படக்குறிப்பு, பயணிகள் தங்கள் பயணத் திட்டங்களை உருவாக்க ஏஐ கருவிகளைப் பயன்படுத்தும்போது, அதிகக் கவனத்துடன் இருக்கவும், எல்லாவற்றையும் சரிபார்க்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.கட்டுரை தகவல்
“பெரு நாட்டில் இல்லாத ஒரு கற்பனையான நகரம், பெய்ஜிங்கில் ஐஃபிள் டவர்” இது கேட்கவே விநோதமாகத் தோன்றாலாம்: ஆனால் சாட்ஜிபிடி (ChatGPT) போன்ற கருவிகளைப் பயன்படுத்திப் பயணிகள் தங்கள் பயணத் திட்டங்களுக்கான இப்படிப்பட்ட யோசனைகளைப் பெறுகிறார்கள்.
எவல்யூஷன் ட்ரெக்ஸ் பெரு (Evolution Treks Peru) நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் இயக்குநர் மிகுவல் ஏஞ்சல் கொங்கோரா மேசா (Miguel Angel Gongora Meza), பெருவின் கிராமப்புற நகரம் ஒன்றில் ஆண்டிஸ் மலைத்தொடரில் ஒரு நடைப்பயணத்திற்காகப் தயாராகிக் கொண்டிருந்தபோது, ஒரு சுவாரசியமான உரையாடலைக் கேட்டார். வழிகாட்டி இல்லாத இரண்டு சுற்றுலாப் பயணிகள், மலைகளில் தனியாக “ஹுமான்டேயின் புனித பள்ளத்தாக்கு” (Sacred Canyon of Humantay) என்று அழைக்கப்படும் இடத்திற்குப் பயணிக்கப் போவதாகப் பேசிக்கொண்டிருந்தனர்.
“அவர்கள் எனக்கு ஒரு ஸ்கிரீன்ஷாட்டைக் காட்டினார்கள், அது உறுதியாக எழுதப்பட்டு, தெளிவான அடைமொழிகளால் நிரப்பப்பட்டதாகவும் இருந்தது, ஆனால் அது உண்மையல்ல. ஹுமான்டேயின் புனித பள்ளத்தாக்கு என்று ஒன்று இல்லை!” என்று கொங்கோரா மேசா கூறினார். “அந்தப் பெயர், எந்தத் தொடர்பும் இல்லாத இரண்டு இடங்களின் கலவையாகும். வழிகாட்டியோ அல்லது சேருமிடமோ இல்லாமல், (இல்லாத ஒரு இடத்தை தேடி) மோல்லெபாட்டாவை (Mollepata) சுற்றியுள்ள ஒரு கிராமப்புறச் சாலையை அடைய அந்தச் சுற்றுலாப் பயணி சுமார் 160 டாலர்கள் ( இந்திய மதிப்பில் சுமார் ரூ.14,000 ) செலவிட்டிருந்தார்.”
மேலும், இந்த அப்பாவித்தனமான தவறு பயணிகளின் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என்று கொங்கோரா மேசா வலியுறுத்தினார். “இந்த வகையான தவறான தகவல் பெருவில் ஆபத்தானது,” என்று அவர் விளக்கினார்.
“உயரம், காலநிலை மாற்றங்கள் மற்றும் பாதைகளின் அணுகல் ஆகியவை திட்டமிடப்பட வேண்டும். படங்களையும் பெயர்களையும் இணைத்து ஒரு கற்பனையை உருவாக்கும் (சாட்ஜிபிடி போன்ற) ஒரு செயலியை பயன்படுத்தும் போது, நீங்கள் 4,000 மீட்டர் உயரத்தில் ஆக்ஸிஜன் மற்றும் தொலைபேசி சிக்னல் இல்லாமல் சிக்கிக்கொண்டிருப்பதை நீங்கள் உணரக்கூடும்.”
