யமுனா அனைத்து வேலைகளையும் முடித்து தூக்கத்திற்குப் போக மணி சாமம் 12:30 ஆகிவிட்டது. அவளுக்கோ குளிர் வேறு எலும்புகளூடு ஊடுருவி உடம்பு எல்லாம் குத்துவது போல உணர்வு. அதிகாலை எழவேண்டும், மகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டும். 6:00, 6:15, 6:30 என மூன்று அலாரங்களை கையடக்கத் தொலைபேசியில் வைத்துவிட்டு அயர்ந்து தூங்கிப்போனாள்.
ஒரு மணி நேரம் கூட தூங்கியிருக்க மாட்டாள் சுருண்டு படுத்திருந்த மகனின் இருமல் அவளை மீண்டும் எழச் செய்தது. இந்தக் குளிர் ஆரம்பித்தது முதல் எந்நேரமும் குழந்தைக்கு இருமலும் தடிமனும் தான். பாவம் குழந்தை தொடர்ந்து இருமிக் கொண்டிருக்க இளஞ்சூடான தண்ணீர் கொடுத்து மீண்டும் அவனைத் தூங்க வைக்க மணி இரண்டு ஆகி விட்டது.
அவளுக்கோ குழம்பிய தூக்கம் மீண்டும் வர மறுக்கின்றது. புரண்டு புரண்டு படுக்கின்றாள் . அவ்வப்போது இடைக்கிடை மீண்டும் குழந்தையின் இருமல். குழந்தையின் முதுகைத் தடவிவிட்டபடியே ஒருவாறு மீண்டும் தூக்கத்தில் ஆழ்ந்தாள் யமுனா . அவளுக்கு கனவுகள் கூட நல்லதாய் வருவது இல்லை. ஆறுமணி அலாரம். ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த அவளுக்குக் கேட்கவில்லை. 6:15 ஊஹும்… அதுவும் கேட்கவில்லை. 6:30 அலாரச் சத்தத்திற்கு அவளின் செல்ல மகள் தூக்கம் விட்டு எழும்பி அவளையும் எழுப்ப அந்தச்சத்தத்திற்கு மகனும் எழும்ப எப்படியோ கண்களைக் கசக்கிய வண்ணம் எழும்பி நேரத்தைப் பார்த்தாள். மணி 6:35. குளிர் தாங்க முடியவில்லை. மகனோ தூக்கச் சொல்லி அடம் பிடிக்கின்றான். பாவம் இரவு முழுவதும் இருமிய வண்ணம் இருந்தவன் அம்மாவின் அரவணைப்பைத் தேடுவான் தானே!

இரவிரவாக அலுவலக வேலை செய்து அதிகாலை மூன்று மணிக்கு படுக்கைக்குச் சென்ற நந்தனையும் எழுப்ப மனமில்லை. காலைக் கடன்களை முடிக்க வேண்டும். மகனோ இறங்க மறுத்து யமுனாவின் கழுத்தை இறுகப் பற்றிக் கொள்கிறான். அவனை மடியில் இருத்தியவண்ணமே காலைக் கடன்களை முடிக்க வேண்டிய நிலைமை அவளுக்கு . மகளோ குளிர் தாங்க முடியாமல் உடலைக் குறுக்கியபடி குந்தியிருக்கின்றாள். ஒருவாறு அவளைத் தூக்கியெழுப்பி, பல் துலக்கி, முகம் கழுவி முடித்தாயிற்று. இனி காலை உணவு. ஒன்றும் சமைத்தபடி இல்லை. குளிர்சாதனப்பெட்டியைத் திறந்து வெறுமையாய் இருக்கும் தட்டுக்களையே ஏக்கத்துடன் பார்த்த வண்ணம் நிற்க “குளிர், குளிர்” என யமுனா இன்னமும் தூக்கி வைத்திருக்கும் மகனின் மழலைக்கு சுயநினைவிற்கு வந்து பாலை எடுத்து வெளியில் வைத்து குளிர்சாதனப் பெட்டியை மூடுகின்றாள்.
