு சந்திப்பும் வரவேற்கத்தக்கது என்றும், அதை நோக்கிய அதிபர் டிரம்பின் முயற்சிகளை அது ஆதரிக்கிறது என்றும் அதன் நிர்வாகக் குழு கூறியுள்ளது.
ரஷ்யா மீதான சமீபத்திய 19-வது பொருளாதாரத் தடைகளின் முக்கிய நோக்கம் ரஷ்யர்களை பேச்சுவார்த்தை மேசைக்குக் கொண்டு வருவதே என்று அது கூறுகிறது. மேலும், புதின் மீது பயணத் தடை இல்லை, சொத்துக்கள் முடக்கம் மட்டுமே உள்ளது என்பதையும் அது சுட்டிக்காட்டுகிறது.
ரஷ்யத் தலைவர் மாஸ்கோவிலிருந்து புடாபெஸ்டுக்கு எப்படிப் பறக்கப் போகிறார் என்பதே மிகப் பெரிய பிரச்னை. மிகவும் நேரடியான வழியான செர்பியன் ஏர்லைன்ஸ் டிக்கெட்டை வாங்கி பெல்கிரேடிற்குச் சென்று அங்கிருந்து ஹங்கேரிக்கு ரயிலை பிடிக்கும் முறையை அவர் பின்பற்றமாட்டார் என்பது தெளிவு.
அவர் தனது பாதுகாப்பை உறுதி செய்வதற்காகத் தனது ஐஎல்-96 விமானத்தை விரும்புவார். ஆனால், அதற்கு ஐரோப்பிய ஒன்றிய மற்றும் நேட்டோ உறுப்பு நாட்டின் வான்பரப்பைப் பயன்படுத்தவும், ரஷ்ய விமானங்களுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தடையை மீற அனுமதி பெறவும் வேண்டியிருக்கும்.
ஐரோப்பிய ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் அனிட்டா ஹிப்பர், “பயணத்தின் திசையைப் பொறுத்தவரை, உறுப்பு நாடுகள் விலக்கு அளிக்கலாம், ஆனால் அந்த உறுப்பு நாடுகள் தனித்தனியாக தரவேண்டும்” என்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
நேட்டோவும் இந்த விவகாரத்தை சம்பந்தப்பட்ட நாடுகளின் அதிகாரிகளிடம் பரிந்துரைத்துள்ளது. டிரம்ப் இதில் சம்பந்தப்பட்டுள்ளதால், அவர்கள் சம்மதிக்கலாம்.
பட மூலாதாரம், Anadolu via Getty Images
படக்குறிப்பு, புதினின் இலியுஷன் விமானம் “பறக்கும் கிரெம்ளின்” என்று குறிப்பிடப்படுகிறது.
விலக்கு அளிக்கப்பட்டாலும் கூட, வரைபடத்தைப் பார்த்தால் புதின் சுற்றுவழியில் செல்ல வேண்டியிருக்கும் என்பதைக் காட்டுகிறது. யுக்ரேன் நிச்சயமாக இல்லை, மாஸ்கோவுடனான மோசமான உறவுகள் காரணமாக போலந்தும் இருக்க வாய்ப்பில்லை.
கருங்கடலின் கிழக்குக் கடற்கரை மற்றும் துருக்கி வழியாக, பல்கேரியா மற்றும் செர்பியா அல்லது ருமேனியா வழியாக ஹங்கேரிக்குச் செல்லும் பாதை மிகவும் நேரடியானதாக இருக்கலாம்.
செர்பிய அதிபர் அலெக்சாண்டர் வுசிக் புதினை நன்கு அறிவார். மேலும், ஏர் செர்பியா ஐரோப்பிய ஒன்றிய வான்பரப்பில் மாஸ்கோவிற்கு நேரடி விமானங்களைக் கொண்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளான பல்கேரியா அல்லது ருமேனியா ஆகியவை சம்மதம் தெரிவிக்க வேண்டியிருக்கும், மேலும் அவை புதினின் விமானத்தை தங்கள் வான்பரப்பில் பாதுகாப்புடன் அழைத்துச் செல்ல வேண்டியிருக்கும்.
ருமேனியாவில் ஐரோப்பாவின் மிகப்பெரிய நேட்டோ தளம் அமைய உள்ளது. மேலும், பல்கேரியாவும் கிழக்கு எல்லையை வலுப்படுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாக ஒரு நேட்டோ தளத்தைக் கட்டமைத்து வருகிறது.
கருத்து கேட்பதற்காக பிபிசி இரண்டு நாடுகளின் வெளியுறவு அமைச்சகங்களைத் தொடர்பு கொண்டுள்ளது.
புதின் இன்னும் பாதுகாப்பாக இருக்க விரும்பினால், அவர் துருக்கி வழியாக, கிரீஸின் தெற்குக் கடற்கரையைச் சுற்றி, பின்னர் மாண்டினீக்ரன் வான்பரப்பு வழியாகச் செர்பியாவுக்கு மேல் பறந்து செல்லலாம். ஆனால், இது மிகவும் நீண்ட வழியாகும்.
புடாபெஸ்ட் எளிதான இடம் இல்லாவிட்டாலும், ஐரோப்பிய ஒன்றியத்தில் புதினின் நெருங்கிய நட்பு நாடாகவும், டொனால்ட் டிரம்பை நீண்ட காலமாக அறிந்தவராகவும் இருக்கும் விக்டர் ஆர்பனுக்கு இது மிகவும் பொருத்தமானதாக இருக்கும்.
அடுத்த வசந்த காலத்தில் தேர்தல்கள் வரவிருப்பதால், கருத்துக்கணிப்புகளில் பின்தங்கியிருக்கும் ஆர்பனுக்கு ஒரு உயர்மட்ட சர்வதேச உச்சி மாநாடு எந்தத் தீங்கையும் செய்யாது.
புடாபெஸ்ட் இடமாக அறிவிக்கப்பட்ட சில மணிநேரங்களுக்குள், ஆர்பன் புதினுடன் தொலைபேசியில் பேசினார். தனது ஃபேஸ்புக் பக்கத்தில், “தயாரிப்புகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன!” என்று அறிவித்தார்.
யுக்ரேனுக்கு ஐரோப்பிய ஒன்றியம் ஆதரவளிப்பதில் ஆர்பனுக்குச் சிறிதும் விருப்பமில்லை. மேலும், இந்த பேச்சுவார்த்தையில் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு எந்தப் பங்கும் இருக்காது என்பதை அவர் விரைவாகத் தெளிவுபடுத்தினார்.
“ஐரோப்பிய ஒன்றியம் போருக்கு ஆதரவாக இருப்பதால், அது இந்தப் பேச்சுவார்த்தையிலிருந்து விலக்கி வைக்கப்படுவது தர்க்கரீதியாக சரியானது,” என்று அவர் வெள்ளிக்கிழமை அன்று ஹங்கேரிய வானொலியிடம் கூறினார்.
அடுத்த வாரம் பிரஸ்ஸல்ஸில் நடக்கும் உச்சி மாநாட்டில் ஐரோப்பியத் தலைவர்கள் அவரைச் சந்திக்கும்போது வேறு கருத்துக்களைக் கொண்டிருப்பார்கள்.