சில ஆண்டுகளிலேயே, சாட்ஜிபிடி(ChatGPT), மைக்ரோசாஃப்ட் கோபைலட் (Microsoft Copilot) மற்றும் கூகிள் ஜெமினி (Google Gemini) போன்ற செயற்கை நுண்ணறிவு (AI) கருவிகள் வேடிக்கைக்காக பயன்பட்டதில் இருந்து, மில்லியன் கணக்கான மக்களின் பயணத் திட்டமிடலில் ஒருங்கிணைந்த பகுதியாக மாறிவிட்டன. ஒரு கணக்கெடுப்பின்படி, சர்வதேசப் பயணிகளில் 30% பேர் தங்கள் பயணங்களை திட்டமிட இப்போது ஜெனரேட்டிவ் AI கருவிகள் மற்றும் வொண்டர்பிளான்(Wonderplan), லைலா (Layla) போன்ற பிரத்யேகப் பயண AI தளங்களைப் பயன்படுத்துகிறார்கள்.
இந்தப் பயன்பாடுகள் சரியாகச் செயல்படும்போது மதிப்புமிக்கப் பயண உதவிக்குறிப்புகளை வழங்க முடியும் என்றாலும், சரியாகச் செயல்படாதபோது மக்களைச் சில விரக்தியளிக்கும் அல்லது ஆபத்தான சூழ்நிலைகளுக்கு இட்டுச் செல்லக்கூடும்.
இதுவே, சில பயணிகள் தாங்கள் செல்ல விரும்பிய இடம் இருப்பதாக நம்பிய இடத்தை அடைந்த பின்னர்தான் தங்களுக்கு தவறான தகவலோ அல்லது ஒரு ரோபோவின் சிப்பில் உருவான கற்பனையில் மட்டுமே இருக்கும் இடத்திற்கு வழிநடத்தப்பட்டிருக்கிறோம் என்பதை உணர்கிறார்கள்.
டானா யாவோ (Dana Yao) மற்றும் அவரது கணவர் சமீபத்தில் இதை நேரடியாக அனுபவித்தனர். இந்தக் காதல் ஜோடி இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஜப்பானிய தீவான இட்சுகுஷிமாவில் (Itsukushima) உள்ள மவுண்ட் மிசென் (Mount Misen) உச்சிக்கு நடைப்பயணம் செல்ல சாட்ஜிபிடியை பயன்படுத்தினர்.
மியாஜிமா (Miyajima) நகரத்தை எந்தப் பிரச்சினையும் இல்லாமல் சுற்றிப் பார்த்த பிறகு சாட்ஜிபிடி அறிவுறுத்தியபடி, சூரிய அஸ்தமனத்திற்குச் சரியாக மலையின் உச்சியை அடைய மதியம் 3:00 மணிக்கு மலையேறத் தொடங்கினர்.
“அப்போதுதான் பிரச்னை தோன்றியது,” என்று ஜப்பானில் பயணம் செய்வது குறித்து ஒரு வலைப்பதிவை நடத்தும் யாவோ கூறினார், “நாங்கள் ரோப்வே (ropeway) நிலையம் வழியாக மலையிலிருந்து இறங்கத் தயாராக இருந்தோம். கடைசி ரோப்வே இறங்கும் நேரம் 17:30 என்று சாட்ஜிபிடி கூறியது, ஆனால் உண்மையில் ரோப்வே ஏற்கெனவே மூடப்பட்டுவிட்டது. எனவே, நாங்கள் மலையின் உச்சியில் சிக்கிக்கொண்டோம்.”
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, ஏஐ பெரும்பாலும் பயணிகளுக்குத் தவறான மற்றும் உண்மையற்ற தகவல்களை வழங்குகிறது. சில சமயங்களில் இது இடங்களையே உருவாக்குகிறது.
2024-ஆம் ஆண்டில் வெளியான ஒரு பிபிசி கட்டுரை, லேலா தளம் பெய்ஜிங்கில் ஐஃபிள் டவர் இருப்பதாக சிறிது காலத்திற்கு தனது பயனர்களுக்கு கூறியது என்றும், ஒரு பிரிட்டிஷ் பயணியை வடக்கு இத்தாலி முழுவதும் நடைமுறையில் சாத்தியமற்ற ஒரு மாரத்தான் பாதையில் செல்ல அறிவுறுத்தியது என்றும் கூறியது. “அந்தப் பயணத் திட்டங்கள் தர்க்கரீதியாக சரியானவையாக இருக்கவில்லை,” என்று அந்தப் பயணி கூறினார். “நாங்கள் வேறு எதையும் விடப் பயணத்திற்கே அதிக நேரம் செலவிட்டிருப்போம்.”