“செல்லமணி சத்து மா சாப்பிடிவியோணை பிளீஸ்…”. நிலைமை புரிந்து மெதுவாய் சம்மதிக்கின்றாள் அவளின் ஆறு வயது மகள் . இந்த மாதம் தொடங்கி மூன்று வாரமாயிற்று. இரண்டு நாட்களைத் தவிர மற்றைய எல்லா நாட்களும் இந்த சத்து மா தான் தஞ்சம். ‘அது நல்ல சாப்பாடு. நார்ச்சத்து, புரதச்சத்து எல்லாம் இருக்கு’ என தனக்குத் தானே ஆறுதல் சொல்லிக் கொண்டாள் யமுனா . ஒரு தாயாக பிள்ளைக்கு சுவையாக ஏதேனும் செய்து கொடுக்க முடியவில்லையே எனும் ஆதங்கம் எப்போதும் தான் அவளுக்கு உள்ளது. உணவு ஊட்டிவிட வேண்டும் இல்லையேல் உண்ண மறுக்கும் மகள். ஓரிடத்தில் நிற்க வேறு மாட்டாள். பின்னால் திரிந்து திரிந்து ஊட்ட வேண்டும். சிலவேளை “சப்பிச் சாப்பிடு, வாய்க்கை வைச்சுக் கொண்டு இருக்காதை!” என கொஞ்சம் அதட்ட வேண்டும். ஒரு ஐந்தாறு வாய் உண்டபின், ஓங்காளத்துடன் உண்பதை கண்டும் காணாதது போல் இருக்கின்றாள் யமுனா .
இன்னும் இடுப்பில் செல்ல மகன். அவனுக்குப் பசி வந்திருக்கும். முதலில் மகளைப் பள்ளிக்கு அனுப்பியபின் மகனின் உணவைப் பற்றி யோசிப்போம் என எண்ணியவாறு அவசர அவசரமாக வேலைகளைச் செய்கின்றாள் . ஒரு சில மணி நேரமே தூங்கியபின் அவசர அவசரமாக எழுந்து அலுவலகத்திற்கு செல்ல ஆயத்தமாகும் நந்தன். கண்களில் சோர்வு நன்றாகத் தெரிகின்றது. நந்தனின் காலையுணவு ???? பாணுக்கு தகரத்தில் அடைத்த மீன் துண்டுகளைப் போட்டு ஏதோ தானே செய்து ‘அவுக் அவுக்’ என வாய்க்குள் திணித்தபடி காரின் திறப்பைத் தேடுகின்றான். வேலைப்பழு, தூக்கமின்மை, அதைவிட இந்த வயதிலேயே மறதி வேறு. ஓ…….மகளுக்குப் பள்ளியில் கொடுத்தனுப்பிய வீட்டுப்பாடம் செய்விக்கவில்லை. இப்ப அவசரத்தில் சொன்னாலும் செய்ய மாட்டாள். பரவாயில்லை ஏதாவதொரு காரணத்தை அவளே ஆசிரியருக்குச் சொல்லட்டும் என எண்ணியவாறு மகளின் தலையைத் தடவி விடுகின்றாள் யமுனா.
பள்ளிக்குத் தாமதமாகின்றது. தோய்த்து உலர்ந்த ஆடைகளை மடித்து வைக்கக் கூட நேரமிருக்கவில்லை. கசங்கிய சீருடையை கூடைக்குள் தேடி அப்படியே அவளுக்கு அணிவிக்கின்றாள் . “அம்மா யூனிபோம் கசங்கியிருக்கு”. “ஓம் குஞ்சு குளிர்தானே? மேலே கம்பளிச்சட்டை போட அது தெரியாது”. ‘நான் நல்ல பழக்கவழக்கங்களையே மகளுக்கு சொல்பவள். இது ஒன்றும் பெரிய விடயமில்லை. இதை விடு’ இது அவள் தனக்குத் தானே சொல்லும் இன்னோர் ஆறுதல். யமுனா தான் அணிந்திருந்த ஆடை கூட மாற்றாமல், தலை கூட சீவாமல் அப்படியே மகளை பாடசாலையில் விடுவதற்கு காரை எடுத்தாள். “அம்மா வகுப்பறை வரைக்கும் வராமல் வாசலில விட்டா நீங்க போவீங்க தானே செல்லம்?” அன்பாக மகளைக் கேட்டாள் . மகளும் சம்மதிக்க மகளின் தலையில் ஒரு முத்தம் கொடுத்து பாடசாலை வாயிலில் இறக்கி விட்டு வீடு வந்து சேர்ந்தாள்.