2024 கணக்கெடுப்பின்படி, பயணத் திட்டமிடலுக்கு ஏஐ-ஐப் பயன்படுத்தியவர்களில் 37% பேர் அவற்றால் போதுமான தகவல்களை வழங்க முடியவில்லை என்றும், சுமார் 33% பேர் ஏஐயால் உருவாக்கப்பட்ட பரிந்துரைகளில் தவறான தகவல்கள் இருந்ததாகவும் தெரிவித்தனர்.
இந்தச் சிக்கல்கள் ஏஐ தனது பதில்களை உருவாக்கும் விதத்தில் இருந்து எழுகின்றன. கார்னகி மெலன் பல்கலைக்கழகத்தில் இயந்திர கற்றல் பேராசிரியரான ரயித் கானியின் (Rayid Ghani) கூற்றுப்படி, சாட்ஜிபிடி போன்ற நிரல்கள் உங்களுக்குச் சிந்திக்கக்கூடிய, பயனுள்ள ஆலோசனையை வழங்குவது போலத் தோன்றினாலும், அது தகவலைப் பெறும் விதத்தால், அது உங்களுக்கு உண்மையைச் சொல்கிறதா என்பதை உங்களால் ஒருபோதும் உறுதியாகச் சொல்ல முடியாது.
“பயண ஆலோசனை, வழிகாட்டுதல்கள் அல்லது சமையல் குறிப்புகளுக்கு இடையே உள்ள வேறுபாடுகள் அதற்குத் தெரியாது,” என்று கானி கூறினார். “அதற்கு வார்த்தைகள் மட்டுமே தெரியும். எனவே, அது உங்களுக்குச் சொல்லும் எதையும் உண்மை என்று உங்களை உணர வைக்கும் வார்த்தைகளை அது தொடர்ந்து தருகிறது, அதிலிருந்துதான் அடிப்படைப் பிரச்னைகள் பலவும் எழுகின்றன.”
சாட்ஜிபிடி போன்ற பெரிய மொழி மாதிரிகள் (Large Language Models), மிகப் பெரிய உரைத் தொகுப்புகளை ஆய்வு செய்வதன் மூலம், புள்ளிவிவர ரீதியாகப் பொருத்தமான பதில்களைப் போலத் தோன்றும் வார்த்தைகளையும் சொற்றொடர்களையும் ஒன்றாக இணைத்துச் செயல்படுகின்றன. சில நேரங்களில் இது முற்றிலும் துல்லியமான தகவலை வழங்குகிறது.
மற்ற நேரங்களில், இந்த ஏஐ கருவிகள் தகவலை வெறுமனே கற்பனையாக உருவாக்குகின்றன. இதை ஏஐ வல்லுநர்கள் ஹலுசினேஷன் (hallucination) என அழைக்கின்றனர். ஆனால் ஏஐ நிரல்கள் தங்கள் கற்பனைகளையும் உண்மையான பதில்களையும் ஒரே மாதிரியாக வழங்குவதால், எது சரி எது கற்பனை என வேறுபடுத்தி பார்ப்பது பயனர்களுக்கு பெரும்பாலும் கடினம்.
“ஹுமான்டேயின் புனித பள்ளத்தாக்கு” விவகாரத்தில், ஏஐ செயலி அந்தப் பகுதிக்குப் பொருத்தமானதாகத் தோன்றும் சில வார்த்தைகளை ஒன்றாகச் சேர்த்திருக்கலாம் என்று கானி நம்புகிறார். இதேபோல், அந்த அனைத்துத் தரவுகளையும் பகுப்பாய்வு செய்வது மட்டும் சாட்ஜிபிடி போன்ற ஒரு கருவிக்கு உலகத்தைப் பற்றிய பயனுள்ள புரிதலை கொடுத்துவிடும் என்று பொருளில்லை.
இது 4,000 மீட்டர் உயரமுள்ள நகரத்தில் நடக்கும் ஒரு சாதாரண நடைப்பயணத்தையும், 4,000 மீட்டர் உயரமுள்ள மலையேற்றத்தையும் எளிதில் தவறாகக் கருதக்கூடும்—அதிலும் இவை அனைத்தும் தவறான தகவல்களின் சிக்கல் வருவதற்கு முந்தைய நிலை.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, பல அரசாங்கங்கள் ஏஐ விதிமுறைகளை உருவாக்கி வருகின்றன, இது தவறான தகவல் பரவும் முன் அதைக் கண்டறிய உதவும்.
சமீபத்திய ஃபாஸ்ட் கம்பெனி (Fast Company) கட்டுரை, டிக்டாக்கில் பார்த்த ஒரு அழகான கேபிள் காருக்காக மலேசியாவுக்குப் பயணம் செய்த ஒரு தம்பதியரைப் பற்றிப் பேசியது. ஆனால் அத்தகைய அமைப்பு எதுவும் அங்கு இல்லை. அவர்கள் பார்த்த காணொளி, ஈடுபாட்டை அதிகரிக்கவோ அல்லது வேறு ஏதேனும் விசித்திரமான நோக்கத்திற்காகவோ, முழுவதுமாக ஏஐ-ஆல் உருவாக்கப்பட்டிருந்தது.
இதேபோன்ற சம்பவங்கள், நம் உலக உணர்வை நுட்பமாக—அல்லது வெளிப்படையாக—மாற்றக்கூடிய ஏஐ செயல்படுத்தலின் ஒரு பெரிய போக்கின் ஒரு பகுதியாகும். சமீபத்திய உதாரணமாக, யூடியூப் உள்ளடக்க உருவாக்குநர்கள், தங்கள் காணொளிகளில் உள்ள உண்மையான நபர்களின் உடை, முடி மற்றும் முகங்களை நுட்பமாக “திருத்துவதன்” மூலம், அனுமதியின்றி அவர்களின் காணொளிகளை மாற்ற ஏஐ-ஐப் பயன்படுத்துவதை உணர்ந்தனர்.
நெட்ஃபிளிக்ஸ் (Netflix) 2025-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஏஐ-ஐப் பயன்படுத்தியதற்காகச் சிக்கலில் மாட்டிக் கொண்டது. பழைய சிட்காம்களை) “ரீமாஸ்டர்” செய்ய முயன்றபோது, 1980-கள் மற்றும் 90-களின் தொலைக்காட்சி நட்சத்திரங்களின் முகங்களில் விசித்திரமான சிதைவுகள் ஏற்பட்டன. ஏஐ, நமது அறிதலுக்கு அப்பாற்பட்டு இதுபோன்ற சிறிய மாற்றங்களைச் செய்யப் பயன்படுத்தப்படுவதால், யதார்த்தத்திற்கும் மெருகூட்டப்பட்ட ஏஐ கனவு உலகிற்கும் இடையிலான எல்லைகள் பயணிகளுக்கும் மங்கலாக தொடங்கலாம்.
உளவியல் சிகிச்சையாளரும், பயணம் நம் ஒட்டுமொத்த மன ஆரோக்கியம் மற்றும் தொடர்பு உணர்வை மேம்படுத்த உதவும் என்று வாதிடுபவருமான ஜேவியர் லபூர்ட், இந்தச் சிக்கல்கள் பெருகுவது பயணத்தால் கிடைக்கும் நன்மைகளுக்கே எதிராகச் செயல்படக்கூடும் என்று கவலைப்படுகிறார்.
பயணமானது, நாம் வேறு யாருடனும் சந்திக்க முடியாதவர்களுடன் பழகவும், வெவ்வேறு கலாச்சாரங்களைப் பற்றி நேரடியாகக் கற்றுக்கொள்ளவும் ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்குகிறது—இது அனைத்தும் அதிக பச்சாதாபம் மற்றும் புரிதலுக்கு வழிவகுக்கும் என்று அவர் உணர்கிறார். ஆனால் ஏஐ கற்பனைகள் பயனர்களுக்குத் தவறான தகவலை அளிக்கும்போது, பயணிகள் வீட்டை விட்டே கிளம்புவதற்கு முன்பே அந்த இடத்தைப் பற்றி ஒரு தவறான கதையை வழங்குகின்றன.