சிறிது நேரம் கூட ஓய்வெடுக்காமல், மகனை இடுப்பில் சுமந்தவாறு அங்குமிங்கும் சிதறி இருக்கும் பொருட்களை அந்தந்த இடத்தில் எடுத்து வைத்தாள். முதல் நாள் தோய்த்த துணிகளை வெயிலில் காயப் போட்டாள். குழந்தை சிறிது நேரம் தூங்கும்போது பாத்திரங்களை விரைவாக கழுவினாள். சமைப்பதற்கு என மரக்கறிகளை வெட்ட ஆரம்பிக்க, மீண்டும் இருமிக்கொண்டு குழந்தை அழ ஆரம்பித்தான். சோர்ந்து போய் இருந்த குழந்தையைக் கவனிப்பதிலேயே அந்நாள் நகர்ந்து கொண்டிருந்தது. எந்த முன்னேற்றமும் இல்லை. களைப்பும் பசியும் வாட்டிக்கொண்டிருந்தன. இரவு எட்டு மணி. ஒருவாறு குழந்தைகள் இருவரும் ஆழ்ந்த தூக்கத்திற்குச் சென்றுவிட்டார்கள். ‘தொப்’ என்று இருக்கையில் போய் அமர்ந்தாள்.
நந்தனிடமிருந்து தொலைபேசி அழைப்பு. காலையில் காரின் திறப்பைத் தேடும் போது இருந்த இரக்கம் இப்போது சிறிதளவும் அவளிடம் இருக்கவில்லை. மாறாக மனது என்ன உடம்பு முழுவதும் கோபம்.

“என்ன?” என்றாள் குரலில் கடினத்தைக் காட்டியவாறு.
மறுமுனையில் நந்தன் பவ்வியமாக “இல்லை இப்பத்தான் வேலை முடிஞ்சது,” என்றான்.
“ம்…. ”
“ஏன் ஒரு மாதிரி கதைக்கிறீங்கள்?” என நந்தன் அக்கறையோடு கேட்டான்.
“ஒரு மாதிரியும் இல்லை. நான் ஒழுங்காத்தான் கதைக்கிறன்,” என வேண்டா வெறுப்பாக பதிலளித்தாள்.
“எனக்கு இண்டைக்கு சரியான வேலை. ஒரு கொஞ்ச நேரம் கூட ஆறுதலா இருக்க முடியேலை. மத்தியானம் சாப்பிடக் கூட நேரம் கிடைக்கேலை. ஒருக்கா ஜிம் இக்கு போனா தான் ஓகேயா இருக்கும்,” சோர்ந்து போன குரலில் கூறினான் நந்தன்.
“ம்….”
“பிள்ளைகள் ஓகே தானே? காய்ச்சல் சுகமோ?”
“கொஞ்சம் சுகம் எண்டு தான் நினைக்கிறன்.”
” நினைக்கிறன் எண்டா என்ன அர்த்தம்?”
” நினைக்கிறன் எண்டா நினைக்கிறன் தான். வந்து நீங்களே தொட்டுப் பாருங்கோ,” என சலித்தாள்.
“சும்மா கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறார். எனக்கிருக்கிற விசருக்கு,” என மனதிற்குள் கூறிக்கொண்டாள் .
“ஏன் உங்களுக்கும் காய்ச்சலோ? உடம்பு ஏதும் சரியில்லையோ?” அக்கறையாக நந்தன் கேட்டான்.