தற்போது, ஏஐ பயனர்களுக்குத் தகவல்களை வழங்கும் விதத்தைக் கட்டுப்படுத்த முயற்சிகள் நடந்து வருகின்றன. ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்காவின் பல முன்மொழிவுகளில், ஒரு விஷயம் ஏஐ-ஆல் மாற்றப்பட்டதா அல்லது உருவாக்கப்பட்டதா என்பதைப் பார்ப்பவர்கள் அறிந்துகொள்ள, வாட்டர்மார்க்குகள் அல்லது பிற தனித்துவமான அம்சங்களைச் சேர்ப்பதும் அடங்கும். ஆனால் கானியின் கூற்றுப்படி, இது ஒரு கடினமான சவால்: “தவறான தகவல்களைச் சுற்றி நிறைய வேலைகள் நடந்து வருகின்றன, அதைக் கண்டுபிடிப்பது எப்படி? அதைக் கண்டறிய மக்களுக்கு உதவுவது எப்படி? [ஆனால்] தடுப்பதை விடத் தணிப்பது (Mitigation) இன்று மிகவும் நம்பகமான தீர்வாக உள்ளது.”
இந்த வகையான விதிமுறைகள் நடைமுறைக்கு வந்தால், ஏஐ-ஆல் உருவாக்கப்பட்டப் படங்கள் அல்லது காணொளிகளைக் கண்டறிவது பயணிகளுக்கு எளிதாக இருக்கும். ஆனால் ஒரு உரையாடலின் நடுவில் ஒரு ஏஐ சாட்பாட் (chatbot) எதையாவது உருவாக்கும்போது புதிய விதிகள் உங்களுக்கு உதவ வாய்ப்பில்லை.
கூகுளின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை உட்பட நிபுணர்கள், சாட்ஜிபிடி அல்லது கூகுளின் ஜெமினி போன்ற பெரிய மொழி மாதிரிகளின் “உள்ளீடான அம்சம்” தான் இந்த ‘கற்பனை உருவாக்கம்’ (hallucinations) என்று கூறியுள்ளனர். நீங்கள் ஏஐ-ஐப் பயன்படுத்தப் போகிறீர்கள் என்றால், உங்களைப் பாதுகாத்துக் கொள்ள ஒரே வழி விழிப்புடன் இருப்பதுதான்.
உங்கள் கேள்விகளில் முடிந்தவரை குறிப்பிட்டுச் சொல்லும் வகையில் இருக்க வேண்டும் என்றும், அனைத்தையும் சரிபார்க்க வேண்டும் என்றும் கானி பரிந்துரைக்கிறார். இருப்பினும், பயணிகள் தாங்கள் அறிமுகமில்லாத இடங்களைப் பற்றி அடிக்கடி கேட்பதால், பயணம் இந்த முறைக்கு ஒரு தனித்துவமான சவாலை அளிக்கிறது என்பதை அவர் ஒப்புக்கொள்கிறார்.
ஆனால் ஒரு ஏஐ கருவி உங்களுக்குச் சற்று மிகச் சரியானதாகத் தோன்றும் பயணப் பரிந்துரையை வழங்கினால், மீண்டும் ஒருமுறை சரிபார்க்கவும். இறுதியில், ஏஐ தகவலைச் சரிபார்க்கச் செலவழிக்கும் நேரம், சில சமயங்களில் பாரம்பரிய முறையில் திட்டமிடுவதைப் போலவே அதிக உழைப்பைக் கோரலாம் என்று கானி கூறுகிறார்.
லபூர்ட்டைப் பொறுத்தவரை, ஏஐ உடன் அல்லது ஏஐ இல்லாமல் நன்றாகப் பயணம் செய்வதற்கான திறவுகோல், திறந்த மனதுடன் இருப்பதும், விஷயங்கள் தவறாக நடக்கும்போது தகவமைத்துக்கொள்வதும் ஆகும். ” யாரோ ஒருவர் நம்மை ஏமாற்றிவிட்டார் என்ற ஏமாற்றத்தை விலக்கி வைக்க முயற்சி செய்யுங்கள்,” என்று அவர் பரிந்துரைத்தார்.