“எனக்குத் தெரியாது,” அவசரமாக பதில் சொன்னாள்.
“இரவுக்கு சாப்பாடு ஏதும் இருக்கோ? மத்தியானம் இரண்டு அப்பிள் தான் சாப்பிட்டுக்கொண்டு வேலை செய்தனான். பசிக்குது”.
“இல்லை. இண்டைக்கு சமைக்க முடியேலை”.
“நான் வரேக்கை சாப்பாடு ஏதும் வேண்டி வாறன்”.
“ம்……”
“நீங்களே ஓர்டர் பண்ணுறீங்களோ? நான் ஜிம் இக்கு போய் வர கொஞ்ச நேரம் எடுக்கும் “.
“எனக்குத் தேவையெண்டா நானே ஓர்டர் பண்ணுவன். உங்களை ஒண்டும் நான் கேட்கேலை. எனக்கு வேலை இருக்கு. நான் வைக்கிறன்,” சடாரென்று அழைப்பைத் துண்டித்துவிட்டு, ஏதேனும் எழுதலாம் என்று அருகிலிருந்த பேனாவைப் பார்த்தாள் யமுனா. பேனாவோ துள்ளி எழுந்து அவள் கண் முன்னே வந்து நின்றது.
” உன்னவனிடம் ஏன் இந்தக் கோபம்?” எனக் கேட்டது பேனா.
“அவருக்கு என்ர கஸ்டம் தெரியவா போகுது? நான் படுற பாட்டை நீ பார்த்துக்கொண்டு தானே இருக்கிறாய்? ” அவளுக்கு குரல் தழுதழுத்தது.
“ஆம் நீ உன் குடும்பத்திற்காக அயராது பாடுபடுகின்றாய் தான். அதற்கும் உன் கோபத்திற்கும் தொடர்பு தான் என்ன?”
“நீ வேற என்னைக் கேள்வி கேட்டுக் கொண்டு. அவர் ஒரு ஜிம் இக்குப் போறாராம். ஒரு ஜிம்!!!” முகத்தை மறுபக்கம் திருப்பிக் கொண்டாள் யமுனா.
“நீ என்ன தான் எதிர்பார்க்கின்றாய்? உன்னவன் வேலை முடிந்து நேராக வீடு வரவேண்டும் என்று தானே? சரி உன் மனதைத் தொட்டுச் சொல். உன்னவனை முகமலர்ச்சியோடு நீ எப்போதாவது வரவேற்றிருப்பாயா? களைத்து வருகின்றான் என உன்னவனின் மீது இரக்கப்பட்டிருப்பாயா?”
“சும்மா உன்னவன் உன்னவன் எண்டு சொல்லி எரிச்சலைக் கிளப்பாதே. நந்தன் எண்டு பெயரைச் சொல்லு”.
“சரி என் கேள்விக்குப் பதில் தான் என்ன?” பேனாவோ விடுவதாக இல்லை.
“இல்லை. முகத்தை நீட்டிக் கொண்டு தான் இருக்கிறனான்”.
“அவன் வேலைக்குப் போகாமல் வீட்டிலிருந்து உனக்கு உதவி செய்ய வேண்டுமா?”
“அப்படி நானொண்டும் சொல்லேலை. நான் களைச்சு விழுந்து இருக்கிறன். அவருக்கு ஜிம் இப்ப தேவையோ? நேற்று பேட்மின்டன். இண்டைக்கு ஜிம். நாளைக்கு இனி கிரிக்கற். அவருக்கு என்ன? நான் தான் மாடு மாதிரி வேலை செய்து கொண்டே இருக்கிறன்”.
“உன்னை விளையாட்டிற்கோ அல்லது நீ விரும்பிற ஏதேனுக்குமோ போகவேண்டாம் என்று உன்னவன், மன்னித்து விடு, நந்தன் சொன்னவனா?”
“நீ என்ன குறுக்கு விசாரணையோ செய்கின்றாய்?”
“நீ காரணமின்றி நந்தன் மீது கோபப்படும்போது உன் மனச்சாட்சி, கடவுள் பயம் அனைத்தும் எங்கே போகின்றன?”
“அந்தக் கடவுளை விட என்ர புருஷன் மீது எனக்குத் தான் உரிமை அதிகம்,” கொஞ்சம் திமிராகவே பதில் சொன்னாள் யமுனா.
பேனாவே ஒருமுறை திக்கித்துப் போய் நின்றது.
“இண்டைக்குத் தான் நான் கோபப்பட அவர் அமைதியாய் இருந்தவர்,” என்றாள் அவள்.
“அதுதான் இப்ப அமைதியாய் இருக்கிறாரே நீ ஏன் உன் போபத்தைக் காட்டுகிறாய்?”
“வேற என்ன தான் செய்யச் சொல்லுறாய்?” கெஞ்சும் குரலில் கேட்டாள் யமுனா.
“கொஞ்சம் அமைதியாய் இரு. உன் கோபம் ஒரு போதும் நல்ல தீர்வைக் கொண்டு வரப்போவதில்லை. ஆறுதலாய் யோசி. உனக்கு களைப்பாக இருந்தால் அதனை அமைதியாய் எடுத்துச் சொல்லு. நீ குழந்தைகளுடன் நேரம் செலவு செய்கின்றாய். அவன் குழந்தைகளுக்காகவும் உனக்காகவும் இராப்பகலா ஓய்வின்றி உழைக்கின்றான். இருவரும் ஏதோ ஒரு வகையில் குடும்பத்திற்காக பாடுபடுகின்றீர்கள். மாறி மாறி கோபத்தைக் காட்டி என்ன தான் சாதிக்க முடியும். உனக்கு நன்றாகவே தெரிந்திருக்க வேணும் விட்டுக்கொடுப்பை விட சிறந்த குணம் ஏதுமில்லை என்று. வளர்ந்து வரும் உன் குழந்தைகளும், உன்னையும் உன் புருஷனையும் தான் பார்த்து பல விடயங்களைக் கற்கப் போகின்றார்கள். அவர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக இருப்பதை விட்டு ஏட்டிக்குப் போட்டி போடுவது ஒருவருக்கும் நன்றல்ல. ஆறுதலாய் பேசு. கோபத்தைக் கட்டுப்படுத்து. முக்கியமாக அநாவசிய கோபத்தை அறவே விடு. மற்றோரிடத்திலுருந்து யோசி”.
யாரோ கதவு தட்டும் சத்தம். Uber Eats இல் அவளுக்குப் பிடித்த சாப்பாடு. நந்தன் தான் அவள் பசியோடிருப்பது தெரிந்து அனுப்பியிருக்கின்றான் . புன்னகையுடன் சாப்பிட ஆரம்பித்தாள்.
ஒருமணி நேரத்தின் பின் ஜிம் இலிருந்து வந்து குளித்துவிட்டு, தூங்கும் குழந்தைகளின் தலை தடவி முத்தம் கொடுத்து, மீண்டும் தனது அலுவலகப்பணி செய்ய கணணி முன்னமர்ந்த நந்தனின் முகத்தில் களைப்பு தெரிந்தது. முதன் முறையாக அவன் கேட்காமலேயே தட்டவடையும் இஞ்சித் தேனீரும் கொண்டுபோய் கொடுத்த அவளை ஆச்சரியத்துடன் பார்த்து ஏதோ சொல்ல வாய் எடுத்தவன் ‘ மனுசி என்ன மனநிலையோடு இருக்குதோ தெரியாது’ என நினைத்திருப்பான் போலும் வாயை மூடிக் கொண்டான். அவன் கண்களில் எப்போதும் அவள் காணத் தவறும் ‘காதல்’ தெரிந்தது. பேனாவுக்கு நன்றி கூறினாள் !

– தாருணி பாலேசன்
பிரிஸ்பேன், அவுஸ்திரேலியா
The post இல்லத்திற்கு அவள் அரசி | சிறுகதை | தாருணி பாலேசன் appeared first on Vanakkam London.